அதிகரிக்கும் முதியோர் இல்லங்கள் – குர்ஆனின் தீர்வு

இந்தியாவில் சுமார் 13.8 கோடி முதியோர்கள் உள்ளனர். இந்தியாவில் 1.8 கோடி வீடற்ற முதியோர்கள் இருப்பதாக ஒரு அறிக்கை மதிப்பிடுகிறது. முதியோர் இல்லங்கள் அதிகரிப்பதைத் குறைக்க குர்ஆனிலிருந்து ஒரு அற்புதமான தீர்வு.

பெற்றோர்களின் அருமையை அறிய பறவைகளை படியுங்கள்

தங்கள் மகிழ்ச்சியில் மட்டுமே அக்கறை கொண்டவர்கள் அதிகரித்து வருவதால், வயதான பெற்றோர்கள் முதியோர் இல்லங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். பணக்கார பிள்ளைகள் தங்கள் வயதான பெற்றோருக்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கி, அவர்களை அனாதைகளைப் போல அங்கே தனியாக தங்க வைக்கிறார்கள். இந்த வீடியோவில், நம்மை படைத்த இறைவன் பெற்றோரை பேணுவதை பற்றி குர்ஆனில் என்ன சொல்கிறான் என்பதை பார்ப்போம்.

இறைவனைத் தவிர வேறெவரையும் நீங்கள் வணங்காதீர்கள். தாய் தந்தையரிடம் மிகச் சிறந்த முறையில் நடந்துகொள்ளுங்கள்.” என்று இறைவன் கட்டளையிட்டுள்ளான்.
பெற்றோரில் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமை அடைந்த நிலையில் உங்களோடு இருந்தால், எரிச்சலை வெளிப்படுத்தும் வகையிலோ அல்லது கடிந்தோ அவர்களிடம் பேசாதீர்கள். அவர்களை விரட்டி விடாதீர்கள்! அவர்களிடம் மரியாதையான முறையில் பேசுங்கள்!

திருகுர்ஆன் 17:23

அன்பும் அக்கறையும் உள்ள பணிவு என்னும் சிறகுகளை அவர்களுக்காக தாழ்த்துங்கள்.
என் இறைவா, நான் சிறு குழந்தையாக இருந்த போது, என்னை அவர்கள் அன்போடும், அக்கறையோடும் வளர்த்தது போல், நீயும் அவர்களுக்கு அன்பையும், கருணையையும் காட்டுவாயாக!” என்று பிராத்தனை செய்யுங்கள்.

திருகுர்ஆன் 17:24

24வது வசனத்தில், “அவர்களுக்காக (அதாவது, உங்கள் பெற்றோருக்காக) அன்பின் சிறகுகளைத் தாழ்த்தி, அக்கறை காட்டுங்கள்” என்று இறைவன் சொல்லுகிறான். இந்த வசனத்தை நீங்கள் புரிந்து கொள்ள, நீங்கள் பறவைகள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும்.

இறக்கைகள் இல்லாத தன் குஞ்சுகளைப் பாதுகாப்பதற்காக தாய்ப் பறவை தன இறக்கைகளைத் தாழ்த்தும். தாய்ப்பறவை தன் சிறகுகளை தாழ்த்தி எப்படி அன்புடன் தன் குஞ்சுகளைப் பாதுகாக்கிறதோ, அதுபோல தான் உங்கள் பெற்றோரும் நீங்கள் குழந்தையாக இருந்தபோது உங்களை அன்போடும் அக்கறையோடும் பாதுகாத்தார்கள்.

உங்களுடைய சிறுவயதில் உங்களுக்கு உங்கள் பெற்றோரின் அன்பு, பாதுகாப்பு, கவனிப்பு தேவைப்பட்டது. அதே போல, உங்கள் வயதான பெற்றோருக்கும் உங்கள் அன்பும், பாதுகாப்பும், கவனிப்பும் தேவை. நீங்கள் இதை நினைவில் வைத்து, உங்கள் வயதான பெற்றோரிடம் அன்பையும் அக்கறையையும் காட்ட வேண்டும் என்று இறைவன் கற்று தருகிறான்.

நான் சிறு குழந்தையாக இருந்த போது, என்னை அவர்கள் அன்போடும், அக்கறையோடும் வளர்த்தது போல், நீயும் அவர்களுக்கு அன்பையும், கருணையையும் காட்டுவாயாக!” என்று பிராத்தனை செய்யவும் இறைவன் கற்றுத் தருகிறான்.

இதை உணர்ந்து, தன் பெற்றோருக்காகத் தவறாமல் பிரார்த்தனை செய்யும் ஒருவரால், வயதான பெற்றோரை முதியோர் இல்லங்களுக்கு அனுப்பவோ அல்லது அப்பார்ட்மென்ட்களில் அனாதையாக விடவோ மனம் வருமா? கண்டிப்பாக வராது!

WHAT OTHERS ARE READING

Most Popular