More

    Choose Your Language

    சமூகத்திற்கு நன்மை செய்!

    சுயநல மிக்க மனிதர்கள் வேகமாக அதிகரித்து வரும் சமூகத்தில் நாம் வாழ்கிறோம். பெரும்பாலான மக்கள் தங்களுடைய நலனை பற்றி மட்டுமே சிந்திப்பவர்களாக மாறி, சமூகத்தில் உள்ள பிரச்சினைகள் பற்றி எந்த விதமான கவலையோ, அக்கறையோ இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இதற்கு என்ன தான் தீர்வு?

    அறிமுகம்

    சுயநல மிக்க மனிதர்கள் வேகமாக அதிகரித்து வரும் சமூகத்தில் நாம் வாழ்கிறோம். பெரும்பாலான மக்கள் தங்களுடைய நலனை பற்றி மட்டுமே சிந்திப்பவர்களாக மாறி, சமூகத்தில் உள்ள பிரச்சினைகள் பற்றி எந்த விதமான கவலையோ, அக்கறையோ இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இதற்கு என்ன தான் தீர்வு?

    சில உன்னத மனிதர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள், பலருடைய மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களை மாற்றி உள்ளது. சமூகத்திற்கு நன்மை செய்ய மக்களை தூண்டும் வகையில் உள்ள ஏதாவது ஒரு சம்பவத்தை, வரலாற்றில் இடம் பெற்ற உன்னத மனிதர்களின் வாழ்க்கையிலிருந்து நாம் பெற முடியுமா? நிச்சயமாக முடியும்.

    இறைத்தூதர் ஜோசப் (யூசுப்) அவர்களின் வாழ்க்கையிலிருந்து நம்மையெல்லாம் சமூகத்திற்கு நன்மை செய்ய ஆர்வமூட்டும் ஒரு உன்னதமான சம்பவத்தை தான், நாம் இந்த கட்டுரையில் பார்க்க இருக்கிறோம்.

    பின்னணி

    மிகச் சிறிய வயதிலேயே, தனது சொந்த சகோதரர்களின் சூழ்ச்சியால், ஜோசப் தனது தந்தையிடமிருந்து பிரிக்கப்படுகிறார். அவர் ஒரு அடிமையாக விற்கப்பட்டு, பின்னர் ஒரு தொலைதூர நாட்டில், அந்த நாட்டின் கவர்னர் மாளிகையில் வேலை செய்கிறார். கவர்னரின் மனைவியுடைய பாலியல் அழைப்பை ஏற்க மறுத்ததற்காக, அவர் அநியாயமாக சிறையில் அடைக்கப்படுகிறார்.

    அவர் சிறையில் இருக்கும் போது, ​​​​அவரோடு சிறையில் இருக்கும் இரண்டு கைதிகள், தாங்கள் கண்ட கனவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். கைதிகளில் ஒருவர் கொல்லப்படுவார் என்றும், மற்றவர் மன்னருக்கு சேவை செய்வார் என்றும் இறைத்தூதர் ஜோசப் அவர்கள் கனவுகளை சரியாக விளக்குகிறார். ஜோசப் அவர்கள் விடுதலையாகி போகும் கைதியிடம், தன்னைப் பற்றி மன்னரிடம் குறிப்பிடும்படி கேட்டுக்கொள்கிறார்கள். ஆனால் அந்த கைதி, ஜோசப் அவர்களைப் பற்றி மன்னரிடம் சொல்ல மறந்துவிடுகிறார். இதனால் ஜோஸப் அவர்கள் தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

    பிறகு, அவ்விருவரில் எவரைக் குறித்து அவர் விடுதலையாகி விடுவார் என்று ஜோசப் கருதினாரோ அவரிடம் “உன்னுடைய எஜமான(னாகிய எகிப்தின் அரச)னிடம் என்னைப் பற்றி எடுத்துக்கூற வேண்டும்” என்றார். ஆனால், தன் எஜமானனிடம் (ஜோசபை) நினைவுபடுத்தவிடாமல் அவரை சாத்தான் மறதியிலாழ்த்தி விட்டான். ஜோசப் மேலும் சில ஆண்டுகள் சிறையிலே இருந்தார்.

