More

    Choose Your Language

    முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாதவர்களை நண்பர்களாக எடுத்துக் கொள்ளலாமா?

    பெற்றோர்களுக்கு எந்த அளவுக்கு உயர்ந்த தரத்தில் அன்பு செலுத்துவோமோ, அதே போல் முஸ்லிமல்லாதவர்களுக்கும் உயர்ந்த தரத்தில் அன்பு செலுத்த வேண்டும் என்று குர்ஆன் முஸ்லிம்களுக்கு அறிவுறுத்துகிறது.

    முஸ்லிம்கள், மாற்று மதத்தவர்களோடு நட்பு கொள்வதை பற்றி குர்ஆனுடைய பல வசனங்கள் பேசுகின்றன. அவை 3:28, 3:118, 4:144, 5:51, & 58:22.

    இந்த வசனங்களை, இஸ்லாமிய மூலாதாரங்களான குர்ஆன் மற்றும் முஹம்மது நபி அவர்களின் பொன்மொழியின் ஒளியில் ஆராய வேண்டும்.

    குர்ஆன் வசனங்களின் மொழிபெயர்ப்பு

    குர்ஆன் 3:28

    நம்பிக்கையாளர்கள் (தங்களைப் போன்ற) நம்பிக்கை யாளர்களை விடுத்து நிராகரிப்பவர்களைத் தங்களுக்குப் அவ்லியாவாக ஆக்கிக்கொள்ள வேண்டாம். அவர்களிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்வதற்கன்றி எவரேனும் இவ்வாறு செய்தால் அவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் எத்தகைய சம்பந்தமுமில்லை. அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு (அச்சமூட்டி) எச்சரிக்கை செய்கின்றான். (நீங்கள்) அல்லாஹ்விடம் தான் (இறுதியாகச்) செல்ல வேண்டியதிருக்கின்றது.

    குர்ஆன் 3:28

    குர்ஆன் 4:144

    நம்பிக்கையாளர்களே! நீங்கள் நம்பிக்கையாளர்களையன்றி நிராகரிப்பவர்களை (உங்களுக்குப்) அவ்லியாவாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (இதன் மூலம் உங்களைத் தண்டிக்க) அல்லாஹ்வுக்கு ஒரு தெளிவான அத்தாட்சியை ஏற்படுத்திவிட நீங்கள் விரும்புகின்றீர்களா?

    குர்ஆன் 4:144

    குர்ஆன் 5:51

    நம்பிக்கையாளர்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் (உங்களுக்கு) அவ்லியாவாக எடுத்துக்கொள்ளாதீர்கள். (உங்களை பகைப்பதில்) அவர்கள் ஒருவர் மற்றொருவருக்குத் துணையாக இருக்கின்றனர். உங்களில் எவரும் அவர்களில் எவரையும் (தனக்கு) நண்பராக்கிக் கொண்டால், நிச்சயமாக அவனும் அவர்களில் உள்ளவன்தான். நிச்சயமாக அல்லாஹ் (இந்த) அநியாயக்கார மக்களை (அவர்களின் தீய செயல்களின் காரணமாக) நேரான வழியில் செலுத்தமாட்டான்.

    குர்ஆன் 5:51

    இந்த வசனங்களின் விளக்கம்

    இந்த வசனங்களில் பயன்படுத்தப்பட்ட “அவ்லியா” என்ற அரபு வார்த்தையின் அர்த்தத்தை, “நண்பர்கள்” அல்லது “நேசர்கள்” என்று சிலர் புரிந்து கொண்டு, முஸ்லிம்கள் மாற்று மதத்தவர்களோடு நட்பு கொள்வதை குர்ஆன் தடுப்பதாக எண்ணிக் கொள்கின்றனர். இந்த புரிதல் தவறாகும். ஏன் தவறு என்பதை சற்று விரிவாக தெரிந்து கொள்வோம்.

