இறைவன் ஆணா? இறைவனை “அவன்” என்று அழைப்பது ஏன்?

கடவுள் பாலினத்திற்கு அப்பாற்பட்டவர். அரபு மொழியில் ஆண், பெண் அல்லாதவற்றைக் குறிக்க நடுநிலை பாலினம் கிடையாது. எனவே, அரபு மொழியில் உள்ள எல்லா சொற்களும் ஆண்பாலாகவோ, அல்லது பெண்பாலாகவோ தான் குறிப்பிடப்படும். "அல்லாஹ்" என்ற அரபி வார்த்தை, பெண்பால் பாலினத்திற்குத் தேவையான இலக்கண நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத காரணத்தால் ஆண்பால் வடிவத்தில் குறிப்பிடப்படுகிறது.

கடவுளுக்கு பாலினம் உண்டா?

கடவுள் பாலினத்திற்கு அப்பாற்பட்டவர். கடவுள் தனித்தன்மை கொண்டவர். கடவுள் தனது படைப்புகளைப் போன்றவர் இல்லை. கடவுளை அவரது படைப்புகளுடன் நம்மால் ஒப்பிட முடியாது. மனிதர்களைப் போல் கடவுளுக்கு பாலினம், பெற்றோர், மனைவி, பிள்ளைகள் கிடையாது. அதனால், கடவுளுக்கு பாலினத்தைக் கற்பிப்பது தவறு என்பது இஸ்லாத்தின் கொள்கை.

கடவுளை “அவன்” என்று சொல்வது ஏன்?

பாலினத்திற்கு அப்பாற்பட்ட கடவுளை, ஆண் பாலினத்தைக் குறிக்கும் “அவன்” என்று சொல்லை பயன்படுத்தி அழைப்பது ஏன் என்ற கேள்வி பலருக்கு எழலாம். இதை புரிந்து கொள்ள “அல்லாஹ்” என்ற சொல்லை பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.

அல்லாஹ் என்ற சொல்

ஆங்கிலத்தில் கடவுளை குறிக்க “God” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது போன்று, அரபு மொழியில் கடவுளை குறிக்க “அல்லாஹ்” என்ற வார்த்தையை பயன்படுத்துவார்கள்.

‘அல்லாஹ்’ என்ற இந்த வார்த்தையை படர்கையாக குறிப்பிடும் போது “அவன்” என்ற சொல்லை பயன்படுத்துவார்கள். ஏன் இப்படி சொல்கிறார்கள் என்ற காரணத்தை அறிய, அரபு மொழியில் பாலினங்கள் எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அரபு மொழியில் பாலினம்

தமிழில் உள்ள சொற்களுக்கு நாம் மூன்று பாலினங்களை பயன்படுத்தலாம். அதவாது, ஆண்பால் என்றால் அவன், பெண்பால் என்றால் அவள், நடுநிலை பாலினம் என்றால் அது என்ற சொல்லை பயன்படுத்துவோம்.

அரபு மொழியில் உள்ள சொற்களை குறிக்க இரண்டே பாலினங்கள் தான் உள்ளன – ஆண்பால் மற்றும் பெண்பால். தமிழ் மொழியில் உள்ள நடுநிலை பாலினம் அரபு மொழியில் கிடையாது. எனவே, அரபு மொழியில் உள்ள எல்லா வார்த்தைகளையும், ஆண்பாலாகவோ அல்லது பெண்பாலாகவோ தான் குறிப்பிட முடியும்.

அரபியில் நடுநிலை பாலினம் இல்லாததால், ‘அல்லாஹ்’ என்ற வார்த்தையை ஆண்பாலாகவோ அல்லது பெண்பாலாகவோ தான் குறிப்பிட முடியும். ‘அல்லாஹ்’ என்ற வார்த்தையை குறிப்பிட ஆண்பாலை பயன்படுத்த வேண்டுமா அல்லது பெண்பாலை பயன்படுத்த வேண்டுமா என்ற கேள்வி எழும். ஒரு வார்த்தை ஆண்பாலா அல்லது பெண்பாலா என்பதை தீர்மானிக்க, அரபு மொழியில் இலக்கண விதிகள் உள்ளன.

சொற்களுக்கான பாலினத்தை தீர்மானிக்க இலக்கண விதிகள்

அரபு மொழியின் இலக்கணத்தில், ஒரு சொல் பெண்பாலாக கருதப்பட சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத எல்லா சொற்களும் ஆண்பாலாகவே கருதப்படும்.

ஒரு சொல் பெண்பாலாக கருதப்பட, கீழே உள்ள 6 நிபந்தனைகளில் ஒன்றையாவது பூர்த்தி செய்ய வேண்டும்.

