அரஃபா தினம் பற்றி ஒவ்வொரு முஸ்லிமும் கண்டிப்பாக அறிய வேண்டிய 6 விஷயங்கள்

அரஃபா தினம் பற்றி ஒவ்வொரு முஸ்லிமும் கண்டிப்பாக அறிய வேண்டிய 6 விஷயங்கள் குறித்து ஒரு குர்ஆன், ஹதீஸ் ஆதாரத்துடன் ஓர் எளிய விளக்கம்.

துல்ஹஜ் மாதத்தின் 9-வது நாள் அரஃபா தினமாகும். இது இஸ்லாத்தில் மிக புனிதமான நாட்களில் ஒன்றாகும். அரஃபா தினம் என்பது அல்லாஹ்வின் கருணை, மன்னிப்பு மற்றும் எண்ணற்ற பாக்கியங்கள் நமக்கு கிடைக்கும் புனித நாள்.

அரஃபா தினத்தைப் பற்றி ஒவ்வொரு முஸ்லிமும் கண்டிப்பாகத் அறிய வேண்டிய ஆறு முக்கியமான விஷயங்களை இந்த ஆர்டிக்கிளில் பார்க்கலாம்.

1. நம்மிடமிருந்து அல்லாஹ் இந்த நாளில் தான் உடன்படிக்கை வாங்கினான்

அரஃபா தினத்தில் தான் அல்லாஹ் எல்லா மனிதர்களிடமிருந்தும் உடன்படிக்கை (வாக்குறுதி) செய்தான்.

அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களின் சந்ததிகளை உமது இறைவன் வெளியாக்கி, அவர்களை அவர்களுக்கு எதிரான சாட்சிகளாக்கினான். நான் உங்கள் இறைவன் அல்லவா?” (என்று கேட்டான்.) “ஆம்! (இதற்கு) சாட்சி கூறுகிறோம்” என்று அவர்கள் கூறினர். “இதை விட்டும் நாங்கள் கவனமற்று இருந்து விட்டோம்” என்று நீங்கள் கூறாதிருப்பதற்காகவே (இதனைச் செய்தோம்).

குர்ஆன் 7:172

ஆதிமனிதர் ஆதமின் சந்ததியினரை அல்லாஹ் அரஃபாவில் ஒன்றுதிரட்டி, நம்மிடம் வாக்குறுதி வாங்கினான் என்று நபிகள் நாயகம் ﷺ அவர்கள் விளக்கினார்கள். (பார்க்க: முஸ்னத் அஹமத் # 2455)

இந்த இறைவசனம், தவ்ஹீத் (ஏகத்துவம்) ஒவ்வொருவரின் மனதிலும் ஆழமாகப் பதிந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. அல்லாஹ்வுடன் நாம் செய்த உடன்படிக்கையை அரஃபா தினம் நமக்கு நினைவூட்டுகிறது.

2. நபிகள் நாயகம் ﷺ அவர்கள் தனது இறுதிப் பேருரையை நிகழ்த்தினார்கள்

நபிகள் நாயகம் ﷺ அவர்கள் அரஃபா தினத்தின் போது தான், தனது வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதி பேருரையை நிகழ்த்தினார்கள். (பார்க்க: புகாரி # 67, 1741)

  • நீதி
  • சமத்துவம்
  • சகோதரத்துவம்
  • உயிர் மற்றும் செல்வத்தின் புனிதத்தன்மை
  • உரிமைகள், பொறுப்புகள்
  • முஸ்லிம் சமுதாயத்தின் ஒற்றுமை

இப்படி பல மனிதகுலத்திற்கான தேவையான எல்லா காலத்திற்கும் பொருந்தக் கூடிய வழிகாட்டுதல்களை இந்த பேருரையில் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் வழங்கினார்கள்.