    “அவ்லியா” என்ற வார்த்தையின் அர்த்தம்

    “அவ்லியா” என்ற வார்த்தை, “வலீ” என்ற அரபு வார்த்தையின் பன்மைச் சொல்லாகும். “வலீ” என்ற வார்த்தைக்கு நண்பன், பாதுகாவலர், கூட்டாளி, உதவியாளர் போன்ற பல அர்த்தங்கள் உள்ளன. அவ்லியா என்ற வார்த்தைக்கு “நண்பர்கள், பாதுகாவலர்கள், கூட்டாளிகள், உதவியாளர்கள்” என்று பொருள் கொள்ளலாம்.

    தமிழில் பல அர்த்தங்கள் உள்ள ஒரு வார்த்தையை எடுத்துக் கொள்வோம். உதாரணமாக: மணி. “மணி” என்ற சொல்லிற்கு டைம் (time), பெல் (bell), பீட் (bead) [முத்து மணி], இப்படி பல அர்த்தங்கள் உள்ளன.

    “மணி என்ன?” என்று ஒருவர் கேட்டால், நேரத்தை கேட்கிறார் என்று புரிந்து கொள்வோம். அதே போல், “மணி அடிச்சாச்சா?” என்று ஒருவர் கேட்டால், “பெல்” அடிக்கப்பட்டு விட்டதா என்று கேட்கிறார் என்பதை புரிந்து கொள்வோம். “மணி” என்ற அதே வார்த்தை தான் இந்த இரண்டு வாக்கியத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அந்த வாக்கியங்களுக்கு பொருத்தமான அர்த்தத்தையே நாம் எடுத்துக் கொண்டோம். இந்த விதி எல்லா மொழிகளுக்கும் பொருந்தும்.

    இதை மனதில் வைத்துக் கொண்டு, “அவ்லியா” என்ற அரபு வார்த்தையின் அர்த்தத்தை புரிந்து கொள்வோம். “அவ்லியா” என்ற சொல்லிற்கு “பாதுகாவலர்” என்பதே சரியான பொருள். இந்த வசனங்கள் எல்லாம், முஸ்லிம்களோடு போரிட்டு, முஸ்லிம்களை கொல்ல வேண்டும் என்று துடிக்கின்ற மாற்றுமதத்தவர்களை பற்றி தான் பேசுகின்றன. எனவே, உங்களோடு சண்டையிடுபவர்களை பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று முஸ்லிம்களை பார்த்து இந்த வசனங்கள் கூறுகின்றன. இவ்வாறு சொல்வதில் என்ன தவறு? யாராவது சண்டையிட வருபவர்களை பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வார்களா?

    முஹம்மது நபி அவர்கள் கூட, “பாதுகாவலர்” என்ற அர்த்தத்தில் “வலீ” என்ற அரபு வார்த்தையை பயன்படுத்தியுள்ளார்கள்.

    முஹம்மது நபி அவர்கள் கூறினார்கள்:

    “வலீ” இல்லாமல் திருமணம் இல்லை.

    ஸுனன் அபூ தாவூத்

    இங்கு “வலீ” என்ற வார்த்தையை “பாதுகாவலர்” என்று சரியாக புரிந்து கொள்கிறோம். யாரும் “நண்பன் இல்லாமல் திருமணம் இல்லை” என்று புரிந்து கொள்வதில்லை.

    3:118 வசனத்தின் விளக்கம்

    நம்பிக்கையாளர்களே! உங்(கள் மார்க்கத்தை சேர்ந்தவர்) களையன்றி (மற்றவர்களை) உங்களுக்கு மிக நெருக்கமானவர்களாக நீங்கள் ஆக்கிக் கொள்ளாதீர்கள். (ஏனென்றால்) அவர்கள் உங்களுக்குத் தீங்கிழைப்பதில் ஒரு சிறிதும் குறைவு செய்வதில்லை. உங்களுக்குத் துன்பம் ஏற்படுவதை அவர்கள் விரும்புகின்றார்கள். அவர்களுடைய வாய்(ச் சொற்)களைக் கொண்டே (அவர்களுடைய) பகைமை வெளிப்பட்டுவிட்டது. (உங்களைப் பற்றி) அவர்களுடைய உள்ளங்களில் மறைந்திருப்பவைகளோ மிகக் கொடியவை. நிச்சயமாக நாம் (அவர்களுடைய) அடையாளங்களை உங்களுக்கு விவரித்து விட்டோம். நீங்கள் அறிவுடையவர்களாக இருந்தால் (அறிந்து கொள்ளலாம்.

