பனூ இஸ்ரவேலர்களின் வரலாறை நாம் அதிலிருந்து படிப்பினை பெறவேண்டும் என்பதற்காக அல்லாஹ் சூரா அல்-பகராவில் குறிப்பிடுகிறான். இன்று முஸ்லிம் உலகில் நாம் காண்பதை பற்றிய ஒரு முக்கியமான படிப்பினையை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
வாக்குறுதியை மீறிய பனூ இஸ்ரவேலர்கள்
அல்லாஹ் பனூ இஸ்ரவேலர்களிடம் ஒருவரை ஒருவர் கொல்லக் கூடாது, ஒருவரை ஒருவர் வீடுகளிலிருந்து வெளியேற்றக் கூடாது என்று வாக்குறுதி வாங்கியதாக சூரா அல்-பகராவில் கூறுகிறான்.
“உங்கள் இரத்தங்களை ஓட்டிக் கொள்ளாதீர்கள்! உங்கள் வீடுகளிலிருந்து உங்களை (சேர்ந்தோரை) வெளியேற்றாதீர்கள்!” என்று உங்களிடம் உறுதிமொழி எடுத்தபோது, நீங்களே சாட்சிகளாக இருந்து ஏற்றீர்கள்.
குர்ஆன் 2:84
ஆனால், பனூ இஸ்ரவேலர்கள் தாங்கள் அளித்த வாக்குறுதியை மீறினார்கள்.
பின்னர் நீங்கள் உங்களை (சேர்ந்தவர்களை)க் கொலை செய்தீர்கள். உங்களில் ஒரு பகுதியினரை அவர்களது வீடுகளிலிருந்து விரட்டினீர்கள். அவர்களுக்கு எதிராக பாவமான காரியத்திலும், வரம்பு மீறலிலும் உதவிக் கொண்டீர்கள்! உங்களிடம் (யாரேனும்) கைதிகளாக வந்தால் (உங்கள் வேதத்தில் உள்ளபடி) ஈட்டுத் தொகை பெற்றுக் கொள்கிறீர்கள். (அதே வேதத்தில் உரிமையாளர்களை அவர்களின் வீடுகளிலிருந்து) வெளியேற்றுவது தடை செய்யப்பட்டுள்ளது. வேதத்தில் ஒரு பகுதியை ஏற்று, மறு பகுதியை மறுக்கிறீர்களா?
குர்ஆன் 2:85
அவர்கள் வாக்குறுதி மீறியது ஏன்?
பனூ இஸ்ரவேலர்கள் ஏன் வாக்குறுதி மீறினார்கள் என்பதைப் புரிந்துகொள்ள அதன் பின்னணியை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
மதீனாவில் பனூ கைனுகா, பனூ நளீர் மற்றும் பனூ குறைளா என மூன்று யூதக் கோத்திரங்கள் இருந்தன.
மதீனாவில் அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் என்ற இரு பெரிய இணைவைக்கும் (முஷ்ரிக்) அரபுக் கோத்திரங்களும் இருந்தன.
பனூ கைனுகா கோத்திரம் கஸ்ரஜ் கோத்திரத்துடன் கூட்டணி வைத்திருந்தது. பனூ நளீர் மற்றும் பனூ குறைளா கோத்திரங்கள் அவ்ஸ் கோத்திரத்துடன் கூட்டணி வைத்திருந்தன. இந்தக் கூட்டணிகளின் மூலம் அந்த யூதக் கோத்திரங்கள் வியாபாரம், பணம், பாதுகாப்பு மற்றும் பிற உலக ஆதாயங்களைப் பெற்றன.
அவ்ஸ், கஸ்ரஜ் கோத்திரங்கள் ஒருவருக்கொருவர் பரம எதிரிகளாக இருந்தனர். அதனால், அவர்களுக்கிடையே அடிக்கடி போர் நடந்தது.
இவர்களோடு இருந்த கூட்டணியின் காரணமாக, யூதக் கோத்திரங்கள் மற்ற யூதக் கோத்திரங்களுடன் போரிடும் நிலை ஏற்பட்டது. உண்மையில், அந்த யூதக் கோத்திரங்களுக்கு இடையே எந்தப் பகையும் இருக்கவில்லை. அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் கோத்திரங்களுடன் வைத்திருந்த கூட்டணியின் காரணமாகவே அவர்கள் போர் செய்து ஒருவரை ஒருவர் கொன்றனர்.
