இந்த கேள்விக்கு பதிலளிப்பதற்கு முன், ஹலால் இறைச்சி என்றால் என்ன, ஜட்கா இறைச்சி என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்வோம்.
ஹலால் என்ற அரபி வார்த்தைக்கு “அனுமதிக்கப்பட்டது” என்று பொருள். ஒரு குறிப்பிட்ட முறையில் ஆடு கோழி போன்ற பிராணிகள் அறுக்கப்பட்டால், அவை “ஹலால் அல்லது அனுமதிக்கப்பட்ட” இறைச்சி என்று அழைக்கப்படுகிறது.
ஹலால் இறைச்சி மற்றும் ஜட்கா இறைச்சி – வித்தியாசம் என்ன?
ஹலால் முறையில் அறுத்தல்
“ஹலால்” முறையில் ஆடு கோழி போன்ற பிராணிகளை அறுக்கும்போது அவற்றின் மூச்சுக் குழாய், கழுத்திலுள்ள இரத்தக் குழாய்களான மயக்கத் தமனி (carotid artery) மற்றும் பெருஞ்சிரை (jugular vein) ஆகியவை துண்டிக்கப்பட்டு, பிராணியின் இரத்தம் முழுவதுமாக வெளியேற்றப்படுகிறது.
ஜட்கா முறையில் அறுத்தல்
ஜட்கா என்றால் “உடனடி” என்று பொருள். “ஜட்கா” முறையில் வெட்டப்படும் பிராணிகள் (ஆடு மற்றும் கோழி) ஒரே வெட்டில் உடனடியாக தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்படும்.
எது சிறந்தது – ஹலால் இறைச்சியா அல்லது ஜட்கா இறைச்சியா?
இந்த கேள்வியை உணர்ச்சிபூர்வமாக அணுகாமல், நடுநிலையோடு அறிவுப்பூர்வமாக அணுக வேண்டும். இது குறித்து துறைசார் வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
மைசூரில் உள்ள மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தின் இறைச்சி தொழில்நுட்பத் துறைத் தலைவர் டாக்டர் வி கே மோடி கூறுகிறார்:
“அறுக்கப்பட்ட பிராணியின் இரத்தத்தின் பெரும்பகுதியை வெளியேற்றுவதில் ஹலால் முறை பயனுள்ளதாக இருக்கும். இறைச்சி மென்மையாக இருக்க வேண்டுமென்றால் இரத்தம் வெளியேறுவது அவசியமானதாகும். ஜட்கா முறையில் இரத்தம் உறைவதற்கான வாய்ப்புகள் அதிகம். இறைச்சியை சில நாட்கள் சமைக்காமல் வைத்திருந்தால் அது கெட்டுவிடும். இவ்வகை இறைச்சியை மென்று சாப்பிடுவதற்கும் கடினமாக இருக்கும்.”
புதுதில்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையின் ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் கருணா சதுர்வேதி கூறுகிறார்:
“ஹலால் முறை ஆரோக்கியமானதாகக் கருதப்படுவதற்கு காரணம், அறுக்கப்பட்ட பிறகும் பிராணியின் இதயம் சில நொடிகளுக்கு இரத்தத்தை பம்ப் செய்கிறது. அதன் மூலம் பிராணியின் இரத்தக் குழாய்களிலிருந்து இரத்தம் வெளியேற்றப்பட்டு, பெரும்பாலான நச்சுகளை வெளியேற்றுகிறது. ஜட்கா முறையில் அனைத்து இரத்தமும் வடிகட்டப்படுவதில்லை. இதனால் இறைச்சி கடினமாகவும் உலர்ந்ததாகவும் இருக்கும்.”
ஹலால் முறையில் பிராணிகளை அறுப்பது கொடூரமானதா?
கழுத்து வழியாக செல்லும் கரோடிட் தமனி மற்றும் பெருஞ்சிரை இரத்தக்குழாய்கள் துண்டிக்கப்படும்போது, மூளையில் உள்ள நரம்புக்கான இரத்த விநியோகம் துண்டிக்கப்படும். இதன் காரணமாக பிராணி எந்த வலியையும் உணர்வதில்லை. அறுபட்ட பிராணி வேதனையால் துடிதுடிப்பது போல் தோன்றலாம். அது இரத்த இழப்பினால் தசைகளில் உண்டாகும் சுருக்கம் மற்றும் தளர்வு காரணமாக ஏற்படும் துடிப்பே தவிர, வலி காரணமாக அல்ல.
