முன்னுரை
மரணம் முடிவா? தொடக்கமா?
இன்று வாழும் நாம் மரணிப்பது நிச்சயம். நம் மரணத்திற்கு பின் என்ன நடக்கும்? இது பற்றி நமக்கு மத்தியில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.
“மரணத்திற்கு பின் ஒன்றும் இல்லை.” என்று சிலர்.
“மரணத்திற்கு பின், மறுபிறவி உண்டு. இந்த பூமிக்கே திரும்பி வருவோம்.” என்று சிலர்.
“மரணத்திற்கு பின் முடிவில்லாத சுவர்க்கமும், நரகமும் உண்டு.” என்று சிலர்.
இதை பற்றி இறைவன் குர்ஆனில் இப்படி சொல்கிறான்:
(மரணத்திற்கு பின் உள்ள வாழ்க்கை பற்றி) அவர்கள் (தங்களுக்குள்) கருத்து வேறுபாடு கொண்டிருக்கின்றனர்.
குர்ஆன் அத்தியாயம் 78 வசனம் 3
நிச்சயமாக எல்லா கருத்துக்களும் சரியாக இருக்க முடியாது. அப்படியென்றால், இதில் எது சரி? வாருங்கள் பார்ப்போம்!
கடவுள் இருக்கிறானா என்பதை அறிந்து கொள்ள இதை படியுங்கள்.
மறுபிறவி உண்மையா? புனர்ஜென்மம் உண்டா? இது பற்றி அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
மரணத்திற்கு பின் ஒரு வாழ்க்கை அவசியமா?
நல்லது செய்பவர்களுக்கு இறுதியில் நல்ல முடிவும், தீயவர்களுக்கு இறுதியில் தீய முடிவும் ஏற்பட வேண்டும் என்று உங்கள் உள்மனது சொல்கிறதா?
நாம் வாழும் உலகில் நல்லது செய்பவர்களுக்கு நல்லது நடக்கிறதா? தீயவர்களுக்கு தீயது தான் நடக்கிறதா?
நீதி எங்கே கிடைக்கும்?
ஹிட்லர் 60 இலட்சம் அப்பாவி மக்களைக் கொன்றான். ஹிட்லரைக் கைது செய்திருந்தாலும், மனித சட்டம் ஹிட்லருக்கு என்ன தண்டனையை வழங்கியிருக்க முடியும்? அதிகபட்சமாக ஹிட்லருக்கு மரண தண்டனை வழங்கி இருக்கலாம். அது ஒரு அப்பாவி மனிதரைக் கொன்றதற்கு மட்டுமே தண்டனையாக இருக்க முடியும். மீதமுள்ள 59,99,999 பேரைக் கொன்றதற்கு தண்டனை என்ன? கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு நீதி எப்படி கிடைக்கும்?
தன் உயிரையும் மாய்த்து, நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களை கொலை செய்யும் தற்கொலை குண்டுவெடிப்பில் ஈடுபடும் தீவிரவாதிக்கு நம்மால் எப்படி தண்டனை வழங்க முடியுமா? அவன் ஏற்கனவே இறந்துவிட்டதால், அவனை நம்மால் தண்டிக்க முடியாது. அவனால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு நீதி எப்படி கிடைக்கும்?
குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டவர்களுக்கு 100 ஆண்டுகள் வரை பல ஆயுள் தண்டனைகளை நீதிபதிகள் வழங்குவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஏன் இப்படி தீர்ப்பு வழங்குகிறார்கள்? ஏனென்றால், குற்றவாளி பல ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குத் தகுதியானவன் என்பதால் இப்படி தீர்ப்பு வழங்குகிறார்கள். எத்தனை குற்றவாளிகள் 100 ஆண்டுகள் வாழ்ந்து, தண்டனைக் காலத்தை நிறைவு செய்வார்கள்?
நம் நாட்டிற்காக பல நல்லவர்கள் அநியாயமாக சித்திரவதை செய்து கொல்லப்பட்டுள்ளார்கள். நம் நாட்டிற்காக உயிரைத் தியாகம் செய்த சுதந்திர போராட்டத் தியாகிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தங்கள் மனம் சொல்லவில்லையா?
பகுத்தறிவோடு சிந்தித்தால், இந்த உலகில் மக்கள் செய்வதற்கு நீதியும், நியாயமும் கிடைக்க, நம் மரணத்திற்குப் பிறகு ஒரு வாழ்க்கை தேவை என்பதை உணரலாம்.
மரணத்திற்குப் பின் உள்ள வாழ்க்கை பற்றி இஸ்லாம்
நாம் வாழும் இந்த உலகம் ஒரு நாள் முடிவுக்கு வரும் என்று இஸ்லாம் சொல்கிறது. அறிவியலும் இதை பிக் கிரன்ச் (Big Crunch) என்று குறிப்பிடுகிறது.
