சூரா கஹ்ஃப்: வீணான விஷயங்களை தவிருங்கள்

சூரா கஹ்ஃப் பாடம் - தேவையற்ற சர்ச்சைகளைத் தவிர்த்து, தொழுகை, நற்குணம் போன்ற மறுமைக்குப் பயனளிக்கும் செயல்களில் கவனம் செலுத்துங்கள்.

லுக்மான் (அலை) அவர்கள் ஒரு நபியா?
மஹ்தி எப்போது தோன்றுவார்?
யஃஜூஜ், மஃஜூஜ் தற்போது எங்கே இருக்கிறார்கள்?

இந்த கேள்விகள் பெரும்பாலும் நீண்ட விவாதங்களையும் சர்ச்சைகளையும் தூண்டுகின்றன.

இது போன்ற கேள்விகளும், விவாதங்களும் சுவாரஸ்யமாக இருப்பதால், பலர் இதில் மூழ்கி தங்களுடைய பொன்னான நேரத்தை வீணடிக்கிறார்கள். இந்த சர்ச்சைகளின் முடிவில், வாழ்வில் என்ன மாற்றம் ஏற்பட்டது? தொழுகையை குஷூவோடு தொழத் தொடங்கினார்களா? நற்குணங்கள் அதிகரித்ததா? உள்ளம் அல்லாஹ்வின் பக்கம் நெருங்கியதா?

தங்கள் மறுமைக்கு எந்தப் பயனும் தராத சர்ச்சைகளில் மக்கள் ஈடுபடுவதை நாம் எத்தனை முறை கண்டிருக்கிறோம்?

சூரா கஹ்ஃப் இந்த மனநிலையை சரி செய்ய, அற்புதமான வழிகாட்டுதலை தருகிறது!

சூரா கஹ்ஃப் – வசனம் 22

(அவர்கள்) மூவர்; நான்காவது அவர்களின் நாய்” என்று (சிலர்) கூறுவார்கள். “ஐவர்; ஆறாவது அவர்களின் நாய்” என்று மறைவானதைப் பற்றி யூகிக்கிறார்கள்… என் இறைவன் அவர்களின் எண்ணிக்கையை நன்கு அறிந்தவன்…அவர்களைக் குறித்து இவர்களில் ஒருவரிடமும் விளக்கம் கேட்காதீர்!

குர்ஆன் 18:22

அல்லாஹ் அவர்களைப் பற்றிப் பேசும்போது, ‘சிலர் சொன்னார்கள்’ என்று கூறாமல், ‘சிலர் கூறுவார்கள்’ என்று எதிர்காலக் காலத்திலேயே (future tense) குறிப்பிடுவதைக் கவனியுங்கள்.

இந்தச் சொற்றொடர் ஒரு ஆழமான உண்மையை நமக்கு உணர்த்துகிறது. அதாவது, தங்களுக்குப் பயனளிக்காத விஷயங்களைப் பற்றி சர்ச்சை செய்பவர்கள் ஒவ்வொரு காலத்திலும் இருந்து கொண்டே இருப்பார்கள்.

சூரா கஹ்ஃப் பாடம்: தேவையானவற்றில் கவனம் செலுத்துங்கள்

குர்ஆன் சொல்லும் வரலாற்று சம்பவங்கள் வெறும் தகவல்களை தரும் கதைகள் அல்ல. மாறாக, நமக்கு பயிற்சி அளிக்கவும், நேர்வழிக்காட்டவுமே அல்லாஹ் வரலாற்று சம்பவங்களை குர்ஆனில் குறிப்பிடுகிறான்.

இன்று சோசியல் மீடியாவில் எது பற்றி மக்கள் சர்ச்சை செய்கிறார்கள் என்று பாருங்கள்.

  • பரபரப்பை உண்டாகும் தலைப்புகள், சட்டங்கள்
  • சுவாரஸ்யமான ஆனால் மறுமைக்கு பயனளிக்காத தலைப்புகள்
  • சதி கோட்பாடுகள் (Conspiracy theories)

இந்த சர்ச்சைகள், சுவாரஸ்யமாக ஏன் அறிவுப்பூர்வமாகக் கூட தோன்றலாம். ஆனால் அவை நம் ஈமானை அதிகரிப்பதோ, அல்லாஹ்வுடன் இருக்கும் நெருக்கத்தை அதிகப்படுத்துவதோ மிகக் குறைவு.