கொலை செய்யக் கூடாது என்ற அல்லாஹ்வின் கட்டளையை அவர்கள் நன்கு அறிந்திருந்தும், உலக ஆதாயங்களுக்காக, அல்லாஹ்விடம் கொடுத்த வாக்குறுதியை மீறத் துணிந்தார்கள். அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்ப்படிவதை விட, அவர்களுக்குப் பணம், அதிகாரம், உலக ஆதாயம் இவை தான் முக்கியமானதாகத் தெரிந்தன.
முஸ்லிம் உலகில் நடப்பது என்ன?
எத்தனை முஸ்லிம் அரசாங்கங்கள் உலக ஆதாயங்களுக்காக மேற்கத்திய நாடுகளோடு கூட்டணி வைத்துள்ளன?
எத்தனை முஸ்லிம் ஆட்சியாளர்கள் உலக ஆதாயங்களை இழந்துவிடுவோம் என்ற பயத்தில் மேற்கத்திய நாடுகளோடு ஒப்பந்தங்களை செய்து தஞ்சம் அடைகிறார்கள்?
உலக ஆதாயங்களை இழந்துவிடக் கூடாது என்பதற்காக, அப்பாவி முஸ்லிம்கள் அநியாயமாகப் இனபடுகொலை செய்யப்படும்போது, மௌனமாக வேடிக்கை பார்க்கிறார்கள்.
சக முஸ்லிம்கள் மீதான ஒடுக்குமுறையைக் கண்டும் காணாமல் இருப்பதன் மூலம், சூரா அல்-பகராவில் அல்லாஹ் எச்சரித்த பனூ இஸ்ரவேலர்களின் செயல்களைப் அப்படியே பின்பற்றுகிறார்கள்.
சக முஸ்லிம்களின் துன்பத்தையும், அல்லாஹ்வின் கட்டளையையும் விட, உலக ஆதாயமே அவர்களுக்குப் பெரிதாக தெரிகிறது.
அல்லாஹ்வின் எச்சரிக்கை
அல்லாஹ் கூறுகிறான்:
உங்களில் எவர்கள் இவ்வாறு செய்கிறார்களோ அவர்களுக்கு இவ்வுலகத்தில் இழிவைத் தவிர (வேறொன்றும்) கிடைக்காது. மறுமையிலோ, (அவர்கள்) கடுமையான வேதனையின் பக்கம் மீண்டும் கொண்டு வரப்படுவார்கள்.
குர்ஆன் 2:85
இது ஒரு மிகக் கடுமையான எச்சரிக்கையாகும். மேலே உள்ள வசனத்தில், அல்லாஹ் “உங்களில் எவர்கள்” என்று கூறுவதைக் கவனியுங்கள். இந்த எச்சரிக்கை பனூ இஸ்ரவேலர்களுக்கு மட்டும் அல்ல.
முஸ்லிம்களும் இதே பாவத்தை செய்து, பிற முஸ்லிம்களுக்கு துரோகம் இழைத்தால், அவர்களுக்கும் இந்த கடுமையான எச்சரிக்கை பொருந்தும்.
நபி (ஸல்) செய்த எச்சரிக்கை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்கு முன்னிருந்தவர்களின் வழிமுறைகளை நீங்கள் ஜாணுக்கு ஜாண், முழத்திற்கு முழம் பின்பற்றுவீர்கள்…
புகாரி # 7320
“யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா?” என்று நபித்தோழர்கள் கேட்டார்கள்.
நபியவர்கள்: “வேறு யாரை (சொல்லப்போகிறேன்)?” என்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும் (உண்மையான) இறைநம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுதும்) காய்ச்சலும் கண்டுவிடுகிறது.
புகாரி # 6011
ஒரு உண்மையான முஸ்லிம், பிற முஸ்லிம்களின் வேதனையை கண்டும் காணாமல் வேடிக்கை பார்க்க மாட்டான்.
குர்ஆன் ஒரு வாழும் அற்புதம்
இந்த வசனங்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்பே அருளப்பட்டிருந்தாலும், இன்று நம் உலகில் நடப்பதை அப்படியே படம் பிடித்துக் காட்டுகின்றன. சுப்ஹானல்லாஹ்! திருக்குர்ஆன் ஒரு வாழும் அற்புதம். அது ஒவ்வொரு தலைமுறைக்கும் வழிகாட்டுகிறது.
திருக்குர்ஆன் எல்லாம் அறிந்த அல்லாஹ்வால் அருளப்பட்டது. மனிதனின் பலவீனங்களையும், மக்கள் செய்யும் பாவங்களையும், அவர்கள் இழைக்கக்கூடிய துரோகங்களையும் அல்லாஹ் நன்கு அறிவான். அதனால்தான், இந்த உலகம் எவ்வளவு மாறினாலும், திருக்குர்ஆனின் வழிகாட்டுதல் எப்போதும் பொருத்தமானதாகவும், சரியானதாகவும் இருக்கிறது.
