அக்கிரமக்காரர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் பற்றி குர்ஆன் மிகத் தெளிவாக விளக்குகிறது.
அக்கிரமக்காரர்களை வெற்றி பெற அல்லாஹ் அனுமதிப்பது ஏன்?
அப்பாவிகள் துன்பப்படுவது ஏன்?
இந்த கேள்விகளுக்கு பலரின் மனதில் எழும். இந்தக் கேள்விகளுக்கு குர்ஆன் நேரடியாகப் பதிலளிக்கிறது. அக்கிரமக்காரர்களின் வெற்றி தற்காலிகமானது என்றும், அது அல்லாஹ்வின் திட்டத்தின் ஒரு பகுதி என்றும் குர்ஆன் விளக்குகிறது.
இதை நாம் விரிவாக புரிந்து கொள்வோம்.
எழுச்சி, அக்கிரமம், வீழ்ச்சி
அக்கிரமக்காரர்களின் அழிவை பற்றி அல்லாஹ் குர்ஆனில் பேசும் போது, அது எப்படி அரங்கேறும் என்பதை விளக்குகிறான்.
- தொடர் வெற்றி (எழுச்சி)
- அகங்காரமும் அக்கிரமமும்
- யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்ற எண்ணம்
- திடீர் தண்டனை (வீழ்ச்சி)
இதை விரிவாகப் புரிந்துகொள்வோம்.
தொடர் வெற்றி (எழுச்சி)
அல்லாஹ் கூறுகிறான்:
அவர்களுக்கு நினைவூட்டப்பட்ட போதனைகளை அவர்கள் மறந்துவிட்டபோது, அவர்கள் விரும்பிய ஒவ்வொன்றின் வாசல்களையும் நாம் அவர்களுக்குத் திறந்துவிட்டோம்…
குர்ஆன் 6:44
அக்கிரமக்காரர்கள் எதையெல்லாம் விரும்புகிறார்களோ, அவற்றின் கதவுகளை அல்லாஹ் திறந்துவிடுகிறான். அவர்களுக்கு செல்வம், ஆரோக்கியம், செல்வாக்கு, பாதுகாப்பு அனைத்தையும் அல்லாஹ் கொடுக்கிறான். இப்படி அவர்கள் விரும்பும் எல்லாமே கிடைக்கும் போது, தங்களை எவராலும் தடுக்க முடியாது என்று அவர்கள் நம்பத் தொடங்குவார்கள்.
அகங்காரமும் அக்கிரமமும்
அல்லாஹ் கூறுகிறான்:
…அவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட தினால் அவர்கள் பெருமையடைந்தபோது…
குர்ஆன் 6:44
அக்கிரமக்காரர்களின் வெற்றி அவர்களின் கண்களை மறைக்கிறது. தங்கள் சாதனைகளைப் பற்றி பெருமை கொள்ளத் தொடங்குகிறார்கள். இந்தப் பெருமை அவர்களின் மனசாட்சியை கொன்று விடுகிறது. தங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது என்ற துணிச்சலில் கொடிய குற்றங்களைச் செய்ய துணிகிறார்கள்.
யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்ற எண்ணம்
அல்லாஹ் கூறுகிறான்:
அவர்கள் அறியாத விதத்தில் அவர்களைப் படிப்படியாகப் பிடிப்போம்.
குர்ஆன் 7:182
அல்லாஹ், அக்கிரமக்காரர்களை படிப்படியாகப் உயர வைத்து தண்டிக்கிறான்.
ஒரு உதாரணம் இதை புரிந்து கொள்ளலாம். ஒருவர் வெற்றி என்னும் படிகளில் மிக வேகமாக ஏறுகிறார். படிகளில் ஏற, ஏற, தான் அடையும் வெற்றியை கண்டு பெருமிதம் கொள்கிறார். இப்படியே ஏறி, ஏறி, மிகுந்த உயரத்தை அடைகிறார். அந்த உயரத்திலிருந்து அவர் விழும் போது, அவர் வீழ்ச்சி எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.
