More

    Choose Your Language

    முகலாய மன்னர்களின் செயல்கள் – ஒரு பார்வை

    முகலாய மன்னர்கள் கோவில்களை இடித்ததாகவும், இந்துக்களை சித்திரவதை செய்ததாகவும், இந்துக்களை வாள் முனையில் இஸ்லாமியராக மாற்றியதாகவும் பலர் நம்புகின்றனர். உண்மை என்ன என்பதை அறிவோம், வாருங்கள்!

    முகலாய மன்னர்கள் கோவில்களை இடித்ததாகவும், இந்துக்களை
    சித்திரவதை செய்ததாகவும், இந்துக்களை வாள் முனையில் இஸ்லாமியராக மாற்றியதாகவும் பலர் நம்புகின்றனர். முகலாய மன்னர்களின் இந்த நடவடிக்கைகளை சிலர் “இஸ்லாம்” மதத்துடன் இணைத்துப் பார்க்கிறார்கள். இதனால் சிலர் இன்று வாழும் இந்திய முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வை வெளிப்படுத்துகிறார்கள். இன்று வாழும் இந்திய முஸ்லிம்களுக்கும் கடந்த கால முகலாய மன்னர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்ற போதிலும் இந்த நிலை தொடர்கிறது. உண்மை என்ன என்பதை அறிவோம், வாருங்கள்!

    கோவில்கள் மற்றும் பிற வழிபாட்டுத் தலங்களை இடிப்பதை இஸ்லாம் ஆதரிக்கவில்லை

    கடவுள் குர்ஆனில் கூறுகிறான்:

    மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு இறைவன் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் கிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், இறைவனின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; இறைவனுக்கு எவர் உதவி செய்கிறாரோ, அவருக்கு நிச்சயமாக இறைவனும் உதவி செய்வான். நிச்சயமாக இறைவன் வலிமைமிக்கவனும், (யாவரையும்) மிகைத்தவுனுமாக இருக்கின்றான்.

    குர்ஆன் 22:40

    முஸ்லிம் அல்லாதவர்களின் வழிபாட்டுத் தலங்களைத் இடிக்குமாறு இஸ்லாம் முஸ்லிம்களுக்குக் கட்டளையிடவில்லை என்பதையும், இஸ்லாமிய நாடுகளிலும் முஸ்லிமல்லாத மற்ற மதத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் இருப்பது அனுமதிக்கப்படுகிறது என்பதையும் மேலே உள்ள வசனம் தெளிவாகக் காட்டுகிறது. இந்தோனேசியாவும் மலேசியாவும் இதற்கு மிகச்சிறந்த உதாரணம்.

    முஸ்லிம் ஆட்சியாளர்கள் ஏன் இந்து கோவில்களை இடித்தார்கள்? உண்மை நிலையும் & கட்டுக்கதைகளும்

    புகழ்பெற்ற வரலாற்றாசிரியரும் கல்வியாளருமான ரொமிலா தாப்பர் இது பற்றி கூறுகையில்:

    “படையெடுப்பாளர்களின் அதிகாரத்தை வெளிப்படுத்துவதற்காக ஒரு கோவிலை இடிப்பது என்பது அக்காலத்தில் எல்லா மதத்தை சேர்ந்த மன்னர்களாலும் செய்யப்பட்ட காரியம்.
    இந்து அரசர்களின் காலத்திலும் கோயில்கள் இடிக்கப்பட்டன என்ற வரலற்று உண்மையை நாம் வேண்டும் என்றே மறைக்க அல்ல மறக்க நினைக்கிறோம். உதாரணமாக கோயில்களிலிருந்து செல்வத்தைப் எடுப்பதற்காக ஹர்ஷதேவன் என்ற அரசனும், மற்ற காஷ்மீர் அரசர்களும் வேண்டுமென்றே கோயில்களை இடித்தார்கள். சாலுக்கிய மன்னர்களை வெற்றி கொண்டதை கொண்டாடும் விதமாக பரமாரா ராஜா என்ற அரசன் சாலுக்கிய மன்னன் கட்டிய கோயில்களை இடித்தான்.”

    “கடந்த காலம் இப்போது நிகழ்கிறது” என்ற புத்தகத்தில், “வரலாற்றைப் பாதுகாக்க” என்ற அத்தியாயம்.