    குர்ஆன் 3:118

    இந்த வசனத்தின் மொழியாக்கத்தை படித்தாலே முஸ்லிம்களுக்கு தீங்கிழைக்கும் மாற்றுமதத்தவர்களை பற்றித் தான் இந்த வசனம் பேசுகிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

    58:22 வசனத்தின் விளக்கம்

    இறைவனையும் இறுதி நாளையும் நம்பும் சமுதாயத்தினர் இறைவனையும், அவனது தூதரையும் பகைப்பவர்களை நேசிப்பதை நீர் காண மாட்டீர். அவர்கள் தமது பெற்றோராகவோ, பிள்ளைகளாகவோ, சகோதரர்களாகவோ, தமது குடும்பத்தினராகவோ இருந்தாலும் சரியே! அவர்களின் உள்ளங்களில் இறைவன் நம்பிக்கையைப் பதித்து விட்டான். தனது அருள் மூலம் அவர்களைப் பலப்படுத்தியுள்ளான். அவர்களைச் சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை இறைவன் பொருந்திக் கொண்டான். அவர்களும் இறைவனைப் பொருந்திக் கொண்டனர். அவர்களே இறைவனின் கூட்டத்தினர். கவனத்தில் கொள்க! இறைவனின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள்.

    குர்ஆன் : 58:22

    இந்த வசனம் “பத்ரு” என்ற போர் நடந்த சமயத்தில் அருளப்பட்டது. முஸ்லிம்களின் எதிரிகள் முஸ்லிம்களை விட மூன்று மடங்கு அதிகமாக இருந்தனர். முஸ்லிம்களை ஒட்டுமொத்தாக அழிக்க வேண்டும் என்று முழு மூச்சோடு எதிரிகள் போரிட்ட போது, முஸ்லிம்கள், எதிரிகள் தங்கள் உற்றார் உறவினர்களாக இருந்த போதும், சத்தியத்தின் பக்கம் துணை நின்ற காரணத்தால், இறைவன் முஸ்லிம்களை பாராட்டி பேசுகிறான்.

    குர்ஆனின் செய்தி என்ன?

    எந்த புத்தகமாக இருந்தாலும் சரி, ஒரு சில வசனங்களை மட்டும் வைத்துக் கொண்டு, நாம் ஒரு முடிவுக்கு வர கூடாது. புத்தகம் முழுவதும் எந்த கருத்தை தருகிறது என்று நாம் பார்க்க வேண்டும். அந்த வகையில், முஸ்லிம்கள், மாற்று மதத்தினரோடு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து குர்ஆன் என்ன கூறுகிறது என்று பார்க்கலாம்.

    முஸ்லிம் அல்லாதவர்களோடு உறவு பற்றி குர்ஆன்

    நம்பிக்கை கொண்டோரே! இறைவனுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீங்கள் நீதி செலுத்துங்கள்! அதுவே பயபக்திக்கு நெருக்கமானது. இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை இறைவன் நன்கறிந்தவன்.

    குர்ஆன் 5:8

    நீதியையும், நன்மையையும், உறவினருக்குக் கொடுப்பதையும் இறைவன் கட்டளையிடுகிறான். வெட்கக்கேடானவற்றையும், தீமையையும், வரம்பு மீறுவதையும் உங்களுக்குத் தடுக்கிறான். நீங்கள் நல்லுணர்வு பெறுவதற்காக உங்களுக்கு அறிவுரை கூறுகிறான்.

