முன்னுரை
திருகுர்ஆன் முழு மனிதகுலத்திற்கும் வழிகாட்டுவதற்காக இறைவனால் அனுப்பப்பட்ட இறுதி வேதம் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள்.
உண்மையிலே திருகுர்ஆன் இறைவேதமா? திருகுர்ஆன் இறைவேதம் தான் என்பதை எப்படி அறிந்து கொள்வது? வாருங்கள் தெரிந்து கொள்வோம்.
இந்த ஒரு வசனம் திருகுர்ஆன் இறைவேதம் தான் என்பதை நிரூபிக்கும்
திருகுர்ஆனில் உள்ள 6000 க்கும் மேற்பட்ட வசனங்களில், ஒரே ஒரு வசனத்தை பற்றித் தான் நாம் பார்க்கவிருக்கிறோம். 1400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மனிதனால் சொல்ல முடியாத நான்கு தகவல்களை இந்த வசனம் சொல்லுகிறது.
அந்த வசனம் இது தான்.
அல்லது ஆழ்கடலில் உள்ள பல இருள்களைப் போன்றது. ஓர் அலை அதை மூடுகிறது. அதற்கு மேலே மற்றொரு அலை! அதன் மேலே மேகம்! ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பல இருள்கள்! அவன் தனது கையை வெளிப்படுத்தும்போது அதை (கூட) அவனால் பார்க்க முடியாது. இறைவன் யாருக்கு ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவருக்கு எந்த விதமான ஒளியும் இல்லை.
திருகுர்ஆன் 24வது அத்தியாயம் 40வது வசனம்
வசனம் சொல்லும் நான்கு தகவல்கள்
1. ஆழ்கடலில் அலைகள் இருக்கின்றன.
2. ஆழ்கடலில் அலைகளுக்கு மேலே அலைகள் இருக்கின்றன.
3. ஆழ்கடலில் அடுக்கடுக்காக இருள்கள் இருக்கின்றன.
4. ஆழ்கடலில் ஒரு மனிதர் தன் கையை கூட பார்க்க முடியாது.
இந்த தகவல்களிலுள்ள அற்புதத்தை விளங்குவதற்கு முன்பு இந்த தகவல் சரியானது தானா என்று பார்ப்போம்.
ஆழ்கடலில் அலைகள் இருக்கின்றன
நாம் பீச்சில் அலைகளைப் பார்த்திருக்கிறோம். அதே போல் ஆழ்கடலிலும் அலைகள் உள்ளதா? ஆம்!
நாசாவின் (NASA) இந்த வீடியோவைப் பாருங்கள். ஆழ்கடலில் எப்படி அலைகள் உருவாகின்றன என்பதை இந்த வீடியோவில் காட்டுகிறார்கள். ஆழ்கடலில் உள்ள அலைகள் 600 அடி உயரம் வரை இருக்கும் என்பதையும் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
எனவே ஆழ்கடலில் அலைகள் உள்ளன என்று அந்த வசனம் சொல்வது சரியானது தான் என்பதை அறியலாம்.
ஆழ்கடலில் அலைகளுக்கு மேலே அலைகள் இருக்கின்றன
புகழ்பெற்ற MIT, Massachusetts இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் இந்த வீடியோவைப் பாருங்கள். இந்தக் வீடியோவில், ஆழ்கடலில் அலைகளுக்கு மேலே அலைகள் உள்ளதை அவர்கள் காட்டுகிறார்கள்.
“அலைகளுக்குள் அலைகள்” என்ற ஆச்சர்யமான நிகழ்வைப் பற்றி பேசும் ஒரு கடல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இணையதளத்திலும் நீங்கள் இது பற்றி படிக்கலாம்.

