முன்னுரை
மது ஒரு சாதாரண விஷயமாகவும், கேளிக்கையின் அடையாளமாகவும் விளம்பரப்படுத்தப்படுகிறது. மது குடித்தால், கவலைகள் பறந்து போய் விடும் என்ற கருத்து மக்கள் மனதில் பதிய வைக்கப்பட்டுள்ளது. மதுவின் தீமைகள் ஏராளம். அதனால் தான், குடி குடியைக் கெடுக்கும் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள்.
இறைவனின் இறுதி இறைத்தூதர் முஹம்மது (அவரின் மீது இறைவனின் சாந்தி உண்டாகட்டும்) அவர்கள் கூறினார்கள்:
மது அருந்தாதீர்கள். ஏனெனில் அது எல்லா விதமான தீமைகளுக்கும் வழிவகுக்கும்.
இப்னு மாஜா # 3371
இந்தக் கட்டுரையில், மதுவின் தீமைகளையும், அது எப்படி தனிநபர்களையும், சமூகத்தையும் பாதிக்கிறது என்பதை மருத்துவ ஆய்வுகளின் துணையோடு விரிவாகப் பார்ப்போம்.
மது மூளையை எவ்வாறு பாதிக்கிறது?
நீங்கள் நடனமாடுவீர்களா?
யாராவது உங்களை சட்டை, பேண்ட்டை கழற்றி விட்டு நடுத்தெருவில் நடனமாடச் சொன்னால், நீங்கள் ஆட மாட்டீர்கள். ஏனென்றால், அது அசிங்கம் என்பது உங்களுக்கு தெரியும்.

ஆனால் குடிபோதையில் இருக்கும் ஒருவர், சற்றும் யோசிக்காமல் நடனமாடிவிடுவார். அந்த அளவிற்கு, மது மூளையின் செயல்பாட்டைக் குறைக்கிறது.
மூளையின் கட்டுப்பாட்டுத் திறன்
நமது மூளையில் ஒரு ‘கட்டுப்பாட்டு மையம்’ (prefrontal cortex) உள்ளது. ஒரு காரில் உள்ள பிரேக்குகளைப் போல் மூளையின் ‘கட்டுப்பாட்டு மையம்’ வேலை செய்கிறது. அது ஆபத்தான, சமூகத்தில் அசிங்கம் என்று கருதப்படும், ஏற்றுக்கொள்ள முடியாத விஷயங்களை நாம் செய்வதிலிருந்து நம்மைத் தடுக்கிறது. மூளையின் இந்த ‘கட்டுப்பாட்டு மையம்’ பலவீனமடையும் போது, ஆபத்தான, சமூகத்தில் அசிங்கம் என்று கருதப்படும் செயல்களை செய்யும் துணிவு ஏற்படுகிறது.
மது மூளையின் கட்டுப்பாட்டுத் திறனை அழிக்கிறது
மது நம் உடலில் உள்ள கொழுப்பில் கரைந்து, மூளை உட்பட உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் நுழைகிறது. மது மூளையினுள் நுழையும் போது, நம் நினைவாற்றல், பேச்சு, முடிவு எடுக்கும் திறன் போன்றவற்றை பாதிக்கிறது என்று அமெரிக்க அரசாங்கத்தின் சுகாதார நிறுவனம் (NIAAA) தெரிவிக்கிறது. அதாவது, பிரேக்குகள் போல் வேலை செய்யும் மூளையின் கட்டுப்பாட்டுத் திறன் செயலிழந்து விடுகிறது.
இதனால்:
- வேகமாக வண்டி ஓட்டுவது, மொட்டை மாடியின் விளிம்பில் நிற்பது போன்ற ஆபத்தான நடத்தைகள்
- வன்முறை
- பாலியல் குற்றங்கள்
போன்ற செயல்களை மூளையால் கட்டுப்படுத்த முடியாமல் போகிறது.
அதனால்தான், குடிபோதையில் இருக்கும்போது, தாங்கள் என்ன செய்கிறோம் என்பது கூட தெரியாமல் பேசுகிறார்கள், நடந்து கொள்கிறார்கள். போதை தெளியும் போது, தாங்கள் என்ன செய்தோம் என்பது கூட அவர்களுக்கு நினைவில் இருப்பதில்லை. மூளையை எந்த அளவிற்கு மது பாதிக்கிறது என்று பாருங்கள்.
மது குறைந்த அளவிலும் தீங்கு விளைவிக்கும்
உலக சுகாதார மையத்தின் டாக்டர் கரினா ஃபெரீரா-போர்ஜஸ் கூறுகிறார்:
இவ்வளவு மது அருந்தினால் பாதிப்பு இருக்காது என்று ஒன்று கிடையாது. குடிப்பவரின் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் பாதிப்பு, அவர் குடிக்கும் முதல் துளியிலேயே தொடங்கி விடுகிறது.
