அறிவியல் மட்டும் போதுமா?

அறிவியல் என்பது மிகவும் சக்திவாய்ந்த கருவிகளில் ஒன்றாகும். ஆனால் எல்லா கருவிகளையும் போலவே, அதற்கும் வரம்புகளும், எல்லைகளும் உள்ளன.

அறிமுகம்

மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்காக அறிவியல் பெரும் பங்காற்றியுள்ளது. கொடிய நோய்களைக் குணப்படுத்துவது முதல் பிரபஞ்சத்தை ஆராய்வது வரை, அறிவியல் முன்னேற்றங்கள் நம் வாழ்க்கையை கற்பனை செய்ய முடியாத வகையில் மாற்றியுள்ளன. இதனால், அறிவியலே இறுதி அளவுகோலாக இருக்க முடியும் என்று பலர் நம்புகின்றனர்.

அறிவியல் எதனால் உண்மையை கண்டறியும் இறுதி அளவுகோலாக இருக்க முடியாது என்பதையும், அறிவியலால் எல்லா கேள்விகளுக்கும் பதில் தர முடியாது என்பதையும், இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

அறிவியல் “எப்படி” என்பதை விளக்கும், “ஏன்” என்பதை விளக்காது

அறிவியலால் ஒரு விஷயம் “எப்படி” நடக்கிறது என்ற கேள்விக்கு பதில் தர முடியும். ஆனால் அந்த விஷயம் “ஏன்” நடக்கிறது என்பதற்கு அறிவியலால் பதில் தர முடியாது.

உதாரணமாக: அறிவியலால் பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என்பதை விவரிக்க முடியும். ஆனால் இயற்பியல் விதிகள் ஏன் உள்ளன, பிரபஞ்சம் ஏன் உள்ளது என்பதை விளக்க முடியாது. இதை இன்னும் விளக்கமாக புரிந்துக் கொள்ள இந்த உதாரணத்தை பாருங்கள்.

ராஜன் பிரியாணி சமைத்தார்.

பிரியாணியில் உள்ள பொருட்கள், அதன் கலோரிகள், அதன் வேதியியல் பிணைப்புகளை அறிவியலால் விளக்க முடியும். ஆனால், ராஜன் ஏன் பிரியாணி சமைத்தார் என்பதை அறிவியலால் உங்களுக்குச் சொல்ல முடியாது. பிரியாணி ஏன் சமைக்கப்பட்டது என்பதை ராஜனால் மட்டுமே விளக்க முடியும்.

அதேபோல், உங்கள் வாழ்வின் நோக்கத்தை அறிவியலால் சொல்ல முடியாது. உங்களைப் படைத்த கடவுளால் மட்டுமே அதை விளக்க முடியும்.

அறிவியலுக்கு எல்லையுண்டு

நம் புலன்களை பயன்படுத்தி, பல செயற்கை கருவிகள் மூலம் நன்றாக சோதனை செய்து, ஆராய்ச்சி செய்வதன் மூலமே அறிவியல் கண்டுபிடிப்புகள் உண்டாகின்றன. ஆனால், சோதனைக்கும், ஆராய்ச்சிக்கும் நாம் பயன்படுத்தும் நமது புலன்களுக்கும், கருவிகளுக்கும் எல்லைகள் உள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

நம் புலன்களுக்கு எட்டாத மற்றும், நம் செயற்கை கருவிகளால் காணவோ, ஆராயவோ முடியாத விஷயங்களை பற்றி அறிவியலால் கருத்து சொல்ல முடியாது. சோதனைகள் மூலமாக எதையாவது கவனிக்கவோ அல்லது கண்டுபிடிக்கவோ முடியாவிட்டால், அறிவியல் அதைப் புறக்கணித்து விடும். எனவே, ஒரு விஷயத்தை சோதனைக்கும், ஆராய்ச்சிக்கும் நம்மால் உட்படுத்த முடியவில்லையென்றால், அந்த விஷயம் உண்மையில்லை என்று முடிவு செய்து விடக்கூடாது.