    முஸ்லிம் ஆட்சியாளர்களின் செயல்களும் இஸ்லாமும்

    முஸ்லிம் ஆட்சியாளர்களின் செயல்களை இஸ்லாமிய மதத்துடன் இணைத்து பார்ப்பது சரியா? இதன் பதில் ஆணித்தரமாக “இல்லை” என்று சொல்லலாம். ஏனெனில்:

     1. இஸ்லாத்தின் 5 கட்டாய தூண்களில் ஒன்றான ஹஜ்ஜை ஒரு முஸ்லிம் ஆட்சியாளர் கூட நிறைவேற்றவில்லை. தங்கள் நம்பிக்கையின் கட்டாயக் கடமையை கூட நிறைவேற்றக் கவலைப்படாத ஆட்சியாளர்களுக்கு இஸ்லாமிய சாயம் பூசுவது நகைச்சுவையானது. எனவே, முஸ்லிம் ஆட்சியாளர்களின் செயல்களை இஸ்லாமிய மதத்துடன் இணைத்து பேசுவது சரியல்ல.

    2. முஸ்லிம் ஆட்சியாளர்களை முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த மன்னர்களாக மட்டுமே நாம் பார்க்க வேண்டும். அவர்களின் மனப்பான்மையும், குணமும் மற்ற மத அரசர்களைப் போலவே இருந்தது என்பது வரலாற்று உண்மை.  அதாவது அவர்களின் குறிக்கோள் ஆட்சி எல்லைகளை விரிவுபடுத்துவதும் மற்றும் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதும் மட்டுமே.

    முஸ்லிம் அல்லாத மற்ற அரசர்கள் என்ன செய்தார்கள்?

    பல முஸ்லிமல்லாத மாற்று மத மன்னர்கள், கொடூரமான ஆட்சியாளர்களாகவும், அப்பாவி மக்களுக்கு எதிராக அட்டூழியங்களைச் செய்தவர்களாகவும் வரலாறு சுட்டி காட்டுகிறது. அஜாதசத்ரு மன்னன் அரியணையை கைப்பற்றுவதற்காக தனது சொந்த தந்தையை சிறையில் அடைத்தான். பின்னர் அவர் தனது மகன் உதயபத்திரனால் கொல்லப்பட்டான். மஹாபத்ம நந்தன் என்ற அரசன் அரியணையைக் கைப்பற்றுவதற்காக தன் சகோதரர்களைக் கொன்று நந்தா வம்சத்தைத் தொடங்கினான். இந்த அரசர்கள் செய்த நடவடிக்கைகளை நீங்கள் இந்து மதத்துடன் இணைத்து பார்ப்பீர்களா?

    சில சைவ சோழ மன்னர்கள் வைணவர்களை துன்புறுத்தினர் என வரலாற்றில் ஆதாரபூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செயல்களை சைவ தத்துவத்துடன் இணைத்து இன்று வாழும் சைவர்கள் அனைவரையும் கூறினால், அது சரியா?

    இந்து அரசர்களின் செயல்கள் இந்து மதத்தோடு தொடர்புபடுத்தபடுவதில்லை என்றால், ஏன் முகலாய மன்னர்களின் செயல்கள் மாத்திரம், இஸ்லாத்தோடு தொடர்புபடுத்தப்பட வேண்டும்?

    இந்து அரசர்களே கோவில்களில் புகுந்து சிலைகளை கடத்தி சென்றதை அறிந்தால் நீங்கள் கட்டாயம் ஆச்சரியத்திற்குள்ளாவீர்கள்.

    மன்னர்களும் போர்களும்

    முஸ்லிம் மன்னர்களுக்கும் இந்து மன்னர்களுக்கும் இடையே நடந்த போர்களுக்கு சிலர் “மதச் சாயம்” பூச நினைக்கிறார்கள். உண்மை என்னவெனில், அரசர்கள் தங்கள் எல்லையை விரிவுபடுத்தவும், அதை கட்டிக்காக்கவும் தங்களுக்குள் போர் புரிந்தனர். இதற்கு எந்த மதத்தை சேர்ந்த மன்னர்களும் விதிவிலக்கல்ல. இன்னும் சொல்லப்போனால் இந்து மன்னர்களே மற்ற இந்து மன்னர்களுடன் போரிட்டனர். உதாரணமாக: சோழர்கள், பாண்டியர்கள் மற்றும் சேரர்களுக்கு இடையிலான போர்களை பற்றி வரலாற்று புத்தகங்களில் காணலாம். மராத்தியர்கள் குஜராத்தைக் கைப்பற்றினர், அதில் வெற்றி பெற்று இது வரை பரோடாவைத் தங்கள் வசம் தக்க வைத்துக் கொண்டுள்ளனர். அசோகர் கலிங்கத்தின் மன்னனைக் கொன்று ஆயிரக்கணக்கான ஒரியர்களைக் கொன்றார். தோண்ட தோண்ட இந்த பட்டியலானது நீண்டு கொண்டே செல்லும். இந்து மன்னர்கள் இந்தப் போர்களில் ஈடுபட்டது இந்து மதத்திற்காகவா அல்லது தங்கள் ராஜ்ஜியத்தை விரிவுபடுத்துவதற்காகவா? இந்து அரசர்களுக்கிடையே நடந்த சண்டைகளுக்கு நாம் “இந்து மதச் சாயம்” பூசுவோமா?