நம் மறுமையை தீர்மானிக்கும் பல முக்கியமான விஷயங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும். உதாரணமாக:

  • குஷூவோடு தொழுவது
  • நற்குணங்களை அதிகப்படுத்துவது
  • குடும்பத்தினரை அரவணைப்பது
  • ஏழைகளுக்கு உதவுவது

சூரா கஹ்ஃப் பாடம் நம் கவனத்தை நம் மறுமைக்கு எது பயனளிக்குமோ, அதன் பக்கம் திருப்புகிறது.

பயனுள்ள கல்விக்கு இஸ்லாம் தரும் முன்னுரிமை

கல்வியை பயனுள்ள கல்வி, பயனற்ற கல்வி என்று இரண்டாக பிரித்து இஸ்லாம் வேறுபடுத்தி காட்டுகிறது.

உமக்கு எதைப் பற்றி அறிவு இல்லையோ அதை நீர் பின்தொடர வேண்டாம்.

குர்ஆன் 17:36

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தனக்கு அவசியமில்லாத வீணானவற்றை விட்டுவிடுவது அவர் இஸ்லாத்தை அழகாக கடைப்பிடிக்கிறார் என்பதற்கான அடையாளமாகும்.

திர்மிதி #2317

பயனளிக்காத கல்வியிலிருந்து பாதுகாப்புத் தேடிய நபி ﷺ

யா அல்லாஹ், பயனளிக்காத கல்வியிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்..

ஸஹீஹ் முஸ்லிம் # 2722

குர்ஆன் சுன்னாவின் வழிகாட்டுதல் மிகவும் தெளிவாக உள்ளது. உங்கள் மறுமைக்குத் தேவையான பயனுள்ள கல்வியை கற்பதில் கவனம் செலுத்துங்கள். உங்களைத் திசைதிருப்பும், மறுமைக்கு பயனளிக்காத அனைத்திலிருந்தும் விலகி இருங்கள்.

குர்ஆனுக்கு ஒரு முஸ்லிம் செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றி அறிய, இங்கே கிளிக் செய்யவும்.

சூரா கஹ்ஃப் – ஒரு வாராந்திர நினைவூட்டல்

சூரா கஹ்ஃபை வாரந்தோறும் ஓதுவதை ஒரு சடங்காக மாற்றி விடக் கூடாது. சூரா நமக்கு கற்றுத் தரும் படிப்பினைகள் மீது கவனம் செலுத்த வேண்டும். சமூக ஊடக விவாதங்கள், வைரலாகும் சர்ச்சைகள் நிறைந்த இவ்வுலகில், நம் மறுமைக்கு பயன் தரும் விஷயங்களில் தான் கவனம் செலுத்த வேண்டும் என்ற முக்கியமான நினைவூட்டலை சூரா கஹ்ஃப் வழங்குகிறது.

அன்றாட வாழ்வில் சூரா கஹ்ஃப் பாடத்தைச் செயல்படுத்துதல்

எந்தவொரு விவாதத்திலும், சர்ச்சையிலும் ஈடுபடும் முன், உங்களை நீங்களே இந்த கேள்விகளை கேட்டுக்கொள்ளுங்கள்:

இது என் மறுமைக்குப் பயனளிக்குமா?
இது நற்செயல்களைச் செய்யத் தூண்டுமா?
இது என்னை அல்லாஹ்விடம் நெருக்கமாக்குமா?

இந்த கேள்விகளுக்கான பதில் ‘இல்லை’ என்றால், அந்த விஷயங்களிலிருந்து விலகி விடுங்கள்.

