முஸ்லிமல்லாதவர்களிடம் முஸ்லிம்கள் பொய் சொல்ல இஸ்லாம் அனுமதிக்கிறதா?

முஸ்லிம்கள், முஸ்லிமல்லாதவர்களிடம் பொய் சொல்ல இஸ்லாம் அனுமதிக்கிறது என்றும், இதற்கு 'தகிய்யா' என்ற பெயர் கூட உண்டு என்று சிலர் குற்றம் சாட்டுகின்றனர். முஸ்லிம்கள், முஸ்லிமல்லாதவர்களிடம் பொய் சொல்ல இஸ்லாம் அனுமதிக்கிறது என்ற சொல்வதற்கு, குர்ஆனிலோ அல்லது நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளிலோ எந்த விதமான ஆதாரமும் கிடையாது.

முன்னுரை

முஸ்லிமல்லாதவர்களிடம் முஸ்லிம்கள் பொய் சொல்ல இஸ்லாம் அனுமதிக்கிறதா? நிச்சயமாக இல்லை. முஸ்லிமல்லாதவர்களிடம் பொய் சொல்ல இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

முஸ்லிம்கள், முஸ்லிமல்லாதவர்களிடம் பொய் சொல்ல இஸ்லாம் அனுமதிக்கிறது என்றும், இதற்கு ‘தகிய்யா’ என்ற பெயர் கூட உண்டு என்று சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது.

பொய் சொல்லுதல், ஏமாற்றுதல், துரோகம் செய்தல் போன்ற தீய செயல்களை இஸ்லாம் வன்மையாகத் தடை செய்கிறது. முஸ்லிம்கள், முஸ்லிமல்லாதவர்களிடம் பொய் சொல்ல இஸ்லாம் அனுமதிக்கிறது என்ற சொல்வதற்கு, குர்ஆனிலோ அல்லது நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளிலோ எந்த விதமான ஆதாரமும் கிடையாது.

உண்மையே பேசு!

இஸ்லாம் எல்லா தருணத்திலும் நற்பண்புகளை போதிக்கிறது. முஸ்லிம்களோடு பழகும் போது, முஸ்லிமல்லாதவர்களிடம் பழகும் போது, என்று நற்பண்புகளை இஸ்லாம் பிரித்துப் பார்க்கவில்லை.

உண்மையை பேசுதல் என்பது, இஸ்லாம் கற்பிக்கும் ஒரு முக்கிய நற்பண்பாகும்.

குர்ஆனில் கடவுள் கூறுகிறார்:

இறை நம்பிக்கையாளர்களே! இறைவனுக்கு பயபக்தியோடு நடந்து கொள்ளுங்கள். (சொல்லிலும் செயலிலும்) உண்மையாக இருப்பவர்களுடன் இருங்கள்.

குர்ஆன் அத்தியாயம் 9 வசனம் 119

இந்த வசனத்தை நீங்கள் கவனமாகப் படித்தால், இந்த கட்டளை எல்லோருக்கும் பொதுவானது என்பதை புரிந்து கொள்ளலாம். இந்த கட்டளை மதம், இனம் அல்லது நம்பிக்கையின் அடிப்படையில் உள்ளதல்ல என்பதை நீங்கள் உணர்வீர்கள். எல்லா தருணங்களிலும், எல்லா மக்களிடமும் முஸ்லிம்கள் உண்மையாகவே நடக்க வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.

பொய் சொல்வது பெரும் பாவம்

இறுதி இறைத்தூதர் முஹம்மது (அவரின் மீது இறைவனின் சாந்தி உண்டாகட்டும்) அவர்கள் பொய் சொல்வதை பற்றி கடுமையாக எச்சரித்தார்கள். அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக, பொய் சொல்வது தீமைக்கு வழிவகுக்கும்.

புகாரி # 6094

முஸ்லிமிடத்திலோ, அல்லது முஸ்லிமல்லாதவரிடத்திலோ பொய் சொல்லக் கூடாது என்பதை நபிகள் நாயகம் அவர்களின் கூற்று தெளிவாக உணர்த்துகிறது.

ஏமாற்றுவதும், துரோகம் செய்வதும் பெரும் பாவம்

ஏமாற்றுவதையும், துரோகம் செய்வதையும் இஸ்லாம் தடை செய்கிறது.

குர்ஆனில் கடவுள் கூறுகிறார்:

துரோகம் செய்பவர்களை நிச்சயமாக கடவுள் விரும்புவதில்லை.

குர்ஆன் அத்தியாயம் 8 வசனம் 58

இறுதி இறைத்தூதர் முஹம்மது (அவரின் மீது இறைவனின் சாந்தி உண்டாகட்டும்) அவர்கள் கூறினார்கள்:

பிறரை ஏமாற்றுபவர் நம்மில் ஒருவரல்ல (அதாவது, இறைவனை உண்மையாக நம்புபவர் அல்ல).

சஹிஹ் முஸ்லிம் # 101

இஸ்லாம் கற்பிக்கும் இந்த நற்பண்பு, முஸ்லிம்களுக்கும், முஸ்லிமல்லாதவர்களுக்கும் பொருந்தும்.

ஒப்பந்தங்களை மதிக்க வேண்டும்

இஸ்லாம் ஒப்பந்தங்களை மதிக்க கட்டளையிடுகிறது.

குர்ஆனில் கடவுள் கட்டளையிடுகிறார்:

இறை நம்பிக்கையாளர்களே! (நீங்கள் செய்து கொண்ட) ஒப்பந்தங்களையும், உடன்படிக்கைகளையும் (முழுமையாக) நிறைவேற்றுங்கள்.

