“ஒரு கடவுளா அல்லது பல கடவுள்களா?” என்ற கேள்விக்கான எளிய பதில் – கடவுள் ஒருவனே.. “ஏன் அப்படி?” என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். வாருங்கள் இது பற்றி சிந்திப்போம்.
இரண்டு கடவுள்கள் இருந்திருந்தால்…….
பல தெய்வ வழிபாட்டு கொள்கையில் உள்ள சிக்கல்களை புரிந்து கொள்ள, குறைந்தபட்சமாக இரண்டு கடவுள்கள் இருந்தால் என்னவாகும் என்பதை பார்ப்போம். இப்போது இந்த இரு கடவுள்களுக்கும் ஏதாவது ஒரு விஷயத்தில் முடிவு எடுக்க வேண்டிய நிலை வரும் போது கீழே உள்ள மூன்று நிகழ்வுகளில் ஒன்று தான் நடைபெறும்.
நிகழ்வு 1 : இரண்டு கடவுள்களும் ஒத்துப்போவதில்லை
ஒரு காரியத்தை நிகழ்த்த இரண்டு கடவுள்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அக்காரியம் ஒருபோதும் நிகழாது.
உதாரணமாக, இந்த பிரபஞ்சத்தை படைப்பதில் இரு கடவுள்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்தால் இந்த பிரபஞ்சம் ஒருபோதும் படைக்கப்பட்டிருக்காது. அப்படியே ஒரு வேளை இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்டிருந்தாலும், நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நிகழும் மிக சுலபமான காரியங்கள் கூட குழப்பங்களாலும், கருத்து வேறுபாட்டாலும் ஸ்தம்பித்துவிடும்.
உதாரணத்திற்கு, ஒரு இந்துவும், ஒரு முஸ்லிமும் வேலைக்காக interview க்கு செல்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். கம்பெனியில் ஓரே ஒரு காலியிடம் தான் உள்ளது. வேலைக்காக இருவரும் அவரவரின் கடவுளிடம் பிரார்த்தனை செய்வார்கள். இந்துவுக்கும், முஸ்லிமுக்கும் தனித்தனி கடவுகள்கள் இருந்தால், எந்த கடவுள் யாருக்கு அந்த வேலையை கொடுப்பார்?
இந்துக் கடவுள் வேலையை இந்துவுக்கும், முஸ்லிம் கடவுள் வேலையை முஸ்லிமுக்கும் கொடுப்பதென்று முடிவெடுத்தால் இரு கடவுள்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு யாருக்கும் வேலை கிடைக்காது.
ஒவ்வொரு நாளும் பல்வேறு மதங்களைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். பல கடவுள்கள் இருந்தால், கடவுள்களுக்கு இடையே கோடிக்கணக்கான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, குழப்பம் உண்டாகி உலகமே அழிந்து போயிருக்கும்.
இறைவன் திருகுர்ஆனில் கூறுகிறான்:
வானத்திலும் பூமியிலும் இறைவன் ஒருவனைத் தவிர மற்ற கடவுளர்களும் இருந்திருந்தால் அவ்விரண்டின் ஒழுங்கமைப்பும் சீர்குலைந்து போயிருக்கும்.
அல்குர்ஆன் : 21:22
நிகழ்வு 2: இரு கடவுள்களும் எப்போதுமே எல்லாக் காரியங்களிலும் ஒத்துப் போகிறார்கள்
இரண்டு கடவுள்களும் எப்போதும் எல்லா விஷயங்களிலும் உடன்படுகிறார்கள் என்று வைத்துக் கொண்டால், இரண்டு கடவுள்கள் இருக்க வேண்டிய அவசியம் என்ன? உதாரணமாக, ஒரு பள்ளிக்கு இரண்டு தலைமையாசிரியர்கள் இருந்து, எப்பொழுதும் ஒரே முடிவை எடுக்கிறார்கள் என்றால், இரண்டு தலைமையாசிரியர்கள் இருப்பதற்கான தேவை என்ன? ஏனெனில், இந்த முடிவுகளை ஒரு தலைமையாசிரியரே எடுக்க முடியும்.
உலகில் நடக்கும் கோடிக்கணக்கான விஷயங்களிலும் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லாமல் எல்லாக் கடவுள்களும் உடன்படுவார்கள் என்பது நடைமுறையில் சாத்தியமில்லை என்பது மட்டுமல்ல, எல்லா விஷயங்களிலும் உடன்படும் பல கடவுள்கள் இருப்பது எந்த வித பயனையும் தராது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
நிகழ்வு 3 : இரண்டு கடவுள்களின் முடிவும் ஒரு விஷயத்தில் ஒத்துப் போகவில்லை. ஆனால் ஒரு கடவுள் மற்ற கடவுளின் முடிவை ஏற்றுக்கொள்கிறார்.
ஒரு கடவுள் தன்னுடைய முடிவை விட்டு விட்டு மற்ற கடவுளின் முடிவை ஏற்றுக் கொண்டால், இரண்டு கடவுள்களும் முடிவெடுக்கும் அதிகாரத்தில் சமமாக இல்லை என்பது தெரிகிறது. எனவே இரண்டு கடவுள்களில், ஒரே ஒருவர் தான் உண்மையான கடவுள் தன்மை கொண்டவராக இருப்பதால், அவரே உண்மையான கடவுளாக இருக்க முடியும்.
உலகில் பல கடவுள்கள் இருந்தாலும், எல்லா கடவுள்களும் ஒரு கடவுளின் முடிவுக்கு கட்டுப்பட்டு அடிப்பணிவார்கள் என்றால், அவர்களெல்லாம் உண்மையில் கடவுள்கள் அல்ல என்பதை புரிந்து கொள்ளலாம்.
இறைவன் தனது வேதமாகிய குர்ஆனில் இவ்வாறு சொல்கிறான்:
வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைவரும் கருணைமிக்க இறைவனின் முன் கட்டுப்பட்ட அடியார்களாகவே வருவார்கள்.
அல்குர்ஆன் : 19:93
முடிவுரை
இந்தப் பிரபஞ்சமும் அதில் உள்ள ஒழுங்கும், ஒரே ஒரு கடவுள் தான் இருக்க முடியும் என்பதையும், அவன் தான் இந்த பிரபஞ்சத்தை மிக நேர்த்தியாகப் படைத்து, பரிபாலித்து வருகிறான் என்பதற்கும் மறுக்க முடியாத சான்றாக இருக்கிறது.
இறைவன் தனது வேதமாகிய குர்ஆனில் இவ்வாறு சொல்கிறான்:
உங்கள் இறைவன் ஒரே இறைவன்தான்; அளவிலாக் கருணையும் இணையிலாக் இரக்கத்தையும் உடையோனாகிய அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை.
அல்குர்ஆன் : 2:163