More

    Choose Your Language

    முஸ்லிம்கள் அசைவ உணவு சாப்பிடுவது ஏன்?

    “கடவுள் அசைவ உணவை உண்ண அனுமதித்திருக்கிறார்” என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். எனவே, அவர்கள் அசைவ உணவை சாப்பிடுகிறார்கள். எந்த உணவு உண்பது என்பது ஒருவரின் சுய விருப்பு வெறுப்பு சம்பந்தப்பட்டது. இந்த விருப்பங்கள் மதிக்கப்பட வேண்டும்.

    அசைவமா? ஜீவகாருண்யமா? எது சரி?

    முஸ்லிம்கள் அசைவ உணவு சாப்பிடுவது ஏன்? என்ற கேள்விக்கான எளிய பதில், “கடவுள் அசைவ உணவை உண்ண அனுமதித்திருக்கிறார்” என்று முஸ்லிம்கள் நம்புவது தான். எனவே, முஸ்லிம்கள் அசைவ உணவை சாப்பிடுகிறார்கள். கருணைமிக்க கடவுள், உணவுக்காக ஏன் அப்பாவி விலங்குகளைக் கொல்ல அனுமதிக்கிறார் என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். இது பற்றி நாம் விரிவாக தெரிந்து கொள்வோம். 

    குறிப்பு: இந்த தலைப்பு தொடர்பான பல்வேறு தகவல்கள் கட்டுரையின் இறுதியில் உள்ள “கூடுதல் தகவல்கள்” பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன.

    இஸ்லாத்தில் அசைவம் சாப்பிடுவது கட்டாயமில்லை

    கடவுள் அசைவ உணவை உண்பதற்கு அனுமதித்துள்ளார் என்பது உண்மை. ஆனால் அசைவ உணவு சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும் என்று கட்டாயமில்லை. சைவ உணவு மட்டும் உண்ணும் ஒருவர், மிகச் சிறந்த நல்ல முஸ்லிமாக இருக்க முடியும். இதில் முரண்பாடு ஒன்றும் இல்லை.

    எது ஜீவகாருண்யம், எது மிருக வதை என்பதில் ஒருமித்த கருத்து உள்ளதா?

    சைவ உணவு உண்பவர்கள் எல்லோரும் எது ஜீவகாருண்யம், எது மிருக வதை என்பதில் ஒருமித்த கருத்தில் இருப்பதாக பலர் எண்ணுகிறார்கள். இது உண்மையல்ல. ஜீவகாருண்யம், மிருக வதை குறித்து சைவ உணவு உண்பவர்கள் மத்தியிலேயே பல கருத்துக்கள் இருப்பதை நம்மால் காண முடிகிறது. அதில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

    லாக்டோ-ஓவோ வெஜிடேரியன்

    சைவ உணவு, பால் மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்படும் உணவுகள் (நெய், வெண்ணெய், தயிர், ஐஸ்கிரீம்) மற்றும் முட்டையை இவர்கள் சாப்பிடுவார்கள்.

    லாக்டோ-வெஜிடேரியன்

    இவர்கள் பால் மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்படும் உணவுகளை சாப்பிடுவார்கள். ஆனால் இவர்கள் முட்டையை அசைவ உணவாக கருதுகின்றனர்.

    ஓவோ வெஜிடேரியன்

    இவர்கள் முட்டைகளை சாப்பிடுவார்கள், ஆனால் பால் மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்படும் உணவுகளை சாப்பிடுவதில்லை. பால் மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்படும் உணவுகளை உண்பவர்கள், மிருகவதைக்கு துணை போவதாக இவர்கள் நம்புகிறார்கள்.

    பெஸ்கடேரியன்

    இவர்கள் பால் மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்படும் உணவுகளை உண்ண மாட்டார்கள். ஆனால் மீன் சாப்பிடுவார்கள்.