    அல்குர்ஆன் : 12:42

    மன்னரின் கனவு

    (ஒருநாள்) அரசன் கூறினான்: “நான் ஒரு கனவு கண்டேன். ஏழு கொழுத்த பசுக்களை ஏழு மெலிந்த பசுக்கள் தின்று கொண்டிருக்கின்றன; மேலும் பசுமையான ஏழு தானியக் கதிர்களையும், ஏழு காய்ந்த கதிர்களையும் நான் கண்டேன். எனவே, அமைச்சர்களே! கனவிற்கான விளக்கத்தை நீங்கள் தெரிந்தவர்களாயிருந்தால் எனது கனவுக்குரிய விளக்கத்தைக் கூறுங்கள்!

    அல்குர்ஆன் : 12:43

    அதற்கு அவர்கள், “இவை குழப்பமான கனவுகளாகும். இவை போன்ற கனவுகளுக்கான விளக்கங்கள் எங்களுக்கு தெரியாது” என்றனர்.

    அல்குர்ஆன் : 12:44

    விடுதலையான கைதி, ஜோசப் பற்றி மன்னரிடம் கூறுகிறார்

    அவ்விரு கைதிகளில் விடுதலையடைந்தவர், வெகு காலத்திற்குப் பிறகு (ஜோசப் பற்றி) நினைவு வந்தபோது கூறினார்: “நான் இக்கனவின் விளக்கத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன். என்னை(ச்சிறையில் உள்ள ஜோசப்பிடம்) அனுப்புங்கள்!

    அல்குர்ஆன் : 12:45

    முன்னாள் கைதி, ஜோசப்பை சந்தித்து, அரசரின் கனவை விவரிக்கிறார். இறைத்தூதர் ஜோசப் அவர்கள் அந்த கனவை அந்த கைதிக்கு விளக்குகிறார். 7 ஆண்டுகள் செழிப்பும், 7 ஆண்டுகள் கடுமையான பஞ்சமும் இருக்கும் என்றும் அதைத் தொடர்ந்து ஒரு வருடம் ஏராளமான மழை பெய்யும் என்றும் கனவிற்கு விளக்கம் கூறுகிறார். கனவின் விளக்கத்தைப் பற்றி மன்னர் கேள்விப்பட்டதும், அவர் ஜோசப்பை சந்திக்க விரும்புகிறார்.

    மன்னர் ஜோசப்பை சந்திக்கிறார்

    ஜோசப் குற்றமற்றவர் என்பதை அறிந்த பிறகு, மன்னர் ஜோசப்பை சந்திக்கிறார்.

    மன்னர் “அவரை என்னிடம் அழைத்து வாருங்கள். அவரை எனக்கே உரியவராய் வைத்துக் கொள்கின்றேன்” என்றார். ஜோசப் மன்னரிடம் உரையாடினார். அப்போது மன்னர் கூறினார்: “இப்போது நீர் நிச்சயமாக நம்மிடம் மதிப்பிற்குரியவராகவும் முழுநம்பிக்கைக்குரியவராகவும் ஆகிவிட்டீர்.

    அல்குர்ஆன் : 12:54

    நீங்கள் என்ன செய்வீர்கள்?

    அடுத்த 14 ஆண்டுகளை திறமையோடு நிர்வகித்து இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஜோசப் அந்த நாட்டிற்கு உதவ வேண்டும் என்று மன்னர் விரும்புகிறார். ஜோசப் அவர்களின் இடத்தில் உங்களை நினைத்துப் பாருங்கள்.

    1. உங்கள் இளம் வயதிலேயே தந்தையைப் பிரிந்து இருக்கிறீர்கள்.
    2. பல ஆண்டுகளாக அடிமையாக வேலை செய்திருக்கிறீர்கள்.
    3. ஒழுக்கமாக நடந்ததற்காக நீங்கள் அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறீர்கள்.
    4. பல வருடங்கள் சிறையில் கழித்துள்ளீர்கள்.
    5. விடுதலையான கைதி உங்களைப் பற்றி மன்னரிடம் சொல்ல மறந்துவிட்டார்.
    6. இதனால் இன்னும் சில ஆண்டுகள் சிறையில் இருந்தீர்கள்.
    7. நீங்கள் குற்றம் செய்யாதவர் என்று மன்னர் முன் நிரூபிக்கப்பட்டுள்ளது.
    8. கனவை விளக்கி, என்ன செய்ய வேண்டும் என்பதை மன்னருக்கு விளக்கி விட்டீர்கள்.

