குர்ஆனுக்கு முஸ்லிம் செய்ய வேண்டிய கடமைகள்

ஒரு முஸ்லிம் குர்ஆனை சரியாக ஓதி, இயன்ற வரை மனனம் செய்து, அதை நன்றாக புரிந்துக் கொண்டு, தன் வாழ்க்கையில் செயல்படுத்தி, பிறருக்கும் குர்ஆனின் செய்திகளை எத்தி வைத்தால், குர்ஆனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை முழுமையாக நிறைவேற்றி விடுவார்.

முன்னுரை

குர்ஆன் என்பது ஓதுவதற்காக மட்டும் அருளப்பட்டதல்ல. குர்ஆனோடு உள்ளத்தால் நெருங்கிய தொடர்பை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ் எதிர்ப்பார்க்கிறான். ஒவ்வொரு முஸ்லிமும் குர்ஆனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை குர்ஆனும், ஹதீஸ்களும் தெளிவாக விளக்குகின்றன.

குர்ஆனுக்கு முஸ்லிம் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து.

1) குர்ஆனை ஓதுதல்

இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் ஓதுவீராக.

குர்ஆன் 29:45

இறுதித் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குர்ஆனை ஓதுங்கள், ஏனெனில் அது மறுமை நாளில் அதை ஓதியவர்களுக்குப் பரிந்துரை செய்ய வரும்.

சஹீஹ் முஸ்லிம் # 804

தொடர்ந்து குர்ஆனை ஓதுவது உள்ளத்தை பண்படுத்தும்.

2) மனனம் செய்தல்

இறுதித் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இந்த குர்ஆனுடனான உங்கள் தொடர்பைப் புதுப்பித்துக் கொண்டே இருங்கள். முஹம்மதின் உயிர் எவன் கையில் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக, கட்டவிழ்த்து விடப்பட்ட ஒட்டகத்தை விட மிக வேகமாக இது (நினைவிலிருந்து) தப்பக்கூடியது.

புகாரி # 5033

இந்த ஹதீஸ் குர்ஆனை மனனம் செய்வதையும், மனனம் செய்ததை தொடர்ந்து ஓதிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது. மனனம் செய்து குர்ஆனை உள்ளத்தில் பாதுகாக்க தொடர்ச்சியான பயிற்சி அவசியம்.

3) கற்றலும் சிந்திப்பதும்

அவர்கள் இதன் வசனங்களை ஆழமாகச் சிந்திப்பதற்காகவே பாக்கியம் நிறைந்த இவ்வேதத்தை உமக்கு அருளினோம்.

குர்ஆன் 38:29

நேர்வழியை உணர்ந்து, அதை பின்பற்றுவதற்கு குர்ஆனை சிந்தித்து, புரிந்து கொள்வது அவசியமாகும்.

4) குர்ஆனைப் பின்பற்றல்

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்.

குர்ஆன் 7:3

அவருடைய (நபிகளாரின்) குணமே குர்ஆனாக இருந்தது.

சஹீஹ் முஸ்லிம் # 746

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர்ஆனைத் தனது செயல்களிலும், குணத்திலும் வாழ்ந்து காட்டினார்கள். ஒரு உண்மையான முஸ்லிம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்மாதிரியை பின்பற்றி, தனது வாழ்வின் எல்லா காரியத்திலும் குர்ஆனின் போதனைகளின்படி வாழ முயற்சி செய்ய வேண்டும்.

5) பிறருக்கு எத்திவைத்தல் (பகிர்தல்)

அல்லாஹ்வின் பக்கம் அழைத்து… நற்செயல்களைச் செய்பவரை விட சொல்லால் மிக அழகானவர் யார்?

குர்ஆன் 41:33

இறுதித் தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என்னிடமிருந்து ஒரு வசனமாக இருந்தாலும் சரி, அதனைப் பிறருக்கு எத்திவையுங்கள்.

புகாரி # 3461

குர்ஆனை தானும் கற்று, பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே உங்களில் (முஸ்லிம்களில்) சிறந்தவர்.

புகாரி # 5027

குர்ஆனைப் பிறருடன் பகிர்ந்துகொள்வது குர்ஆனிற்கு செய்ய வேண்டிய ஒரு முக்கியமான கடமையாகும்; ஆனால் இன்று இந்த கடமை பல முஸ்லிம்களால் அலட்சியம் செய்யப்படுகிறது. குர்ஆனின் செய்தியைப் பகிர்வது, நன்மையை பற்றிய அறிவை பரவலாக்கும். நேர்வழிக்காக ஏங்குபவர்களுக்கு நேர்வழி கிடைக்க உதவும்.

முடிவுரை

ஒரு முஸ்லிம் குர்ஆனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள்:

  • ஓதுதல்
  • மனனம் செய்தல்
  • புரிந்து கொள்ளுதல்
  • அதன்படி வாழ்தல்
  • பிறருக்கு எத்திவைத்தல்

ஒரு முஸ்லிம் குர்ஆனை சரியாக ஓதி, இயன்ற வரை மனனம் செய்து, அதை நன்றாக புரிந்துக் கொண்டு, அதை தன் வாழ்க்கையிலும் செயல்படுத்தி, பிறருக்கும் குர்ஆனின் செய்திகளை எத்தியும் வைத்தால், குர்ஆனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை முழுமையாக நிறைவேற்றியவராக ஆகி விடுவார்.

மேலும் படிக்க

WHAT OTHERS ARE READING

Most Popular