தக்வா உடையவர்களுக்கு சொர்க்கம் (ஜன்னத்) கிடைக்கும். ஜன்னத்தில் பசுமையான தோட்டங்கள், ஆறுகள், ஈடுயில்லாத இன்பம், மன நிம்மதி, திருப்தி எல்லாம் கிடைக்கும்.
இதை விட மேலான ஒரு இன்பம் ஜன்னத்தில் உள்ளதா?
ஆம்!
அல்லாஹ் கூறுகிறான்:
நிச்சயமாக தக்வா உடையவர்கள், சொர்க்கத்து தோட்டங்களிலும், ஆறுகளிலும் இருப்பார்கள்.
குர்ஆன் 54: 54-55
உண்மையான கண்ணியமுள்ள இருப்பிடத்தில், சர்வ வல்லமையுடைய அரசனின் அருகில் இருப்பார்கள்.
சொர்க்கத்தின் சுகபோகங்கள் நமக்கு இன்பம் தருபவை தான். ஆனால், அதை விட பெரிய இன்பம் அல்லாஹ்வின் அருகில் இருப்பது. இந்த பெரும் பாக்கியத்தைத் தான் அல்லாஹ் தக்வா உள்ளவர்களுக்கு தருகிறான்.
இந்த வசனத்தின் ஆழத்தை புரிந்து கொள்வோம்
இந்த வசனத்தை கவனமாக வாசித்து பாருங்கள். அல்லாஹ் முதலில் சொர்க்கத்தின் உடல்ரீதியான இன்பங்களான தோட்டங்களையும் ஆறுகளையும் குறிப்பிடுகிறான். அதன் பிறகு அவன் தரும் மானசீகமான, உயர்ந்த கண்ணியத்தை பற்றி பேசுகிறான்.
“உண்மையான கண்ணியமான இருப்பிடத்தில் (مَقْعَدِ صِدْقٍ – மக்அதி ஸித்க்)…”
இந்த வசனத்தில், ‘மக்அத்’ (maq‘ad) என்ற சொல்லை அல்லாஹ் பயன்படுத்துகிறான். இது ‘க-அ-த’ (qa‘ada) என்ற வேர்ச்சொல்லிலிருந்து வருகிறது. இதன் அர்த்தம் ‘நிலையாக அமர்வது அல்லது தங்குவது’. அதாவது, ஒரு நிலையான, நிரந்தரமான இடத்தில் இருப்பதைக் குறிக்கிறது. ஒருவர் அமர்ந்துவிட்டுப் பிறகு எழுந்து செல்லக்கூடிய தற்காலிகமான அமர்வை இது குறிக்காது. (தற்காலிகமாக அமர்வதை குறிக்க அரபியில் ‘ஜலஸ’ என்று கூறுவர்).
தக்வா உடையவர்களுக்கு அல்லாஹ் நிலையான, கண்ணியமிக்க ஒரு இருப்பிடத்தை வழங்குகிறான். அல்ஹம்துலில்லாஹ்!
அல்லாஹ் அந்த இருப்பிடத்தை ‘ஸித்க்’ (صِدْقٍ) என்று வர்ணிக்கிறான். இதற்கு ‘உண்மையான’ என்று பொருள். அல்லாஹ் வழங்கும் இந்த ‘இருப்பிடம்’ தான் உண்மையான, நிலையான கண்ணியம்.
இந்த உலகில், நாம் பல இருப்பிடங்களை (சீட்களை / Seats) பெற கடுமையாக உழைக்கிறோம், பாடுபடுகிறோம்.