முதல் மனிதன் முதல் இறுதி மனிதன் வரை அனைத்து மனிதர்களையும் நியாயத்தீர்ப்பு நாளில் இறைவன் உயிர் கொடுத்து எழுப்புவான். அவர்கள் செய்த செயல்களை பற்றி விசாரித்து, நல்ல செயல்களைச் செய்தவர்களுக்கு கூலியாக சொர்க்கமும், தீய செயல்கள் செய்தவர்களுக்கு தண்டனையாக நரகமும் இறைவன் கொடுப்பான். சொர்க்கத்திலும் நரகத்திலும் உள்ள வாழ்க்கை நிரந்தரமானது, முடிவில்லாதது.
சொர்க்கத்திலும் நரகத்திலும் உள்ள வாழ்க்கை முடிவில்லாதது என்பதால், ஹிட்லரை 60 இலட்சம் முறையோ அல்லது அதற்கு கூடுதலாகவும் நரக நெருப்பில் தண்டிக்க முடியும். அதேபோல், நல்லவர்களையும், அநியாயமாக கொல்லப்பட்ட அப்பாவி மக்களையும் முடிவில்லாமல் சொர்க்கத்தில் வாழச் செய்ய முடியும்.
மரணத்திற்குப் பின் உள்ள வாழ்க்கை சாத்தியமா?
இறைவன் குர்ஆனில் கூறுகிறான்:
“முதல் தடவை யார் படைத்தானோ அவனே (உங்களை) உயிர்ப்பிப்பான். அவன் ஒவ்வொரு படைப்பையும் அறிந்தவன்” என்று கூறுவீராக!
குர்ஆன் அத்தியாயம் 36 வசனம் 79
முதல் முறை ஒன்றைப் படைப்பது தான் சிரமம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதே படைப்பை மீண்டும் படைப்பது முதல் முறை போல கடினமாக இருக்காது. கடவுள் நம்மை முதல் முறை எந்த சிரமமும் இல்லாமல் தான் படைத்தார். முதல் முறை எந்த சிரமமும் இல்லாமல் படைத்த கடவுளுக்கு, நாம் இறந்த பின் உயிர் கொடுப்பது சிரமமாக இருக்குமா? நிச்சயம் சிரமமாக இருக்காது.
கூடுதல் விபரங்களுக்கு இந்த லிங்கை படியுங்கள்.
எல்லோருக்கும் முழு நீதி கிடைக்கும்
ஒவ்வொரு மனிதனும் தான் செய்த குற்றம் என்ன, எதற்காக தண்டிக்கப்படப் போகிறோம் என்பதை நன்றாக அறிவான்.
இறைவன் குர்ஆனில் கூறுகிறான்:
இன்னும், (செயல்கள் பதியப்பட்ட) புத்தகம் (மக்கள் முன்) வைக்கப்படும். அதில் உள்ளவற்றின் காரணமாக குற்றவாளிகள் பயந்தவர்களாக இருப்பதை காண்பீர்! “இந்த ஏட்டுக்கு என்ன ஆனது? (குற்றங்களில்) சிறியதையோ, பெரியதையோ ஒன்று விடாமல் பதிவு செய்துள்ளதே!” எனக் கூறுவார்கள். தாங்கள் செய்தவற்றைக் கண் முன்னே காண்பார்கள். உமது இறைவன் எவருக்கும் அநீதி இழைக்க மாட்டான்.
குர்ஆன் அத்தியாயம் 18 வசனம் 49
இவ்வுலகில் அநீதியால் பாதிக்கப்பட்டவர்கள், விரக்தியடையவோ, நம்பிக்கை இழக்கவோ தேவையில்லை. ஏனெனில் அவர்களுக்கான முழு இழப்பீடும் நியாயத் தீர்ப்பு நாளில் வழங்கப்படும்.
ஒவ்வோர் உயிரும் மரணத்தைச் சுவைக்கும். மரணத்திற்கு பின் உள்ள வாழ்க்கையில் உங்களின் கூலிகள் முழுமையாக வழங்கப்படும்.
குர்ஆன் அத்தியாயம் 3 வசனம் 185
யார் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அதற்குரிய பலனை அவர் கண்டு கொள்வார். யார் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும் அதற்குரிய தண்டனையை அவர் கண்டு கொள்வார்.
குர்ஆன் அத்தியாயம் 99 வசனங்கள் 7, 8
இவ்வுலகில் தாங்கள் செய்த செயல்கள் பற்றி கடவுளால் விசாரிக்கப்படுவதிலிருந்து யாரும் தப்ப முடியாது. தாங்கள் செய்த ஒவ்வொரு செயலுக்கும், கூலியோ அல்லது தண்டனையையோ பெறுவர்.
ஒவ்வொருவரும், தாம் செய்த நன்மையையும், தீமையையும் கண் முன்னே பெற்றுக் கொள்ளும் நியாயத் தீர்ப்பு நாளில், “தமக்கும் தமது (தீய) செயல்களுக்குமிடையே மிகப் பெரிய இடைவெளி இருக்க வேண்டும்” என ஆசைப்படுவர். இறைவன் தன்னைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறான். அடியார்கள் மீது இறைவன் இரக்கமுள்ளவன்.