உதாரணமாக ‘கடவுளை’ எடுத்துக் கொள்வோம். கடவுள் என்பவர் நம் புலன்களுக்கு எட்டாதவர். கருவிகளால் சோதனை செய்யப்படவோ, ஆராயப்படவோ முடியாதவர். எனவே, “கடவுள்” என்பவர் அறிவியலுக்கு அப்பாற்பட்டவர். அதனால், “கடவுள்” உண்டு என்றோ, இல்லை என்றோ அறிவியலால் திட்டவட்டமாக சொல்ல முடியாது.

அறிவியலும் ஒழுக்கமும்

எது சரி, எது தவறு என்று சொல்ல அறிவியலுக்கு இயலாது. உதாரணமாக:

  • குளோனிங் செய்வதற்கு அறிவியல் நமக்கு உதவும். ஆனால், மனிதர்களை குளோனிங் செய்வது சரியா தவறா என்பதை அதனால் நமக்குச் சொல்ல முடியாது.
  • அணு ஆயுதங்களை உருவாக்க அறிவியல் உதவும். ஆனால், அவற்றை பயன்படுத்துவது சரியா தவறா என்று அதனால் சொல்ல முடியாது.
  • அறிவியல் மூலம் சக்திவாய்ந்த AI சாப்ட்வேர்களை உருவாக்க முடியும். ஆனால், அதை பயன்படுத்துவதற்கான நெறிமுறைகளை அறிவியலால் வரையறுக்க முடியாது.
  • மனித மரபணுக்களை அறிவியல் மூலம் மாற்றியமைக்க முடியும். ஆனால், அப்படி செய்வது சரியா தவறா என்பதை அறிவியலால் தீர்மானிக்க முடியாது.

சுருக்கமாகச் சொன்னால், அறிவியலால் ஒழுக்கம் பற்றி எந்த கருத்தும் சொல்ல முடியாது. ஒழுக்கம் பற்றிய எந்த நிலைப்பாடும் அறிவியலுக்கு கிடையாது.

அறிவியல் உண்மைகள் நிரந்தரமல்ல

நாம் அறிவியல் உண்மை என்று இன்று நம்புவது, நாளை தவறு என்று நிரூபிக்கப்படலாம். சில உதாரணங்களைப் பார்ப்போம்.

  • புளூட்டோ ஒரு கிரகம் என்று சொன்ன விஞ்ஞானிகள், பின்னர் அது கிரகம் இல்லை என்று சொல்கிறார்கள்.
  • அல்சர்களுக்கு மன அழுத்தம் தான் காரணம் என்று கூறப்பட்டது. பின்னர் பாக்டீரியாக்கள் தான் காரணம் என்று கண்டுபிடித்துள்ளார்கள்.
  • சூரியன் பூமியைச் சுற்றி வருவதாக விஞ்ஞானிகள் நினைத்தார்கள். பின்னர் பூமி சூரியனைச் சுற்றி வருவதைத் தெரிந்துக் கொண்டோம்.
  • அனைத்து கொழுப்புகளும் ஒரு காலத்தில் மோசமானதாகக் கருதப்பட்டன. இப்போது சில கொழுப்புகள் ஆரோக்கியமானவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • முட்டைகள் உண்பது கொழுப்பை அதிகரிப்பதாகக் கூறப்பட்டது. முட்டை உண்பதால் கொழுப்பு அதிகரிப்பதில்லை என்று கண்டறிந்துள்ளனர்.
  • பெரும்பாலான டிஎன்ஏக்களுக்கு பயனில்லை என்று விஞ்ஞானிகள் கருதினர். இன்று நம் எல்லோருக்கும் டிஎன்ஏக்களுக்கு முக்கிய பங்கு உள்ளது என்று தெரியும்.

அறிவியல் மாறிக்கொண்டே இருப்பதால், அது உண்மையை கண்டறிவதற்கான இறுதி அளவுகோலாக இருக்க முடியாது. உண்மைகளைக் கண்டறிய அறிவியலை மட்டும் நாம் நம்பக்கூடாது.