    குர்ஆன் 16:90

    ஒரு சமூகத்தையோ அல்லது மக்களையோ வெறுத்த போதிலும் அந்த மக்களுக்கு எதிராக அநீதமாக நடப்பதற்கு அனுமதி இல்லை என்பதை மேலே உள்ள வசனங்கள் தெளிவாக நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

    மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் இறைவன் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை இறைவன் விரும்புகிறான்.

    குர்ஆன் 60:8

    இந்த வசனத்தில் “நன்மை” என்பதற்கு “தபர்ரு” என்ற அரபு வார்த்தை பயன்படுத்தப்படுள்ளது. மிக உயர்ந்த தரத்தில் காட்டப்படும் அன்பிற்கு தான் “தபர்ரு” என்ற சொல்லை அரபு மொழியில் பயன்படுத்துவார்கள்.

    உதாரணமாக: “பிர்ருல் வாலிதைன்” என்று சொற்றோடர் அரபு மொழியில் பிரபலம். இந்த சொற்றோடர் பெற்றோர்களுக்கு காட்டும் அன்பை குறிக்கிறது.

    பெற்றோர்களுக்கு எந்த அளவுக்கு உயர்ந்த தரத்தில் அன்பு செலுத்துவோமோ, அதே போல் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் உயர்ந்த தரத்தில் அன்பு செலுத்த வேண்டும் என்று இந்த வசனம் முஸ்லிம்களுக்கு அறிவுறுத்துகிறது.

    அண்டை வீட்டார்களுடன் நடந்து கொள்ளும் முறை

    முஹம்மது நபி அவர்கள் கூறினார்கள்:

    அண்டை வீட்டார் குறித்து என்னிடம் வானவர் ஜிப்ரீல் (angel கேப்ரியல்) அறிவுறுத்திக்கொண்டேயிருந்தார். எந்த அளவிற்கென்றால், (எங்கே) அண்டை வீட்டாரை எனக்கு வாரிசாக்கி விடுவாரோ என்று கூட நான் எண்ணினேன்.

    புகாரி

    அவன் இறை நம்பிக்கையாளர் ஆக மாட்டான், அவன் இறை நம்பிக்கையாளர் மாட்டான், அவன் இறை நம்பிக்கையாளர் மாட்டான் என முஹம்மது நபி அவர்கள் கூறியதும், யார் அவன்? என்று மக்கள் கேட்டார்கள். அதற்கு, முஹம்மது நபி அவர்கள்: எவனுடைய தொல்லைகளை விட்டும் அவனுடைய அண்டை வீட்டார் நிம்மதியாக இல்லையோ அவனே!’ என்று பதிலளித்தார்கள்.

    புகாரி

    ஒருவர் அண்டை வீட்டாரோடு எப்படி நடந்து கொள்கிறார் என்பதை இறை நம்பிக்கைக்கு அளவுகோலாக முஹம்மது நபி அவர்கள் ஆக்கியுள்ளார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

    முஹம்மது நபி அவர்கள் பொதுவாக அண்டை வீட்டார்களுடன் நல்ல முறையில் நடக்க வேண்டும் என்று கூறினார்களே தவிர, முஸ்லிம் அண்டை வீட்டார்களுடன் மட்டும் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என்று கூறவில்லை.

    மேலே நாம் எடுத்துக் காட்டிய குர்ஆன் வசனங்களும், முஹம்மது நபி அவர்களின் பொன் மொழிகளும், முஸ்லிம்கள் மாற்று மதத்தினருடன் சிறந்த முறையில் நடந்து கொள்வதை வலியுறுத்துகிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

    கூடுதல் தகவலுக்கு

    குர்ஆன் இந்துக்களை காஃபிர் என்று கூறி இழிவுபடுத்துகிறதா?

    இந்திய முஸ்லீம்களுக்கு தேசப்பற்று உண்டா?

    இந்தியா முஸ்லீம் நாடாகுமா?

    WHAT OTHERS ARE READING

    Most Popular