இயற்கையில் உள்ள ஏராளமான அற்புதங்கள் மூலம் நாம் நம்மை படைத்த இறைவனை தெரிந்து கொள்ளலாம். அப்படி ஒரு குர்ஆன் அற்புதத்தைத் தான் இந்த ஆர்டிகிளில் நாம் பார்க்க இருக்கிறோம்.
தேனீ ஒரு கணித மேதை என்பது உங்களுக்குத் தெரியுமா? தேனீக்கள் கணித மேதையானது எப்படி என்று பார்ப்போம்.
தேனீக்கள் தேன்கூடுகளை அறுகோண வடிவத்தில் கட்டுவது ஏன்?
தேன்கூட்டில் உள்ள வடிவங்களைப் பாருங்கள். அவை அனைத்தும் அறுகோணங்கள். ஏன் அறுகோணம்? ஏன் தேன்கூடுகள் வட்ட வடிவில் இல்லை? ஏன் முக்கோணமாக இல்லை? ஏன் சதுரமாக இல்லை?
எந்த வடிவமாக இருந்தால் என்ன என்று நீங்கள் நினைக்கலாம். தேன்கூட்டின் வடிவத்தில் மிகப் பெரிய கணித விந்தை உள்ளது.
தேன்கூடும் மெழுகும்
தேனீக்கள் தேன்கூடு கட்ட மெழுகை பயன்படுத்துகின்றன. தேனீக்களின் வயிற்றில் மெழுகு சுரப்பிகள் உள்ளன. மெழுகு சுரப்பிகள் தேனை மெழுகாக மாற்றுகின்றன.
தேனீக்கள் அரை கிலோகிராம் மெழுகு தயாரிக்க 2.5 கிலோகிராம் முதல் 4 கிலோகிராம் அளவு தேனை பயன்படுத்த வேண்டும். தேன்கூடு கட்ட அதிகமாக மெழுகை பயன்படுத்தினால், இதற்காக மிக அதிகமான தேன் உபயோகிப்பப்படும். எனவே, குறைந்த அளவில் மெழுகை பயன்படுத்தி தேன்கூட்டை தயாரிக்க வேண்டும். அதே நேரத்தில், தேன்கூடு நல்ல பரப்பளவு கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
வடிவம் என்ன?
எந்த வடிவத்தில் தேன்கூடு கட்டினால், குறைந்த அளவு மெழுகை பயன்படுத்தி அதிக பரப்பளவை பெற முடியும் என்பது தான் கேள்வி.
வட்டம்
வட்டத்தை எடுத்துக்கொள்வோம். வட்டங்களுக்கு இடையில் சிறிய இடைவெளிகளை நாம் பார்க்கலாம். இந்த இடைவெளிகள் பயன்படுத்தப்படாமல் போகும் என்பதால், தேன்கூட்டை வட்ட வடிவில் கட்ட முடியாது.

முக்கோணம் அல்லது சதுரம்
சரி, முக்கோணம் அல்லது சதுரம் போன்ற வடிவங்களைப் பயன்படுத்தினால், இடைவெளிகள் இருக்காது. அருமை! ஆனால் இந்த வடிவங்களில் குறைந்த அளவு மெழுகு பயன்படுத்தப்பட்டு அதிகபட்ச பரப்பளவு கிடைக்குமா என்ற கேள்வி எழுகிறது.

இது ஒரு எளிதான கேள்வி போல தோன்றலாம். ஆனால் இந்த கேள்வி, 2000 ஆண்டுகளுக்கும் மேலாக கணிதவியலாளர்களை திணறடித்தது என்பது உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும். இதைப் புரிந்து கொள்ள “ஹனிகோம்ப் கஞ்ஜக்சர்” பற்றி தெரிந்து கொள்வோம்.
“ஹனிகோம்ப் கஞ்ஜக்சர்”
“ஏன் அறுகோணங்கள்” என்ற கேள்வி 36BCக்கு முன்பே விவாதிக்கப்பட்டது. அலெக்ஸாண்டிரியாவின் பாப்பஸ் போன்ற பல கணிதவியலாளர்கள் இந்த கேள்விக்கான பதிலை கண்டுபிடிக்க முயன்றனர். இந்த கேள்விக்கு விடை கண்டுபிடிக்க கணிதவியலாளர்கள் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு செய்தார்கள். இதற்கு “ஹனிகோம்ப் கஞ்ஜக்சர்” என்றும் பெயரிட்டார்கள்.
இறுதியாக, 1999 ஆம் ஆண்டில் தான், தாமஸ் ஹேல்ஸ் என்ற கணிதவியலாளர் தேன்கூடு கட்டுவதற்கு அறுகோணம் தான் சிறந்த வடிவம் என்று நிரூபித்தார். கீழே உள்ள வீடியோவில், தாமஸ் ஹேல்ஸ் அவர்களே எளிதில் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் இதை விளக்குகிறார்.
