கட்டாய மதமாற்றத்தை இஸ்லாம் அனுமதிக்கிறதா?

கட்டாய மதமாற்றத்தை இஸ்லாம் அனுமதிக்கிறதா? குர்ஆனும், நபிமொழிகளும் சொல்வது என்ன? பொய் பிரச்சாரத்திற்கு பலியாகாமல், உண்மையை கண்டறியுங்கள்.

இல்லை. கட்டாய மதமாற்றத்தை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

சில “முஸ்லிம்கள்” கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டதாக அவ்வப்போது சில செய்திகள் வெளிவருகின்றன.  சில “முஸ்லிம்களின்” செயல்கள் என்று தொடங்கும் இந்த செய்திகள், ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையே குற்றம் சாட்டும் வகையில் திரிக்கப்படுகின்றன. இதனால், அனைத்து முஸ்லிம்களும் சந்தேகக் கண்ணோடு பார்க்கப்படுகிறார்கள்.

பயம் அல்லது வற்புறுத்தலால் ஏற்படும் நம்பிக்கையை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை.

கட்டாய மதமாற்றம் பற்றி குர்ஆன் கூறுவது என்ன?

இறைவன் குர்ஆனில் கூறுகிறான்:

சத்திய மார்க்கத்தில் (மதத்தில்) எவ்வித நிர்ப்பந்தமுமில்லை.

குர்ஆன் 2:256

எந்த காரணத்திற்காகவும் எவர் மீதும் மதத்தை திணிக்கக் கூடாது என்று இந்த வசனம் தெளிவாக சொல்கிறது.

இறைவன் மேலும் கூறுகிறான்:

உமது இறைவன் நாடியிருந்தால் பூமியில் உள்ள அனைவரும் ஒட்டு மொத்தமாக நம்பிக்கை கொண்டிருப்பார்கள். நம்பிக்கை கொண்டவர்களாக ஆவதற்காக மக்களை நீர் கட்டாயப்படுத்த முடியுமா?

குர்ஆன் 10:99

இறைவன் மேலும் கூறுகிறான்:

நீர் கூறும்: இந்த உண்மை உங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ளது. ஆகவே, விரும்புபவர் (இதை) நம்பட்டும், விரும்புபவர் (இதை) நிராகரிக்கட்டும்.

குர்ஆன் 18:29

இறைவன் கூறுகிறான்:

எனவே, நீர் நல்லுபதேசம் செய்வீராக! நீர் உபதேசம் செய்பவர் மட்டுமே. நீர் அவர்கள் மீது அதிகாரம் செலுத்துபவர் அல்ல.

குர்ஆன் 88:22

யாரையும் இஸ்லாத்தை ஏற்கும்படி கட்டாயப்படுத்த முடியாது என்பதை இந்த வசனங்கள் மிகத் தெளிவாக உணர்த்துகின்றன.

இஸ்லாத்தின் பெயரால், மதமாற்றம் செய்ய பிறரை கட்டாயப்படுத்தினாலோ அல்லது அழுத்தம் கொடுத்தாலோ, அந்த நபர் இஸ்லாத்தின் போதனைகளை மீறுகிறார் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இறைநம்பிக்கை உள்ளத்திலிருந்து வர வேண்டும்

இஸ்லாம் இறைநம்பிக்கையை வெறும் வாயிலிருந்து வரும் வார்த்தையாக பார்க்கவில்லை. இறைநம்பிக்கை என்பது உள்ளத்திலிருந்து வர வேண்டும் என்று இஸ்லாம் கற்பிக்கிறது.

இறைவன் கூறுகிறான்:

நாங்கள் இறைநம்பிக்கை கொண்டோம் என்று கிராமத்து அரபிகள் கூறுகிறார்கள். நீர் கூறும்: நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை; மாறாக ‘நாங்கள் அடிபணிந்தோம்’ என்று கூறுங்கள். ஏனெனில் இறைநம்பிக்கை இன்னும் உங்கள் உள்ளங்களில் நுழையவில்லை.

குர்ஆன் 49:14

உண்மையான இறைநம்பிக்கை உள்ளத்திற்குள் நுழைய வேண்டும் என்பதை இந்த வசனம் நமக்குக் கற்பிக்கிறது. கட்டாயப்படுத்தப்படுத்தி, அல்லது வற்புறுத்தி ஒருவரை இஸ்லாமை ஏற்க வைத்தால், அவரது உள்ளத்தில் உண்மையான இறைநம்பிக்கை இருக்காது.

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:

செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன.

புஹாரி: 1

பயத்தால், வற்புறுத்தலால் ஒருவர் இஸ்லாமை ஏற்கிறேன் என்று தனது வாயால் சொன்னாலும், அது உண்மையான இறைநம்பிக்கையாக மாறாது.

மதத்தின் பெயரால் ஏமாற்றக் கூடாது

மதத்தைப் பரப்புவதற்காக பிறரை ஏமாற்றுவதை இஸ்லாம் அனுமதிப்பதாகச் சிலர் குற்றம்சாட்டுகின்றனர். இந்த குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது.

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:

பிறரை ஏமாற்றுபவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை (அதவாது உண்மையான முஸ்லிமில்லை).

ஸஹீஹ் முஸ்லிம்: 102

முஸ்லிமல்லாதவர்களிடம் முஸ்லிம்கள் பொய் சொல்ல இஸ்லாம் அனுமதிக்கிறதா? பதிலை அறிந்துக் கொள்ள, இங்கே கிளிக் செய்யவும்.

