முன்னுரை
இன்று உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், ஒரு நாள் மரணிக்கப்போவது நிச்சயம். நாம் பிறந்த இடத்தையோ, நம் பெற்றோரையோ நாம் தேர்ந்தெடுக்கவில்லை. நம் சொந்த விருப்பத்தால் நாம் பிறக்கவில்லையென்றால், இந்த உலகத்தில் நம்மை பிறக்கச் செய்தது யார்? எதற்காக நாம் படைக்கப்பட்டோம்? நம் வாழ்வும் மரணமும் எதற்காக? இவற்றையெல்லாம் நாம் சிந்திக்க வேண்டாமா?
நோக்கம் இல்லாத பொருள் உண்டா?
நம்மை சுற்றி பரவிக்கிடக்கும் எண்ணற்ற பொருட்களை சற்று பாருங்கள்…நாம் காணும் இயற்கைப் பொருட்களிலோ அல்லது நம்மால் தயாரிக்கப்பட்ட பொருட்களிலோ நோக்கம் இல்லாத ஒரு பொருளை நம்மால் காணமுடியுமா? சரி, நம் உடல் உறுப்புகளையே எடுத்துக் கொள்ளுங்களேன்… நோக்கம் இல்லாத ஏதாவது ஒரு உறுப்பை காட்டுங்கள் பார்ப்போம்!
நம் வாழ்வின் நோக்கம் என்ன?
எல்லாவற்றிற்கும் நோக்கம் இருக்கும் போது, முழு மனிதகுலம் மட்டும் எந்த ஒரு நோக்கமும் இல்லாமல் வாழ்கிறது என சொல்வது பகுத்தறிவாகுமா?
நம் வாழ்வின் நோக்கம் தான் என்ன? பெயரும் புகழும் பெறுவதற்கா? ஆடி பாடி மகிழ்வதற்கா? பெரும் செல்வந்தன் ஆவதற்கா? இல்லை. இவற்றையெல்லாம் தாண்டி, நம் வாழ்விற்கு ஒரு உன்னத நோக்கம் இருக்க வேண்டும். அது என்ன? வாருங்கள் பார்ப்போம்!
நம் வாழ்வின் நோக்கத்தை தீர்மானிப்பது யார்?
உதாரணத்திற்கு ஒரு பேனாவை எடுத்துக் கொள்வோம். பேனாவின் நோக்கம் எழுதுவது. எழுதுவது தான் நோக்கம் என்பதை தீர்மானித்தது யார்? அதை பயன்படுத்துபவரா? அல்லது அதனை தயாரித்தவரா? பேனாவை தயாரித்தவர் தான் பேனாவின் நோக்கத்தை தீர்மானித்தவர்.

சில சமயம் நாம் பேனாவை நம் காது குடைவதற்காக பயன்படுத்துவதுண்டு. அதற்காக பேனா காது குடைவதற்காகத்தான் தயாரிக்கப்பட்டது என்று நாம் சொல்ல மாட்டோம். பேனாவை தயாரித்தவர் தீர்மானிப்பதுதான் பேனாவின் உண்மையான நோக்கம்.
பேனாவை காது குடைய பயன்படுத்துவது போன்று, நம் வாழ்வின் நோக்கம் இது தான் என்று நாமாகவே முடிவு செய்திருக்கலாம். ஆனால், அதுவெல்லாம் நம் வாழ்க்கையின் உண்மையான நோக்கமாகாது. யார் நம்மை படைத்தானோ, யார் நமக்கு இந்த வாழ்வை தந்தானோ, அவன் மட்டும் தான் நம் வாழக்கையின் உண்மையான நோக்கத்தை கூற முடியும்.
நம்மை படைத்த கடவுள் உண்டா?
பிரபஞ்சம் சீராக ஒழுங்குடன், ஒரு அழகிய கட்டமைப்புடன் இயங்குவதை நாம் பார்க்கிறோம். இன்றிலிருந்து அடுத்த நூறு ஆண்டுகளுக்கு சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தின் நேரத்தை மிக துல்லியமாக சொல்லிவிடலாம். பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திரங்களும், கோள்களும் ஒரு ஒழுங்கான கட்டமைப்பில் இயங்கினால் மாத்திரமே இது சாத்தியமாகும். இந்த ஒழுங்கு தானாக ஏற்பட வாய்ப்புள்ளதா?

ஒரு சுவரில் நாம் பலவிதமான பெயிண்ட்களை வேகமாக வீசிக்கொண்டிருந்தால், அது ஓர் பறவையை போன்றோ அல்லது ஓர் மலரை போன்றோ தோற்றம் அளிக்க வாய்ப்புண்டு. ஆனால், மிக பிரபலமான மோனாலிசா ஓவியம் அதில் ஒரு போதும் தோன்றாது. ஒரு தலைசிறந்த ஓவியனால் மட்டும் தான் அந்த ஒவியத்தை வரைய முடியும்.