குர்ஆன் அத்தியாயம் 5 வசனம் 1

மற்றொரு வசனத்தில், கடவுள் இப்படி கூறுகிறார்:

(நீங்கள் கொடுத்த) வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். நிச்சயமாக, உங்கள் வாக்குறுதிகள் குறித்து (நியாயத் தீர்ப்பு நாளில் கடவுளால்) விசாரிக்கப்படுவீர்கள்.

குர்ஆன் அத்தியாயம் 17 வசனம் 34

இஸ்லாத்தின் இந்த கட்டளைகள், அனைத்து மக்களுக்கும், அதாவது முஸ்லிம்களுக்கும், முஸ்லிமல்லாதவர்களுக்கும் பொருந்தக் கூடிய பொதுவான கட்டளையாகும்.

நேர்மையின் சின்னமாக திகழ்ந்த நபிகள் நாயகம்

முஸ்லிம்கள் தங்கள் முன்மாதிரியாகக் கருதும் நபிகள் நாயகம் அவர்கள், நேர்மையின் சின்னமாக திகழ்ந்தார்கள். மக்கள் அவரை “அல்-அமீன்” (மிகுந்த நம்பிக்கைக்குரியவர்) என்று அழைத்தனர்.

அவரது எதிரிகள் கூட நபிகள் நாயகத்தின் நேர்மையை போற்றினர். எந்த அளவிற்கென்றால், அவருடன் போர் செய்த விரோதிகள் கூட, தங்களுடைய மதிப்புமிக்க பொருட்களை நபிகள் நாயகத்திடம் பாதுகாப்பிற்காக கொடுத்து வைத்திருந்தனர்.

இந்த உன்னத மாமனிதர் நபிகள் நாயகத்தை பின்பற்றும் எந்த முஸ்லிமாவது, பொய் சொல்லவோ, பிறரை ஏமாற்றவோ செய்வானா?

இந்த குற்றச்சாட்டே முட்டாள்தனமானது

இந்தோனேசியா, மலேசியா, வட ஆபிரிக்கா போன்ற நாடுகளில் இஸ்லாம் பரவியதே, முஸ்லிமல்லாதவர்களிடம் நேர்மையாக நடந்து கொண்ட முஸ்லிம் வியாபாரிகள் மூலம் தான் என்று வரலாறு சான்று பகர்கிறது. மக்கள் பார்த்து வியக்கும் அளவிற்கு, முஸ்லிம் வியாபாரிகளின் நேர்மை இருந்துள்ளது. இதுவே, இஸ்லாம் கற்றுத் தரும் நற்பண்புகள் ஏற்படுத்தும் தாக்கம்.

முஸ்லிம்கள், முஸ்லிமல்லாதவர்களிடம் பொய் சொல்ல, இஸ்லாம் அனுமதித்திருந்தால், சமூகத்தில் அமைதி நிலவாது. வர்த்தகங்களுக்கும், ஒப்பந்தங்களுக்கும் இடமே இருக்காது. வாக்குறுதி என்பதே அர்த்தமில்லாமல் போய் விடும். ஆனால், சமூகத்தில் அப்படிப்பட்ட நிலை இல்லை என்பதும், முஸ்லிம்களும், முஸ்லிமல்லாதவர்களும் அண்ணன், தம்பி, மாமன், மச்சான் போல் பழகுவதும், இந்த குற்றச்சாட்டே முட்டாள்தனமானது என்பதை நிரூபிக்க போதுமானது.

கருத்துச் சுருக்கம்

  • உண்மையே பேச வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது
  • பொய் சொல்வதை இஸ்லாம் தடை செய்கிறது
  • ஏமாற்றுவதையும், துரோகத்தையும் இஸ்லாம் தடை செய்கிறது
  • ஒப்பந்தங்களையும், வாக்குறுதிகளையும் மீறக்கூடாது என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது
  • நபிகள் நாயகம் அவர்கள் நேர்மையின் சின்னமாக திகழ்ந்தார்கள்

முடிவுரை

எல்லா நேரங்களிலும், நேர்மை, உண்மை பேசுதல், ஒப்பந்தங்களையும், வாக்குறுதிகளையும் நிறைவேற்றல், ஏமாற்றாமல் இருத்தல், துரோகம் செய்யாமல் இருத்தல் போன்ற உயர்ந்த நற்பண்புகளையே இஸ்லாம் கற்பிக்கிறது.

தகிய்யா என்று சொல்லி, முஸ்லிம்கள், முஸ்லிமல்லாதவர்களிடம் பொய் சொல்ல இஸ்லாம் அனுமதிக்கிறது” என்று சொல்வது முற்றிலும் தவறானது, முட்டாள்தனமானது. இஸ்லாத்தின் போதனைகளுக்கும் இந்த குற்றச்சாட்டிற்கும் எந்த சம்பந்தமுமில்லை.

மேலும் படிக்க

“காஃபிர்” என்பது இழிவான சொல்லா? இந்துக்களை காஃபிர் என்று கூறி குர்ஆன் இழிவுபடுத்துகிறதா? Is Quran abusing Hindus by calling them Kafir? Curious Hats

“காஃபிர்” என்பது இழிவான சொல்லா? இந்துக்களை காஃபிர் என்று கூறி குர்ஆன் இழிவுபடுத்துகிறதா?

WHAT OTHERS ARE READING

Most Popular