இதிலிருந்து ஆழ்கடலில் அலைகளுக்கு மேலே அலைகள் உள்ளன என்று அந்த வசனம் சொல்வது சரியானது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.
ஆழ்கடலில் அடுக்கடுக்காக இருள்கள் இருக்கின்றன

இந்தப் படம் கடலுக்கு அடியில் உள்ள பல்வேறு மண்டலங்களைக் காட்டுகிறது. முதல் மண்டலம் எபிபெலாஜிக் மண்டலம். இது 200 மீட்டர் ஆழத்தில் காணப்படுகிறது. சூரிய ஒளி இந்த மண்டலத்தை அடைவதால் இது சூரிய ஒளி மண்டலம் என்று அழைக்கப்படுகிறது.
அடுத்த மண்டலம் மீசோபெலஜிக் மண்டலம். இது 1000 மீட்டர் ஆழத்தில் காணப்படுகிறது.
1000 மீட்டர் அல்லது 1 கிமீ கீழே சென்றால், பாத்திபெலாஜிக் மண்டலம் அல்லது நள்ளிரவு மண்டலத்தைக் காணலாம். சூரிய ஒளி இங்கு சென்றடையாததால் நள்ளிரவு போல் மிகவும் இருட்டாக இருக்கும். இதனால் இதை நள்ளிரவு மண்டலம் என்று அழைக்கிறார்கள். இது தான் இருள் நிரம்பிய முதல் மண்டலம்.
இன்னும் கீழே சென்றால், அபிஸ்ஸோபெலாஜிக் மண்டலத்தை நாம் காணலாம். இது இருள் நிரம்பிய இரண்டாவது மண்டலம்.
இன்னும் கீழே சென்றால், ஹடால் மண்டலத்தை நாம் பார்க்கலாம். இது இருள் நிரம்பிய மூன்றாவது மண்டலம்.
நள்ளிரவு மண்டலம் கடலுக்கடியில் நாம் காணும் முதல் இருள், அபிஸ்ஸோபெலஜிக் மண்டலம் இரண்டாவது இருள், ஹடால் மண்டலம் மூன்றாவது இருள். திருகுர்ஆன் சொல்வது போலவே, ஆழ்கடலில் அடுக்கடுக்காக இருள்கள் இருக்கின்றன என்பது தெளிவாகிறது.
ஆழ்கடலில் ஒரு மனிதர் தன் கையை கூட பார்க்க முடியாது
கடல் ஆராய்ச்சி மையம் Monterey Bay Aquarium Research Institute, “Bioluminescence” எனப்படும் ஒரு நிகழ்வைப் பற்றி இவ்வாறு பேசுகிறது:
ஆழ்கடலில் மூழ்குவது என்பது விண்வெளிக்கு பயணம் செய்வது போன்றது. இந்த ஆழங்களுக்கு சூரிய ஒளி ஊடுருவ முடியாது. ஆனால் இந்த இருளில் மின்னும் விளக்குகள் போல் வெளிசத்தை நம்மால் காண முடிகிறது. இந்த வெளிசம் இங்கு வாழும் மீன்களிடமிருந்து வருகிறது. விஞ்ஞானிகள் அதை பயோலுமினென்சென்ஸ் என்று அழைக்கிறார்கள்.
கீழே உள்ள பிபிசி (BBC) வீடியோ ஆழ்கடலில் இருளைப் படம்பிடிக்கிறது. ஆழ்கடலில் வாழும் மீன்கள் வெளிச்சத்தை வெளிப்படுத்துவதை நீங்கள் பார்க்கலாம். இந்த இருளில் உங்கள் கைகளை உங்களால் பார்க்க முடியுமா? நிச்சயமாக முடியாது. இதிலிருந்து வசனத்தில் கூறப்பட்டுள்ள நான்காவது தகவலும் சரி என்பது நிரூபணமாகிறது.
இந்த விஷயங்கள் எப்போது கண்டுபிடிக்கப்பட்டன?
1934 – பாத்திஸ்பியரில் ஆழ்கடல் பயணம்
1934 இல், பாத்திஸ்பியர் என்ற கப்பலில் கடல் ஆராய்ச்சியாளர்கள் ஆழ்கடல் பயணத்தை மேற்கொண்டனர். ஒரு கிலோ மீட்டருக்கும் குறைவான 922 மீட்டர் ஆழத்தையே அவர்களால் சென்றடைய முடிந்தது. அவர்களால் மீசோபெலஜிக் மண்டலத்தைக் கூட கடக்க முடியவில்லை.

