முன்னுரை
மிஃராஜ் பயணத்திலிருந்து நாம் கற்க வேண்டிய விலைமதிப்பற்ற படிப்பினைகள் பல உள்ளன. மிஃராஜ் என்ற அற்புத பயணம் முஸ்லிம் உம்மத்திற்கு காலத்தால் அழியாத பல வழிகாட்டுதல்களைத் தருகிறது. இந்தக் கட்டுரையில், மிஃராஜ் பயணத்திலிருந்து நாம் கற்க வேண்டிய 10 படிப்பினைகளைப் பார்க்கப் போகிறோம்.
1 – அல்லாஹ்வின் அடியானாக இருப்பதே கண்ணியம்
(மக்காவின்) புனிதமான மஸ்ஜிதிலிருந்து (பைத்துல் முகத்தஸில் உள்ள) அல் மஸ்ஜிதுல் அக்ஸா வரை தன் அடியாரை இரவில் அழைத்துச் சென்ற (இறை)வன் மிகப் பரிசுத்தமானவன்.
குர்ஆன் அத்தியாயம் 17 வசனம் 1
அல்லாஹ் மிஃராஜ் பயணத்தைப் பற்றிப் பேசும்போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நபி அல்லது ரசூல் என்று சொல்லவில்லை. மாறாக, அப்து (அடியான்) என்றே குறிப்பிடுகிறான். ஏன் அப்து என்று சொல்ல வேண்டும்?
இந்த உலகில், டாக்டர், பொறியாளர், பேராசிரியர், தலைவர் இப்படி பல பட்டங்கள் கிடைக்கும் போது கண்ணியம் பெற்று விட்டதாக மக்கள் நினைக்கிறார்கள், பெருமைப்படுகிறார்கள். ஆனால், ஒரு மனிதன் அடையக்கூடிய மிகப்பெரிய கண்ணியம், அல்லாஹுவினுடைய அடியானாக இருப்பதுதான் என்று அல்லாஹ் நமக்கு உணர்த்துகிறான்.
உங்களை தனது அப்து ஆக்கிய அல்லாஹ்விற்கு அதிகமதிகம் நன்றி செலுத்துங்கள்.
2 – கஷ்டங்கள் உங்கள் பதவிகளை உயர்த்தும்
துக்க ஆண்டு என்று அழைக்கப்படும் ஆண்டிற்கு பிறகு மிஃராஜ் பயணம் நடந்தது. அந்த சமயத்தில் நபி (ஸல்) அவர்கள் தனது அன்பு மனைவி கதீஜா (ரலி) அவர்களையும், அவரது சிறிய தந்தை அபு தாலிப் அவர்களையும் இழந்திருந்தார்கள். தாயிஃப் நகரத்தில் கடுமையான அவமானத்தையும், வன்முறையையும் சந்தித்திருந்தார்கள்.
நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் கஷ்டம் மேலோங்கியிருந்த சமயத்தில், நபி (ஸல்) அவர்களுக்கு தன்னைச் சந்திக்க மிஃராஜ் பயணத்தை அளித்து அல்லாஹ் கௌரவித்தான்.
இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு இறைநம்பிக்கையாளர் ஏதேனும் கஷ்டத்தை அனுபவிக்கும் போதெல்லாம், அது ஒரு சிறிய முள் குத்தினாலும் சரியே, அதன் காரணமாக அல்லாஹ் அவர்களின் பதவியை உயர்த்தி, அவர்களின் பாவங்களை மன்னிக்கிறான்.
சஹீஹ் முஸ்லிம் # 2572
நீங்கள் கஷ்டங்களை சந்திக்கும் போது, அல்லாஹ் உங்கள் பதவியை உயர்த்தி, பெரிய பாக்கியம் ஒன்றைத் தரப் போகிறான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
3 – தொழுகை – அல்லாஹ் நமக்கு புரிந்த அருள்
மிஃராஜ் பயணத்தின் போது நேரடியாக வழங்கப்பட்ட ஒரே கடமை தொழுகை மட்டுமே. இது தொழுகையின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. (புகாரி # 349)
தொழுகையின் மூலம் அவனுடன் நேரடியாகப் பேசும் ஒரு பாக்கியத்தை அல்லாஹ் நமக்கு தருகிறான். எனவே, தொழுகை ஒரு பாரம் அல்ல. அது அல்லாஹ் நமக்கு புரிந்த அருள்.
தொழுகையை அல்லாஹ்வின் அருளாக நீங்கள் பார்க்கிறீர்களா?
4 – தொழுகையும் அல்லாஹ்வின் கருணையும்
மிஃராஜ் பயணத்தின் போது, முதலில் ஐம்பது வேளை தொழுகைகளை அல்லாஹ் கட்டளையிட்டான். பின்னர் அது ஐந்தாகக் குறைக்கப்பட்டது. தினமும் ஐந்து வேளை தொழுபவர்களுக்கு, ஐம்பது வேளை தொழுத நன்மையை அல்லாஹ் தருகிறான். இது அல்லாஹ்வுடைய எல்லையற்ற கருணையையும் அன்பையும் காட்டுகிறது. (புகாரி # 349)
நீங்கள் தொழுகையில் நிற்கும்போது, அல்லாஹ்வின் கருணையையும் அன்பையும் நினைத்து பாருங்கள்.