    மேலே கூறப்பட்ட அனைத்து கஷ்டங்களையும் அனுபவித்த உங்களுக்கு, இப்போது சுதந்திர மனிதனாக உங்கள் தந்தையோடு மீண்டும் சேர்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. வாழ்நாள் முழுவதும் இந்த வாய்பிற்காகத் தான் நீங்கள் காத்திருந்தீர்கள். அந்த நாட்டில் தங்கி மன்னருக்கு உதவ முடிவு செய்தால், இன்னும் 14 வருடங்கள் அந்த நாட்டிலேயே நீங்கள் கழிக்க வேண்டும். கனவை விளக்கி, என்ன செய்ய வேண்டும் என்று மன்னருக்கு நீங்கள் ஆலோசனை சொல்லிவிட்டீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    இப்போது சொல்லுங்கள், நீங்கள் என்ன செய்வீர்கள்?

    இறைத்தூதர் ஜோசப் அவர்கள் என்ன செய்தார்கள்?

    அதற்கு ஜோசப் “நாட்டின் கருவூலங்களுக்கு என்னைப் பொறுப்பாளராக்குங்கள்! நான் அதை நன்கு நிர்வகிப்பவனாகவும், அறிந்தவனாகவும் இருக்கின்றேன்” என்று கூறினார்.

    அல்குர்ஆன் : 12:55

    ஜோசப் அவர்களின் பதில் நம் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், நமக்கு ஊக்கமளிப்பதாகவும் உள்ளது.

    சுதந்திர மனிதராக தன் குடும்பத்திற்கு செல்ல வாய்ப்பு கிடைத்த போதிலும், அந்த நாட்டின் விவகாரங்களை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்க ஜோசப் அவர்கள் முன்வருகிறார்கள். இது அவருடைய நாடும் இல்லை. மக்களும் அவர் இனத்தை சேர்ந்த மக்கள் இல்லை. அவருடைய மதத்தையும் அவர்கள் பின்பற்றவில்லை. அப்படி இருந்தும், அந்த நாட்டு மன்னருக்கும் அவரது மக்களுக்கும் உதவ ஜோசப் அவர்கள் ஏன் இந்த தியாகத்தை செய்தார்?

    மக்கள் மீதான அக்கறை

    அந்த நாட்டில் ஏற்படப் போகும் கடுமையான பஞ்சத்தை சரியாக நிர்வகிக்காவிட்டால், ஏராளமான அப்பாவி மக்கள் (ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள்) மற்றும் கால்நடைகள் இறந்து விடுவர் என்பதை ஜோசப் அவர்கள் நன்றாக அறிந்திருந்தார். இந்த பேரழிவைத் தடுக்கும் அறிவும் திறமையும் தன்னிடம் இருப்பதை உணர்ந்த ஜோசப் அவர்கள், எந்த உதவியும் செய்யாமல் அரசரையும் மக்களையும் கைவிட அவரது நல்ல இயல்பு அவரை அனுமதிக்கவில்லை.

    இறைத்தூதர் ஜோசப் அவர்களிடமிருந்து நாம் படிப்பினை பெறுவோம்

    சாலையில் ஒருவர் அடிபட்டு கிடப்பதைப் பார்த்தாலும், கண்டுகொள்ளாமல் செல்லும் இரக்கமற்ற மக்கள் வாழ்கின்ற இக்காலத்தில், ஜோசப் அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு, உங்களிடம் உள்ள திறமைகளை சமூகத்திற்கு நன்மை செய்யும் விதத்தில் பயன்படுத்த முன்வாருங்கள்!

    உங்களால் முடியும்!

    உங்கள் சேவை சமூகத்திற்கு தேவை! உங்கள் சேவை மக்களுக்கு தேவை! சமூகத்திற்கு நன்மை செய்யுங்கள்!

    WHAT OTHERS ARE READING

    Most Popular