அறிவியலும் பண அதிகாரமும்

அறிவியல் சொல்லும் விஷயங்கள் எப்போதும் நடுநிலையாக இருப்பது இல்லை. பணமும், அரசியல் சித்தாந்தங்களும் அறிவியல் ஆய்வுககளின் மேல் செல்வாக்கு செலுத்துகின்றன. சில முக்கியமான  எடுத்துக்காட்டுகள் உங்கள் பார்வைக்கு.

புகையிலை பற்றிய அறிவியல் ஆய்வு

புகை பழக்கம் மூலமாக நுரையீரல் புற்றுநோய் மற்றும் இதய நோய் உண்டாகியது என்பதற்கு 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஏராளமான சான்றுகள் உள்ளன. ஆனால், புகையிலை நிறுவனங்கள் இந்த ஆராய்ச்சியில் சந்தேகத்தை ஏற்படுத்த, ஒரு பெரிய பொய் பிரச்சாரத்தைத் தொடங்கின. புற்றுநோய் ஏற்படுவதற்கு புகையிலை அல்லாத மாற்றுக் காரணங்களைக் கண்டறிய, அறிவியல் “ஆராய்ச்சிகளுக்கு” அவை நிதியளித்தன. தவறான “அறிவியல்” அறிக்கைகளை வெளியிட பல குழுக்களை அவை நியமித்தன. இதற்காக விஞ்ஞானிகளுக்கு பணம் கொடுத்தன. இந்த பொய் அறிவியல் ஆராய்ச்சியின் காரணமாக, இலட்சக்கணக்கானவர்கள் புகைபிடிப்பதைத் தொடர்ந்தனர். புகை பழக்கம் “தீங்கு விளைவிக்காது” என்று நம்பினர். இதனால், புகைபிடித்தலால் ஏற்பட்ட இறப்புகள் கட்டுப்பாடு இல்லாமல் தொடர்ந்தன.

மருந்து நிறுவனங்களின் ஆராய்ச்சி

மருந்து நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் மருந்துகள் பற்றிய அறிவியல் ஆய்வுகளுக்கு பணம் தந்து ஆதரிக்கின்றன. இதனால், தங்களுக்கு சாதகமான ஆய்வு முடிவுகளைக் கொண்ட ஆய்வுகளை மட்டும் வெளியிடுவார்கள். தங்களுக்கு எதிராக இருக்கும் ஆய்வு முடிவுகளின் ஆய்வுகளை மறைத்து விடுவார்கள். இதற்கு நல்ல உதாரணம், மெர்க் மருந்து நிறுவனம் தயாரித்த வியோக்ஸ் என்ற வலி நிவாரணி. இந்த மருந்து இதய நோய்களை உண்டாக்கும் என்று அந்த நிறுவனங்களுக்கு நன்றாக தெரிந்திருந்தும், பாதுகாப்பான மருந்து என்று இதை விளம்பரப்படுத்தினர். இந்த மருந்திற்கு ஆதரவாக ஆய்வு முடிவுகளை வெளியிட பல அறிவியல் நிறுவனங்களுக்கு மெர்க் நிதியளித்தது. 2004 ஆம் ஆண்டு இந்த மருந்து தடை செய்யப்படுவதற்கு முன், 60,000 க்கும் மேற்பட்டவர்கள் இந்த மருந்தால் மரணமடைந்தனர். இன்னும் பலர் நோயாளிகளாக மாறி அவதிப்பட்டனர்.

காலநிலை மாற்றமும், எரிபொருள் நிறுவனங்களும்

எக்ஸான்மொபில் போன்ற எண்ணெய் நிறுவனங்களுக்கு எரிபொருட்களை பயன்படுத்துவது காலநிலை மாற்றத்தை (climate change) ஏற்படுத்தும் என்பது நன்றாகத் தெரியும். ஆனால், இந்த  எண்ணெய் நிறுவனங்கள், காலநிலை மாற்றத்தை பகிரங்கமாக மறுத்தன.  விஞ்ஞானிகளுக்கு பணம் தந்து, அந்த விஞ்ஞானிகளின் பொய்யான அறிவியல் ஆய்வு முடிவுகள் மூலம், காலநிலை மாற்றத்தை பற்றி மக்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தினர். உலகளாவிய வெப்பநிலை அதிகரித்த போதும், காலநிலை மாற்றம் என்பதே இல்லை என்ற கருத்தை ஊக்குவித்தனர். இதன் காரணமாக, காலநிலை மாற்றம் பற்றிய விழிப்புணர்வும், அதை தடுக்கும் நடவடிக்கைளும் தாமதமானது.

