யூதர்கள் இயேசுவை நிராகரித்து, அவரைக் கொல்லவும் சதி செய்தார்கள் என்று நன்றாக தெரிந்திருந்தும், பல கிறிஸ்தவர்கள் இஸ்ரேலை ஏன் இவ்வளவு தீவிரமாக ஆதரிக்கிறார்கள் என்ற கேள்வி பலர் மனதில் எழுகிறது.
இஸ்ரேலை ஆதரிக்கும் கிறிஸ்தவர்களுக்கு, இது அரசியல் சார்ந்த விஷயமே அல்ல. மாறாக, இஸ்ரேலில் நடப்பவற்றை அவர்கள் பைபிளின் தீர்க்கதரிசனமாக பார்க்கிறார்கள். யூதர்கள் பல நாடுகளிலிருந்து பாலஸ்தீனத்தில் குடியேறுவதும், எருசலேமின் முக்கியத்துவமும், எருசலேமை சுற்றி நடக்கும் இறுதிப் போரும், இயேசு கிறிஸ்து பூமிக்குத் திரும்புவதற்கு முன்பு நடக்க வேண்டிய நிகழ்வுகள் என்று அவர்கள் நம்புகிறார்கள். இன்று பாலஸ்தீனத்தில் நடப்பது, தீர்க்கதரிசனம் தங்கள் கண்களுக்கு முன்பாக நிறைவேறிக்கொண்டிருக்கிறது என்பதற்கான சாட்சியாக அவர்கள் பார்க்கிறார்கள்.
அதனால்தான் அவர்கள் இஸ்ரேலையும் சீயோனிசத்தையும் (Zionism) வலுவாக ஆதரிக்கிறார்கள்.
பைபிள் தீர்க்கதரிசனம்
யூதர்கள் எருசலேமுக்குத் திரும்புதல்
யூத மக்களை உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து எருசலேமுக்குக் கடவுள் கொண்டு வருவார் என்று கிறிஸ்துவர்கள் நம்புகிறார்கள்.
இதோ, கிழக்குதேசத்திலும் தெற்கு தேசத்திலுமிருந்து என் ஜனங்களை நான் இரட்சித்து, அவர்களை அழைத்துக்கொண்டுவருவேன்; அவர்கள் எருசலேமின் நடுவிலே குடியிருப்பார்கள்; அவர்கள் எனக்கு உண்மையும் நீதியுமான ஜனமாயிருப்பார்கள், நான் அவர்களுக்கு தேவனாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
சகரியா 8:7–8
மோதலின் மையமாக எருசலேம்
உலகளாவிய மோதலின் மையமாக எருசலேம் மாறும் என்று பைபிள் சொல்வதாக கிறிஸ்துவர்கள் நம்புகிறார்கள்.
இதோ, சுற்றிலும் இருக்கிற எல்லா ஜனங்களுக்கும் நான் எருசலேமைத் தத்தளிப்பின் பாத்திரமாக்குகிறேன்; எருசலேமுக்கு விரோதமாய்ப் போடப்படும் முற்றிக்கையிலே யூதாவும் அப்படியேயாகும்.
சகரியா 12:2–3
அந்நாளிலே நான் எருசலேமைச் சகல ஜனங்களுக்கும் பாரமான கல்லாக்குவேன்; அதைக் கிளப்புகிற யாவரும் சிதைக்கப்படுவார்கள்; பூமியிலுள்ள ஜாதிகளெல்லாம் அதற்கு விரோதமாய்க் கூடிக்கொள்வார்கள்.
பெரும் போர்
எருசலேமுக்கு எதிராக நாடுகள் ஒன்று திரண்டு, அதைச் சுற்றி ஒரு பெரும் போர் வெடிக்கும் என்று பைபிளின் தீர்க்கதரிசனம் சொல்வதாக கிறிஸ்துவர்கள் நம்புகிறார்கள்.
தேசமெங்கும் சம்பவிக்கும் காரியம் என்னவென்றால், அதில் இருக்கிற இரண்டு பங்கு மனுஷர் சங்கரிக்கப்பட்டு மாண்டுபோவார்கள்; மூன்றாம் பங்கோ அதில் மீதியாயிருக்கும்.
சகரியா 13:8–9
அந்த மூன்றாம் பங்கை நான் அக்கினிக்குட்படப்பண்ணி, வெள்ளியை உருக்குகிறதுபோல அவர்களை உருக்கி, பொன்னைப் புடமிடுகிறதுபோல அவர்களைப் புடமிடுவேன்; அவர்கள் என் நாமத்தைத் தொழுதுகொள்வார்கள்; நான் அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்பேன்; இது என் ஜனமென்று நான் சொல்லுவேன், கர்த்தர் என் தேவனென்று அவர்கள் சொல்லுவார்கள்.
மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் இறந்து, மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே உயிருடன் இருக்கும் அளவிற்கு யுத்தம் மிகக் கடுமையாக இருக்கும் என்று பைபிள் கூறுகிறது.