    வீகன்

    இவர்கள் விலங்குகள் சம்பந்தப்பட்ட எந்த உணவையும் உண்ண மாட்டார்கள். தாவர உணவுகளை மட்டுமே உண்ணுவார்கள். அது மட்டுமல்ல, விலங்குகளின் தோலால் செய்யப்பட்ட ஆடைகள், பைகள், காலணிகள், போன்ற பொருட்களையும் இவர்கள் பயன்படுத்துவதில்லை. விலங்குகள் வலியை உணரக்கூடிய உயிரினங்கள் என்று அவர்கள் நம்புவதால், விலங்குகளின் வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

    பிரூட்டேரியன்

    விலங்குகள், பூச்சிகள், தாவரங்கள் என்று வேறுபாடின்றி அனைத்து உயிர்களும் புனிதமானவை என்று இவர்கள் கருதுகின்றனர். தாவரங்கள் சார்ந்த உணவுகளும் பல உயிர்களைக் கொல்கின்றன என்று அவர்கள் வாதிடுகின்றனர். உதாரணமாக, பாதாம் பால் தயாரிக்கும் தொழிலால் அமெரிக்காவில் ஒரு ஆண்டில் மட்டும் 5000 கோடி தேனீக்கள் இறந்தன. எனவே, பழங்களை மட்டுமே இவர்கள் உண்ணுவார்கள்.

    Different Diet preferences_Tamil - Curious Hats

    இந்த பட்டியல் சொல்வது என்ன?

    ஜீவகாருண்யம், மிருக வதை குறித்து ஒரே கருத்தில் “சைவ உணவு உண்பவர்கள்” இல்லை என்று நமக்கு தெளிவாக தெரிகிறது. ஒவ்வொரு நபரும் தாங்கள் உண்பது சரி, மற்றவர்கள் உண்பது தவறு என்று நினைக்கிறார்கள். எது ஜீவகாருண்யம், எது உயிர் வதை என்பது, நபருக்கு நபர் மாறுபடுவதே இதற்கு காரணம். இதில் யார் சரி, யார் தவறு என்று எப்படி முடிவெடுப்பது?

    எல்லோருக்கும் பொதுவான ஒரு அளவுகோல் தேவை

    எல்லோருக்கும் பொதுவான ஒரு அளவுகோல் இருந்தால் மாத்திரமே, யார் சரி, யார் தவறு என்று முடிவெடுக்க முடியும். ஆனால், எல்லோருக்கும் பொதுவான ஒரு அளவுகோல் சாத்தியமா? நிச்சயமாக சாத்தியம். எப்படி என்று பார்ப்போம்.

    மனித உடல்

    நமது மனித உடலைப் பற்றி சிந்திப்போம். இறைச்சி மற்றும் தாவரங்கள் இரண்டையும் உண்ணுவதற்கு உகந்ததாக நம் உடலமைப்பு உள்ளது. நமது பற்களின் அமைப்பும், செரிமான அமைப்பும், இறைச்சி மற்றும் தாவரங்கள் இரண்டையும் நம்மால் உண்ண முடியும் என்பதை தெளிவாகக் காட்டுகின்றன. மூலக்கூறு உயிரியலில் பிஎச்டி செய்யும் ஒரு வீகன், மனிதர்களை தாவிரவுண்ணி என்ற சொல்வது தவறு என்கிறார்.

    செல்லுலோஸ், ஹெமிசெல்லுலோஸ், லிக்னின்கள் போன்ற காம்பௌண்டுகள் தாவரங்களின் செல் சுவர்களில் உள்ளன. இந்த காம்பௌண்டுகளை ஜீரணம் செய்ய “செல்லுலேஸ்” என்ற ஒரு என்சயம் தேவைப்படுகிறது. ஆனால் இந்த என்சயம் நம் உடலில் இல்லை. இந்த என்சயமை உருவாக்கும் குடலில் உள்ள பாக்டீரியாக்களும் மனிதர்களின் வயிற்றில் இல்லை. எனவே, இந்த காம்பௌண்டுகளை நம்மால் நேரடியாக ஜீரணிக்க முடியாது. ஆச்சர்யம் என்னவென்றால், இறைச்சியை ஜீரணம் செய்ய தேவையான புரோட்டீயஸ் மற்றும் லிபேஸ் போன்ற என்சயம்கள் நம் உடலில் உள்ளன.

