முன்னுரை
இஸ்லாத்தின் பொற்காலத்தின் தாக்கம் நவீன அறிவியலில் இன்றும் காணப்படுகிறது. நீங்கள் இரவில் பார்த்து ரசிக்கும் பல பிரகாசமான நட்சத்திரங்களின் பெயர்கள், அரபு பெயர்கள். எதனால் அரபு பெயர்கள்? இஸ்லாமிய நாகரிகம் அறிவியல் கண்டுபிடிப்பில் உலகை வழிநடத்திய காலத்தில், முஸ்லிம் வானியல் வல்லுநர்கள் பல நட்சத்திரங்களைக் கண்டுபிடித்த காரணத்தால், அரபு பெயர்களை பெற்றன.
இஸ்லாமிய பொற்காலத்தில் (8-14 ஆம் நூற்றாண்டுகள்), அதாவது ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, முஸ்லிம் அறிஞர்கள் வானியல், கணிதம், மருத்துவம், ஒளியியல் இப்படி பலத் துறைகளில் பல புரட்சிகரமான கண்டுபிடிப்புகளையும், சாதனைகளையும் செய்தனர்.
இந்தக் கட்டுரையில் இஸ்லாமிய பொற்காலத்தின் சாதனைகள், அதன் வீழ்ச்சிக்குப் பின்னால் உள்ள காரணங்களை நாம் பார்ப்போம்.
நட்சத்திரங்களின் அரபுப் பெயர்கள்
நீல் டிகராஸ்ஸே டைசன் என்ற புகழ் பெற்ற வானியல் வல்லுநர், 2/3 நட்சத்திரங்களுக்கு அரபு பெயர்கள் உள்ளன என்று கூறுகிறார்.

| நட்சத்திரத்தின் பெயர் | அரபு பெயர் |
| அல்டெபரான் | அல்-தபரான் |
| ரிஜ்ல் | ரிஜ்ல் அல்-ஜப்பார் |
| பெட்டலகுயிஸ் | இஃப்த் அல் ஜவ்சா |
| வேகா | அல்-வாகி |
| அல்தைர் | அல்-தைர் |
| டெனெப் | தனப் |
| அல்கோல் | அல்-குல் |
| அல்நிதக் | அன்-நிதக் |
| அல்நிஜாம் | அல்-நிஜாம் |
| ஃபோமல்ஹூத் | ஃபம் அல்-ஹூத் |
அரபு பெயர்களைக் கொண்ட நட்சத்திரங்களின் முழு பட்டியலையும் இங்கே பார்க்கலாம்.
இன்று நாம் இந்த நட்சத்திரங்களைப் பற்றி பேசும் போது, நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு நட்சத்திரங்களுக்கு பெயரிட்ட முஸ்லிம் வானியல் வல்லுநர்களின் பங்களிப்பை நம்மை அறியாமலேயே மீண்டும் மீண்டும் நினைவு கூர்கிறோம்.
இஸ்லாமிய பொற்காலத்தின் சாதனைகள்
கணிதம்

- அல்-கவாரிஸ்மி (9 ஆம் நூற்றாண்டு) அல்ஜீப்ராவிற்கு (அல்-ஜப்ர்) அடித்தளம் அமைத்து அரபு எண்களை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.
- முறையான சமன்பாடு தீர்வை (systematic equation solving) அறிமுகப்படுத்தினார்.
- இன்று கம்ப்யூட்டர் ப்ரோக்ராமிங்கில் அடித்தளமாக இருக்கும் அல்கோரிதமிற்கு (algorithm) அவர் தான் முன்னோடி.
வானியல்

உலகின் ஆரம்பகால, ஆனால் மிகவும் அதிநவீன வானியல் ஆய்வகங்களை முஸ்லிம் பல நகரங்களில் முஸ்லிம்கள் நிறுவினார்கள்.