இறைவன் கூறுகிறான்:

ஞானம்; இன்னும், அழகிய உபதேசத்தின் மூலம் உம் இறைவனுடைய பாதையின் பக்கம் (மக்களை) அழைப்பீராக! மேலும், மிக அழகிய முறையில் அவர்களிடம் தர்க்கிப்பீராக!

குர்ஆன் 16:125

கட்டாயப்படுத்தி அல்லது மோசடி செய்து அல்லது வஞ்சகம் செய்து மதத்தை பரப்புவதை இஸ்லாம் தடை செய்துள்ளது. உண்மை, ஞானம் மற்றும் நற்பண்புகள் மூலம் மட்டுமே மக்களை அழைக்குமாறு குர்ஆனில் இறைவன் முஸ்லிம்களுக்குக் கட்டளையிடுகிறான்.

பொய் வழக்குகள்

ஏப்ரல் 2026-ல், உத்திரப்பிரதேச மதமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் பொய்யான எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த செய்தி, தி ஹிந்து (The Hindu), தி இந்தியன் எக்ஸ்பிரஸ் (The Indian Express) மற்றும் லைவ் லா (LiveLaw) போன்றவற்றில் இடம்பெற்றன. அலகாபாத் உயர்நீதிமன்றம் இந்த “தவறான, போலியான” எஃப்.ஐ.ஆர்களைச் சுட்டிக்காட்டி, அதிகார துஷ்பிரயோகம் செய்யப்படுவதை கடுமையாக கண்டித்துள்ளது.

குற்றச்சாட்டுகள் எல்லாம், உண்மைகள் அல்ல. வழக்கு பதிவு செய்தால் அது உண்மை என்று ஆகிவிடாது. பொய் பரப்புரை செய்யும் மீடியாக்களும், வாட்ஸாப்ப் குரூப்புகளும், இந்த குற்றச்சாட்டுகளை “உண்மைகள்” போல் சித்தரித்து, மக்களைப் பிரிக்கவும், வெறுப்பை உருவாக்கவும் முயல்கின்றன.

சில முஸ்லிம்கள் செய்வதற்கு முழு முஸ்லிம் சமுதாயம் பொறுப்பாகுமா?

தலித்துகள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்களை நடத்திய ஒரு சில இந்துக்களின் செயல்களுக்கு, முழு இந்து சமூகத்தையும் எப்படி குற்றம்சாட்ட முடியாதோ. அதேபோல, ஒரு சில முஸ்லிம்கள் செய்யும் தவறான செயல்களுக்கு, ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மீது குற்றம் சுமத்தக் கூடாது.

உண்மை என்ன?

இஸ்லாம் கட்டாய மதமாற்றத்தை அனுமதிக்கவில்லை.

  • மார்க்கத்தை ஏற்றுக் கொள்ள எவ்வித நிர்ப்பந்தமும் இல்லை என்று குர்ஆன் கூறுகிறது.
  • இறைநம்பிக்கை உள்ளத்திலிருந்து வர வேண்டும் என்பதை குர்ஆன் தெளிவுபடுத்துகிறது.
  • மதத்தின்  பெயரால் பிறரை ஏமாற்றுவதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.

கட்டாய மதமாற்றம் என்பது இஸ்லாத்திற்கு முரணானது. கட்டாயப்படுத்தியோ அல்லது ஏமாற்றியோ பிறரை மதம் மாற்றுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. இஸ்லாமிய போதனைகளை மீறும் சில முஸ்லிம்களின் செயல்களுக்கு இஸ்லாமிய முத்திரை குத்தக்கூடாது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

இஸ்லாம் கட்டாய மதமாற்றத்தை அனுமதிக்கிறதா?

இல்லை. குர்ஆன் 2:256-ல் “மார்க்கத்தில் எவ்வித நிர்ப்பந்தமுமில்லை” என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

கட்டாயத்தினால் ஒருவர் இஸ்லாத்தின் இணைவதாக கூறினால், அது உண்மையான இறைநம்பிக்கையாகக் கருதப்படுமா?

இல்லை. வெறும் வார்த்தைகள் மட்டும் போதாது, இறைநம்பிக்கை உள்ளத்திற்குள் நுழைய வேண்டும் என்பதை குர்ஆன் 49:14 உணர்த்துகிறது.

மதத்தைப் பரப்புவதற்கு பிறரை ஏமாற்றுவதை இஸ்லாம் அனுமதிக்கிறதா?

இல்லை. “பிறரை ஏமாற்றுபவர் நம்மைச் சார்ந்தவர் அல்ல” என்று நபி ﷺ அவர்கள் கூறியுள்ளனர் (ஸஹீஹ் முஸ்லிம் 102).

கட்டாய மதமாற்றம் செய்ததாக பொய்யான வழக்குகள் உள்ளனவா?

ஆம். ஏப்ரல் 2026-ல், உபி மதமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் பொய்யான எஃப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்படும் கவலைக்குரிய போக்கு குறித்து உயர்நீதிமன்றம் எச்சரித்தது.

மேலும் படிக்க

“காஃபிர்” என்பது இழிவான சொல்லா? இந்துக்களை காஃபிர் என்று கூறி குர்ஆன் இழிவுபடுத்துகிறதா? Is Quran abusing Hindus by calling them Kafir? Curious Hats

“காஃபிர்” என்பது இழிவான சொல்லா? இந்துக்களை காஃபிர் என்று கூறி குர்ஆன் இழிவுபடுத்துகிறதா?

WHAT OTHERS ARE READING

Most Popular