எருசலேமுக்காகக் கர்த்தர் போரிடுவார்
போர் கடுமையாக நடைபெறும் போது, இயேசுவே மீண்டும் உலகிற்கு வந்து எருசலேமுக்கு ஆதரவாகப் போரிடுவார் என்று கிறிஸ்துவர்கள் நம்புகிறார்கள்.
எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணச் சகல ஜாதிகளையும் கூட்டுவேன்; நகரம் பிடிக்கப்படும்; வீடுகள் கொள்ளையாகும்; ஸ்திரீகள் அவமானப்படுவார்கள்; நகரத்தாரில் பாதி மனுஷர் சிறைப்பட்டுப்போவார்கள்; மீதியான ஜனமோ நகரத்தை விட்டு அறுப்புண்டுபோவதில்லை.
சகரியா 14:2–4
கர்த்தர் புறப்பட்டு, யுத்தநாளிலே போராடுவதுபோல் அந்த ஜாதிகளோடே போராடுவார்.
அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோம்; அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும்.
கடவுள் யூதர்களை மீண்டும் எருசலேமுக்குக் கொண்டு வருவார். அதன் பிறகு நாடுகள் எருசலேமுக்கு எதிராகத் திரளும். இதன் பிறகு ஒரு பெரும் போர் நிகழும். இந்த போரில், இயேசு கிறிஸ்துவே பூமிக்கு திரும்பி வந்து, போரில் கலந்துக் கொண்டு வெற்றி பெறுவார் என்று பல கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். இதனால்தான், இன்று பாலஸ்தீனத்தில் நடக்கும் சம்பவங்களை பைபிள் சொல்லும் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறுவதற்கான அடையாளமாக கிறிஸ்தவர்கள் பார்க்கிறார்கள்.
கிறிஸ்துவர்களின் புரிதல்
பைபிள் சொல்லும் தீர்க்கதரிசனங்களுக்கு பழைய ஏற்பாட்டில் உள்ள சகரியாவின் புத்தகம் முக்கிய ஆதாரமாகக் கொள்ளப்பட்டாலும், பைபிளில் உள்ள வேறு சில புத்தகங்கள் சொல்பவற்றையும் கிருஸ்துவர்கள் நம்புகிறார்கள்.
உதாரணமாக, எசேக்கியேல் 36:24-வது வசனம் யூதர்கள் மீண்டும் பாலஸ்தீனத்தில் கடவுளால் குடியேற்றப்படுவார்கள் என்ற தீர்க்கதரிசனத்தை சொல்வதாக கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள்.
நான் உங்களைப் புறஜாதிகளிடத்திலிருந்து அழைத்து, உங்களைச் சகல தேசங்களிலுமிருந்து சேர்த்து, உங்கள் சுயதேசத்திற்கு உங்களைக் கொண்டுவருவேன்.
எசேக்கியேல் 36:24
இறுதி கால நிகழ்வுகள் தொடங்குவதற்கு முன்பாக, யூதர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து பாலஸ்தீன் திரும்புவதை இந்த வசனம் சொல்வதாக கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள்.
இது மட்டுமல்லாமல், சில கிறிஸ்தவர்கள் சகரியா புத்தகத்தை அப்போஸ்தலர் 1-வது அதிகாரத்தோடு இணைத்துப் பார்க்கிறார்கள். இயேசு பரலோகத்திற்கு ஏறிப் போவதை அவருடைய சீஷர்கள் எப்படிப் பார்த்தார்களோ “அப்படியே” இயேசு மீண்டும் திரும்புவார் என்றும் அப்போஸ்தலர் புத்தகம் கூறுகிறது.
இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது.
அப்போஸ்தலர் 1:9-12
அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டுபேர் அவர்களருகே நின்று:
கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.
அப்பொழுது அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய் ஒரு ஓய்வுநாள் பிரயாண தூரத்திலிருக்கிற ஒலிவமலை என்னப்பட்ட மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள்.
அப்போஸ்தலர் 1:12 வது வசனம் ‘ஒலிவமலை’ பற்றி பேசுகிறது. இதை சகரியா 14:4 வது வசனத்தில் வரும் ‘ஒலிவமலை’ என்பதோடு இணைத்துப் பார்த்து, இயேசு பூமிக்குத் திரும்பி வந்து எருசலேமுக்காக போரிடுவார் என்று நம்புகிறார்கள். அப்போஸ்தலர் புத்தகம் நேரடியாகச் சகரியாவின் வசனத்தை மேற்கோள் காட்டவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
கிறிஸ்தவ நண்பர்களுக்கு சில கேள்விகள்
இன்று இயேசு உலகில் இருந்தால், குழந்தைகள் கொல்லப்படுவதை அவர் அனுமதிப்பாரா?
அப்பாவி மக்கள் மீது குண்டுவீசி இனப்படுகொலை செய்வதை இயேசு ஆதரிப்பாரா?