    இதிலிருந்து நாம் என்ன தெரிந்து கொள்ளலாம்?

    நாம் இயற்கையிலேயே தாவரங்களையும், இறைச்சியையும் உண்ணக் கூடியவர்களாக இருக்கிறோம். இயற்கையிலேயே அமைந்த நம் மனித இயல்புக்கும், நம் உணவு பழக்கத்திற்கும் இடையே முரண்பாடு இருக்க முடியுமா? இருக்க முடியாது. ஏன் என்பதை புரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

    பொதுவான அளவுகோலை யார் தீர்மானிக்க முடியும்?

    பொதுவான அளவுகோலை யார் தீர்மானிக்க முடியும் என்பதைப் புரிந்து கொள்ள, சில நிதர்சன உண்மைகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அவை:

    1. ஒரு பொருளை உற்பத்தி செய்தவருக்கு தான் அந்த பொருளை பற்றி நன்றாக தெரியும்.
    2. பொருளை தயாரித்தவருக்கு அந்த பொருளை பற்றி நன்றாகத் தெரியும் என்பதால், அந்த பொருளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை அவர் தான் தீர்மானிக்க முடியும்.

    இதை பொருட்களின் யூசர் கைடுகளை நாம் பயன்படுத்தும் பழக்கத்திலிருந்தே புரிந்து கொள்ளலாம்.

    எல்லாம் அறிந்த, ஞானமுள்ள ஒரு கடவுள் இந்த பிரபஞ்சத்தையும் அதில் உள்ள அனைத்தையும் (நம்மையும் சேர்த்து) படைத்திருந்தால், அந்த கடவுளுக்கு, நம்மை பற்றியும், நமக்கு எது நல்லது, எது கெட்டது என்று நன்றாக தெரிந்திருக்கும். எனவே, நம்மையெல்லாம் படைத்த அந்த கடவுளுக்கு தான், நமக்கு எது நல்லது, எது கெட்டது என்று சரியாக சொல்ல முடியும்.

    முஸ்லிம்கள் கடவுளையும் அவனுடைய வழிகாட்டுதலையும் நம்புகிறார்கள்

    முஸ்லிம்களின் நம்பிக்கை:

    1. பிரபஞ்சத்தையும் அதில் உள்ள அனைத்தையும் (நம்மையும் சேர்த்து) படைத்தது ஒரு கடவுள் தான்.
    2. அந்த கடவுள், மனித குலத்திற்கு எது சரி, எது தவறு என்ற தெளிவான வழிகாட்டுதலை தந்துள்ளார்.
    3. மனிதர்கள் அசைவ உணவுகளை உண்ண கடவுள் அனுமதித்துள்ளார்.

    குர்ஆனில் கடவுள் சொல்கிறார்:

    தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, கடவுள் அல்லாத பெயரைச் சொல்லி அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே கடவுள் உங்களுக்குத் தடை செய்துள்ளான்.

    குர்ஆன் அத்தியாயம் 2: வசனம் 173

    நம் கைகளால் உருவாக்கிய கால்நடைகளை அவர்களுக்காகப் படைத்துள்ளோம் என்பதையும், அவர்கள் அதற்கு உரிமையாளர்களாக உள்ளனர் என்பதையும் அவர்கள் காணவில்லையா? அவற்றை அவர்களுக்காகக் கீழ்ப்படியச் செய்தோம். அவற்றில், சிலவற்றின் மீது அவர்கள் சவாரி செய்கின்றார்கள். அவற்றில், சிலவற்றிலிருந்து அவர்கள் உண்ணுகின்றார்கள்.

    குர்ஆன் அத்தியாயம் 36: வசனங்கள் 36:71 & 72

    நாம் மேலே விவரித்தது போல், நமக்கு எது சிறந்தது, எது நல்லது என்று சரியாக தீர்மானிக்க கடவுளால் மட்டுமே முடியும். முஸ்லிம்களை பொருத்த வரை, குர்ஆன் கடவுளின் வார்த்தை என்று நம்புகிறார்கள். குர்ஆன் அசைவ உணவு உண்பதை அனுமதித்திருப்பதால், முஸ்லிம்கள் அசைவ உணவு சாப்பிடுகிறார்கள். முஸ்லிம்கள் அசைவ உணவு சாப்பிடுவது ஏன் என்ற கேள்விக்கு, இப்போது உங்களுக்கு பதில் கிடைத்திருக்கும் என்று நம்புகிறோம்.