அறிவியலும், இயற்கைக்கு அப்பாற்பட்டவைகளும்

அறிவியலால் இயற்கைக்கு அப்பாற்பட்ட விஷயங்களைப் பற்றி கருத்து சொல்ல இயலாது. இயற்கையாக இந்த பிரபஞ்சத்தில் உள்ளவற்றைக் கவனித்து, சோதித்து, ஆய்வுகள் நடத்துவதன் மூலமாக அறிவியல் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இப்படி சோதனைகளையும், ஆய்வுகளையும் நடத்த பல கருவிகளை வடிவமைத்துள்ளனர். ஆனால், இந்த கருவிகளால் இயற்கைக்கு வெளியே உள்ள விஷயங்களை கவனிக்கவோ, ஆராயவோ முடியாது. உதாரணமாக: கடவுள், ஆன்மா, மரணத்திற்குப் பின் உள்ள வாழ்க்கை போன்ற இயற்கைக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் அறிவியலின் எல்லைக்கு உட்படாதது. எனவே, இவை உண்டு என்றோ, இல்லை என்றோ அறிவியலால் கூற முடியாது. அறிவியலால் நிரூபிக்க முடியாது என்ற காரணத்தால் மட்டுமே, இவையெல்லாம் பொய் என்று எண்ணுவது, அறிவுடைமை அல்ல.

அறிவியலும், அற்புதங்களும்

மத நூல்கள் எடுத்துக் காட்டும் அற்புதங்களை, அறிவியலுக்கு எதிரானவை என்று கூறி நாத்திகர்கள் நிராகரிக்கின்றனர். இங்கு நாம் அறிவியல் பற்றிய ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும். மீண்டும் மீண்டும் நிகழக்கூடிய இயற்கை நிகழ்வுகளை பற்றிய ஆய்வுகளின் முடிவுகள் தான் அறிவியல்.

அரிதாக ஏற்படும் இயற்கை விதிகளுக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளை தான் அற்புதங்கள் என்று நாம் அழைக்கிறோம். உதாரணமாக, இயேசு கிறிஸ்து கன்னி மரியாள் அவர்களுக்கு அற்புதமாக பிறந்தது,  நபிகள் நாயகம் அவர்களின் விண்ணுலகப் பயணம் ஆகியவை இயற்கை விதிகளுக்கு அப்பாற்பட்டு நடந்த அரிதான நிகழ்வுகளாகும்.

அற்புதங்கள் என்பது மீண்டும் மீண்டும் நிகழக்கூடியவை இல்லை என்பதால், அறிவியலால் அதனை ஆய்வுக்கு உட்படுத்த முடியாது. இதனால், அறிவியலால் அற்புதங்களை உறுதிப்படுத்தவோ, மறுக்கவோ முடியாது.

முடிவுரை

அறிவியல் என்பது மனிதகுலத்தின் மிகவும் சக்திவாய்ந்த கருவிகளில் ஒன்றாகும். ஆனால், எல்லா கருவிகளையும் போலவே, அதற்கு வரம்புகளும், எல்லைகளும் உள்ளன. அதனால், அறிவியலால் நம் மனதில் எழும் பல ஆழமான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது.

உண்மையைக் கண்டறிய ஒரே வழி அறிவியல் தான் என்று எண்ணினால், பல முக்கியமான விஷயங்களில் தவறான முடிவுகளை நாம் எடுக்க நேரிடும்.

பகுத்தறிவுள்ள மனிதர்களாகிய நாம், அறிவியலை பொறுப்போடு பயன்படுத்தி, அறிவியலுக்கு எல்லைகள் உள்ளன என்பதை உணர்ந்து, உண்மைகளை கண்டறிய அறிவியல் அல்லாத வேறு வழிகளும் உள்ளன என்பதை ஒப்புக்கொள்வோம்.

மேலும் படிக்க

WHAT OTHERS ARE READING

Most Popular