உலக சுகாதார மையத்தின் தலைவர்
இறைவனின் இறுதி இறைத்தூதர் முஹம்மது (அவரின் மீது இறைவனின் சாந்தி உண்டாகட்டும்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வொரு போதைப் பொருளும் (இறைவனால்) தடை செய்யப்பட்டுள்ளது. அதிக அளவில் போதையை ஏற்படுத்தும் எல்லாப் பொருட்களும், சிறிய அளவிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
இப்னு மாஜா # 3392
மற்ற போதைப்பொருட்களை விட, மது தான் மனிதனுக்கு அதிகமாக தீங்கு விளைவிக்கிறது என்று மருத்துவ ஆய்வுகள் சொல்கின்றன.

ரேடியோ கதிர்வீச்சு, ஆஸ்பெஸ்டாஸைப் போலவே மது ஆபத்தான நச்சுத்தன்மை கொண்டது. மது உடலில் நுழையும் போது, அசிடால்டிஹைடு (acetaldehyde) என்ற இரசாயனமாக மாறுகிறது. இது மிகவும் தீங்கு விளைவிக்கும் ஒரு நச்சு இரசாயனமாகும். இந்த இரசாயனம், உடல் முழுவதும் உள்ள செல்கள், டிஎன்ஏ மற்றும் திசுக்களை சேதப்படுத்துகிறது.
நீங்கள் எப்போதாவது, மிகக் குறைவாக குடித்தாலும் கூட, மது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மூளைக்கு மது ஏற்படுத்தும் சேதம்
மது மூளைக்குள் நுழையும் போது, அது:
- மூளையின் செல்களின் (நியூரான்களின்) இணைப்புகளை சேதப்படுத்துகிறது
- முடிவு எடுக்கும் திறனை பாதிக்கிறது
- உணர்ச்சிகளைத் தூண்டுகிறது
- நினைவாற்றலைச் சீர்குலைக்கிறது
இதன் விளைவாக, மது அருந்தும் நபருக்கு, நினைவாற்றல் குறைபாடு, சிந்திக்கும் திறனில் குறைபாடு, dementia என்று அழைக்கப்படும் மறதிநோய் உண்டாக காரணமாகிறது.
மதுவால் ஏற்படும் புற்றுநோய், 200+ நோய்கள்
WHO (உலக சுகாதார அமைப்பு) மது அருந்துவதால் 200க்கும் மேற்பட்ட நோய்கள் ஏற்படுகின்றன என்று கூறுகிறது. இதில் புற்றுநோய்கள், இருதய நோய்கள், கல்லீரல் நோய் மற்றும் மனநல கோளாறுகள் ஆகியவை அடங்கும்.
குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய் போன்ற ஏழு வகையான புற்றுநோய்களை மது ஏற்படுத்துகிறது. உலகளவில், சுமார் 7,40,000 பேருக்கு மதுவினால் புற்றுநோய் ஏற்படுகிறது. இதில் 4,00,000 பேர் இறந்து போகின்றனர்.
மதுவும் விபத்துகளும்
உலகம் முழுவதும், குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏராளமான விபத்துகள் ஏற்படுகின்றன. 7,24,000 பேர் மது அருந்திவிட்டு ஏற்படுத்திய சாலை விபத்தால் மரணித்துள்ளார்கள். சாலை விபத்தில் ஏற்படும் மூன்றில் ஒரு மரணம், மதுவால் ஏற்படுகிறது என்று WHO (உலக சுகாதார அமைப்பு) குறிப்பிடுகிறது.அந்த விபத்துகளில் இறந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மது அருந்தவில்லை. வேறு யாரோ குடிபோதையில் வாகனம் ஓட்டியதால், விபத்துக்குள்ளாகி அவர்கள் கொல்லப்படுகின்றனர்.
அமெரிக்காவில் மட்டும், ஒவ்வொரு 42 நிமிடத்திற்கும், குடிபோதையில் வாகனம் ஓட்டி, சாலை விபத்தில் ஒருவர் இறக்கிறார் என்று அமெரிக்க போக்குவரத்துத் துறை சொல்கிறது.
மதுவும் குற்றங்களும்
அதிகரித்து வரும் குற்றங்களுக்கும் மதுவிற்கும் நேரடி தொடர்பு உள்ளது. குற்றவாளிகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், பெரும்பாலான குற்றங்கள் குடிபோதையில் தான் செய்யப்படுகின்றன என்பது தெரிய வருகிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வெளியிட்ட தகவலின்படி, 85% குற்றங்கள் குடிப்பழக்கத்துடன் தொடர்புடையவை. பாலியல் குற்றங்களில் 50% குடிபோதையில் உள்ளவர்களால் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும், குடிபோதையில் செய்யப்படும் குற்றங்களால் சுமார் 1,00,000 பேர் உயிரிழக்கிறார்கள்.