இதை ஒத்துக் கொள்ளும் நாம், மோனாலிசா ஓவியத்தை விட மிக நுட்பமாக இருக்கின்ற இந்த பிரபஞ்சம் மட்டும் தானாக தோன்றியது என்று கூறுவது எவ்வாறு பகுத்தறிவாகும்? நிச்சயமாக இந்த பிரபஞ்சத்தை படைத்த ஒரு கடவுள் இருக்க வேண்டும்! கடவுள் இருக்கிறான் என்பதற்கு கூடுதல் ஆதாரங்களை இதில் பார்க்கலாம்.
கடவுள் நம்மை வீணாக படைக்கவில்லை
கடவுள் நம்மை படைத்து வழிகாட்டுதல் இல்லாமல் விட்டுவிடவில்லை. ஒரு நான்கு சக்கர வாகனத்தை ஓட்ட ஒருவருக்கு கற்று கொடுப்பதாக இருந்தால், அதற்கு நான்கு சக்கர வாகனத்தில் தான் பயிற்சி அளிப்போம். அதேபோல், கடவுள் மனிதர்கள் எவ்வாறு வாழவேண்டும் என்று கற்றுத்தர மனிதர்களில் சிறந்த நல்லொழுக்கமுள்ளவர்களை நமக்கு முன்மாதிரியாக தேர்ந்தெடுத்து நல்வாழ்க்கை வாழ்வது எப்படி என்று கற்றுத் தந்தான். இவர்கள் தான் கடவுளால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள்.
இறைத்தூதர்கள் மனிதகுலத்திற்கு முன்மாதிரிகள்
நமக்கு முன்மாதிரிகளாக வாழ்ந்த நல்லொழுக்கமுள்ள மனிதர்களே இறைத்தூதர்கள். இறைத்தூதர்களுக்கு எவ்வித தெய்வீகத்தன்மையும் கிடையாது. இறைத்தூதர்களை இந்தியா உட்பட உலகில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் வெவ்வேறு காலகட்டங்களில் இறைவன் அனுப்பியுள்ளான். இறைவனால் அனுப்பப்பட்ட இறைதூதர்களில் சிலர் நோவா, ஆபிரகாம், தாவுது, சாலமன், மோசஸ் மற்றும் இயேசு கிறிஸ்து ஆவர். அந்த வரிசையில் இறுதியாக உலகிற்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர் தான் முஹம்மது நபி அவர்கள். உலகம் அழியும் வரை தோன்றவிருக்கும் முழு மனித குலத்திற்கும் இவர் தான் இறைத்தூதர்.
இறைத்தூதர்களின் போதனைகள்
இறைவனால் அனுப்பப்பட்ட அனைத்து இறைதூதர்களும் மூன்று கொள்கைகளை மக்களுக்கு சொன்னார்கள். அவை:
- நம் வாழ்வின் நோக்கம்
- கடவுளின் தன்மை
- மரணத்திற்கு பின்னால் உள்ள வாழ்க்கை
நம் வாழ்வின் நோக்கம்
நம்மை படைத்த கடவுளை மட்டுமே வணங்கி, அவனுக்கு மட்டுமே கீழப்படிந்து வாழ்ந்து, மரணத்திற்கு பின் முடிவில்லா சொர்க்கம் செல்வதே நமது வாழ்க்கையின் நோக்கம்.
படைக்கப்பட்ட பொருட்களான கற்சிலை, வரைபடங்கள், சூரியன், சந்திரன், கிரகங்கள் போன்றவற்றை கடவுளாக வணங்கக் கூடாது. இறைத்தூதர்கள் உட்பட எந்த மனிதரையும், எந்த பொருளையும் இறைவனுக்கு சமமாக உயர்த்தக் கூடாது.
கடவுளின் தன்மை
1) நம் அனைவரையும் படைத்த கடவுள் ஒருவனே.
2) கடவுளுக்கு சமமாக யாரும் கிடையாது. அவனுக்கு பெற்றோர் இல்லை, துணை இல்லை, பிள்ளைகள் இல்லை. அவனுக்கு எந்த தேவையும் இல்லை.
3) கடவுளுக்கு தூக்கம், களைப்பு, மறதி, தவறிழைப்பது போன்ற எந்த பலவீனமும் கிடையாது.
4) கடவுள் முன் அனைத்து மனிதர்களும் சமமே. யார் நல்ல செயல்கள் புரிகிறாரோ, அவரே இறைவனிடத்தில் உயர்ந்தவர்.