    கட்டுரைச் சுருக்கம்

    1. இஸ்லாத்தில் அசைவம் சாப்பிடுவது கட்டாயமில்லை. சைவ உணவு மட்டும் உண்ணும் ஒருவர், மிகச் சிறந்த நல்ல முஸ்லிமாக இருக்க முடியும்.
    2. ஜீவகாருண்யம், மிருக வதை குறித்து ஒத்த கருத்தில் “சைவ உணவு உண்பவர்கள்” இல்லை.
    3. நமக்கு எது நல்லது, எது கெட்டது என்று சரியாக முடிவு செய்ய நம்மை படைத்த கடவுளால் மட்டுமே முடியும்.
    4. நம்மை படைத்த கடவுள், அசைவ உணவுகளை உண்ண அனுமதித்துள்ளதாக முஸ்லிம்கள் நம்புகின்றனர்.
    5. எனவே, முஸ்லிம்கள் அசைவ உணவுகளை உண்கின்றனர்.
    6. சைவ உணவை மட்டுமே உண்ண வேண்டும் என்று ஒருவர் விரும்பினால், அவர் தாராளமாக வெஜிடேரியனாக இருக்கலாம்.

    கூடுதல் தகவல்கள்

    விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் கூட உரிமை உண்டு என்று இஸ்லாம் கற்று தருகிறது

    1400 ஆண்டுகளுக்கு முன்பு, மனிதர்களே விலங்குகளைப் போல நடத்தப்பட்டபோது, ​​விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் கூட உரிமைகள் இருப்பதாக இஸ்லாம் அறிவித்தது. விலங்குகள் மற்றும் பறவைகளை நல்ல முறையில் நடத்துவது குறித்து முஹம்மது நபி அவர்கள் பல கட்டளைகளை தந்துள்ளார்கள். அவற்றில் இரண்டை மட்டும் நாம் இங்கே சுட்டிக்காட்டுகிறோம்.

    முஹம்மது நபி அவர்கள் கூறினார்கள்:

    விலங்குகள் மற்றும் பறவைகளை நடத்தும் விதத்தில் கடவுளுக்கு பயந்து கொள்ளுங்கள்.

    அபு தாவூத்

    ஒரு மிருகத்திற்கு செய்யும் ஒரு நற்செயல் ஒரு மனிதனுக்கு செய்யும் நற்செயல் போன்ற புண்ணியமாகும். அதே நேரத்தில், ஒரு மிருகத்தை கொடுமைப்படுத்தும் செயல் ஒரு மனிதனைக் கொடுமைப்படுத்தும் செயல் போன்றதாகும்.

    மிஸ்காத்துல் மஸாபீஹ்

    பொழுதுபோக்குக்காக அல்லது விளையாட்டிற்காக விலங்குகள் / பறவைகளை கொல்வதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை

    இன்றைய உலகில் கூட, விளையாட்டிற்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் வேட்டையாடுவது பல ஆயிரக்கணக்கான கோடிகள் புரளும் தொழிலாக இருக்கிறது. 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே, பொழுதுபோக்கிற்காகவும், விளையாட்டிற்காகவும் விலங்குகளையும் பறவைகளையும் கொல்வதை இஸ்லாம் தடை செய்தது.

    முஹம்மது நபி அவர்கள் கூறினார்கள்:

    யார் ஒரு சிட்டுக்குருவியையோ அல்லது அது போன்ற ஒரு பறவையை விளையாட்டிற்காக கொல்கிறாரோ, அந்தக் கொலையைப் பற்றி நியாயத் தீர்ப்பு நாளில் அவர் கடவுளால் விசாரிக்கப்படுவார்.

