முஹம்மது நபி அவர்கள் கிரகணங்களைப் பற்றி இவ்வாறு கூறினார்கள்:
“சூரிய கிரகணமும், சந்திர கிரகணமும் இறைவனின் இரண்டு அத்தாட்சிகள். யாருடைய மரணத்திற்காகவோ, பிறப்பிற்காகவோ கிரகணம் ஏற்படுவதில்லை. எனவே, கிரகணத்தைப் பார்க்கும்போது இறைவனை நினைவு கூருங்கள்.”
புகாரி
நபிகளாரின் கூற்றை படிக்கும் போது, நமக்கு இரண்டு கேள்விகள் எழலாம்.
- கிரகணத்தில் அப்படி என்ன அத்தாட்சி இருக்கிறது?
- “யாருடைய மரணத்திற்காகவோ, பிறப்பிற்காகவோ கிரகணம் ஏற்படுவதில்லை” என்று முஹம்மது நபி அவர்கள் ஏன் கூறினார்கள்?
இந்த கட்டுரையில், மேலே உள்ள இரண்டு கேள்விகளுக்கான பதில்களைப் பார்ப்போம்.
சூரிய கிரகணம்
கிரகணத்தில் அப்படி என்ன தான் அத்தாட்சி உள்ளது? இதை புரிந்து கொள்ள, சூரிய கிரகணத்தை உதாரணமாக எடுத்துக் கொள்வோம்.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வரும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதனால் சூரியனிலிருந்து வரும் ஒளியை சந்திரன் மறைக்கும்.
சூரியனின் அளவோடு சந்திரனின் அளவை ஒப்பிடும் போது, மிகப் பெரிய சூரியனுக்கு முன்னால் சந்திரன் ஒரு சிறிய கோலி குண்டு போல் தோன்றும். அளவில் இவ்வளவு சிறியதாக இருக்கும் சந்திரனால் எப்படி பிரம்மாண்டமான சூரியனின் ஒளியை முழுமையாகத் மறைக்க முடிகிறது? இங்குதான் நம்மை வியப்பில் ஆழ்த்தும் இறைவனின் அத்தாட்சியை நம்மால் காண முடிகிறது.

வானவியலில் ஒரு அடிப்படையை நினைவில் கொள்வோம்
நட்சத்திரங்கள் பூமிக்கு நெருக்கமாக இருக்கும்போது, அவை தொலைவில் உள்ள நட்சத்திரங்களை விட பெரியதாக தோன்றும். உதாரணமாக, இரவு வானத்தில் உள்ள பெரும்பாலான நட்சத்திரங்கள் சிறிய வெள்ளைப் புள்ளிகளைப் போல் தான் நம் கண்களுக்கு தெரிகிறது. உண்மையில், அவற்றில் பல நட்சத்திரங்கள் நமது சூரியனை விட மிகப் பெரியவை. ஆனால், பூமியிலிருந்து வெகு தொலைவில் இருப்பதால் அவை மிகவும் சிறியதாகத் தெரிகின்றன!

நம்மை அதிசிய வைக்கும் பிரபஞ்சத்தில் உள்ள ஒழுங்கு
சூரியனின் அளவோடு சந்திரனின் அளவை ஒப்பிடும் போது, சந்திரன் சூரியனை விட 400 மடங்கு சிறியது.

அதிசிய வைக்கும் விஷயம் என்னவென்றால், சந்திரன் சூரியனை விட பூமிக்கு சரியாக அதே 400 மடங்கு நெருக்கமாக உள்ளது. இதனால்தான் சூரியனும் சந்திரனும் நம் கண்களுக்கு வானத்தில் ஒரே அளவில் தோன்றுகின்றன. இதனால் தான், சூரியனுக்கு முன்னால் ஒரு சிறிய கோலி குண்டு போல் காட்சியளிக்கும் சந்திரனால் பிரமாண்டமான சூரியனின் ஒளியை முழுமையாக மறைக்க முடிகிறது.