  1. இயற்கையாகவே பெண்பாலை குறிக்கும் சொற்கள். உதாரணமாக: தாய், மகள், பசு போன்றவை.
  2. ஜோடியாக இருக்கும் உடல் பாகங்களைக் குறிக்கும் சொற்கள். உதாரணமாக: கண்கள், காதுகள், கால்கள் போன்றவை.
  3. உயிரற்ற பொருட்களை பன்மையில் குறிக்கும் சொற்கள். உதாரணமாக: பெயர்கள், நாற்காலிகள், பள்ளிகள் போன்றவை.
  4. ஒரு குறிப்பிட்ட இடத்தின் பெயரை குறிக்கும் சொற்கள். உதாரணமாக:  அமெரிக்கா, எகிப்து, டெல்லி போன்றவை.
  5. “தா” (ة) அல்லது “சிறிய அலிஃப்” (ى)அல்லது “பெரிய அலிஃப்” (آ) போன்ற எழுத்துக்களால் முடியும் சொற்கள். உதாரணமாக: ரஹ்மத, குபரா, சவ்தா போன்றவை.
  6. அரேபியர்கள் “பெண்பால்” என்று கருதிய சில சொற்கள்.

அரபியில் உள்ள எந்த சொல்லும், மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஆறு நிபந்தனைகளில் ஒன்றையும் பூர்த்தி செய்யவில்லை என்றால், அது தானாகவே ஆண்பாலினமாகக் கருதப்படும்.

“அல்லாஹ்” என்ற சொல்லும், இலக்கண விதியும்

“அல்லாஹ்” என்ற சொல் பெண் பாலினத்திற்கான ஆறு நிபந்தனைகளில் ஒன்றையாவது பூர்த்தி செய்கிறதா என்று பார்ப்போம்.

அல்லாஹ் இயற்கையாகவே பெண்பால் கிடையாது.

அல்லாஹ் என்ற சொல் ஜோடியாக இருக்கும் எந்த உடல் பாகத்தையும் குறிக்கவில்லை.

அல்லாஹ் என்ற சொல் பன்மை இல்லை.

அல்லாஹ் என்ற சொல் ஒரு குறிப்பிட்ட இடத்தின் பெயர் இல்லை.

அல்லாஹ் என்ற சொல் “தா” அல்லது “சுருக்கமான அலிஃப்” அல்லது “பெரிய அலிஃப்” போன்ற எழுத்துக்களால் முடிவடையவில்லை.

அல்லாஹ் என்ற சொல் அரேபியர்கள் “பெண்பால்” என்று கருதும் சொற்களின் பட்டியலில் இல்லை.

“அல்லாஹ்” என்ற சொல் பெண் பாலினத்திற்கான ஆறு நிபந்தனைகளில் ஒன்றைக் கூட பூர்த்தி செய்யவில்லை என்பதால், அல்லாஹ் என்ற சொல்லிற்கு ஆண்பால் வடிவமான “அவன்” என்ற வார்த்தையையே பயன்படுத்த வேண்டியுள்ளது.

இதனால்தான் குர்ஆனில், “அல்லாஹ்” என்ற வார்த்தையைக் குறிக்க அரபு ஆண்பால் பிரதிபெயரான “ஹுவ”, அதாவது தமிழில் “அவன்” என்ற சொல் பயன்படுத்தப்படுவதைக் காண்கிறோம். உதாரணமாக:

“அல்லாஹ், அவன் ஒருவனே” என்று கூறுவீராக. (குல் ஹுவ அல்லாஹு அஹது)

குர்ஆன் 112:1

கருத்துச் சுருக்கம்

1. கடவுளுக்கு பாலினம் கிடையாது.

2. அரபு மொழியில் நடுநிலை பாலினம் இல்லையென்பதால், சொற்களை ஆண்பாலாகவோ, அல்லது பெண்பாலாகவோ தான் குறிப்பிட முடியும்.

3. அரபு மொழியின் இலக்கணத்தில், ஒரு சொல் பெண்பாலாக கருதப்பட சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

4. “அல்லாஹ்” என்ற சொல் பெண்பாலினத்திற்குத் தேவையான எந்த இலக்கண நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யவில்லை.

5. “அல்லாஹ்” என்ற சொல் பெண் பாலினத்திற்கான ஆறு நிபந்தனைகளில் ஒன்றைக் கூட பூர்த்தி செய்யவில்லை என்பதால், அல்லாஹ் என்ற சொல்லிற்கு ஆண்பால் வடிவமான “அவன்” என்ற வார்த்தையையே பயன்படுத்த வேண்டியுள்ளது.

WHAT OTHERS ARE READING

Most Popular