    முஸ்னத் அஹமத்

    எந்த உயிரினத்தையும் வேட்டையாடும் இலக்காக்கிக் கொள்ளாதீர்கள்.

    சஹீஹ் முஸ்லிம்

    ஹலால் இறைச்சி

    ஹலால் முறையில் விலங்குகளை கொல்வது, விலங்குகளுக்கு மிகக் குறைந்த அளவு துன்பத்தையும் வலியையும் ஏற்படுத்துகிறது.

    கழுத்து நரம்பு, மூச்சுக்குழாய் மற்றும் கரோடிட் தமனி ஆகியவை துண்டிக்கப்படும் போது மூளையில் உள்ள நரம்புக்கான இரத்த விநியோகம் துண்டிக்கப்படுகிறது. எனவே, விலங்கு வலியை உணர்வதில்லை. இரத்தம் வெளியேறுவதால், தசைகளிள் சுருக்கம் மற்றும் தளர்வு காரணமாக, அறுக்கப்பட்ட விலங்கு உதைப்பது போல் நமக்கு தோன்றும். அது வலியால் அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

    பிரான்ஸ் நாட்டின் “உணவு, விவசாயம் மற்றும் மீன்பிடி” அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை இதை நிரூபிக்கிறது. ஜெர்மனியின் ஹானோவரில் கால்நடை மருத்துவத்தின் இயக்குநராக இருந்த டாக்டர் வில்ஹெல்ம் ஷூல்ஸ் மேற்கொண்ட ஆய்வில், ஹலால் முறையில் விலங்குகள் வெட்டப்பட்ட போது வலியை கண்காணிக்க பயன்படுத்தப்பட்ட கருவியில் உள்ள மீட்டரின் அளவு கூடவில்லை என்பது கண்டறியப்பட்டது.

    ஹலால் இறைச்சி, ஜட்கா இறைச்சி – வித்தியாசம் என்ன? தெரிந்து கொள்ள, இதை படியுங்கள்.

    ஹலால் முறையில் பேணப்பட வேண்டிய ஒழுங்கு

    முஹம்மது நபி அவர்கள் கூறினார்கள்:

    கடவுள் எல்லாவற்றிலும் கருணையாக நடப்பதை கட்டாயமாகியிருக்கிறார். (மிருகங்களைக்) கொல்வதாக இருந்தால், அதைச் கருணையான முறையில் செய்யுங்கள். நீங்கள் அறுக்கும்போது, முதலில் கத்தியைக் நன்றாக கூர்மைப்படுத்தி, விலங்குகள் பதட்டப்படாத வகையில் செய்யுங்கள்.

    சஹீஹ் முஸ்லிம்

    ஹலால் முறையில் பேணப்பட வேண்டிய ஒழுங்குகளில் சில :

    1. விலங்கை அறுக்கும் முன் கடவுளின் பெயரை உச்சரிக்க வேண்டும். கடவுளின் அனுமதியோடு தான் நாம் இந்த விலங்கை அறுக்கிறோம் என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது.
    2. கத்தி மிகவும் கூர்மையாக இருக்க வேண்டும். அறுக்கும் போது விலங்கிற்கு தேவையற்ற வலியைத் இது தடுக்கும்.
    3. விலங்கின் பார்வையில் இருந்து கத்தி மறைக்கப்பட வேண்டும்.
    4. ஒரு விலங்கை மற்றொரு விலங்கின் முன் வைத்து அறுக்கக்கூடாது.
    5. விலங்குகள் பதட்டப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
    6. அறுப்பதை எவ்வளவு விரைவாக செய்ய முடியுமோ, அவ்வளவு விரைவாக செய்து முடித்து விட வேண்டும்.

    அதிகமாக சாப்பிடுவதை இஸ்லாம் வெறுக்கிறது

    அசைவ உணவாக இருந்தாலும் சரி, அல்லது சைவ உணவு இருந்தாலும் சரி, அதிகமாக சாப்பிடுவதை இஸ்லாம் வெறுக்கிறது.