- கலீபா மாமுன் தலைமையில் பாக்தாத் ஆய்வகம் (9 ஆம் நூற்றாண்டு)
- நாசிர் அல்-தின் அல்-துசி தலைமையில் மரகா ஆய்வகம் (13 ஆம் நூற்றாண்டு)
- உலுக் பெக்கால் கட்டப்பட்ட சமர்கண்ட் ஆய்வகம் (15 ஆம் நூற்றாண்டு)
இந்த ஆய்வகங்கள்:
- கோள்களின் இயக்கத்தை முறையாகப் பதிவு செய்தன
- டோலமியால் செய்யப்பட வானியல் சாஸ்திர தவறுகளை சரி செய்தன
- மிகவும் துல்லியமான வானியல் அட்டவணைகளை உருவாக்கின
கலீபா மாமுன் தலைமையில், முஸ்லிம் விஞ்ஞானிகள் பூமியின் சுற்றளவை குறிப்பிடத்தக்க துல்லியத்துடன் அளவிட்டனர். அவர்கள்:
- சின்ஜார் சமவெளி (ஈராக்) மற்றும் பால்மைரா (சிரியா) அருகே சோதனைகளை நடத்தினர்
- ஜாமெட்ரி அளவீடுகளை வானியல் சாஸ்திரத்திற்கு பயன்படுத்தினர்
அவர்கள் கணக்கு செய்த அளவுகள், இன்று நவீன உலகத்தில் கண்டுபிடிக்கப்பட்டதோடு ஒப்பிடும் போது, 1% க்கும் குறைவாகவே வேறுபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் வானியல் வல்லுநர்கள் தங்கள் காலத்தில் மிகவும் துல்லியமான நட்சத்திர வரைபடங்களை உருவாக்கினர்.
அப்துல்-ரஹ்மான் அல்-சூஃபி (10 ஆம் நூற்றாண்டு) நட்சத்திரங்களைப் பற்றி ‘கிதாப் சுவர் அல்-கவாகிப்’ என்ற புத்தகத்தை எழுதினார். அந்த புத்தகத்தில்:
- சரிசெய்யப்பட்ட நட்சத்திர அளவுகள்
- விவரிக்கப்பட்ட நெபுலாக்கள் (ஆண்ட்ரோமெடா கேலக்ஸி உட்பட)
- நட்சத்திரப் பெயர்கள்
இப்படி இன்று வானியல் ஆராய்ச்சிக்கு தேவையான எல்லா விஷயங்களையும் எழுதி இருக்கிறார்.
மருத்துவம்
இப்னு சினா (அவிசென்னா) எழுதிய ‘தி கேனன் ஆஃப் மெடிசின்’ ஐரோப்பாவில் பல நூற்றாண்டுகளாக பாடப்புத்தகமாக இருந்தது. முஸ்லிம் மருத்துவர்கள் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில் புரட்சியை ஏற்படுத்தினர்.

- அல்-சஹ்ராவி (அபுல்காசிஸ்) 30 தொகுதி கொண்ட மருத்துவ கலைக்களஞ்சியமான அல்-தஸ்ரிப்பை எழுதியுள்ளார்.
- இஸ்லாமிய உலகில் உள்ள மருத்துவமனைகள், நவீன சிகிச்சை அளிக்கும் மேம்பட்ட மையங்களாக இருந்தன.
- 200 க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை கருவிகளை முஸ்லிம் மருத்துவர்கள் வடிவமைத்தனர். இன்றும் இந்த கருவிகளை சற்று மாற்றம் செய்து மருத்துவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். அவற்றில் சில: அறுவை சிகிச்சை ஸ்கால்பெல்கள், பிரித்தெடுக்கும் கத்திகள், ஃபோர்செப்ஸ், அறுவை சிகிச்சை ப்ரொபுகள், கதிடர் போன்ற ப்ரொபுகள், எலும்பு ரம்பம், எலும்பு லிஃப்ட், வஜய்னல் ஸ்பெகுலம் போன்றவற்றை கூறலாம்.