படிப்பினைகள்
இந்த நிகழ்வுகளிலிருந்து நாம் கற்க வேண்டிய படிப்பினைகள்:
- அல்லாஹ்வின் கட்டளையை மீறி துன்யாவிற்கு (உலக வாழ்விற்கு) முன்னுரிமை அளிக்காதீர்கள்
- உலகில் ஏற்படும் இழப்பை பொருட்படுத்தாமல், அல்லாஹ்வுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்
- ஒடுக்கப்பட்ட முஸ்லிம்களின் பக்கம் நில்லுங்கள்
- அநீதியை காணும் போது மௌனம் காக்காதீர்கள்
- முஸ்லிம் உம்மாஹ் என்பது ஒரே உடல் போன்றது என்பதை மறக்காதீர்கள்
முடிவுரை
முஸ்லிம்களுக்குத் துரோகம் இழைப்பது என்பது வெறும் அரசியல் சார்ந்த விஷயம் என்று விட்டுவிடக் கூடாது. அல்லாஹ்வின் கடுமையான தண்டனைக்குரிய எச்சரிக்கையைக் கொண்ட ஒரு பெரும் பாவமாகும்.
பனூ இஸ்ரவேலர்கள் உலக ஆதாயத்திற்காக அல்லாஹ்வின் உடன்படிக்கையை முறித்ததால் சபிக்கப்பட்டார்கள். முஸ்லிம்களும் அதே பாவத்தைத் செய்தால், பனூ இஸ்ரவேலர்களுக்கு ஏற்பட்ட அதே நிலை தான் முஸ்லிம்களுக்கும் ஏற்படும்.
1400 வருடங்களுக்கு பின்னரும், பனூ இஸ்ரவேலர்களின் வரலாற்றிலிருந்து பெறும் படிப்பினைகள் நமக்கு மிகப் பொருத்தமானதாக இருக்கிறது. பனூ இஸ்ரவேலர்களின் வரலாற்றிலிருந்து படிப்பினை பெற்று, பிற முஸ்லிம்களுக்கு துரோகம் செய்யாமல், அல்லாஹ்வின் கட்டளைக்கு நாம் கீழ்படிந்து வாழ வேண்டும்.
உலக ஆதாயங்களுக்காக நமது ஈமானை விற்று, உம்மத்திற்கு துரோகம் செய்யாமல் இருக்க அல்லாஹ் நமக்கு உதவி புரிவானாக!
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)
பனூ இஸ்ரவேலர்களின் உடன்படிக்கையைப் பற்றிப் பேசும் வசனங்கள் எவை?
சூரா அல்-பகரா 2:84–85 வசனங்கள் ஒருவரை ஒருவர் கொல்லக்கூடாது மற்றும் வீடுகளிலிருந்து வெளியேற்றக்கூடாது என்ற உடன்படிக்கையைப் பற்றிப் பேசுகின்றன.
பனூ இஸ்ரவேலர்களின் வரலாறு இன்றும் ஏன் பொருத்தமாக இருக்கிறது?
உலக ஆதாயங்களுக்காக பனூ இஸ்ரவேலர்கள் செய்த தவறை, இன்று பல முஸ்லிம்கள் செய்வதை பார்க்கிறோம். அதனால், பனூ இஸ்ரவேலர்களின் வரலாறு இன்றும் பொருத்தமாக இருக்கிறது.
இந்த எச்சரிக்கை பனூ இஸ்ரவேலர்களுக்கு மட்டும்தானா?
இல்லை. குர்ஆன் அவர்கள் வரலாற்றின் மூலம் படிப்பினைகளைக் கற்பிக்கிறது. அதே பாவத்தை (துரோகத்தை) செய்யும் எவருக்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும்.
முஸ்லிம்கள் முந்தைய சமுதாயங்களைப் பின்பற்றுவார்கள் என்று கூறும் ஹதீஸ் எது?
ஸஹீஹ் அல்-புகாரி 7320, ஸஹீஹ் முஸ்லிம் 2669.
மற்ற முஸ்லிம்கள் ஒடுக்கப்படும்போது முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும்?
முஸ்லிம்கள் நீதியின் பக்கம் நிற்க வேண்டும். ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். உலக ஆதாயங்களுக்காக மௌனமாக காக்கக்கூடாது.
