நம் உடல் வியக்கத்தக்க வடிவமைப்பையும் செயல்பாட்டையும் கொண்ட உறுப்புகளால் ஆனது. ஆனால், நமது பரபரப்பான வாழ்க்கையில், இந்த அற்புதங்களை நாம் கவனிக்க தவறி விடுகிறோம்.
நாம் காணும் மற்ற கலைநயமிக்க வடிவமைப்புகளைப் பார்த்து வியக்கும் நாம், நம் உடலின் அற்புதமான வடிவமைப்பை பற்றிச் சிந்திப்பதில்லை.
இந்தக் கட்டுரையில், மனித உடலின் மிக அற்புதமான உறுப்புகளில் ஒன்றான கண்ணைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்.
மனிதக் கண் ஒரு அதிசயம்
நீங்கள் கண்களைத் திறக்கும் ஒவ்வொரு கணமும் ஒரு அற்புதம் நீங்கள் உணராமலே நிகழ்கிறது. உலகின் சிறந்த கேமராவால் கூட உங்கள் கண் செய்யும் செயலைச் செய்ய முடியாது.
ஒரு கேமராவால் தன்னைத்தானே சுத்தப்படுத்திக்கொள்ள முடியாது. ஆனால், உங்கள் கண் தன்னைத்தானே சுத்தப்படுத்திக்கொள்ளும். ஒவ்வொருமுறை கண் சிமிட்டும்போதும், கண்ணீர் சுரந்து கண்ணின் மேற்பரப்பை மென்மையாகவும், பாதுகாப்பாகவும், தெளிவாகவும் வைக்கிறது.
ஒரு கேமராவால் தன்னைத்தானே சரிசெய்துகொள்ள முடியாது. ஆனால், கண்ணில் ஏற்படும் சிறிய கீறல்களை உங்கள் கண் தானாகவே சரிசெய்து கொள்கிறது. பெரும்பாலான சிறிய கார்னியல் காயங்கள் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் குணமாகிவிடுகின்றன.
ஒரு கேமராவிற்கு focus செய்ய தனி அமைப்பு தேவை. உங்கள் கண்களோ தானாகவே பார்வையை ஒருமுகப்படுத்தும். நாம் பார்க்கும் பொருட்கள் தெளிவாகத் தெரிவதற்காக, கண்களில் உள்ள தசைகள் லென்ஸின் வடிவத்தை நொடிப்பொழுதில் மாற்றிக்கொள்ளும்.
சிவப்பு, பச்சை மற்றும் நீல நிறங்களை உணரும் மூன்று வகை கூம்பு செல்கள் (cone cells) மூலம் உங்களால் ஒரு கோடி நிறங்களை பார்க்க முடிகிறது.
தன்னைத்தானே சுத்தம் செய்து, பார்வையை உடனுக்குடன் ஒருமுகப்படுத்தி, சிறு கீறல்களைத் தானாகவே குணப்படுத்தும் ஒரு இயந்திரத்தை யாராவது உங்களிடம் காட்டினால், அதைப் பார்த்து நீங்கள் மெய்சிலிர்த்து விடுவீர்கள். ஆனால், சிறுவயது முதலே நம் கண்களை பெரிதாக கவனிக்க தவறுவதால், கண்களின் பயன்பாடை நாம் சாதாரணமாகக் கருதுகிறோம்.
கண்களும் நம் வாழ்வும்
நுட்பமான நம் கண்களைப் பற்றி சிந்தித்தால், இயற்கையாகவே சில கேள்விகள் எழும்.
நமக்குக் கண் பார்வையை வழங்கியது யார்? நாம் ஏன் படைக்கப்பட்டோம்? இறைவன் நம்மிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறான்? இந்த வாழ்க்கையின் நோக்கம் என்ன? மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கும்?