    இந்து மன்னர்களைப் போலவே, முஸ்லிம் மன்னர்களும் தங்கள் ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தவும் அதனை பாதுகாக்கவும் போர்களில் தங்களை ஈடுபடுத்தி கொண்டனர். இது இஸ்லாம் மதத்திற்காக நடத்தப்பட்ட போர்கள் அல்ல. மாறாக அவர்களின் சொந்த ராஜ்யத்தை விரிவுபடுத்துவதற்காக மட்டுமே நடத்தப்பட்ட போர்கள். இந்து அரசர்களாக இருந்தாலும் சரி, முஸ்லிம் அரசர்களாக இருந்தாலும் சரி தங்கள் ராஜ்ஜியத்தை விரிவுபடுத்துவதும், அதனை பாதுகாப்பதும் மட்டுமே அவர்கள் குறிக்கோளாக இருந்தது. எனவே அவர்களின் செயல்களை மதத்துடன் இணைப்பது தவறானது.

    முஸ்லிம் மன்னர்கள் “இந்தியா” மீது தாக்குதல் தொடுத்தார்களா?

    முஸ்லிம் மன்னர்கள் “இந்தியா”மீது படையெடுத்து, தாக்குதல் தொடுத்தார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இந்த குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது, ஏனெனில் “இந்தியா” என்ற ஒரு நாடே அப்போது இல்லை. இன்று நாம் இந்தியா என்று அழைக்கும் இந்த பகுதியானது வெவ்வேறு சிறு ராஜ்ஜியங்களாக பிரிக்கப்பட்டு, பல்வேறு மன்னர்களால் ஆளப்பட்டு வந்தது. இந்த மன்னர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டனர். முஸ்லிம் மன்னர்கள் படையெடுத்தது அந்த ராஜ்ஜியங்கள் மீது தானே தவிர, இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவின் மீது அல்ல. எனவே, முஸ்லிம் மன்னர்கள் “இந்தியா” மீது படையெடுத்தார்கள் என்று சொல்வது சரியல்ல.

    இந்து அரசர்கள் அன்னிய நாடுகளை ஆக்கிரமித்தார்களா?

    பல இந்து மன்னர்கள் இன்று இந்தியா என்று அழைக்கப்படும் எல்லைகளை தாண்டி வெளிநாடுகளை ஆக்கிரமித்துள்ளனர். சோழ வம்சத்தைச் சேர்ந்த ராஜேந்திர சோழன் என்ற அரசர் இதில் குறிப்பிடத்தக்கவர். அவர் இன்றுள்ள இலங்கையைக் கைப்பற்றினார், மேலும் மலேசியா மற்றும் இந்தோனேசியா நாடுகளையும் போரின் மூலம் வெற்றி கொண்டார். மலேசியாவிலும் இந்தோனேசியாவிலும் எவ்வாறு இந்து கோவில்கள் வந்தன என்பதை நீங்கள் இப்போது புரிந்திருப்பீர்கள்.

    ராஜேந்திர சோழனின் ராஜ்ஜியம்

    ராஜேந்திர சோழனின் அயல்நாட்டுப் படையெடுப்பை இந்து மதத்துடன் இணைத்து பார்த்தால் அது சரியா? முஸ்லிம் ஆட்சியாளர்களின் படையெடுப்பை மட்டும் இஸ்லாம் மதத்துடன் இணைத்து பேசுவது எப்படி சரியாகும்?

    முஸ்லிம் மன்னர்கள் இந்துக்களை கட்டாய மத மாற்றம் செய்தார்களா?

    இந்துக்கள் அனைவரையும் முஸ்லிம்களாக மாற்ற வேண்டும் என்று முஸ்லிம் மன்னர்கள் நினைக்கும் அளவுக்கு அவர்கள் இஸ்லாத்தை நேசித்தார்களா என்பதை நாம் சிந்திக்க வேண்டும். அவர்கள் இஸ்லாத்தை அந்த அளவுக்கு எல்லாம் நேசிக்கவே இல்லை. இஸ்லாத்தின் கட்டாயக் கடமையான ஹஜ்ஜை கூட எந்த ஒரு முஸ்லிம் மன்னரும் நிறைவேற்றவில்லை. இதிலிருந்து, அவர்கள் மதத்தைப் பற்றி சிறிதும் கவலைப்படவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். எல்லா மன்னர்களையும் போல, அவர்கள் மன்னர்களின் “வாழ்வை” வாழ்வதில் மூழ்கியிருந்தார்கள். இஸ்லாத்தின் கட்டாயக் கடமையினை நிறைவேற்றுவதில் அக்கறை காட்டாத முஸ்லிம் மன்னர்கள் இஸ்லாத்தின் மீதுள்ள பற்று காரணமாக இஸ்லாத்தைப் பரப்புவதில் ஆர்வம் காட்டினார்கள் என்று சொல்வது சரியாக தோன்றுகிறதா? நீங்களே சிந்தித்து பாருங்கள்.