இதில் இன்னும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், சூரிய குடும்பத்தில் உள்ள வேறு எந்த கிரகத்திற்கோ, சந்திரனிற்கோ இது நிகழ்வதில்லை. ஏனெனில், இது போன்ற ஒழுங்கை நமது பூமிக்கும் சந்திரனுக்கும் மட்டுமே நம்மால் காண முடிகிறது.
பிக் பேங் பெருவெடிப்பும் ஒழுங்கும்
பில்லியனுக்கும் மேலான விண்மீன்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் காரணமான பிக் பேங் பெருவெடிப்பால், தானாக இந்த அதிசிய வைக்கும் ஒழுங்கையும் பிரமிக்க வைக்கும் துல்லியத்தையும் உருவாக்கி இருக்க முடியுமா? கண்டிப்பாக முடியாது. ஏனென்றால் வெடிப்புகள் அழிவையும் நாசத்தையும் ஏற்படுத்துமே தவிர, இது போல் பிரமிக்க வைக்கும் ஒழுங்கை ஒருபோதும் ஏற்படுத்தாது.
கிரகணங்கள் கடவுளின் அத்தாட்சிகள் என்று முஹம்மது நபி அவர்கள் ஏன் கூறினார்கள்?
பிரபஞ்சத்தில் நாம் காணும் பிரமிக்க வைக்கும் ஒழுங்கை கிரகணங்கள் நமக்கு நினைவுபடுத்துவதால், கிரகணங்களை கடவுளின் அத்தாட்சிகள் என்று முஹம்மது நபி அவர்கள் கூறினார்கள்.
“யாருடைய மரணத்திற்காகவோ, பிறப்பிற்காகவோ கிரகணம் ஏற்படுவதில்லை” என்று முஹம்மது நபி அவர்கள் ஏன் கூறினார்கள்?
முஹம்மது நபி அவர்களின் இரண்டு வயது மகன் இறந்த அன்று ஒரு கிரகணம் ஏற்பட்டது. “முஹம்மது நபியின் மகன் இறந்ததால் தான் அந்த கிரகணம் ஏற்பட்டது” என்று மக்கள் பேச ஆரம்பித்தனர்.
இதையறிந்த முஹம்மது நபி அவர்கள், யாருடைய இறப்புக்காகவும் பிறப்புக்காகவும் கிரகணங்கள் ஏற்படுவதில்லை என்று தெளிவுபடுத்தினார். இங்கே நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், தன்னுடைய மகனின் மரணத்தை கிரகணத்தோடு இணைத்து மக்கள் பேசியதை கேள்விப்பட்ட பிறகு, முஹம்மது நபி அவர்கள் மௌனம் காத்திருந்தாலே போதும், எல்லா மக்களும் அதை உண்மை என்று நம்பி இருப்பார்கள். இதனால், முஹம்மது நபி அவர்களுக்கு தொண்டர்களும் கூடியிருப்பர், புகழும் கூடியிருக்கும். ஆனால், முஹம்மது நபி அவர்கள் அவ்வாறு செய்யாமல், தன் மகன் இறந்ததால் கிரகணம் ஏற்படவில்லை என்பதை மக்களுக்கு தெளிவுப்படுத்தினார்.
தங்களுக்குச் சாதகமாகப் பொய்களை இட்டுக்கட்டி பரப்பும் ஆன்மிகத் தலைவர்களின் செயல்களையும், முஹம்மது நபி அவர்களின் செயலையும் ஒப்பிட்டுப் பாருங்கள். முஹம்மது நபி அவர்களின் நேர்மையையும், உண்மைத் தன்மையையும் நடுநிலையோடு நோக்கும் எவருக்கும், முஹம்மது நபி அவர்கள் இறைவனிடமிருந்து வந்த இறைத்தூதர் தான் என்பது தெளிவாகும்.
முடிவுரை
- பிரபஞ்சத்தில் நாம் காணும் பிரமிக்க வைக்கும் ஒழுங்கை கிரகணங்கள் நமக்கு நினைவுபடுத்துகின்றன.
- பிக் பேங் பெருவெடிப்பால், தானாக இந்த அதிசிய வைக்கும் ஒழுங்கையும் பிரமிக்க வைக்கும் துல்லியத்தையும் உருவாக்கி இருக்க முடியாது.
- இந்த அதிசிய வைக்கும் ஒழுங்கிற்கும் பிரமிக்க வைக்கும் துல்லியத்திற்கும் பின்னால், கண்டிப்பாக ஒரு தெய்வீக சக்தி இருந்திருக்க வேண்டும்.
- “யாருடைய மரணத்திற்காகவோ, பிறப்பிற்காகவோ கிரகணம் ஏற்படுவதில்லை” என்று முஹம்மது நபி அவர்கள் மக்களுக்கு தெளிவுபடுத்தியிருப்பது அவர்களுடைய உண்மைத்தன்மையைக் காட்டுகிறது.