- கல்வி நிறுவனங்களில் சீட்
- பள்ளிவாசல் கமிட்டிகள், வாரியங்கள், அறக்கட்டளைகளில் சீட்
- அரசியல் கட்சிகளில் சீட்
இப்படி இவ்வுலகில் நாம் பாடுபட்டு பெறும் ஒவ்வொரு சீட்டும் தற்காலிகமானது. ஆனால், தக்வா உடையவர்களுக்கு அல்லாஹ் பரிசாக வழங்கும் கண்ணியமான இருப்பிடம் நிரந்தரமானது. தற்காலிகமான உலக சீட்டுகளுக்காக கடுமையாக உழைக்கும் நாம், அல்லாஹ் தரும் நிலையான, நிரந்தரமான, கண்ணியமான இருப்பித்திற்காக எவ்வளவு உழைக்கிறோம் என்பதை சிந்திக்க வேண்டும்.
சர்வ வல்லமையுடைய அரசனின் அருகில்
இந்த வசனத்தில் “சர்வ வல்லமையுடைய அரசனின் அருகில்” என்று சொல்லி அல்லாஹ் முடிக்கிறான்.
ஒருவருக்கு கிடைக்கும் மிகப்பெரிய பாக்கியமும், கண்ணியமும், இன்பமும், அனைத்தையும் படைத்த அரசனான அல்லாஹ்விற்கு அருகில் இருப்பது தான்.
அல்லாஹ் கூறுகிறான்:
இன்னும், அல்லாஹ்வுடைய திருப்தி (அனைத்து இன்பங்களையும் விட) மிகப்பெரியது.
குர்ஆன் 9:72
அல்லாஹ்வின் திருப்தி என்பது சொர்க்கத்தை விடவும் மேலானது என்பதை அல்லாஹுவே நமக்கு கற்றுத் தருகிறான்.
அல்லாஹ்வை காண்பதே பேரின்பம்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்ததும் அல்லாஹ் அவர்களிடம் கேட்பான்: “நான் உங்களுக்கு இன்னும் அதிகமாகத் தர வேண்டும் என்று நீங்கள் எதையாவது விரும்புகிறீர்களா?”
ஸஹீஹ் முஸ்லிம் # 181
அதற்கு அவர்கள் கூறுவார்கள்:
“நீ எங்கள் முகங்களைப் பிரகாசமாக்கினாய். எங்களை சொர்க்கத்தில் நுழையாச் செய்தாய். எங்களை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றினாய்.” (இதற்கு மேல் எங்களுக்கு என்ன வேண்டும்?)
பிறகு அல்லாஹ் தனது திரையை விலக்குவான். அப்போது அவர்கள் தங்கள் இறைவனைப் பார்ப்பதை விட அதிக இன்பத்தை அடைந்திருக்க மாட்டார்கள்.
நீங்கள் முழு நிலவைக் காண்பது போல உங்கள் இறைவனைத் தெளிவாகக் காண்பீர்கள்.
புகாரி: 7434
அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்று, அவன் அருகில் இருப்பதே ஒரு முஸ்லிமின் மிக உயர்ந்த இலட்சியமாக இருக்க வேண்டும்.
இந்த பேரின்பத்தை எப்படி அடைவது?
அல்லாஹ்விற்கு அருகில் இருக்கும் பாக்கியத்தை, தக்வா உடையவர்களுக்கே அல்லாஹ் வழங்குகிறான்.
ரமலானில் நாம் நோன்பு நோற்பதே தக்வா அடையத்தான்.
“…அதன் மூலம் நீங்கள் தக்வா உடையவர்களாகலாம்.” (குர்ஆன் 2:183)
தக்வா என்பது நம் வாழ்வின் அனைத்து செய்லகளிலும் பிரதிபலிக்க வேண்டும்.
- நாவைப் பேணுதல்
- பார்வையைத் தாழ்த்துதல்
- கோபத்தைக் கட்டுப்படுத்துதல்
- மறைவான பாவங்களைத் தவிர்த்தல்
- இக்லாஸுடன் (மனத்தூய்மையுடன்) செயல்படுதல் இப்படி பல நற்செயல்கள் தக்வாவில் அடங்கியுள்ளன.
குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடப்பட்டுள்ள தக்வா உடையவர்களின் பண்புகளைப் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.
அல்லாஹ் எடுத்துக்காட்டும் தக்வா உடையவர்களின் பண்புகளில் எத்தனை உங்களிடம் உள்ளன, எத்தனை இல்லை என்பதை அறிந்துக் கொள்ள இந்த சுயபரிசோதனைப் படிவத்தை பயன்படுத்தவும்.
ஒரு மாதம் மட்டும் தற்காலிகமாக வணக்க வழிப்பாடுகள் செய்து விட்டு மறப்பதற்கல்ல ரமலான் மாதம். இது நிரந்தர மாற்றத்திற்கான பயிற்சி.
நீங்கள் அல்லாஹ்விடம் ஒரு நிரந்தரமான, கண்ணியமிக்க இருப்பிடத்தை பெற விரும்பினால், உங்கள் வணக்க வழிபாடுகளையும், நற்செயல்களையும் நிரந்தரமாக்க முயலுங்கள்.
முடிவுரை: பேரின்பத்திற்காக கடுமையாக உழைப்போம்
இவ்வுலகில் கிடைக்கும் தற்காலிகமான விஷயங்களுக்காக நாம் கடுமையாக உழைக்கிறோம். பேராற்றல் மிக்க அரசனான அல்லாஹ்வின் அருகில் கிடைக்கும் நிலையான, கண்ணியமிக்க இருப்பிடத்திற்காக நாம் எவ்வளவு உழைக்க வேண்டும்.
இந்த ரமலானில்:
அல்லாஹ்வின் நெருக்கத்தை இலக்காகக் கொள்ளுங்கள்.
நிலையான நன்மையை இலக்காகக் கொள்ளுங்கள்.
பேரின்பத்தை அடைய விடா முயற்சி செய்யுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)
தக்வா உள்ளவர்களுக்கு கிடைக்கும் பேரின்பம் எது?
தக்வா உள்ளவர்களுக்கு கிடைக்கும் பேரின்பம் அல்லாஹ்வின் அருகில் இருப்பது தான். (பார்க்க: குர்ஆன் 54:54-55)
‘மக்அதி ஸித்க்’ (مَقْعَدِ صِدْقٍ) என்றால் என்ன?
‘மக்அத்’ என்றால் ஒரு நிலையாக அமரும் இடம் என்று பொருள். ‘ஸித்க்’ என்பது உண்மையையும், கண்ணியத்தையும் குறிக்கிறது. எனவே, மக்அதி ஸித்க் என்பது அல்லாஹ்வின் அருகில் உள்ள நிலையான, உண்மையான கண்ணியமிக்க இருப்பிடத்தைக் குறிக்கின்றன.
அல்லாஹ்வின் அருகாமை பற்றி பேசும் வேறு வசனங்கள் உண்டா?
ஆம். குர்ஆன் 9:72-ல் அல்லாஹ்வின் திருப்தி என்பது சொர்க்கத்தின் உடல்ரீதியான இன்பங்களை விட பெரியது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் 75:22-23-ல் சொர்க்கவாசிகள் மகிழ்ச்சியான முகங்களுடன் தங்கள் இறைவனைப் பார்ப்பார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.
ரமலானில் நான் எவ்வாறு தக்வாவை அதிகரிக்க முடியும்?
அல்லாஹ் என்னை கண்காணிக்கிறான் என்ற விழிப்புணர்வோடு வாழ முயலுதல், பாவங்களைத் (வெளிப்படையான மற்றும் மறைவானவை) தவிர்த்தல், வணக்க வழிபாடுகளை மனத்தூய்மையோடும், மனஈடுபாடோட்டும் செய்தல், தொடர்ச்சியாக சுயபரிசோதனை செய்தல் ஆகியவற்றின் மூலம் தக்வாவை அதிகரிக்க முடியும்.