குர்ஆன் அத்தியாயம் 3 வசனம் 30
யாருக்கும் எந்த அநீதியும் இழைக்கப்படாது. மக்கள் தங்கள் செய்த நற்செயல்களுக்கு பல மடங்கு அதிகமாக கூலி கொடுக்கப்படுவார்கள். இது ஒவ்வொரு மனிதனையும் பல நற்செயல்களைச் செய்ய தூண்டுகிறது.
இறைவன் (யாருக்கும்) அணுவளவும் அநீதி இழைக்க மாட்டான். அது நன்மையாக இருந்தால் அதைப் பன்மடங்காகப் பெருக்குவான். தனது மகத்தான கூலியை வழங்குவான்.
குர்ஆன் அத்தியாயம் 4 வசனம் 40
இரக்கமுள்ள கடவுள் நரகத்தில் தண்டிப்பது ஏன் என்பதை பற்றி அறிந்துக் கொள்ள இதை படியுங்கள்.
பிறவி ஊனம், குருடு, செவிடு ஏன்?
முன் ஜென்மத்தில் செய்த பாவத்தின் காரணமாக, குழந்தைகள் ஊனமாகவோ, குருடாகவோ பிறக்கிறார்கள் என்று பலர் நம்புகின்றனர். உண்மையிலேயே முன் ஜென்மம், மறு பிறவி என்பது உண்டா? அப்படி நம்புவது பகுத்தறிவிற்கு பொருந்துமா என்பதை அறிய இதை படியுங்கள்.
இஸ்லாத்தை பொறுத்த வரை, நாம் தற்காலிகமாக வாழும் இந்த முழு உலக வாழ்க்கையும் ஒரு சோதனை என்று சொல்கிறது.
உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக, மரணத்தையும், வாழ்வையும் இறைவன் படைத்தான்.
குர்ஆன் அத்தியாயம் 67 வசனம் 2
மக்கள் பல்வேறு விதமாக சோதிக்கப்படுகிறார்கள். சோதனை செல்வம் மூலமாக, ஆரோக்கியம் மூலமாக, நீண்ட ஆயுள் போன்றவற்றின் மூலமாக இருக்கலாம்.
உதாரணமாக: நியாயத்தீர்ப்பு நாளில், ஒரு செல்வந்தர் தனது செல்வத்தை எவ்வாறு செலவிட்டார் என்று விசாரிக்கப்பட்டு, அவர் செய்த செயல்களுக்கு ஏற்ப நற்கூலியோ, தண்டனையோ பெறுவார். அதே நேரத்தில், இவ்வுலகில் வறுமையை அனுபவித்த ஒரு ஏழைக்கு செல்வத்தை பற்றிய கேள்வி இருக்காது. அதில் அவர் முழு மதிப்பெண்களைப் பெறுவார்.
இறைவன் உங்களுக்கு வழங்கியவற்றில் உங்களைச் சோதித்துப் பார்ப்பதற்காக, உங்களில் சிலரை விட சிலருக்குத் தகுதிகளை உயர்த்தினான்.
குர்ஆன் அத்தியாயம் 6 வசனம் 165
எப்படி நம் செல்வம், ஆரோக்கியம் பற்றி நியாயத்தீர்ப்பு நாளில் விசாரிக்கப்படுவோமோ, அதே போன்று, நம் உடலுறுப்புக்களை எவ்வாறு பயன்படுத்தினோம் என்றும் விசாரிக்கப்படுவோம். உதாரணமாக, கண்களை எப்படி பயன்படுத்தினோம் என்று விசாரிக்கப்படுவோம். குருடாக இருக்கும் ஒரு மாற்றுத்திறனாளிக்கு இந்த விசாரணை இருக்காது. அதனால் அவர் முழு மதிப்பெண்களைப் பெறுவார்.
இதிலிருந்து, நியாயத் தீர்ப்பு நாளில் எப்படி எல்லோருக்கும் சரியான முழு நீதி கிடைக்கிறது என்பதை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
கருத்துச் சுருக்கம்
- இவ்வுலகில் முழுமையான நீதி கிடைக்காது.
- முழுமையான நீதி கிடைக்க மரணத்திற்கு பின் ஒரு வாழ்க்கை அவசியம்.
- முதல் முறை சிரமமில்லாமல் படைத்த இறைவனுக்கு, நாம் இறந்த பின் நம்மை உயிர் கொடுத்து எழுப்புவது சுலபமே.
- மரணத்திற்கு பின் உள்ள வாழ்க்கை முடிவில்லாதது என்பதால், ஹிட்லர் போன்ற தீயவர்களுக்கு பன்மடங்கு தண்டனை கொடுக்க முடியும். நல்லவர்களுக்கு பன்மடங்கு கூலி கொடுக்க முடியும்.
- ஒவ்வொரு மனிதரும் இவ்வுலகில் தான் செய்த செயல்களின் பலன்களை கண்டுக் கொள்வர்.
- இவ்வுலக வாழ்க்கை ஒரு சோதனையே! பிறவி ஊனம், குருடு, செவிடு கூட ஒரு வகையான சோதனைதான்.
- எந்த மனிதருக்கும் ஒரு அணுவளவு கூட அநீதி இழைக்கப்படாது.