இப்படித் தான் அக்கிரமக்காரர்களை அல்லாஹ் படிப்படியாக மேலே கொண்டு போகிறான். அவர்கள் அடையும் ஒவ்வொரு வெற்றியும் ‘தங்களை யாராலும் அசைக்க முடியாது’ என்ற மாயையை அவர்களுக்குள் ஏற்படுத்துகிறது. இது அவர்களுக்கு அல்லாஹ் விரித்த வலை என்பதை அவர்கள் உணர்வதில்லை. இதற்கு பெயர் ‘இஸ்தித்ராஜ்’ – அதாவது ஒருவரைப் படிப்படியாகப் பிடித்து தண்டித்தல்.
நபி ﷺ அவர்கள் எச்சரித்தார்கள்:
ஓர் அடியான் தொடர்ந்து பாவம் செய்துகொண்டிருந்தும், அவனுக்கு விருப்பமான உலக வளங்களை அல்லாஹ் வழங்குவதை நீர் கண்டால், நிச்சயமாக அது ‘இஸ்தித்ராஜ்’ என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
ஸஹீஹ் ஜாமிஹ் # 561
அக்கிரமக்காரர்களின் வீழ்ச்சி எப்படி நடக்கும்?
அவர்கள் எப்படித் தோற்கடிக்கப்படுவார்கள்?
அல்லாஹ் இதை பற்றி பேசும் போது, “அவர்கள் அறியாத விதத்தில்” என்று சொல்கிறான். (குர்ஆன் 7:182)
அக்கிரமக்காரர்களுக்குத் தங்கள் வீழ்ச்சி எப்படி வரும் என்று தெரியாது. அது எங்கிருந்து தொடங்கும் என்றும் தெரியாது.
அவர்களின் வீழ்ச்சி எப்படி, எப்போது நடக்கும் என்பது முஸ்லிம்களாகிய நமக்கும் தெரியாது. இது நமது சிற்றறிவை நமக்கு நினைவூட்டுகிறது.
திடீர் தண்டனை (வீழ்ச்சி)
இது நடக்கும் போது, அக்கிரமக்காரர்கள் வீழ்வார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்:
…திடீரென நாம் அவர்களைப் பிடித்துக் கொண்டோம்…
குர்ஆன் 6:44
இந்த வசனத்திலிருந்து, தண்டனை என்பது திடீரென்றும் எதிர்பாராத விதமாகவும் வரும் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
அல்லாஹ் மேலும் கூறுகிறான்:
நான் அவர்களுக்கு (தண்டிக்காமல்) அவகாசம் கொடுக்கின்றேன்; நிச்சயமாக எனது திட்டம் மிகவும் உறுதியானது.
குர்ஆன் 7:183
அக்கிரமக்காரர்களுக்குத் தண்டனை கிடைப்பதில் ஏற்படும் தாமதம் அல்லாஹ்வின் திட்டத்தின் ஒரு பகுதியாகும். அல்லாஹ் திட்டமிடுபவர்களில் மிகச் சிறந்தவன். அவனது திட்டம் குறைபாடற்றது; அது ஒருபோதும் தவறாது.
அல்லாஹ் தண்டனையைத் தாமதப்படுத்துவது ஏன்?
அவர்களை (உடனுக்குடன் தண்டிக்காமல்) நாம் தாமதிப்பது (அந்த) நிராகரிப்பவர்களுக்கு நல்லது என்று அவர்கள் எண்ண வேண்டாம். அவர்களுக்கு அவகாசமளிப்பதெல்லாம், அவர்கள் பாவத்தை அதிகமாக்குவதற்கே தான். அவர்களுக்கு இழிவு தரும் வேதனையும் உண்டு.
குர்ஆன் 3:178
அக்கிரமக்காரர்களுக்கு அதிக அவகாசம் கொடுக்கப்படும் போது, அவர்களின் பாவமும் அதிகரிக்கும். அதனால் அவர்களுக்கு அல்லாஹ்வின் தண்டனை மிகக் கடுமையாக இருக்கும்.