நபிகள் நாயகம் ﷺ அவர்கள் மனித சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இவ்வாறு பிரகடனம் செய்தார்கள்:

ஓர் அரபி, அரபி அல்லாத ஒருவரை விடவோ, ஓர் அரபி அல்லாதவர் அரபி ஒருவரை விடவோ எந்த உயர்வும், சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் கருப்பர் ஒருவரை விடவோ, எந்த கருப்பருக்கும் வெள்ளையர் ஒருவரை விடவோ எந்த உயர்வும், சிறப்பும் இல்லை. பயபக்தி (நற்செயல்கள்) மட்டுமே ஒருவரின் மேன்மையை தீர்மானிக்கும்.

முஸ்னத் அஹ்மத் # 23489

நபியவர்களின் இந்த பொன்மொழி சமத்துவத்தின் தூணாக இன்றும் உள்ளது.

3. அரஃபா தினத்தில் தான் இஸ்லாம் முழுமையாக்கப்பட்டது

அரஃபா தினத்தில் அல்லாஹ் இந்த வசனத்தை இறக்கினான்:

இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை நான் முழுமையாக்கி வைத்துவிட்டேன்; மேலும் எனது அருட்கொடையையும் உங்கள் மீது நான் நிறைவு செய்து விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாத்தையே (உங்களுடைய) மார்க்கமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன்.

குர்ஆன் 5:3

நபிகள் நாயகம் ﷺ அவர்கள் அரஃபாவில் நின்றுகொண்டிருந்தபோது இந்த இறைவசனம் அருளப்பட்டது. புனிதமிக்க இந்த நாளின் மகத்துவத்தை நமக்கு இது உணர்த்துகிறது. (பார்க்க: புகாரி # 45)

4. இந்த தினத்தில் அல்லாஹ் நரக நெருப்பிலிருந்து அதிகமான மக்களை விடுவிக்கிறான்

அல்லாஹ்வின் கருணையையும், மன்னிப்பையையும் மக்கள் அதிகமாக பெற்றுக் கொள்ள அரஃபா தினம் சிறந்த நாளாகும்.

நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்:

அரஃபா நாளை விட அல்லாஹ் தன் அடியார்களை நரக நெருப்பிலிருந்து அதிகமாக விடுவிக்கும் நாள் வேறு எதுவும் இல்லை.

ஸஹீஹ் முஸ்லிம் # 1348
  • பாவமன்னிப்பு தேடுதல்
  • அதிகமாக திக்ரு செய்தல்
  • அதிகமாக துஆ செய்தல்
  • குர்ஆன் ஓதுதல்

இப்படி முஸ்லிம்கள் இந்த நாளில் தங்களால் இயன்றவரை நற்செயல்களை செய்ய வேண்டும்.

நாம் செய்த எவ்வளவு பெரிய பாவமாக இருந்தாலும், அது அல்லாஹ்வின் கருணையின் முன்பு சிறியது தான்.  அரஃபா தினத்தில் அல்லாஹ்வின் மன்னிப்பின் கதவுகள் நமக்காக திறந்தே உள்ளன.

5. அரஃபா தினத்தில் நோன்பு நோற்பது இரண்டு வருட பாவங்களை அழிக்கிறது

ஹஜ் செய்யாத முஸ்லிம்களுக்கு, அரஃபா நாளில் நோன்பு நோற்பது மிகவும் சிறந்தது.

நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்:

அரஃபா நாளின் நோன்பு, அதற்கு முந்தைய வருடத்தின் பாவங்களையும், அதற்கு பிந்தைய வருடத்தின் பாவங்களையும் அழித்துவிடும்.

ஸஹீஹ் முஸ்லிம் # 1162

குறிப்பு: இந்த நோன்பின் மூலம், சிறிய பாவங்களுக்குத்தான் பாவமன்னிப்பு கிடைக்கும். பெரிய பாவங்களுக்கு மார்க்கம் சொல்லித் தந்த படி சரியாக தவ்பா செய்யவேண்டும்.

6. அரஃபா தினத்தில் கேட்கப்படும் துஆவே சிறந்த துஆ

துஆக்கள் செய்வதற்கு மிகச் சிறந்த நேரங்களில் அரஃபா தினமும் ஒன்றாகும்.

நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்:

துஆக்களில் மிகச் சிறந்த துஆ அரஃபா நாளில் செய்யப்படும் துஆவாகும்.

ஸஹீஹ் ஜாமிஹ் # 3274

அரஃபா தினத்தில் இந்த திக்ரை ஓதுமாறு நபிகள் நாயகம் ﷺ  அவர்கள் கற்றுத் தந்தார்கள்.

“لا إلَهَ إلّا اللهُ وحدَهُ لا شريكَ لَهُ، لَهُ الملكُ ولَهُ الحمدُ وهوَ على كلِّ شَيءٍ قديرٌ”

லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹ், லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர்.

பொருள்

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன், அவனுக்கு இணையாக யாருமில்லை. ஆட்சி அதிகாரம் அனைத்தும் அவனுக்கே உரியது, புகழ் அனைத்தும் அவனுக்கே உரியது, மேலும் அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உடையவன்.

அரஃபா தினத்தில் செய்ய வேண்டிய நற்செயல்கள்

  • நோன்பு நோற்பது
  • அதிகமாக திக்ருகள் செய்வது
  • குர்ஆன் ஓதவது
  • தவ்பா செய்வது
  • தர்மம் (ஸதகா) செய்வது
  • நபிகள் நாயகம் அவர்கள் மீது அதிகமாக ஸலவாத் சொல்வது
  • பாவங்களைத் தவிர்ப்பது
  • தனிமையில் அதிகமாக துஆ செய்வது

இப்படி அரஃபா தினத்தில் பல நற்செயகள் செய்வதன் மூலம் அல்லாஹ்வின் கருணையையும், மன்னிப்பையும் பெறலாம்.

முடிவுரை

அரஃபா தினம் என்பது அல்லாஹ் ஒவ்வொரு ஆண்டும் முஸ்லிம்களுக்கு வழங்கும் மிகப்பெரிய பாக்கியங்களில் ஒன்றாகும்.

நோன்பு நோற்பதன் மூலமும், அல்லாஹ்வை நினைவுகூர்வதன் மூலமும், அவனிடம் மன்னிப்பு கேட்பதன் மூலமும் அரஃபா தினத்தை சிறந்த முறையில் பயன்படுத்துங்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

அரஃபா தினம் என்றால் என்ன?

அரஃபா நாள் என்பது துல் ஹிஜ்ஜா மாதத்தின் 9-வது நாள் மற்றும் இஸ்லாத்தின் அதிபுனிதமான நாட்களில் ஒன்றாகும். ஹஜ் செய்பவர்கள் அரஃபா சமவெளியில் இந்த தினத்தில் கூடுவார்கள்.

அரஃபா நாளில் நோன்பு நோற்பதன் நன்மைகள் என்ன?

ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் # 1162 படி, அரஃபா நாளில் நோன்பு நோற்பது முந்தைய வருடத்தின் மற்றும் வரவிருக்கும் வருடத்தின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

அரஃபா நாளின் சிறந்த துஆ எது?

அரஃபா நாளில் செய்யப்படும் துஆவே சிறந்த துஆ என்று நபிகள் நாயகம் ﷺ கூறினார்கள்.

“லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹ், லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர்.” என்ற இந்த திக்ரை அரஃபா நாளில் அதிகம் செய்ய வேண்டும்.

இஸ்லாம் அரஃபா நாளில் முழுமையாக்கப்பட்டதா?

ஆம். அல்குர்ஆன் அத்தியாயம் 5, வசனம் 3 அரஃபா நாளில் தான் இறங்கியது.

ஹஜ் செய்யாத முஸ்லிம்கள் அரஃபா நாளில் நோன்பு நோற்கலாமா?

ஆம். ஹஜ் செய்யாதவர்களுக்கு அரஃபா நாளில் நோன்பு நோற்பது மிகவும் சிறந்தது.

மேலும் படிக்க

WHAT OTHERS ARE READING

Most Popular