மதுவால் உங்கள் கவலைகள் பறந்து போகுமா?
“மது என் கவலைகளை மறக்க உதவுகிறது” என்று சிலர் கூறுகிறார்கள். இதைப் பற்றி சிந்தித்துப் பார்ப்போம்.
கவலைகளில் மூழ்கியிருக்கும் ஒருவர், கவலை மறக்க தூக்க மாத்திரையை உட்கொள்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர் தூங்கும் சில மணி நேரங்கள், அவருடைய கவலைகள் மறைந்தது போல தோன்றும். ஆனால் அவர் விழித்தவுடன், பிரச்சினைகள் அப்படியே தான் இருக்கும்; எதுவும் மாறியிருக்காது. இதே போல் தான் மதுவும்.
மதுவால் சிறிது நேரம் நீங்கள் கவலையை மறக்கலாம். ஆனால், போதை தெளியும் போது:
- பிரச்சினைகள் அப்படியே தான் இருக்கும்
- மனம் அதிகம் வலிக்கும்
- வருத்தமும், பதட்டமும் அதிகரிக்கும்
மது பிரச்சினைகளைத் தீர்ப்பதில்லை; மாறாக புதிய பிரச்சினைகளை உருவாக்கி விடும்.
- உடல்நலப் பிரச்சினைகள்
- உறவுகளில் பிரச்சினைகள்
- தவறான முடிவுகள்
இப்படி பல புதிய பிரச்சினைகளை மது உருவாக்கி விடும்.
குடித்து விட்டு போதையில் ஒளிவது பிரச்சினைகளுக்கு தீர்வாகாது. பொறுமையோடும், நம்பிக்கையோடும் உங்கள் குடும்பத்தினர், நண்பர்களின் உதவியோடு உங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ளுங்கள். இது தான் உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு தேடி தரும்.
மது – 166 இலட்சம் கோடி மார்க்கெட்
மிக மோசமான விளைவைக் கொண்ட மதுவை, சினிமா படங்களும், மீடியாவும் மிகச்சாதாரண விஷயமாகக் காட்டி, விளம்பரப்படுத்துவதற்கு காரணம், மதுவால் கிடைக்கும் பணம் தான். மதுவின் மார்க்கெட் 166 இலட்சம் கோடி. இன்னும் ஐந்து ஆண்டுகளில், இது 500 இலட்சம் கோடியாக மாறிவிடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சிலர் நன்றாக பணம் சம்பாதிக்க, குடிப்பதை ஒரு சாதாரணமான, பாதிப்பில்லாத விஷயம் போல் தோன்றச் செய்கிறார்கள். பணத்தாசை பிடித்த இவர்களின் சூழ்ச்சிக்கு இரையாகாதீர்கள்.
முடிவுரை
மதுவின் தீமையின் காரணமாகவே, இறைவேதம் திருக்குர்ஆனில் இறைவன் மதுவை தடை செய்துள்ளான். மதுவின் தீமைகளை, நவீன மருத்துவமும் உறுதிப்படுத்துகிறது. மதுவால் வன்முறைகள் ஏற்படுகின்றன. குடும்பங்கள் நாசமாகின்றன. மதுவால் இலட்சக்கணக்கானவர்கள் உயிரிழக்கின்றனர். மது ஒரு சமூக சீர்கேடு.
பணத்தை மட்டும் குறிக்கோளாக கொள்ளாமல், மக்களின் நல்வாழ்வை முன்னிலைப்படுத்தி, மதுவை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். இதற்காக விழிப்புணர்வு, மறுவாழ்வு மையங்களை அமைப்பதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
மது அளிக்கும் தற்காலிக போதையை விட, அதனால் ஏற்படும் உடல், குடும்பம், சமூக பாதிப்புகள் மிகவும் ஆபத்தானவை என்பதை சமூகம் உணர வேண்டிய நேரம் இது.
மது மற்றும் சூதாட்டம் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். “அவ்விரண்டிலும் பெரும் தீமையும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. ஆனால் அவ்விரண்டிலும் உள்ள தீமை, அவ்விரண்டிலும் உள்ள பலனைவிட மிகப் பெரியது” எனக் கூறுவீராக!
குர்ஆன் அத்தியாயம் 2 வசனம் 219
இந்தக் கட்டுரையை பிறரோடு பகிர்ந்து மது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.