ஸீராவிலிருந்து ஒரு பாடம்
கப்பாப் இப்னுல் அரத் (ரலி) மக்காவில் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்டார்கள். அவர் நபி ﷺ அவர்களிடம் இது குறித்து முறையிட்டபோது, நபியவர்கள் பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தி, இறுதி வெற்றியைப் பற்றி வாக்களித்தார்கள். (புகாரி # 6943).
பல ஆண்டுகளுக்குப் பிறகு, இஸ்லாத்தின் வெற்றியையும் செழிப்பையும் காணும் வரை கப்பாப் (ரலி) உயிர் வாழ்ந்தார்கள். (புகாரி # 1352).
கடுமையான அக்கிரமத்தை அனுபவித்த அவர்கள், இஸ்லாத்தின் மாபெரும் வெற்றியை தங்கள் வாழ்நாளிலேயே கண்டார்கள். இதுதான் அல்லாஹ்வின் திட்டம். அல்ஹம்துலில்லாஹ்.
அல்லாஹ்வின் நடைமுறையில் மாற்றம் இல்லை
அல்லாஹ்வின் நடைமுறையில் எந்த மாற்றத்தையும் நீர் காணமாட்டீர்.
குர்ஆன் 33:62
அல்லாஹ்வின் நடைமுறையில் எவ்வித திரிபுவையும் நீர் காணமாட்டீர்.
குர்ஆன் 35:43
ஃபிர்அவ்ன் எழுச்சி; வீழ்ச்சி.
காரூன் எழுச்சி; வீழ்ச்சி.
ஆது, சமூது கூட்டத்தின் எழுச்சி; வீழ்ச்சி.
அக்கிரமக்காரர்களின் பெயர்கள் தான் மாறும். அவர்களைக் கையாளும் அல்லாஹ்வின் நடைமுறை மாறுவதில்லை.
அக்கிரமத்தின் போது பொறுமை காத்தல்
அக்கிராமத்தின் போது முஸ்லிம்கள் செய்ய வேண்டியதை அல்லாஹ் கற்றுத் தருகிறான்.
பொறுமை
பொறுமையாக இருப்பீராக; நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது.
குர்ஆன் 30:60
உதவி தேடுதல்
“ஈமான் கொண்டவர்களே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்.
குர்ஆன் 2:153
மனம் தளராதீர்
நீங்கள் மனம் தளர வேண்டாம்; கவலைப்பட வேண்டாம். நீங்கள் உண்மையான முஃமின்களாக இருந்தால் நீங்கள்தான் மேன்மை அடைவீர்கள்.
குர்ஆன் 3:139
அநீதி இழைக்காமல் அக்கிரமத்தை எதிர்த்தல்
ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம்.
குர்ஆன் 5:8
பொறுமை காப்பது பலவீனம் அல்ல; அது அல்லாஹ்வின் திட்டத்தின் மீதுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையின் வெளிப்பாடு.
அல்லாஹ்வின் நடைமுறை உங்களுக்கும் பொருந்தும்
அல்லாஹ் படிப்படியாகப் பிடித்து தண்டிப்பது அக்கிரமக்காரர்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் பொருந்தும்.
ஒருவர் ஹராமான செல்வத்தில் வசதியாக வாழ்ந்தால், அந்த வசதியும் செல்வமும் அல்லாஹ் அவரைத் தண்டிப்பதற்கு முன் வழங்கும் ஒரு கால அவகாசமே ஆகும். எனவே, நீங்கள் அனுபவிக்கும் உலக வசதியைக் கண்டு ஏமாந்து விடாதீர்கள்.
நீதி நிச்சயம் கிடைக்கும்
அக்கிரமக்காரர்கள் இவ்வுலகில் தண்டிக்கப்படாமல் இறந்தாலும், மறுமை நாளில் அவர்கள் நிச்சயமாக அல்லாஹ்வின் தண்டனையை பெறுவார்கள்.