1954 – FNRS III இல் ஆழ்கடல் பயணம்
1954 இல், கடல் ஆராய்ச்சியாளர்கள் FNRS3 என்ற கப்பலில் கடலுக்கு அடியில் 4050 மீட்டர் ஆழத்தை சென்றடைந்தனர். 1954 ஆம் ஆண்டில்தான் மனிதர்களுக்கு கடலுக்கு அடியில் நள்ளிரவு மண்டலம் என்ற ஒன்று இருப்பதே தெரிகிறது.

1972 – செயற்கைக்கோள் ERTS 1 ஆழ்கடல் அலைகளைக் கண்டறிந்தது
1972 இல், ERTS1 என்ற செயற்கைக்கோள் ஆழ்கடலில் உள்ள அலைகளைக் கண்டுபிடித்தது.

உலகப் புகழ் பெற்ற நாசா (NASA) நிறுவனம் இந்த ERTS 1 செயற்கைக்கோளை பற்றி இவ்வாறு சொல்கிறது:
ஜூலை 16, 1972 தொடங்கி 1973 இலையுதிர் காலம் வரை நியூயார்க் பைட்டின் மேல் எடுக்கப்பட்ட படங்கள், ஆழ் கடலில் அலைகள் இருப்பதைக் காட்டுகிறது.
1400 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த ஒரு மனிதனால் இதை சொல்லியிருக்க முடியுமா?
1934க்கு முன் வாழ்ந்த மனிதர்களுக்கு ஆழ்கடலில் அலைகளை பற்றியோ, ஆழ்கடலில் உள்ள இருள்களை பற்றியோ எதுவும் தெரியாது.
1934 க்கு முன் வாழ்ந்த மனிதர்களுக்கு தெரியாத நான்கு தகவல்களை இந்த திருகுர்ஆன் வசனம் சொல்கிறது. 1400 ஆண்டுகளுக்கு முன்னால் பாலைவனத்தில் வாழ்ந்த முஹம்மது நபி அவர்களால் இதை எப்படி சொல்லியிருக்க முடியும்?
முஹம்மது நபி அவர்கள் காலத்திலோ அல்லது அவருக்கு முன் வாழ்ந்தவர்களுக்கோ இந்தத் தகவல் தெரிந்திருக்க வாய்ப்புள்ளதா?
முஹம்மது நபி அவர்கள் ஏதாவது ஒரு நபரிடமிருந்து இதை கற்று இருக்கலாம் என்றோ அல்லது முஹம்மது நபி அவர்களின் காலத்திலேயே இந்த நான்கு விஷயங்களை பற்றி மக்கள் அறிந்திருந்தார்கள் என்றோ யாரவது சொல்லுவார்களேயானால், அதற்கான ஆதாரங்களை அவர்கள் முன்வைக்க வேண்டும். திருகுர்ஆன் வசனத்தில் சொல்லப்பட்டுள்ள நான்கு தகவல்களையும் யார் சொல்லியிருக்கிறார்கள் என்பதைக் காட்ட வேண்டும்.
முடிவுரை
முஹம்மது நபி அவர்களின் காலத்திலோ அல்லது அதற்கு முன் வாழ்ந்தவர்களோ திருகுர்ஆன் வசனத்தில் சொல்லப்பட்டுள்ள நான்கு தகவல்களையும் அறிந்திருந்தார்கள் என்பதை நிரூபிக்க முடியாவிட்டால், நிச்சயமாக எல்லாம் அறிந்த சர்வவல்லமையுள்ள இறைவன் தான் இதை முஹம்மது நபி அவர்களுக்கு சொல்லியிருக்க வேண்டும் என்ற ஒரு தர்க்கரீதியான முடிவுக்கு தான் நம்மால் வர இயலும்.
நிச்சயமாக திருகுர்ஆன் இறைவேதம் தான் என்பதற்கு இந்த ஒரு இறை வசனமே போதுமான சான்றாகும்.
இந்தக் குர்ஆன் சத்தியமானது என்ற உண்மை அவர்களுக்குத் தெளிவாகத் தெரியும் வரை பிரபஞ்சத்திலும் அவர்களுக்குள்ளேயும் நம்முடைய சான்றுகளை அவர்களுக்குக் காண்பிப்போம். உங்கள் இறைவன் ஒவ்வொன்றுக்கும் சாட்சியாக இருக்கின்றான் என்பது போதுமானதா, இல்லையா?
அத்தியாயம் 41 வசனம் 53