அப்பாவி மக்கள் கருணையின்றி படுகொலை செய்யப்படுவதை பார்த்து விட்டு, இயேசு அமைதி காப்பாரா?
தீர்க்கதரிசனத்தை நம்பும் ஒவ்வொரு கிருஸ்துவ நண்பரும் சிந்திக்க வேண்டிய கேள்விகள் இவை.
நாம் மேலே எடுத்துக் காட்டிய பைபிள் வசனங்களை, தீர்க்கதரிசனம் என்று நம்புவதை நாம் குறை கூறவில்லை. தீர்க்கதரிசனம் என்று சொல்லிக் கொண்டு, அநீதியை ஆதரிப்பதும், இனப்படுகொலையை நியாயப்படுவதும், அப்பாவிகள் கொல்லப்படுவதை கண்டும் காணாமல் இருப்பதும் சரியா என்று கிருஸ்துவ நண்பர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
எந்தத் தீர்க்கதரிசனமும் இனப்படுகொலையை ஏற்கத்தக்கதாக ஆக்க முடியாது. எந்தத் தீர்க்கதரிசனமும் அப்பாவி குழந்தைகள் கொல்லப்படுவதை நியாயப்படுத்த முடியாது.
இயேசுவைப் பின்பற்றுகிறேன் என்று சொல்லும் கிறிஸ்துவ நண்பர்கள் எப்படி ஒடுக்குமுறைக்கும் இனப்படுகொலைக்கும் ஆதரவாக நிற்க முடியும்?
முடிவுரை
பைபிளின் பழைய ஏற்பாட்டில் உள்ள சகரியா புத்தகத்தில் உள்ள தீர்க்கதரிசனம் தங்கள் கண்களுக்கு முன்னால் நிறைவேறுவதாக பல கிறிஸ்தவர்கள் நம்புவதால், அவர்கள் இஸ்ரேலை ஆதரிக்கிறார்கள்.
யூதர்கள் பல நாடுகளிலிருந்து பாலஸ்தீனத்தில் குடியேறுவது, எருசலேமை சுற்றி நடக்கும் இறுதிப் போர், பூமிக்கு கிறிஸ்துவின் வருகை ஆகியவற்றை தீர்க்கதரிசனத்தின் தொடர்ச்சியாக கிறிஸ்துவர்கள் பார்க்கிறார்கள்.
தீர்க்கதரிசனம் என்ற பெயரில், அநீதியை ஆதரிப்பதும், இனப்படுகொலையை நியாயப்படுவதும், அப்பாவிகள் கொல்லப்படுவதை கண்டும் காணாமல் இருப்பதும் சரியாகுமா?
இயேசு கிறிஸ்து குழந்தைகள் கொல்லப்படுவதையும், இனப்படுகொலையையும் ஆதரிப்பாரா?
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)
பல கிறிஸ்தவர்கள் இஸ்ரேலை ஆதரிப்பதற்கான முக்கிய காரணம் என்ன?
இன்று இஸ்ரேலில் நடப்பது பைபிளில் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்கள் என்று பல கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். குறிப்பாகச் சகரியா 12–14 உள்ள வசனங்கள் எருசலேமை மைய்யப்படுத்தி நடக்கும் இறுதி கால நிகழ்வுகள் என்று அவர்கள் கருதுகிறார்கள்.
இந்த தீர்க்கதரிசனத்தில் சகரியா புத்தகத்தின் முக்கியத்துவம் என்ன?
தீர்க்கதரிசனத்தில் சகரியா புத்தகம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில், யூதர்கள் எருசலேமுக்குத் திரும்புவது, நாடுகள் அதற்கு எதிராகத் திரள்வது, இயேசு கிறிஸ்து பூமிக்கு வந்து அதற்காகப் போரிடுவது பற்றி சகரியா புத்தகம் பேசுவதாக கிறிஸ்துவர்கள் நம்புகிறார்கள்.
வேறு எந்த பைபிள் புத்தகங்கள் சகரியா தீர்க்கதரிசனத்தில் இணைத்து பயன்படுத்தப்படுகின்றன?
யூதர்களை மீண்டும் சேர்ப்பது குறித்த வசனங்களுக்காக எசேக்கியேல் புத்தகமும், ஒலிவமலை மற்றும் கிறிஸ்துவின் வருகை குறித்த வாக்குறுதிக்காக அப்போஸ்தலர் 1-ம் சகரியா புத்தகத்துடன் இணைக்கப்படுகின்றன.
எல்லா கிறிஸ்தவர்களும் இந்த தீர்க்கதரிசனத்தை நம்புகிறார்களா?
இல்லை. சீயோனிசக் கிறிஸ்தவம் (Christian Zionism) என்று அழைக்கப்படும் கொள்கை கொண்டவர்களே இந்த தீர்க்கதரிசனத்தை நம்புகிறார்கள். உலகில் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களின் நம்பிக்கை இதுவல்ல.