கியாமத் நாளுக்காக நீதியான தராசுகளை நிறுவுவோம். எவருக்கும் சிறிதளவும் அநீதி இழைக்கப்படாது. ஒரு கடுகு விதை அளவே இருந்தபோதும் அதையும் கொண்டு வருவோம். கணக்கெடுக்க நாமே போதும்.
குர்ஆன் 21:47
எந்த ஓர் அக்கிரமக்காரனும் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது.
சுயபரிசோதனை செய்வோம்
☐ அக்கிரமங்களை காணும்போது அல்லாஹ்வின் நீதியின் மீது எனக்கு சந்தேகம் வருகிறதா?
☐ சோதனைகள் எனது பொறுமையை வலுப்படுத்துகிறதா அல்லது பலவீனப்படுத்துகிறதா?
☐ அக்கிரமத்திற்குள்ளாகும் சகோதர சகோதரிகளுக்காக நான் தொடர்ந்து துஆ செய்கிறேனா?
☐ அக்கிரமத்திற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த என்னால் முடிந்ததைச் செய்கிறேனா?
முடிவுரை : அக்கிரமக்காரர்களின் எழுச்சி வீழ்ச்சிக்காகவே
அக்கிரமக்காரர்களின் எழுச்சி, அவர்களின் இழிவான வீழ்ச்சிக்கான முதல் படி என்று அல்லாஹ் குர்ஆனில் நமக்குக் கற்பிக்கிறான். அக்கிரமம் தலைவிரித்தாடும் போது:
- அக்கிரமக்காரர்களின் வெற்றி தற்காலிகமானது
- அல்லாஹ்வின் தண்டிக்காமல் அவகாசம் தருவது அவனது திட்டத்தின் ஒரு பகுதி
- அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து அவர்கள் தப்ப முடியாது
தளராதீர்! அல்லாஹ்வின் திட்டத்தையும், ஞானத்தையும் நம்புங்கள். துஆ செய்யுங்கள், பொறுமையாக இருங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)
அக்கிரமக்காரர்கள் வெற்றி பெற அல்லாஹ் ஏன் அனுமதிக்கிறான்?
இது அல்லாஹ்வின் திட்டத்தின் ஒரு பகுதி. அநியாயக்காரர்களைப் படிப்படியாகத் தண்டிப்பதற்காக (இஸ்தித்ராஜ்) அல்லாஹ் தண்டனையைத் தாமதப்படுத்துகிறான். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அவன் அவர்களை தண்டிப்பான். (குர்ஆன் 6:44, 7:182-183)
எல்லா அக்கிரமக்காரர்களும் இவ்வுலகிலேயே தண்டிக்கப்படுவார்களா?
அக்கிரமக்காரர்கள் இவ்வுலகில் தண்டிக்கப்படலாம், தண்டிக்கப்படாமலும் போகலாம். நிச்சயமாக, மறுமை நாளில் தண்டிக்கப்படுவார்கள். (குர்ஆன் 21:47).
உலகில் வெற்றி பெறுவது அல்லாஹ்வின் திருப்தியின் அடையாளமா?
இல்லை. செல்வமும் அதிகாரமும் ஒரு சோதனையே என்று குர்ஆன் கற்பிக்கிறது. (குர்ஆன் 28:76-81).
அக்கிரமத்திற்க்கு முஸ்லிம்கள் எவ்வாறு எதிர்வினையாற்ற வேண்டும்?
பொறுமை, தொழுகை, மனத்தூய்மை, நீதம், அல்லாஹ்வின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றைக் கொண்டு எதிர்கொள்ள வேண்டும்.
‘இஸ்தித்ராஜ்’ என்றால் என்ன?
அக்கிரமக்காரர்களை அல்லாஹ் படிப்படியாக மேலே கொண்டு போய், அவர்களை தண்டிப்பதற்கு பெயர் ‘இஸ்தித்ராஜ்’. (7:182).
இந்த நினைவூட்டல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால் இதைப் பகிருங்கள். உங்கள் மூலம் ஒருவர் சரியான புரிதலைப் பெற்றால், அது உங்களுக்கும் நன்மையாக அமையும்.