ஹலால் இறைச்சி சர்ச்சை தேவைதானா?
மேலே நாம் சுட்டிக் காட்டிய துறைசார் வல்லுநர்களின் கருத்துடன் முஸ்லிமல்லாதோர் உடன்படவில்லையென்றாலும், ஜட்கா இறைச்சியைத் தேர்ந்தெடுப்பதற்கான எல்லா சுதந்திரமும், வாய்ப்பும் அவர்களுக்கு எப்போதும் உண்டு. வட இந்தியாவில் குறிப்பாக பஞ்சாபில் பலர் ஜட்கா இறைச்சியைத் தேர்வு செய்கிறார்கள். உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் ஹலால் இறைச்சியை வழங்கியாக வேண்டுமென்ற எந்த சட்டமோ விதியோ இல்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். உணவகங்களில் ஜட்கா இறைச்சியை வழங்குவதில் எவ்வித தடையுமில்லாத போது முஸ்லிமல்லாதவர்களுக்கு என்ன பிரச்சனை உள்ளது?
ஹலால் இறைச்சி இந்துக்களின் வேலை வாய்ப்பை பறிக்கிறதா?
ஹலால் இறைச்சி ஒரு “பொருளாதார ஜிஹாத்” என்றும், இது இந்துக்கள் மற்றும் இதர முஸ்லிமல்லாதவர்களின் வேலை வாய்ப்புகளை பறிக்கிறது என்றும் என்று சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இதில் எந்த உண்மையும் இல்லை. முஸ்லிம்கள் போலவே, முஸ்லிமல்லாதவர்களும் இறைச்சிக் கடைகளை வைத்துள்ளார்கள். அசைவ உணவு உண்பவர்களில் முஸ்லிம்களை விட (15%), இந்துக்களும் (75%), இதர மதத்தினருமே (5%) எண்ணிக்கையில் அதிகம்.
நாம் ஏற்கனவே மேலே குறிப்பிட்டுள்ளபடி, அசைவம் சாப்பிடும் இந்துக்கள் (75%) முஸ்லீமல்லாதவர்களின் இறைச்சிக் கடைகளில் ஜட்கா இறைச்சியை எப்போது வேண்டுமானாலும் வாங்க முடியும். ஏனெனில் ஹலால் இறைச்சியை தான் வாங்க வேண்டும் என்று முஸ்லீமல்லாதவர்களை யாரும் நிர்பந்தம் செய்யவில்லை.அசைவம் சாப்பிடும் இந்துக்களின் (75%) நுகர்வோர் எண்ணிக்கை மிகப் பெரிய அளவில் இருப்பதால், அவர்களுக்கு ஜட்கா இறைச்சியை வாங்க விருப்பம் இருக்கும் பட்சத்தில், இறைச்சி தொழிலில் இருக்கும் இந்துக்களின் வேலை வாய்ப்புகள் எந்த வகையிலும் பாதிக்கப்படாது.
மருந்துப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள் போன்றவற்றில் கூட, இந்துக்கள் மற்றும் முஸ்லிமல்லாத நுகர்வோரின் எண்ணிக்கையே (சுமார் 80%) அதிகம். முஸ்லிம் நுகர்வோர்கள் வெறும் 15% மட்டுமே. நீங்கள் ஒரு அழகுசாதன தயாரிப்பு நிறுவனத்தை நடத்தினால், நீங்கள் எந்த வகை நுகர்வோரின் தேவைக்கு செவிமடுப்பீர்கள்? 80% உள்ள நுகர்வோருக்கா? அல்லது 15% உள்ள நுகர்வோருக்கா? சந்தேகமில்லாமல், முஸ்லிமல்லாத 80% நுகர்வோரின் தேவைக்கே நீங்கள் செவிமடுப்பீர்கள். இது தான் யதார்த்தம். பெரும்பான்மையான நுகர்வோரின் (80%) தேவையை பூர்த்தி செய்ய விரும்பும் நிறுவனங்களின் மீது வெறும் 15% உள்ள முஸ்லீம் நுகர்வோர்கள், எப்படி தங்களது “ஹலால்” சித்தாந்தத்தை திணிக்க முடியும்?
“ஹலால் இறைச்சி” மூலம் “பொருளாதார ஜிஹாத்” என்ற இந்தப் பிரச்சாரம் பொய்யானது என்பது இப்போது உங்களுக்குத் தெளிவாகியிருக்கும்.