5 – சூரா பகராவின் இறுதி வசனங்கள்
குர்ஆன் வானத்திலிருந்து பூமிக்கு இறக்கப்பட்டது. ஆனால், சூரத்துல் பகராவின் இறுதி வசனங்கள் நபி (ஸல்) அவர்களின் மிஃராஜ் (இரவுப்) பயணத்தின் போது வானத்தில் கொடுக்கப்பட்டன. (சஹீஹ் முஸ்லிம் # 173)
இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரத்துல் பகராவின் இறுதி இரண்டு வசனங்களை இரவில் ஓதுபவருக்கு (நன்மை மற்றும் தீமையிலிருந்து பாதுகாப்பைப் பெற) அது போதுமானதாக இருக்கும்.
புகாரி # 5009
ஒவ்வொரு இரவிலும் சூரா பகராவின் கடைசி இரண்டு வசனங்களை ஓதுங்கள்.
6 – நபிகள் நாயகம் (ஸல்) – எல்லா நபிமார்களுக்கும் தலைவர்
மிஃராஜ் பயணத்தின் போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், எல்லா நபிமார்களுக்கும் இமாமாக நின்று தொழுகை நடத்தினார்கள். (சஹீஹ் முஸ்லிம் # 172)
எல்லா நபிமார்களுக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் தலைவர் என்பதையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் அல்லாஹ்வின் இறுதி நபி என்பதையும் இது உணர்த்துகிறது.
இப்படிப்பட்ட நபியின் உம்மத்தாக இருப்பது எவ்வளவு பெரிய கௌரவம்! சிந்தித்து பாருங்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உம்மத்தில் உங்களை பிறக்கச் செய்த அல்லாஹ்விற்கு அதிகமதிகம் நன்றி செலுத்துங்கள்.
7 – மஸ்ஜிதுல் அக்ஸாவின் புனிதம்
(மக்காவின்) புனிதமான மஸ்ஜிதிலிருந்து (பைத்துல் முகத்தஸில் உள்ள) அல் மஸ்ஜிதுல் அக்ஸா வரை தன் அடியாரை இரவில் அழைத்துச் சென்ற (இறை)வன் மிகப் பரிசுத்தமானவன். அதை (மஸ்ஜிதுல் அக்ஸாவைச்) சுற்றி நாம் அருள் புரிந்திருக்கிறோம்.
குர்ஆன் அத்தியாயம் 17 வசனம் 1
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுல் அக்ஸாவிலிருந்து தான் வானுலகிற்கு சென்றார்கள். மஸ்ஜிதுல் அக்ஸாவின் புனிதத்தை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.
மஸ்ஜிதுல் அக்ஸாவின் விடுதலைக்காக அல்லாஹ்விடம் தொடர்ந்து துஆ செய்யுங்கள்.
8 – சொர்க்கமும் நரகமும் உண்மையே
மிஃராஜ் பயணத்தில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு சொர்க்கமும், நரகமும் காட்டப்பட்டன. (புகாரி # 3207)
நாம் இவ்வுலகில் செய்யும் செயல்களுக்கு அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்.
அல்லாஹ்விடம் சொர்க்கத்திற்காகவும், நரக விடுதலைக்காகவும் தொடர்ந்து துஆ செய்யுங்கள்.
9 – ஈமானின் அடையாளம்
மிஃராஜ் பயணத்தை குரைஷிகள் கேலி செய்தபோது, அபூபக்கர் (ரலி) அவர்கள் மிஃராஜ் பயணத்தை நம்பினார்கள். அதை உண்மைப்படுத்தினார்கள். அவர்கள் சொன்னார்கள்:
நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்றால், அது உண்மைதான். நான் நம்புகிறேன்.
இப்னு ஹிஷாம்
நபி (ஸல்) அவர்களின் பொன்னான ஹதீஸ்களை உளத்தூய்மையோடும், பணிவோடும் ஏற்றுக்கொள்வது தான் ஈமானின் அடையாளம்.
உங்கள் சிற்றறிவை புகுத்தி, வீண் தர்க்கம் செய்து, நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களை நிராகரிப்பதை விட்டும் ஜாக்கிரதையாக இருங்கள்.
10 – அல்லாஹ் படைப்புகளுக்கு அப்பாற்பட்டவன்
மிஃராஜ் பயணம், அல்லாஹ் அனைத்து படைப்புகளுக்கும் அப்பாற்பட்டவன் என்பதைக் காட்டுகிறது.
வானத்தின் மேல் உள்ளவன் உங்களை பூமியில் புதையச் செய்வதை நீங்கள் பயமற்று இருக்கிறீர்களா?
குர்ஆன் அத்தியாயம் 67 வசனம் 16
அல்லாஹ் இடத்திற்கும், காலத்திற்கும் அப்பாற்பட்டவன். அவனைப் போன்று எதுவும் கிடையாது.
அல்லாஹ்வின் திருநாமங்களை கற்றுக்கொள்ளவும் புரிந்துகொள்ளவும் நேரம் செலவிடுங்கள்.
முடிவுரை
மிஃராஜ் பயணத்தில் நமக்கு எண்ணற்ற படிப்பினைகள் உள்ளன. மிஃராஜ் பயணத்தை ஆழமாக புரிந்துக் கொண்டால், நமது ஈமான் அதிகரிக்கும். அல்லாஹ்வின் மீதும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதும் உள்ள அன்பும் அதிகரிக்கும்.
