More

    Choose Your Language

    கடவுள் உண்டா? கடவுளை படைத்தது யார்?

    பிரபஞ்சத்திற்கு ஒரு தொடக்கம் உள்ளது என்பதை பிரபஞ்சத்தின் வயது நமக்கு உணர்த்துகிறது. பிரபஞ்சம் ஒன்று தன்னைத் தானே உருவாக்கியிருக்க வேண்டும் அல்லது 'ஒரு சக்தி' பிரபஞ்சத்தை உருவாகியிருக்க வேண்டும். எந்தவொன்றும் தன்னைத் தானே உருவாக்க முடியாது என்பதால், பிரபஞ்சம் ஒரு சக்தியால் தான் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த ‘சக்தியை’ தான் நாம் கடவுள் என்கிறோம்.

    கடவுள் உண்டா?

    கடவுள் என்பது யார்?

    இந்த பிரபஞ்சத்தையும், அதில் இருக்கும் அனைத்தையும் படைத்த சக்தியை தான் கடவுள் என்கிறோம்.

    பிரபஞ்சத்தை படைத்த ஒரு சக்தி உண்டா? கண்டறிவோம் வாருங்கள்.

    இந்த பிரபஞ்சம் என்றென்றும் இருந்து வருகிறதா அல்லது இந்த பிரபஞ்சத்திற்கு தொடக்கம் உள்ளதா?

    பிரபஞ்சத்தின் வயது 13.8 பில்லியன் வருடங்கள் என்று விஞ்ஞானிகள் சொல்லுகிறார்கள். பிரபஞ்சம் என்றென்றும் இருந்து வந்திருந்தால் அதனுடைய வயதை சொல்ல முடியுமா? நிச்சயமாக முடியாது. பிரபஞ்சத்திற்கு தொடக்கம் இருந்தால் மட்டுமே, அதனுடைய வயதை நம்மால் சொல்ல முடியும். எனவே, பிரபஞ்சத்திற்கு தொடக்கம் உள்ளது என்பதை இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

    அறிவியல் மூலமாக இந்த பிரபஞ்சம் எப்படி தொடங்கியது என்று கண்டுபிடிக்க முடியுமா?

    இந்த கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்ள, அறிவியல் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும்.

    அறிவியல் என்றால் என்ன?

    புகழ் பெற்ற Oxford dictionary அறிவியல் பற்றி இப்படி சொல்லுகிறது:

    knowledge about the structure and behavior of the natural and physical world, based on facts that you can prove, for example by experiments.

    Oxford Dictionary

    அதாவது:

    இயற்கை மற்றும் புற உலகின் வடிவமைப்பை பற்றியும், அவற்றின் செயல்பாடுகளை பற்றியும், நிரூபிக்கப்பட்ட உண்மைகள் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் நாம் பெறும் அறிவு.

    இதிலிருந்து அறிவியல் மூலம் பிரபஞ்சத்தின் உள்ளே நடக்கும் இயற்கை விஷயங்கள் பற்றி மட்டும் தான் நம்மால் படிக்க முடியும் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

    பிரபஞ்சம் எப்படி தொடங்கியது என்பதை கண்டுபிடிக்க, பிரபஞ்சம் தொடங்குவதற்கு முன்னால் என்ன நடந்தது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். பிரபஞ்சத்தின் உள்ளே நடக்கும் விஷயங்களை பற்றி மட்டும் ஆராய பயன்படும் அறிவியலை வைத்துக் கொண்டு பிரபஞ்சம் தொடங்குவதற்கு முன்னால் என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்க இயலுமா? நிச்சயமாக முடியாது.

    எனவே தர்க்க ரீதியான அணுகுமுறை மூலம் தான் நம்மால் இதற்கு பதில் கண்டுபிடிக்க முடியும்.

    பிரபஞ்சத்தின் தொடக்கத்தைக் கண்டறிய தர்க்கரீதியான அணுகுமுறை

    பிரபஞ்சம் தொடங்கியதற்கு இரண்டே இரண்டு காரணங்கள் தான் சாத்தியம். அவை:

    1. பிரபஞ்சம் தன்னை தானே படைத்து கொண்டது.
    2. பிரபஞ்சத்தை ஒரு சக்தி படைத்தது.