    முஹம்மது நபி அவர்கள் கூறினார்கள்:

    ஆதமின் மகன் வயிற்றை நிரப்புவதை போல், யாரும் எந்த பாத்திரத்தையம் மோசமாக நிரப்ப முடியாது. ஒருவரின் முதுகை நேராக்க சிறிது உணவு எடுத்துக் கொண்டால் போதும். கூடுதலாக சாப்பிடவேண்டுமென்றால், தன் வயிற்றை அவர் தனது உணவால் மூன்றில் ஒரு பகுதி கொண்டும், நீரால் மூன்றில் ஒரு பகுதி கொண்டும், தனது சுவாசத்தால் மூன்றில் பகுதி கொண்டும் நிரப்பலாம்.

    ஸுனன் திர்மிதி

    ஆம், முஸ்லிம்கள் இறைச்சி சாப்பிட அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் அதை அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    இறைச்சி மற்றும் பால் தொழிலில் நடக்கும் கொடூரமான நடைமுறைகளை இஸ்லாம் வெறுக்கிறது

    இறைச்சி மற்றும் பால் தொழில் நடத்தும் கார்போரேட்டுகள், விலங்குகளின் நல்வாழ்வை விட பணத்திற்கே முன்னுரிமை அளிக்கின்றன. அதனால்தான் அவர்கள் விலங்குகளை மிகவும் நெரிசலான இடங்களில் வைத்திருப்பதைக் காண்கிறோம். விலங்குகளுக்கு செயற்கை வளர்ச்சி ஹார்மோன்களைக் கொடுத்து, மிகக் கொடூரமான முறையில் அவற்றைக் கொல்கிறார்கள். இஸ்லாம் இத்தகைய செயல்களை அறவே வெறுக்கவும், கண்டிக்கவும் செய்கிறது. இஸ்லாத்தின் கொள்கைகளின்படி வாழும் எந்த முஸ்லிமும் இந்த காட்டுமிராண்டித்தனமான மிருக வதைகளை ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்.

    முஹம்மது நபி அவர்கள் கூறினார்கள்:

    பூனை பசியால் இறக்கும் வரை அதை பூட்டி வைத்திருந்ததின் காரணமாக, ஒரு பெண் சித்திரவதை செய்யப்பட்டு நரகத்தில் தள்ளப்பட்டாள்.

    சஹீஹ் புகாரி

    மிருகவதையில் ஈடுபடும் அனைவருக்கும் நரகம் தான் கிடைக்கும் என்பதை முஹம்மது நபி அவர்களின் கூற்று தெளிவுபடுத்துகிறது.

    தாவரங்களும் வலியை உணர்கின்றன

    விலங்குகளைப் போல தாவரங்களுக்கு நரம்பு மண்டலம் இல்லாததால், அவற்றால் வலியை உணர முடியாது என்று பலர் நினைக்கிறார்கள். குறிப்பாக வீகன்கள், தாவரங்களை வலியை உணரும் உயிரினங்களின் பட்டியலிலிருந்து நீக்கி விட்டார்கள். தாவரங்களும் வலியை உணர்கின்றன என்று சமீபத்திய ஆய்வுகள் சொல்கின்றன. நேஷனல் ஜியோகிராஃபிக் கட்டுரை இவ்வாறு கூறுகிறது:

    தாவரங்கள் காயமடையும் போது, அவை மற்ற இலைகளுக்கு எச்சரிக்கை செய்யும் சமிக்ஞைகளை அனுப்புகின்றன. காயமடையாத மற்ற இலைகளுக்கு பாதுகாப்பு வழிமுறைகளை தெரிவிக்கின்றன.

    நாஷனல் ஜியோகிராபிக்

    விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தில் தாவரவியல் ஆய்வகத்தை நடத்தும் சைமன் கில்ராய் இவ்வாறு கூறுகிறார்:

    தாவரங்கள் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்படுகின்றன. அவை சரியான நேரத்தில் சரியானதைச் செய்கின்றன. அவை சுற்றுச்சூழலில் நடக்கும் மாற்றங்களையும், தகவல்களையும் உணர்ந்து அந்த தகவல்களின் படி செயல்படவும் செய்கின்றன. ஆனால் இதையெல்லாம் செய்வதற்கு அவசியம் என்று நாம் கருதும் மூளை அவர்களுக்கு இல்லை என்பது ஆச்சர்யமானது.