முக்கோண வடிவத்தையும், சதுர வடிவத்தையும் விட அறுகோணம் எப்படி குறைந்த அளவு மெழுகை பயன்படுத்தி, அதிக பரப்பளவை வழங்குகிறது என்பதை ஹேல்ஸ் விளக்கி காட்டுகிறார்.
ஹேல்ஸ் அவர்களின் ஆய்விலிருந்து சில பக்கங்கள்
தேனீ ஒரு கணித மேதை
தேன்கூடு கட்ட அறுகோணம் தான் சிறந்த வடிவம் என்பதை தேனீக்கள் அறிந்திருப்பது மட்டுமல்லாமல், தேன்கூட்டை மிக நுட்பமான முறையில் கட்டுகின்றன. மெழுகினால் செய்யப்படும் சுவர்களின் அடர்த்தி 0.1 மில்லிமீட்டருக்கும் குறைவாக, எந்த அளவு தேவையோ அந்த அளவு மட்டுமே உள்ளது. அறுகோணத்தில் உள்ள ஆறு சுவர்களும் சரியாக ஒரே அகலத்திலும், எல்லா சுவர்களின் கோணங்களும் 120 டிகிரியில் மிகத் துல்லியமாக அமைந்துள்ளன.
எந்த விதமான ஒத்திகையும் இல்லாமல், ஒரே நேரத்தில், பல தேனீக்கள் சேர்ந்து தான் இந்த தேன்கூட்டை கட்டுகின்றன என்பதை எண்ணிப் பார்க்கும் போது, இது நம்மை பிரமிப்புகுள்ளாக்குகிறது.
தேனீக்கு இதை கற்றுத் தந்தது யார்?
பரிணாம வளர்ச்சி
பரிணாம வளர்ச்சியின் காரணமாகத் தான் தேனீக்கள் இதை அறிந்து கொண்டன என்று சிலர் கூறலாம். லட்சக் கணக்கான ஆண்டுகளாக தேனீக்கள் பல வடிவங்களில் தேன்கூடுகளை கட்டிப்பார்த்து, அறுகோணம் தான் சிறந்த வடிவம் என்பதை அறிந்து கொண்டன என்று சிலர் சொல்லலாம். இப்படி சொல்வதற்கு அவர்களிடத்தில் ஆதாரம் உள்ளதா? தேனீக்கள் பல வடிவங்களில் தேன்கூடுகளை கட்டிப்பார்த்து, தன் சுய முயற்சியால் தான் இதை தெரிந்து கொண்டன என்பதை நிரூபிக்க முடியுமா? தேனீக்கள் தன் சுய முயற்சியால் இதை சாதித்திருக்க முடியுமா என்பதை பகுத்தறிவுடன் சிந்திப்போம்.
தேனீ மூளையின் அளவு
தேனீக்களின் மூளை அளவு 2 கன மில்லி மீட்டருக்கும் குறைவாக உள்ளது. இது மனித மூளையில் வெறும் 0.0002% மட்டுமே. அறிவின் உச்சத்தில் இருக்கும் கணிதவியாளர்களுக்கே அறுகோணம் தான் சிறந்த வடிவம் என்று நிரூபிக்க 2000 ஆண்டுகளுக்கு மேலே ஆனது. மனித அறிவாற்றலை ஒப்பிடும் போது, மிக மிக அற்பமான அறிவாற்றலை கொண்ட தேனீ, தன் சொந்த முயற்சியால் இதை புரிந்து கொண்டது என்று நம்புவது பகுத்தறிவா? நீங்களே நடுநிலையோடு சிந்தித்துப் பாருங்கள்.
இறைவன் தான் தேனீக்கு கற்பித்தான்
கடவுள் மிக உயர்தர கணிதவியலாளர். பிரபஞ்சத்தை படைப்பதில் மேம்பட்ட கணிதத்தைப் பயன்படுத்தியுள்ளார்.
பவுல் டிராக் (1933 ல் இயற்பியல் நோபல் பரிசு பெற்றவர்)
பிரபஞ்சத்தை படைப்பதில் மேம்பட்ட கணிதத்தைப் பயன்படுத்திய இறைவன் தான், தேனீ உட்பட அனைத்து உயிரினங்களுக்கும் அவற்றின் உயிர்வாழ்வதற்குத் தேவையான விஷயங்களைக் கற்றுக் கொடுத்தவர்.
குர்ஆன் அற்புதமும் ஹனிகோம்ப் கஞ்ஜக்சரும்
இறைவன் குர்ஆனில் கூறுகிறான்:
உங்களது இறைவன் தேனீக்கு மலைகளிலும், மரங்களிலும், மக்கள் கட்டும் கட்டிடங்களிலும் கூடுகளை அமைத்துக் கொள்ளும்படி அறிவூட்டினான்.