உங்கள் நேரத்தை ஆக்கப்பூர்வாமாக செலவழிக்கலாம். உதாரணமாக:

  • துஆ செய்தல் / கற்றல்
  • பயனுள்ள கல்வியைக் கற்றல்
  • தேவையுள்ள ஒருவருக்கு உதவுதல்

காலம் பொன் போன்றது – நேரத்தை வீணாக்காதீர்

நம்மைத் திசைதிருப்பும், நேரத்தை வீணடிக்கும் விஷயங்களின் பக்கம் தான் ஷைத்தான் நம்மை தூண்டுவான். மறுமைக்கு பயன் தராத சர்ச்சைகளில் பல மணிநேரங்களை ஒரு மனிதர் தொலைத்து விடுவார். பயனற்ற விவாதங்களிலும் கேள்விகளிலும் செலவிடப்படும் நேரம், மறுமைக்கு பயனுள்ள பின்வரும் விஷயங்களுக்குப் பயன்படுத்தப்பட்டிருந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும்!

  • குர்ஆன் ஓதுதல்
  • குர்ஆன் மனனம் செய்தல்
  • துஆக்களைக் கற்றல்
  • மக்களுக்கு உதவுதல்

ஒரு மனிதன் தனது வாழ்வையும், தான் கற்ற கல்வியைப் பற்றியும் விசாரிக்கப்படுவான் என்று நபி ﷺ அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

ஒரு அடியான் தனது ஆயுளை எவ்வாறு கழித்தான், தனது கல்வியை எப்படி பயன்படுத்தினான்… என்று விசாரிக்கப்படும் வரை மறுமை நாளில் அவரது கால்கள் நகராது.

திர்மிதி # 2417

முடிவுரை

சூரா கஹ்ஃப் நம் மறுமைக்கு பயன் தரும் கல்வியைத் தேட நம்மை தூண்டுகிறது. நமது ஈமானுக்கும் மறுமைக்கும் எது நன்மையைத் தருமோ அதற்கே நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

கேட்கப்படும் கேள்விகள் எல்லாம் பயனுள்ள கேள்விகள் அல்ல. நடத்தப்படும் சர்ச்சைகள் எல்லாம், முக்கியமானவை அல்ல. ஒரு புத்திசாலியான முஸ்லிம் இதைப் புரிந்து கொண்டு, தனது ஈமானை அதிகரிக்கும், அல்லாஹ்வோடு நெருக்கமாக்கும் விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தி, பயனற்ற விஷயங்களை விட்டு விடுவார்.

அடுத்த முறை ஒரு கேள்வி கேட்கும் முன்பு அல்லது ஒரு சர்ச்சையில் கலந்து கொள்ளும் முன்பு:

இது என்னை அல்லாஹ்விடம் நெருக்கமாக்குமா அல்லது என்னைத் திசைதிருப்புமா? என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

சூரா கஹ்ஃப் வசனம் 22-லிருந்து கிடைக்கும் பாடம் என்ன?

பயனற்ற சர்ச்சைகளையும், கேள்விகளையும் தவிர்த்து விட்டு, மறுமைக்கு பயன் தரும் விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்த வசனம் கற்றுத் தருகிறது.

இஸ்லாம் விவாதங்களையும், சர்ச்சைகளையும் தடை செய்கிறதா?

இல்லை. நற்செயல்களுக்கு இட்டுச் செல்லும் விவாதங்களையும், சர்ச்சைகளையும் இஸ்லாம் ஊக்குவிக்கிறது. அதே சமயம் பயனற்ற நேரத்தை வீணடிக்கும் சர்ச்சைகளை தவிர்க்க இஸ்லாம் தூண்டுகிறது.

இஸ்லாத்தில் பயனுள்ள கல்வி எனக் கருதப்படுவது எது?

ஈமானை வலுப்படுத்தும், நடத்தையை மேம்படுத்தும், ஒரு நபரின் மறுமைக்குத் உதவும் கல்வியே பயனுள்ள கல்வியாகும்.

சூரா கஹ்ஃப் வாரந்தோறும் ஓதுவதால் நாம் என்ன கற்றுக் கொள்ள வேண்டும்?

ஒரு முஸ்லிம் எதற்கு முன்னுரிமை தர வேண்டும், எதில் கவனமாக இருக்க வேண்டும், போன்ற முக்கியமான புரிதல்களை நாம் சூரா கஹ்ஃப் ஓதுவதால் நாம் கற்றுக் கொள்ளலாம்.

மேலும் படிக்க

WHAT OTHERS ARE READING

Most Popular