சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் எகிப்தில், பேரோ என்ற பட்டத்தால் அழைக்கப்பட்ட ஒரு கொடுங்கோல் மன்னன் வாழ்ந்து வந்தான். அவனுடைய அழிவை பற்றி குர்ஆன் இவ்வாறு பேசுகிறது.
பிறகு அவர்களுக்காக வானமும் அழவில்லை, பூமியும் அழவில்லை. இன்னும் சிறிதளவு அவகாசம் கூட அவர்களுக்குத் தரப்படவில்லை.
குர்ஆன் 44:29
குர்ஆன் பல கொடுங்கோல் மன்னர்களை பற்றியும், அக்கிரமக்காரர்களைப் பற்றியும் பேசுகிறது. ஆனால், பேரோவின் அழிவை பற்றி பேசும் போது மட்டும் தான், “வானமும் அழவில்லை, பூமியும் அழவில்லை” என்ற வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்துகிறது. ஏன்? இங்கு தான் நம்மையெல்லாம் வாயடைக்க வைக்கும் ஒரு வரலாற்று அற்புதம் ஒளிந்திருக்கிறது. அது என்ன அற்புதம் என்று நீங்கள் கேட்கலாம். அந்த அற்புதத்தை அறிந்து கொள்வதற்கு முன்பு, ஒரு சுருக்கமான வரலாற்று பின்னணியை தெரிந்து கொள்வோம்.
வரலாற்று பின்னணி
எகிப்தை ஆட்சி செய்த மன்னர்களை பற்றிய நம்பிக்கைகளை, பிரமிடுகளில் எழுதி வைத்துள்ளனர். இதன் பெயர் பிரமிட் டெக்ஸ்ட் (Pyramid Text).

1881 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த பிரமிட் டெக்ஸ்ட்களை, 1908 ஆம் ஆண்டு, ஜெர்மன் நாட்டை சேர்ந்த கர்ட் ஹென்ரிச் என்பவர் ஜெர்மன் மொழிக்கு மொழிபெயர்த்தார். 1952 ஆம் ஆண்டு சாமுவேல் ஏ பி மெர்சர் என்பவர் இந்த பிரமிட் டெக்ஸ்ட்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இந்த ஆங்கில மொழியாக்கத்தை நாம் எளிதாக ஆன்லைனில் காணலாம்.
அந்த அற்புதம் என்ன?
இந்த பிரமிட் டெக்ஸ்ட்களில் அட்டரன்ஸ் 553 (Utterance 553) என்று ஒரு பிரமிட் டெக்ஸ்ட் உள்ளது. அது இறந்து விட்ட மன்னர்களை பற்றிய மக்களின் நம்பிக்கைகளை பற்றி பேசுகிறது.
அதில் 1365C என்ற வசனம் இவ்வாறு சொல்கிறது:
“வானம் உனக்காக அழுகிறது, பூமி உனக்காக குலுங்குகிறது”
பிரமிட் டெக்ஸ்ட் அட்டரன்ஸ் 553
துக்கத்தின் காரணமாக, இறந்து விட்ட மன்னனுக்காக வானமும், பூமியும் வருந்துவதாக இந்த வசனம் சொல்கிறது. இந்த பிரமிட் டெக்ஸ்டின் வசனத்தையும், குர்ஆனுடைய வசனத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

பிரமிட் டெக்ஸ்ட்களில் சொல்லப்பட்டதை மறுக்கும் விதமாக, இறந்த இந்த பேரோவிற்காக வானமும், பூமியும் அழவில்லை, அதாவது அவனுடைய இறப்பிற்காக துக்கப்படவில்லை என்று குர்ஆன் தெளிவுப்படுத்துகிறது.
கவனத்தில் கொள்க
1. பேரோவின் அழிவை பற்றி பேசும் போது மட்டும் தான் இந்த வார்த்தை பிரயோகம் குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளதால், தற்செயலாக இது போல் சொல்லப்பட்டு இருக்கலாம் என்று எண்ண முடியாது.
2. 1400 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த முஹம்மது நபிக்கோ அல்லது அவருடைய காலத்தில் வாழ்ந்த எவருக்குமோ பிரமிட் டெக்ஸ்ட்களை பற்றியும், அதில் என்ன எழுதியிருந்தது என்பது பற்றியும் எந்த ஒரு அறிவும் இருக்கவில்லை.
முஹம்மது நபியால் இதை சொல்லியிருக்க முடியுமா?
1881 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த பிரமிட் டெக்ஸ்ட்களில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பதை, 1400 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த எழுதப் படிக்கக் கூட தெரியாத முஹம்மது நபி எப்படி தெரிந்து கொண்டார்? யார் இதை அவருக்கு கற்றுத் தந்திருக்க முடியும்?
கண்டிப்பாக ஒரு மனிதன் இதை முஹம்மது நபிக்கு கற்றுத் தந்திருக்க முடியாது என்பதை நடுநிலையோடு சிந்திக்கும் அறிவுள்ள எவரும் ஒத்துக் கொள்வர்.
மனிதனால் இதை சொல்ல இயலாது என்றால், நிச்சயமாக முக்காலமும் அறிந்த இறைவன் தான் இதைச் சொல்லியிருக்க வேண்டும் என்பதை நாம் உணரலாம். குர்ஆன் நம்மை படைத்த இறைவனின் வார்த்தை தான் என்பதற்கு இதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?
உங்களை படைத்த இறைவன் உங்களிடம் என்ன சொல்லுகிறான் என்பதை அறிய குர்ஆனை படித்துத் தான் பாருங்களேன்!