சிலர், “இது வெறும் பரிணாம வளர்ச்சி” என்று சொல்லி இந்தக் கேள்விகளைத் தவிர்க்க முயல்கின்றனர். ஆனால், “பரிணாம வளர்ச்சியை” காரணம் காட்டுவது இந்தக் கேள்விகளை மறைத்துவிடாது. பரிணாம வளர்ச்சி கொள்கையால் ஒரு விஷயம் எப்படி நடக்கிறது என்பதை விளக்க முடியுமே தவிர, அந்தச் செயல் எதனால் நடக்கிறது என்பதை விளக்க முடியாது.
உதாரணமாக, ஒரு அழகான வீட்டைக் காட்டி, செங்கற்கள் எப்படி அடுக்கப்பட்டன, சிமெண்ட் எப்படிப் பூசப்பட்டது என்று ஒருவர் எவ்வளவு அழகாக விளக்கினாலும், “இந்த வீட்டை கட்டியது யார்? வீடு எதற்காகக் கட்டப்பட்டது?” போன்ற கேள்விகள் எழத்தான் செய்யும்.
அதேபோல், பரிணாம வளர்ச்சியைப் பற்றிப் பேசுபவர்கள், செயல் எப்படி நடந்தது என்று சொல்கிறார்களே தவிர, மனித வாழ்க்கையின் ஆழமான கேள்விகளுக்குப் அவர்களால் பதில் சொல்ல முடிவதில்லை.
நாம் ஏன் பிறந்தோம்? நன்மையையும், தீமையையும் அறியும் பண்பு நமக்கு கிடைத்தது எப்படி? நாம் ஏன் நீதிக்காக ஏங்குகிறோம்? வாழ்விற்கு ஒரு பொருளை நாம் தேடுவது ஏன்? மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கும்?
இந்த கேள்விகளுக்கு பரிணாம வளர்ச்சி கொள்கையால் பதில் சொல்ல முடியாது.
மனித உடலைப் பார்க்கும்போது அது எப்படிச் செயல்படுகிறது என்பதை சிந்திப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், இவ்வளவு துல்லியமாகவும், சமநிலையோடும் நாம் ஏன் படைக்கப்பட்டோம் என்பதையும் சிந்திக்க வேண்டும். நேர்மையோடும், நடுநிலையோடும் சிந்தித்தால், படைத்தவனைப் பற்றியும், நம் வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றியும் நம்மை அது சிந்திக்க தூண்டும்.
கண்கள் – இறைவனின் அத்தாட்சி
உங்கள் கண்களைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். அது எவ்வளவு நுட்பமாகவும், துல்லியமாகவும் வேலை செய்கிறது! இவ்வளவு துல்லியமான ஒரு உறுப்பு, தற்செயலாக தானாகவே உருவாகியிருக்க முடியாது.
எனவே, நமது பார்வைத்திறன் என்பது சாதாரண விஷயம் அல்ல. அது இறைவன் நமக்கு அளித்த அருட்கொடை. ஒவ்வொரு அருட்கொடையும் நன்றியுணர்வையும், சரியான பயன்பாட்டையும் கோருகிறது. இந்த அருட்கொடையை அனுபவிக்கும் நாம், அதற்கு நன்றி செலுத்த வேண்டும்.
திருக்குர்ஆனில் இறைவன் கூறுகிறான்:
இன்னும் உங்களுக்குள்ளும் (பல அத்தாட்சிகள் உள்ளன.) ஆக, நீங்கள் (எப்படி படைக்கப்பட்டு இருக்கிறீர்கள் என்பதை) உற்று நோக்க மாட்டீர்களா?
குர்ஆன் 51:21
உங்கள் கண்கள் வீணாகப் பயன்படுத்துவதற்காகவோ அல்லது பாவங்கள் செய்வதற்காகவோ இறைவனால் வழங்கப்படவில்லை. இறைவனின் அத்தாட்சிகளில் ஒன்றான நம் கண்களை பற்றி சிந்தித்து, நம் வாழ்வின் நோக்கத்தை உணர்ந்து, மரணத்திற்குப் பின் உள்ள நியாயத் தீர்ப்பு நாளில் வெற்றி பெரும் வகையில் வாழ வேண்டும் என்ற எண்ணம் மேலோங்க வேண்டும்.