- அறுவை சிகிச்சையில் கேட்கட் தையல்கள், கண்புரை அறுவை சிகிச்சை (cataract அறுவை சிகிச்சை) சிசேரியன் அறுவை சிகிச்சை போன்றவற்றில் பல புதிய யுக்திகளை அறிமுகப்படுத்தினர்.

ஒளியியல்
இப்னுல்-ஹைதம் நவீன அறிவியல் முறையின் முன்னோடியாக பரவலாகக் கருதப்படுகிறார். நவீன அறிவியலில் பயன்படுத்தப்படும் அறிவியல் முறைகள் வரையறுத்தவர் இப்னுல்-ஹைதம் அவர்கள் தான்.
ஒளியின் தன்மை விளக்கும் ஒளியியல் கோட்பாட்டை இவர் தான் உருவாக்கினார்.

ஐரோப்பாவின் பெரும்பகுதி அறிவியலில் பின்தங்கி இருந்தபோது, பாக்தாத், கெய்ரோ மற்றும் கோர்டோபா போன்ற நகரங்கள் அறிவியல் செழித்து வளர்ந்த அறிவுசார் தலைநகரங்களாக விளங்கின.
இஸ்லாமிய அறிவுப் புரட்சியைத் தூண்டிய குர்ஆன்
இஸ்லாத்தை தங்கள் வாழ்க்கை முறையாக ஏற்பதற்கு முன்னால், எல்லாத் துறைகளிலும் பின்தங்கியிருந்த முஸ்லிம்கள், அறிவியல், வானியல், மருத்துவம் இப்படி பலத் துறைகளில் ஆராய்ச்சி செய்து சாதனைகள் படைக்க தூண்டியது குர்ஆன் தான்.
நம் பகுத்தறிவை பயன்படுத்தி இறைவனின் படைப்புகளை சிந்திக்கவும், ஆராயவும் வேண்டும் என்று பல முறை குர்ஆனில் கடவுள் கூறுகிறார்.
அவர்கள் தங்களுக்கு மேல் உள்ள வானத்தை, “நாம் அதை எப்படி படைத்தோம்? இன்னும், அதை எப்படி அலங்கரித்தோம்? அதில் பிளவுகள் (குறைகள்) இல்லை என்பதை (அவர்கள்) சிந்தித்துப் பார்க்கவில்லையா?”
குர்ஆன் அத்தியாயம் 50 வசனம் 6
நிச்சயமாக, வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறிமாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல அத்தாட்சிகள் உள்ளன.
குர்ஆன் அத்தியாயம் 3 வசனம் 190
உறுதியாக நம்புவோருக்கு பூமியிலும், உங்களுக்குள்ளும் பல சான்றுகள் உள்ளன. சிந்திக்க மாட்டீர்களா?
குர்ஆன் அத்தியாயம் 51 வசனம் 21
பூமியில் பயணம் செய்யுங்கள்! “அல்லாஹ் எவ்வாறு முதலில் படைத்தான் என்பதை சிந்தியுங்கள்!” என்று கூறுவீராக!
குர்ஆன் அத்தியாயம் 29 வசனம் 20
சிந்திப்பதை ஒரு மதக் கடமையாக குர்ஆன் அறிமுகப்படுத்துகிறது.
“நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?” என்று பல முறை குர்ஆன் கேட்கிறது. சொல்வதை எல்லாம் கண்ணை மூடிக்கொண்டுக் கேள் என்று குர்ஆன் சொல்லவில்லை. மாறாக, குர்ஆன் சொல்வதை நன்றாக ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று கட்டளையிடுகிறது.
இறைவனின் படைப்பினங்களையும், அவனது அத்தாட்சிகளையும் (ஆயத்துகளையும்) ஆராய்ந்து படிப்பினை பெறுவது, நன்மைகளை பெற்றுத் தரும் ஒரு நற்காரியம் என்று குர்ஆன் சொல்கிறது.
இஸ்லாமிய பொற்காலம் வீழ்ந்தது எதனால்?