    பிரபஞ்சம் தன்னை தானே படைத்து கொண்டது

    பிரபஞ்சம் தன்னை தானே படைத்து இருக்க முடியுமா? உங்களை நீங்களே பெற்றெடுத்தீர்கள் என்று சொன்னால், நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா? உங்களை நீங்களே பெற்றெடுத்தீர்கள் என்று சொல்வது எவ்வளவு அபத்தமோ, அதே போல் தான் இந்த பிரபஞ்சம் தன்னை தானே படைத்து கொண்டது என்று சொல்வதும்.

    பிரபஞ்சத்தை ஒரு சக்தி படைத்தது

    பிரபஞ்சம் தன்னை தானே படைக்கவில்லையென்றால், இந்த பிரபஞ்சத்தை ஒரு சக்தி தான் படைத்திருக்க வேண்டும். இந்த சக்தியை தான், நாம் கடவுள் என்று சொல்கிறோம்.

    இதை படித்தவுடன், சிலரது மனதில் உடனடியாக எழும் கேள்வி தான் “கடவுளைப் படைத்தது யார்?”

    கடவுளை படைத்தது யார்?

    பிரபஞ்சத்தை படைத்த கடவுளை படைத்தது யார்?

    ஒரு விஷயத்தின் தொடக்கத்தையும் முடிவையும் அறிந்து கொள்ள நாம் “நேரத்தை” (time ஐ) பயன்படுத்துகிறோம். “நேரம்” இல்லை என்றால் எந்தவொன்றுக்கும் ஆரம்பமோ முடிவோ இருக்காது. இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் நேரத்தை சார்ந்தே உள்ளன. எனவே அவை அனைத்திற்கும் தொடக்கமும் முடிவும் உண்டு. இதை நன்றாக மனதில் வைத்துக் கொண்டு தொடர்ந்து படியுங்கள்.

    பிரபஞ்சத்தைப் போலவே “நேரத்திற்கும்” தொடக்கம் உள்ளது. பிரபஞ்சத்தைப் எப்படி ஒரு சக்தி படைத்ததோ, அதே போல் தான், “நேரத்தையும்” ஒரு சக்தி படைத்திருக்க வேண்டும். ஏனெனில், “நேரம்” தானே தோன்றியிருக்க முடியாது. பிரபஞ்சத்தின் தொடக்கத்திற்குக் காரணமான கடவுளே “நேரம்” தொடங்குவதற்கும் காரணமாக இருக்க வேண்டும்.

    “நேரம்” தொடங்குவதற்கு கடவுள் தான் காரணம் என்று எப்படி உறுதியாக சொல்ல முடியும் என்று நீங்கள் கேட்கலாம். இதைப் பற்றி சற்று சிந்திப்போம்.

    பிரபஞ்சத்தைப் படைத்த கடவுளிற்கு முன்பே “நேரம்” இருந்திருந்தால், அதாவது “நேரம்” என்ற வளையத்திற்குள் பிரபஞ்சத்தைப் படைத்த கடவுள் இருப்பாரேயானால், இந்த பிரபஞ்சமே படைக்கப்பட்டிருக்காது. எப்படி என்று பார்ப்போம்!

    பிரபஞ்சத்தைப் படைத்த கடவுள் “நேரத்திற்குள்” இருந்தால், கடவுளுக்கு “தொடக்கம்” அவசியமாகிவிடும். கடவுளுக்கு “தொடக்கம்” இருந்தால், அந்த தொடக்கத்திற்கு காரணம் யார் என்ற கேள்வி எழும். கடவுளின் தொடக்கத்திற்கு யார் காரணமோ அவரின் தொடக்கத்திற்கு காரணம் யார் என்பது அடுத்த கேள்வி. எந்த பதில் சொல்லப்பட்டாலும், “அதன்” தொடக்கத்திற்கு காரணம் யார், அந்த காரணத்திற்கு காரணம் யார் என்று முடிவில்லாமல் சங்கிலித் தொடராக கேள்விகள் நீண்டு கொண்டே போகும். இப்படி முடிவில்லாமல் சங்கிலித் தொடராக கேள்விகள் நீண்டு கொண்டே போனால், இந்த பிரபஞ்சமே படைக்கப்பட்டிருக்காது. இதை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்வோம்.

    ஒரு மீனவர் கடலுக்கு சென்று மீன் பிடிக்க இரண்டாவது மீனவரிடம் அனுமதி கேட்கிறார்.

