குர்ஆன் ஓதும்போது உங்கள் கண்கள் கலங்கியதுண்டா?
குர்ஆன் ஓதும்போது அழுவது என்பது உயிரோட்டமுள்ள ஈமானின் அடையாளமாகும். குர்ஆன் நாவில் மாத்திரம் இல்லாமல், உள்ளத்திற்குள் ஊடுருவிவிட்டதை இது காட்டுகிறது.
குர்ஆன் ஓதும்போது அழுவது பலவீனம் அல்ல. மாறாக, அல்லாஹ்வின் வசனங்கள் நம் உள்ளத்தின் மேல் தாக்கம் செலுத்துகின்றன என்பதை அது காட்டுகிறது.
குர்ஆன் ஓதும்போது அழுதல்
அளவற்ற அருளாளனின் வசனங்கள் அவர்கள் முன் ஓதப்பட்டால், அவர்கள் அழுதவர்களாக ஸஜ்தாவில் விழுவார்கள்.
அல்குர்ஆன் 19:58
அல்லாஹ்வின் வசனங்களை சரியாகப் புரிந்து, உணர்ந்து ஓதும் போது, சஜ்தா செய்வதும், அழுவதும் இயல்பான விஷயமாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அழுதார்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே தொழுகையின் போது அழுபவர்களாக இருந்தார்கள்.
அழுகையின் காரணமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது மார்பில் இருந்து கொதிக்கும் தண்ணீர் பாத்திரம் போல் சத்தம் வருவதை நான் பார்த்தேன்.
அபூ தாவூத் # 904
இந்த ஹதீஸ் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை ஆழமாக உள்வாங்கி ஓதியதையும், அவர்களுக்கு அல்லாஹ்வுடனான இருந்த நெருக்கத்தையும் காட்டுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) குர்ஆனை எப்படி ஓதினார்கள்? என்பதை அறிந்து கொள்ள, இங்கே கிளிக் செய்யவும்.
இப்னு மஸ்ஊத் (ரலி) நபிக்கு (ஸல்) குர்ஆன் ஓதிய போது….
நபி (ஸல்) அவர்கள் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடம், “எனக்கு குர்ஆனை ஓதிக்காட்டுங்கள்” என்றார்கள்.
புகாரி # 5050
நான் அந்நிஸா எனும் (4 வது) அத்தியாயத்தை ஓதினேன்..ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (அவர்களின் நபியாகிய) சாட்சியை நாம் (மறுமையில் கொண்டு வரும் போதும், (நபியே!) உங்களை இவர்களுக்கெதிரான சாட்சியாக நாம் கொண்டு வரும்போதும் (இவர்களின் நிலை) எப்படியிருக்கும்? எனும் (திருக்குர்ஆன் 04:41 வது) வசனத்தை நான் அடைந்தபோது நபி(ஸல்) அவர்கள், இத்துடன் போதும்! என்று கூறினார்கள்.
நான் அவர்களைப் பார்த்தபோது, அவர்களின் இரு கண்களிலிருந்தும் கண்ணீர் வழிந்தோடிக்கொண்டிருந்தது.
இந்த ஹதீஸிலிருந்து நாம் பெறும் பாடங்கள்
- நபி (ஸல்) அவர்கள் முழு கவனத்துடன் குர்ஆனைக் கேட்டார்கள்.
- அவர்கள் மறுமை நாளைப் பற்றிச் சிந்தித்தார்கள்.
- குர்ஆன் அவர்களின் உணர்வுகளைத் தூண்டியது.
- குர்ஆன் ஓதுவதை கேட்கும் போது, அல்லாஹ்வின் வார்த்தைகள் நமக்கு ஏற்படுத்தும் தாக்கத்தை இந்த ஹதீஸ் உணர்த்துகிறது.
நீங்கள் குர்ஆன் ஓதும் போதும், கேட்கும் போதும், உங்களுக்கு இந்த தாக்கம் ஏற்படுகிறதா?
நீங்கள் குர்ஆன் ஓதும்போது…
இயல்பாகவே அழுகை வரவில்லை என்றால்:
- நிதானமாக ஓதுங்கள்.
- ஓதும் வசனத்தின் பொருளை புரிந்துகொள்ள முயலுங்கள்.
- அல்லாஹ்வுக்கு முன்னால் நீங்கள் தனியாக நிற்கும் அந்தத் தருணத்தைப் பற்றி சிந்தித்து பாருங்கள்
- அமைதியான இடத்தில் ஓதுங்கள்.
- குர்ஆனை உணரும் உள்ளத்தைத் தரும்படி அல்லாஹ்விடம் துஆ கேளுங்கள்.
முடிவுரை
குர்ஆன் ஓதும்போது அழுவது என்பது அல்லாஹ்வின் வசனங்கள் நம் உள்ளத்தின் மேல் தாக்கம் செலுத்துகின்றன என்பதையும், நம் ஈமான் உயிரோட்டமாக உள்ளது என்பதையும் காட்டுகிறது.
குர்ஆன் ஓதும் போது அழுவது நம் இலக்கல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். குர்ஆன் ஓதும் போது, அல்லாஹ்வின் வசனங்கள் நம் உள்ளத்தின் மேல் தாக்கம் செலுத்த வேண்டும் என்பது தான் இலக்கு. குர்ஆன் நம் உள்ளத்தின் மேல் தாக்கம் செலுத்தும் போது, கண்களிலிருந்து கண்ணீர் தானாகவே வரும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)
குர்ஆன் ஓதும்போது அழுவது அவசியமா?
இல்லை. ஆனால் அழுவது உயிரோட்டமுள்ள ஈமானின் அடையாளமாகும்.
என்னால் அழ முடியாவிட்டால் என்ன செய்வது?
குர்ஆன் ஓதும் போது, பொருளுணர்ந்து ஓதுவதில் கவனம் செலுத்துங்கள். முழு கவனத்தோடும், சிந்தனையோடும் ஓதுங்கள். இன் ஷா அல்லாஹ், காலப்போக்கில் குர்ஆனுடன் ஒரு உணர்வுப்பூர்வமான தொடர்பு ஏற்படும்!
அழுவது குஷூவை அதிகரிக்குமா?
ஆம். அழுவது உள்ளத்தை மென்மையாக்கும். பணிவையும், வணக்க வழிப்பாடுகளில் கவனத்தையும் ஏற்படுத்தும்.