குர்ஆனிய சிந்தனையை கைவிட்ட முஸ்லிம்கள்
காலப்போக்கில், பல முஸ்லிம்கள் நன்மை பெறுவதற்காக ஓதுவதோடு தங்களுடைய குர்ஆனின் தொடர்பை நிறுத்திக் கொண்டனர். குர்ஆன் கட்டளையிடும் ததப்புரை, அதாவது ஆழ்ந்து சிந்திப்பதை புறக்கணித்தனர்.
வாழ்க்கையின் அனைத்து அம்சங்களுக்கும் முழுமையான வழிகாட்டுதலை வழங்கும் வேதமாக குர்ஆனை பார்க்காமல், மதச் சடங்குகளுக்கு மாத்திரம் பயன்படுத்தும் ஒரு வேதமாக மாற்றிக் கொண்டார்கள்.
ஆழ்ந்த சிந்தனை, ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் குர்ஆனிய பார்வையிலிருந்து முஸ்லிம்கள் விலகியதால், இஸ்லாமிய பொற்காலம் வீழ்ச்சி அடையத் தொடங்கியது.
தவறான புரிதல்கள்
வழிபாட்டு முறைகள் தொடர்பான மார்க்க சட்டங்களில் மட்டும் கவனம் செலுத்தி, அறிவியல் மற்றும் அறிவுசார் ஆய்வுகளை மார்க்க கல்வியில்லை என்று சொல்லி சில அறிஞர்கள் ஊக்குவிக்க மறுத்தனர்.
அரசியல் காரணங்கள்
இஸ்லாமிய பேரரசின் மீது நடந்த படையெடுப்புகள், போர்கள், அதிகாரப் போராட்டங்கள் பல நூலகங்களையும், கல்வி சாலைகளையும் அழித்தன. ஆட்சி பலவீனமடைந்ததால், ஆட்சியாளர்கள் ஆராய்ச்சியில் மிகக் குறைவாகவே கவனம் செலுத்தினர்.
காலனித்துவம்
ஐரோப்பியர்கள் முஸ்லிம் நாடுகளைக் காலனித்துவப்படுத்தியபோது, அவர்கள் முஸ்லிம் கல்வி நிறுவனங்களை ஓரங்கட்டினர். கல்வி முறைகளை காலனித்துவ நலன்களுக்கு சேவை செய்யும் விதத்தில் மாற்றினர். இது இஸ்லாமிய பாரம்பரிய கல்வி முறையில் மேலும் சரிவை ஏற்படுத்தியது.
இஸ்லாமிய பொற்காலம் மீண்டும் வருமா?
“நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?” என்று குர்ஆனில் கடவுள் பல முறை கேட்கிறார்.
இது கடவுளின் படைப்பைக் கற்றுக்கொள்ளவும், ஆராயவும் கடவுள் நமக்கு விடுக்கும் ஒரு அழைப்பாகும். முஸ்லிம்கள் குர்ஆனிய சிந்தனையை உள்வாங்கி, கடவுளின் படைப்பை ஆராய்வதை, குர்ஆனால் ஊக்குவிக்கப்பட்ட ஒரு வழிபாட்டுச் செயல் என்பதை உணர்ந்தால், முஸ்லிம் சமூகம் இஸ்லாமிய பொற்காலத்தை மீட்டெடுப்பது எளிதே!
முடிவுரை
நட்சத்திரங்களின் பெயர்கள் முதல் அறிவியல் முறைக்கு அடித்தளமிட்டது வரை, நவீன அறிவியலுக்கு இஸ்லாமிய நாகரிகத்தின் பங்களிப்புகள் மறுக்க முடியாதவை. சிந்திப்பதையும், ஆராய்வதையும் ஒரு நன்மை தரும் வணக்க வழிபாடாகவே குர்ஆன் அறிமுகப்படுத்துகிறது. முஸ்லிம்கள் குர்ஆனிய சிந்தனையை உள்வாங்கி, தங்களது அறிவு, ஆராய்ச்சி போன்றவற்றால் உலகை ஒளிரச் செய்வதற்கு சிறந்த தருணம் இது தான்!