    முஸ்லிம் ஆட்சியாளர்கள் சுமார் 800 ஆண்டுகள் (8 நூற்றாண்டுகள்) இந்தியாவை ஆண்டனர். 800 ஆண்டுகள் என்பது மிக நீண்ட காலம் என்பதை நாம் எல்லோரும் ஒப்புக்கொள்வோம். 800 ஆண்டுகால ஆட்சியில் ஒவ்வொரு முஸ்லிம் மன்னரும் வாள்முனையில் இந்துக்களை முஸ்லிமாக மாற்ற முயன்றிறுந்தால், இந்திய நாட்டில் இப்போது 80% இந்துக்கள் எஞ்சியிருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா? இன்று இந்தியாவில் 80% இந்துக்கள் இருப்பதே, எந்த முஸ்லிம் மன்னரும் வாள்முனையில் இந்துக்களை முஸ்லிமாக மாற்றவில்லை என்பதற்கு சான்றாக உள்ளது.

    முஸ்லிம் மன்னர்களின் ஆட்சியில், இந்துக்கள் பெரும்பான்மை சமூகமாகதான் இருந்தனர். ஒரு நாட்டை 800 ஆண்டுகள் ஆட்சி செய்ய வேண்டுமென்றால், ஒரு மன்னன் பெரும்பான்மை சமூகத்தின் நன்மதிப்பையும், நம்பிக்கையையும், ஒத்துழைப்பையும் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். போர் தொழில்நுட்பம் பெரிதாக இல்லாத அந்த காலத்தில், இராணுவத்தின் பலம் என்பது ஆட்களின் எண்ணிக்கையை வைத்தே முடிவு செய்யப்பட்டது. ராணுவத்தில் இருந்த பெரும்பாலான வீரர்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்பதை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். முஸ்லிம் மன்னர்கள் வாள் முனையில் இந்துக்களை இஸ்லாம் மதத்திற்கு கட்டாய மத மாற்றம் செய்திருந்தால், ராணுவத்தில் பெரும்பான்மையாக இருந்த இந்து வீரர்கள் அமைதி காத்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்களா? சொந்த ராணுவத்திலேயே எதிரிகளை உருவாக்கி வைத்துக் கொண்டு எப்படி இவ்வளவு பெரிய ராஜ்யத்தை ஆள முடியும்? முஸ்லிம் மன்னர்கள் இந்துக்களை வாள் முனையில் இஸ்லாம் மதத்திற்கு கட்டாய மத மாற்றம் செய்தார்கள் என்று சொல்வதில் எந்த விதமான உண்மையும் இல்லை என்பதை நடுநிலையாக சிந்திக்கும் எவரும் புரிந்து கொள்ளலாம்.

    முடிவுரை

    இந்து மன்னர்களானாலும் சரி, முஸ்லீம் மன்னர்களானாலும் சரி, மதத்திற்கு அப்பாற்பட்டு, தங்கள் ஆட்சியைப் பாதுகாத்து கொள்ளவும், தங்கள் ராஜ்யத்தை விரிவுபடுத்துவதையும் மட்டுமே அவர்கள் குறிக்கோளாக கொண்டிருந்தனர். இந்த குறிக்கோள்களை அடைய அவர்களுக்கு எந்த விஷயங்கள் உதவியதோ, அந்த விஷயங்களை அவர்கள் முன்னெடுத்து செய்தார்கள். இதனால் மன்னர்களின் செயல்பாடுகளை எந்த மதத்தோடும் இணைத்து பார்க்கக்கூடாது.

    இன்று நாம் 21 ஆம் நூற்றாண்டில் வாழ்கிறோம். சாதிவெறி, வறுமை, வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே அதிகரித்துவரும் இடைவெளி போன்ற பல சவால்களை நாம் எதிர்கொண்டு வருகிறோம். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததைப் பற்றி பேசுவதை விட, இன்றைய தலையாய பிரச்சினைகளைப் பற்றி பேசி அதற்கு தீர்வு காண்பது தான் நமக்கும் நம் நாட்டுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.


    மேலும் படிக்க

    WHAT OTHERS ARE READING

    Most Popular