நீங்கள் தக்வாவை அடைந்தீர்களா?

நோன்பின் நோக்கம் தக்வா அடைவதே. நீங்கள் நோன்பு நோற்றீர்கள். தொழுதீர்கள். உங்கள் நோன்பும் வழிபாடுகளும் தக்வா அடைய உதவியதா?

“நீங்கள் தக்வாவைப் அடைவதற்காகவே நோன்பு கடமையாக்கப்பட்டது.” என்று குர்ஆனில் அல்லாஹ் தெளிவாகக் கூறுகிறான். நாம் தக்வாவை அடைவதற்காகவே நோன்பு நோற்கிறோம். ஆனால் நாம் தக்வாவை அடைந்தோமா?  நமக்குள் மாற்றம் தான் நோன்பின் இலக்கு. மாற்றம் நிகழ்ந்ததா?

சற்று சிந்திப்போமா?

ஒருவரின் உடல் எடை மிகவும் அதிகமாக உள்ளது. மருத்துவர் அவரை ஒரு மாதம் உடற்பயிற்சி செய்து,  உணவுக்கட்டுப்பாடோடு இருக்குமாறு கூறுகிறார். அந்த நபரும் ஒரு மாதம் அதைச் செய்கிறார். ஒரு மாதத்திற்குப் பிறகு, அது பலனளித்ததா என்பதை அறிய, அவர் தனது எடையை கண்காணிப்பார் அல்லவா? எடை குறைந்திருந்தால், அவரது முயற்சி பலனளித்துள்ளது. இல்லையெனில், அந்த முயற்சி தோல்வி என்பதை புரிந்துக் கொள்வார்.

நம் நோன்பும் அதுபோன்றதே. நீங்கள் நோன்பு நோற்றீர்கள். தொழுதீர்கள். குர்ஆன் ஓதினீர்கள். ஆனால் உங்கள் நோன்பும் வழிபாடுகளும் தக்வா அடைய உதவியதா?

தக்வா உடையவர்கள் சுயபரிசோதனை செய்வார்கள்

அல்லாஹ் கூறுகிறான்:

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுடன் தக்வாவோடு நடந்துக் கொள்ளுங்கள்! நாளைய தினத்திற்காக (மறுமைக்காக) தான் எதைத் தயார்படுத்தி வைத்துள்ளோம் என்பதை ஒவ்வொருவரும் பார்த்துக் கொள்ளட்டும். அல்லாஹ்வுடன் தக்வாவோடு நடந்துக் கொள்ளுங்கள்! நிச்சயமாக, நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.

குர்ஆன் 59:18

இந்த ஒரே வசனத்தில் “அல்லாஹ்வுடன் தக்வாவோடு நடந்துக் கொள்ளுங்கள்” என்று இரண்டு முறை அல்லாஹ் கூறுவதைக் கவனியுங்கள். இந்த இரண்டு கட்டளைகளுக்கு இடையில், மறுமைக்காக நாம் எதைத் தயாரித்து வைத்திருக்கிறோம் என்பதைக் கவனிக்குமாறு அவன் நமக்குக் கட்டளையிடுகிறான். சுயபரிசோதனை செய்வது தக்வாவின் ஒரு பகுதி என்பதை இந்த வசனம் உணர்த்துகிறது.

தக்வா உடையவர்கள் கவனக்குறைவாக வாழமாட்டார்கள். அவர்கள் தொடர்ந்து சுயபரிசோதனையில் ஈடுபடுவார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் பொய் பேசுவதையும், தீய செயல்களையும் விட்டுவிடவில்லையோ, அவர் தனது உணவையும் பானத்தையும் விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை.

புகாரி # 1903

சுயபரிசோதனை செய்ய…

ரமலானின் நோன்பை முழுவதுமாக நோற்று முடித்தோமா என்பதல்ல முக்கியம். மாறாக, நம் நோன்பு நம் நாவை, நம் பார்வையை, நம்  தனிப்பட்ட பழக்கவழக்கங்களை, நம்மை பாவம் செய்ய தூண்டும் எண்ணங்களை சரி செய்ததா என்பது தான் முக்கியம். இதை பற்றி சிந்திக்கும் போது தான், நாம் தக்வா அடைந்தோமா இல்லையா என்பதை அறிந்துக் கொள்ளலாம்.

உங்கள் நோன்பு மற்றும் வழிபாடுகளைக் கொண்டு மட்டும் திருப்தி அடைந்துவிடாதீர்கள். நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதை சுயபரிசோதனை செய்ய ஏதுவாக சுயபரிசோதனைப் படிவம் தயாரித்துள்ளோம். சுயபரிசோதனைப் படிவத்தை இங்கே கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

சுயபரிசோதனைப் படிவத்தை பயன்படுத்தி நீங்கள் தக்வாவை அடைந்தீர்களா, இல்லையா என்பதை அறிந்துக் கொள்ளுங்கள். சுயபரிசோதனை செய்வது தக்வா உள்ளவர்களின் பண்பு என்பதை மறக்காதீர்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

ரமலானில் நோன்பு நோற்பதன் நோக்கம் என்ன?

நம்பிக்கையாளர்கள் தக்வாவை அடைவதற்காகவே நோன்பு கடமையாக்கப்பட்டது என்று குர்ஆன் கூறுகிறது. (2:183)

நான் தக்வாவை அடைந்துவிட்டேன் என்பதை எப்படி அறிந்து கொள்வது?

உங்கள் பாவங்கள், பேச்சு, தனிப்பட்ட நடத்தை மற்றும் இறை உணர்வு ஆகியவற்றில் நோன்பு ஏற்படுத்திய தாக்கத்தைக் கவனியுங்கள். குர்ஆன் 59:18 தக்வாவை சுயபரிசோதனையோடு இணைக்கிறது.

திருக்குர்ஆன் 59:18-ல் “அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்” என்பது ஏன் இரண்டு முறை குறிப்பிடப்பட்டுள்ளது?

சுயபரிசோதனைக்கு முன்னும் பின்னும் அல்லாஹ்வுக்கு அஞ்சுமாறு இந்த வசனம் கட்டளையிடுகிறது. இது சுயபரிசோதனை என்பது தக்வாவின் ஒரு முக்கிய பகுதி என்பதை உணர்த்துகிறது.

ஒருவர் தொடர்ந்து பொய் சொல்லிக்கொண்டும், பகிரங்கமாகப் பாவம் செய்துகொண்டும் இருந்தால் நோன்பு அவருக்குப் பயன் தருமா?

யார் பொய் பேசுவதையும் தீய செயல்களையும் விடுவதில்லையோ, அவர் உணவையும் பானத்தையும் விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கற்பித்துள்ளார்கள். (புகாரி 1903)

மேலும் படிக்க

WHAT OTHERS ARE READING

Most Popular