அத்தியாயம் 16: வசனம் 68
தேனீக்களுக்குத் தங்கள் கூடுகளைக் கட்டுவது பற்றிய அறிவை இறைவன் தான் கற்றுத் தந்தான் என்று இந்த இறைவசனம் தெளிவாகக் குறிப்பிடுகிறது.
குர்ஆனைப் பொறுத்த வரை, எறும்பு, கொசு, ஈ, சிலந்தி இப்படி பல உயிரினங்களைப் பற்றி பேசுகிறது. ஆனால் தேனீயை பற்றி பேசும் போது மட்டும் தான், கூடுகளை கட்ட தேனீக்கு இறைவன் அறிவூட்டினான் என்று குறிப்பிடுகிறது. எனவே இது வெறும் தற்செயலாக சொல்லப்பட்ட ஒன்றாக இருக்க முடியாது.
தேனீக்கள் மலைகளில் கூடு கட்டுமா?
மேலே நாம் பார்த்த குர்ஆன் வசனம், தேனீக்கு மலைகளிலும் கூடுகள் கட்ட கடவுள் அறிவூட்டினார் என்று சொல்கிறது. பூச்சியியல் வல்லுநர்கள் மலைகளில் கூடுகளைக் கட்டும் “அந்தோபோரா பியூப்லோ” என்று அழைக்கப்படும் ஒரு தேனீ இனத்தைக் கண்டறிந்தனர்.
அண்மை காலத்தில் பூச்சியியல் வல்லுநர்களால் கண்டுபிடிக்கப்பட்டதை, குர்ஆன் 1400 ஆண்டுகளுக்கு முன்னால் சொல்லியிருப்பது நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.
குர்ஆன் இறை வேதமாகத் தான் இருக்க முடியும்
அரேபிய பாலைவனத்தில் வாழ்ந்த எழுதப் படிக்க தெரியாத மனிதரான இறைத்தூதர் முஹம்மது அவர்களுக்குத் தான் குர்ஆன் அருளப்பட்டது. 1400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இறைத்தூதர் முஹம்மது அவர்களுக்கு இதை யார் கற்பித்திருக்க முடியும்?
ஒருவர் திறந்த மனதுடன் இதைப் பற்றி சிந்தித்துப் பார்த்தால், சர்வவல்லமையுள்ள கடவுள் தான், இறைத்தூதர் முஹம்மது அவர்களுக்கு இதை கற்றுத் தந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்குத் தான் வருவார்கள்.
நிச்சயமாக ஆழ்ந்து சிந்திக்கக்கூடிய மக்களுக்கு இதில் அத்தாட்சி இருக்கிறது.
குர்ஆன் அத்தியாயம் 16: வசனம் 69
கருத்துச் சுருக்கம்
- தேனீக்கள் அறுகோண வடிவில் தேன்கூடுகளை கட்டுகின்றன.
- 1999 இல், தோமஸ் ஹேல்ஸ் என்ற கணிதவியலாளர் அறுகோணம் தான் தேன்கூடு கட்ட சிறந்த வடிவம் என்பதை நிரூபித்தார்.
- தேனீக்களுக்கு அதன் கூடுகளைக் கட்டுவது பற்றிய அறிவை கடவுள் கற்றுத் தந்ததாக குர்ஆன் தெளிவாகக் குறிப்பிடுகிறது.
- எறும்பு, கொசு, ஈ, சிலந்தி போன்ற உயிரினங்களை பற்றி குர்ஆன் பேசினாலும், தேனீக்களைப் பற்றி பேசும் போது மட்டும் தான் கூடுகளை கட்ட தேனீக்கு இறைவன் அறிவூட்டினான் என்று குறிப்பிடுகிறது. எனவே, இது தற்செயலாக சொல்லப்பட்ட ஒன்று என்று நம்மால் எடுத்துக் கொள்ள முடியாது.
- தேனீக்கு மலைகளிலும் கூடுகள் கட்ட கடவுள் அறிவூட்டினார் என்று குர்ஆன் சொல்கிறது. பூச்சியியல் வல்லுநர்கள் இதை சமீபத்தில் தான் கண்டுபிடித்தனர்.
- 1400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இறைத்தூதர் முஹம்மது அவர்கள் இந்த தகவல்களைத் தானே அறிந்திருக்க முடியாது என்பதால் குர்ஆன் இறைவேதமாகத் தான் இருக்க வேண்டும்.
தேனீக்களை பற்றி வேறு சில சுவாரஸ்யமான தகவல்களையும் குர்ஆன் தருகின்றது. அவற்றை விளக்க வெகு விரைவில் ஒரு தனிக் கட்டுரையை வெளியிடுவோம். நம் இணைய தளத்தை தொடர்ந்து படித்து வாருங்கள்.