மரணத்திற்கு பின் என்ன நடக்கும்?
இந்த உலகம் ஓர் நாள் அழிந்து விடும். உலகம் அழிந்த பின்பு, உலகத்தில் தோன்றிய முதல் மனிதரிலிருந்து இறுதி மனிதர் வரை அனைவரும் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவோம். நாம் இந்த உலகில் செய்த செயல்களை பற்றி விசாரிக்கப்படுவோம். யார் கடவுள் ஒருவனை மட்டும் வணங்கி, நற்செயல்கள் செய்தார்களோ, அவருக்கு பரிசாக சொர்க்கமும், கடவுளுக்கு கீழ்ப்படியாமல் பாவம் செய்தவர்களுக்கு தண்டனையாக நரகமும் கிடைக்கும். சொர்க்க, நரகத்திலுள்ள வாழ்க்கை முடிவில்லாதது. நிரந்தரமானது.
மரணத்திற்கு பின் ஓர் வாழ்க்கை தேவையா?
நல்லது செய்பவர்களுக்கு இறுதியில் நல்ல முடிவும், தீயவர்களுக்கு இறுதியில் தீய முடிவும் ஏற்பட வேண்டும் என்று உங்கள் உள்மனது சொல்கிறதா?
நாம் வாழும் உலகில் நல்லது செய்பவர்களுக்கு நல்லது நடக்கிறதா? தீயவர்களுக்கு தீயது தான் நடக்கிறதா?
பல மனிதர்களை கொலை செய்த ஒரு கொலையாளிக்கு தகுந்த தண்டனையை நம்மால் கொடுக்க முடியாது. அதிகபட்ச தண்டனையான மரணதண்டனையே நாம் கொடுத்தாலும் அவன் செய்த ஒரு கொலைக்கு மட்டுமே அது சமமாகும். அவன் செய்த மீதி கொலைகளுக்கு தண்டனை எங்கே? பல அப்பாவி மனிதர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். அவர்களுக்கு இவ்வுலகில் நீதி கிடைக்கிறதா?
இந்த உலகில் முழு நீதி என்பது சாத்தியமில்லை என்பதை நாம் எல்லோரும் உணர்கிறோம். கடவுள் நீதியாளன். எனவே ஒரு போதும் அநீதத்தை நிலைபெறச் செய்யமாட்டான். மரணத்திற்கு பின் உள்ள முடிவில்லா வாழ்க்கையில், நீதியை நமக்கு கடவுள் வாக்களித்துள்ளான்.
மரணத்திற்குபின் ஓர் வாழ்க்கை சாத்தியமா?
எந்த ஒரு பொருளையும் முதன்முறையாக தயாரிப்பது தான் சிரமம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதே பொருளை மீன்டும் தயாரிப்பது என்பது எளிது. நம்மை முதல் முறை எந்த சிரமம் இல்லாமல் படைத்த கடவுளுக்கு, நமக்கு இரண்டாம் முறை உயிர் கொடுத்து படைப்பது என்பது மிக எளிது. எனவே, மரணத்திக்கு பின் ஒரு வாழ்க்கை சாத்தியமே. கூடுதல் விபரம் அறிய, இங்கே கிளிக் செய்யவும்.
கடவுள் மன்னிக்காத பாவம் எது?
நம்மை படைத்த கடவுளை மட்டும் வணங்காமல், கடவுள் அல்லாத படைக்கப்பட்ட பொருட்களான நீர், நிலம், காற்று, கிரகங்கள், மனித கைகளால் செதுக்கப்பட்ட சிலைகள், ஓவியப் படங்கள், சமாதிகள் போன்றவற்றை வணங்குவது, கடவுள் மன்னிக்காத பெரும் பாவமாகும்.
மனிதர்களை கடவுளாக்கி, அவர்களை கடவுளின் மகன், மனைவி, அவதாரம் என்று அழைத்து அவர்களை கடவுளுக்கு நிகரான தன்மைகளை பெற்றவர்களாக கருதுவது, கடவுள் மன்னிக்காத பெரும் பாவமாகும்.
கடவுள் மனித அவதாரம் எடுத்தானா என்பது பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.
இந்த உண்மையை ஒருவர் நன்றாக புரிந்து கொண்ட பிறகும், படைத்த கடவுளை மட்டும் வணங்காமல் வாழ்ந்து, அதே நிலையில் மரணித்தால், கடவுள் அவரை மன்னிக்கவே மாட்டான்.
இஸ்லாம் என்றால் என்ன?