மரணத்திற்குப் பிறகு வாழ்க்கை உண்டா? பதிலை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
நமது வாழ்வின் நோக்கத்தை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
கண்ணின் அற்புதத்தை சிந்திப்பது, வெறும் வியப்போடு முடிந்துவிடக் கூடாது. அது இறைவனின் அருட்கொடையை உணரச் செய்ய வேண்டும். அந்த உணர்வு இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்கும், அவனுக்கு கீழ்ப்படிவதற்கும், அவனை வணங்குவதற்கும் நம்மை தூண்ட வேண்டும்.
முடிவுரை
மனிதக் கண்ணின் வடிவமைப்பு சாதாரணமானது அல்ல. நமக்குள் இருக்கும் பல இறைவனின் அத்தாட்சிகளில் நம் கண்களும் ஒன்று என்பதை நாம் உணர வேண்டும்.
நுட்பமாக வேலை செய்யும் நம் கண்கள், சர்வ வல்லமையுள்ள, எல்லா அறிந்த நம்மை படைத்த இறைவனை பற்றி நமக்கு உணர்த்துகின்றன.
மரணத்திற்குப் பிறகு, நீங்கள் இறைவனிடமே திரும்புவீர்கள்; நீங்கள் இவ்வுலகில் எப்படி வாழ்ந்தீர்கள் என்பது குறித்து இறைவனால் விசாரிக்கப்படுவீர்கள்.
உங்கள் கண்களை பற்றிச் சிந்தியுங்கள். கீழே உள்ள கேள்விகளுக்கு விடை தேடுங்கள்.
நான் ஏன் படைக்கப்பட்டேன்?
இறைவன் என்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறான்?
அவன் தந்த அருட்கொடைகளை நான் எப்படிப் பயன்படுத்துகிறேன்?
மரணத்திற்குப் பின் வரப்போகும் வாழ்க்கையில் என் நிலைமை என்னவாகும்?
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
மனித உடலில் உள்ள அத்தாட்சிகள் பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது?
இன்னும் உங்களுக்குள்ளும் (பல அத்தாட்சிகள் உள்ளன.) ஆக, நீங்கள் (எப்படி படைக்கப்பட்டு இருக்கிறீர்கள் என்பதை) உற்று நோக்க மாட்டீர்களா? (51:21) என்று குர்ஆன் கூறுகிறது. மனிதர்கள் தங்களுக்குள்ளேயே இருக்கும் இறைவனின் அத்தாட்சிகளைச் சிந்திக்குமாறு குர்ஆன் அழைப்பு விடுக்கிறது.
கண்கள் தன்னைத்தானே சுத்தம் செய்து பாதுகாத்துக் கொள்கின்றனவா?
ஆம். நாம் இமைக்கும் போது கண்களில் சுரக்கும் கண்ணீர், கண்கள் ஆரோக்கியமாகவும், பார்வை தெளிவாகவும் இருக்க உதவுகிறது.
கண்ணின் மேற்பரப்பில் ஏற்படும் சிறு காயங்கள் தானாகவே குணமாகுமா?
ஆம். கண்ணின் மேற்புறத் திசுக்கள் (Corneal epithelium) மிக வேகமாக வளரும் தன்மை கொண்டவை என்பதால் சிறு காயங்கள் விரைவில் குணமாகும்.
வாழ்வின் நோக்கம் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது?
மனிதர்கள் இறைவனை வணங்குவதற்கும், அவனுக்குக் கீழ்ப்படிவதற்காகவும் படைக்கப்பட்டனர் என்றும், வாழ்வும் மரணமும் நம் செயல்களைச் சோதிப்பதற்கே என்றும் இஸ்லாம் கற்பிக்கிறது.
மரணத்திற்குப் பின் என்ன நடக்கும்?
மரணத்திற்குப் பிறகு மனிதர்கள் இறைவனிடம் திரும்புவார்கள் என்றும், அவர்கள் இவ்வுலகில் எப்படி வாழ்ந்தார்கள் என்பது குறித்து இறைவனால் விசாரிக்கப்படுவார்கள்.