    இரண்டாவது மீனவர் மூன்றாவது மீனவரிடம் அனுமதி கேட்கிறார்.

    மூன்றாவது மீனவர் நான்காவது மீனவரிடம் அனுமதி கேட்கிறார்.

    நான்காவது மீனவர் ஐந்தாவது மீனவரிடம் அனுமதி கேட்கிறார்.

    ஐந்தாவது மீனவர் ஆறாவது மீனவரிடம் அனுமதி கேட்கிறார்.

    ஆறாவது மீனவர் ஏழாவது மீனவரிடம் அனுமதி கேட்கிறார்.

    முடிவே இல்லாமல் இந்தத் தொடர் இப்படியே தொடர்ந்தால், முதலாவது மீனவருக்கு இரண்டாவது மீனவரிடமிருந்து அனுமதி கிடைக்குமா? நிச்சயமாக கிடைக்காது.

    மேலே உள்ள உதாரணத்தைப் போலவே, “நேரம்” என்ற வளையத்திற்குள் கடவுள் இருப்பாரேயானால், “தொடக்கத்திற்கு யார் காரணம்” என்ற கேள்விகளின் சங்கிலித் தொடர் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டே போகும். இப்படி முடிவில்லாமல் சங்கிலித் தொடராக கேள்விகள் நீண்டு கொண்டே போனால், எப்படி மேலே பார்த்த உதாரணத்தில் உள்ள மீனவருக்கு அனுமதி கிடைக்காதோ, அதே போல் இந்த பிரபஞ்சமும் படைக்கப்பட்டிருக்க முடியாது.

    ஆனால், பிரபஞ்சம் இருப்பது உண்மை. எனவே “நேரம்” தொடங்குவதற்கு முன்பே பிரபஞ்சத்தைப் படைத்த கடவுள் இருந்திருக்க வேண்டும் என்பதும், “நேரம்” என்ற வளையத்திற்குள் பிரபஞ்சத்தைப் படைத்த கடவுள் இல்லை என்பதும் நமக்கு தெளிவாகிறது. “நேரம்” தொடங்குவதற்கு முன்பே இருக்கும் பிரபஞ்சத்தைப் படைத்த கடவுள் தான் “நேரத்தை” படைத்திருக்க முடியும் என்பதையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

    “நேரத்திற்கு” அப்பாற்பட்ட கடவுளுக்கு ஆரம்பமும் முடிவும் இருக்க முடியாது. எனவே, ஆரம்பமும் முடிவும் இல்லாத கடவுளைப் படைத்தது யார் என்று கேட்பது அர்த்தமற்றது.

    முடிவுரை

    1. பிரபஞ்சத்திற்கு வயது உள்ளது. எனவே பிரபஞ்சத்திற்கு ஒரு தொடக்கம் இருக்க வேண்டும்.

    2. பிரபஞ்சம் தன்னைத் தானே உருவாக்கியிருக்க முடியாது. எனவே ‘ஒரு சக்தி’ தான் பிரபஞ்சத்தை உருவாக்கி இருக்க வேண்டும்.

    3. இந்த ‘சக்தியை’ நாம் கடவுள் என்கிறோம்.

    4. பிரபஞ்சத்தைப் போலவே “நேரத்திற்கும்” தொடக்கம் உள்ளது.

    5. தொடக்கத்தின் காரணங்கள் பற்றிய கேள்விகளின் சங்கிலித் தொடர் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டே போகும் என்பதால், “நேரம்” என்ற வளையத்திற்குள் கடவுள் இருக்க இயலாது.

    6. “நேரம்” என்ற வளையத்திற்குள் கடவுள் இல்லாததால், அவர் “நேரத்திற்கு” அப்பாற்பட்டவர். எனவே, கடவுளுக்கு ஆரம்பமோ முடிவோ இல்லை.

    7. கடவுளுக்கு ஆரம்பமும் முடிவும் இல்லை என்பதால் ‘கடவுளைப் படைத்தது யார்?’ என்று கேட்பது அர்த்தமற்றது.

    கூடுதல் தகவலுக்கு

    அல்லாஹ் என்பது யார்?

    ஒரு தெய்வமா? பல தெய்வமா?


    மேலும் படிக்க

    WHAT OTHERS ARE READING

    Most Popular