இஸ்லாம் என்பது இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி அவர்களால் துவங்கப்பட்ட புதிய மதமல்ல. இஸ்லாம் ஓர் அரபுமொழிச் சொல். அதன் பொருள் ‘கடவுளுக்கு கீழப்படிதல், சரணடைதல்’. இறைத்தூதர்கள் அனைவரும் கடவுளுக்கு கீழப்படிந்து வாழும் வாழ்க்கை நெறியையே மக்களுக்கு போதித்தார்கள். இதுவே, அரபு மொழியில் இஸ்லாம் என்று அழைக்கப்படுகிறது.
இஸ்லாம் என்பது அரபு மதமா என்பதை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
முஸ்லிம் என்றால் யார்?
யார் ஓர் கடவுளுக்கு கீழ்ப்படிந்து, அவனை மட்டுமே வணங்கி, நற்செயல்கள் செய்கிறாரோ, அரபு மொழியில் அவரை ‘முஸ்லிம்’ என்று அழைப்பார்கள். இதை படிக்கும் நீங்கள் கூட கடவுளுக்கு கீழ்படிந்து, அவனை மட்டுமே வணங்கி, நற்செயல்கள் செய்தால், நீங்களும் ஒரு முஸ்லிம் தான்.
அல்லாஹ் என்பவன் யார்?
அல்லாஹ் என்பது முஸ்லிம்களின் தனிப்பட்ட கடவுள் அல்ல. அரபு மொழியில் ‘அல்லாஹ்’ என்றால் ‘இறைவன்’ என்று பொருள். உதாரணமாக தண்ணீரை ‘வாட்டர்’ என்று ஆங்கிலத்திலும், ‘நீலு’ என்று தெலுங்கிலும், ‘மோயா’ என்று அரபுமொழியிலும் அழைப்போம். அதே போல் இறைவனை ‘காட்’ என்று ஆங்கிலத்திலும் ‘தேவுடு’ என்று தெலுங்கிலும், ‘அல்லாஹ்’ என்று அரபு மொழியிலும் அழைக்கிறோம்.
கூடுதல் விபரம் அறிய, இங்கே கிளிக் செய்யவும்.
மேலே சொல்லப்பட்டவை உண்மை என்பதற்கு திருக்குர்ஆனே ஆதாரம்
இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி அவர்களுக்கு வழங்கப்பட்ட இறுதி வேதம் தான் திருக்குர்ஆன். திருக்குர்ஆன் முழு மனித குலத்திற்காகவும் நம்மை படைத்த கடவுளால் அருளப்பட்டது. திருக்குர்ஆனை இறைத்தூதர் முஹம்மது அவர்கள் எழுதவில்லை. திருக்குர்ஆன் முழுவதும் கடவுளின் வார்த்தையாகும். கடந்த 14 நூற்றாண்டுகளாக எந்த ஒரு மாற்றமும் இல்லாமல், திருக்குர்ஆன் பாதுகாக்கப்பட்டுள்ளது.
ஒரு குறையாவது கண்டுபிடியுங்கள் என்று நம்மை நோக்கி திருக்குர்ஆன் சவால் விடுக்கிறது. திருகுர்ஆனை அருளிய கடவுள் கூறுகிறான்:
அவர்கள் இந்தக் குர்ஆனை ஆழ்ந்து சிந்திக்க மாட்டார்களா? இது கடவுள் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.
குர்ஆன் அத்தியாயம் 4 வசனம் 82
புவியியல், கருவியல், வானசாஸ்திரம், கடலியல், சட்டம், உளவியல், தாவரவியல், இயற்பியல், உயிரியல் போன்ற பல துறைகளை பற்றி திருக்குர்ஆன் பேசுகிறது. இந்த 21 ஆம் நூற்றாண்டில் புதிதாக கண்டறியப்பட்ட பல அறிவியல் உண்மைகளை திருக்குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்பாகவே சொல்லிவிட்டது. இவற்றை 1400 ஆண்டுகளுக்கு வாழ்ந்த இறைத்தூதர் முஹம்மது அவர்களால் சுயமாக சொல்லியிருக்கவே முடியாது. இது திருக்குர்ஆன் இறைவேதம் தான் என்பதை நிரூபிக்கிறது.
குர்ஆன் இறைவேதம் தான் என்பதை அறிந்த கொள்ள, கீழே உள்ள லிங்ககளை பார்க்கவும்.
குர்ஆன் அற்புதம் – தேனீக்கள் கணித மேதையானது எப்படி?
உங்களை வாயடைக்கச் செய்யும் குர்ஆனில் உள்ள வரலாற்று அற்புதம்
குர்ஆன் மொழிபெயர்ப்பை படிக்க..
தமிழிலும், பிற மொழிகளிலும் குர்ஆனை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