    நாஷனல் ஜியோகிராபிக்

    “பிளாண்ட் நியூரோபயாலஜி” என்ற புதிய துறையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

    பிளாண்ட் நியூரோபயாலஜி என்பது ஒரு புதிய துறையாகும். இது தாவரங்கள் தங்கள் சூழலில் இருந்து பெறும் தகவல்களை எவ்வாறு பயன்படுத்தி, சிறந்த முறையில் இனப்பெருக்கம் செய்கின்றன என்பதை ஆராய்ச்சி செய்யும் துறையாகும்.

    இந்த நவீன துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. தாவரங்கள் பற்றிய புதிய மற்றும் சுவாரஸ்யமான கண்டுபிடிப்புகளை நாம் வருங்காலங்களில் எதிர்பார்க்கலாம். தாவரங்கள் வலியை உணர்வதில்லை என்று வாதிடுபவர்கள், அவர்கள் பின்பற்றும் சித்தாந்தத்திற்கு இந்த வாதம் வலு சேர்ப்பதாலேயே அவ்வாறு சொல்கிறார்கள். பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்? தாவரங்கள் வலியை உணர்கின்றன என்று ஒப்புக்கொண்டால், அவர்களால் எதையும் சாப்பிட முடியாமல் போய் விடும்!

    மனிதர்களுக்கு சைவ உணவுகள் மட்டும் போதுமா?

    இல்லை போதாது. சைவ உணவுகளில் 7 சத்துக்கள் கிடைக்காது என்று இந்தக் கட்டுரை கூறுகிறது. உதாரணமாக: பால், முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்ற அசைவ உணவுகளிலிருந்து தான் வைட்டமின் பி12 கிடைக்கிறது. எங்கு வசித்தாலும், எந்த வயதை உடையவராக இருந்தாலும், சைவ உணவு உண்பவர்கள் பி12 குறைபாடு உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. சைவ உணவு உண்பவர்கள் இந்த வைட்டமின் போதுமான அளவு கிடைக்க பி12 சப்ளிமெண்ட்களை உண்ண வேண்டும்.

    நாட்டிலுள்ள சைவ உணவு உண்பவர்களில் 84% பேருக்கு புரதச் சத்து குறைபாடு இருப்பதாக இந்திய உணவுக் கழகம் (IDA) கூறியுள்ளது.

    நமது மூளைக்கு விலங்குகளின் கொழுப்பு தேவை

    நமது மூளைக்கு DHA எனப்படும் கொழுப்பு தேவைப்படுகிறது. இது விலங்கு உணவில் இருந்து மட்டுமே கிடைக்கிறது.

    டாக்டர். ஜார்ஜியா ஈட், அமெரிக்காவின் வெர்மான்ட் மருத்துவக் கல்லூரியில் மருத்துவத்தில் எம்.டி. பட்டம் பெற்றவர். அவர் ஒரு ஊட்டச்சத்து மனநல மருத்துவரும் கூட. அவர் சொல்கிறார்:

    நமது மூளையில் கொழுப்பு அதிகம் உள்ளது. மனித மூளையில் மூன்றில் இரண்டு பங்கு கொழுப்பாக உள்ளது. இந்த கொழுப்பில் 20 சதவிகிதம் டோகோசாஹெக்ஸெனோயிக் அமிலம் அல்லது DHA எனப்படும் ஒமேகா-3 கொழுப்பு அமிலமாகும்.

    டாக்டர். ஜார்ஜியா ஈட்

    மூளையின் ஒரு முக்கியமான பகுதி தான் கோர்ட்டெக்ஸ். நமது சிந்தனைக்கு காரணமாக இருப்பது இந்த கோர்ட்டெக்ஸ் தான். இந்த கோர்ட்டெக்ஸின் வளர்ச்சிக்கு, DHA மிக அவசியம். DHA இல்லாமல், கவனம், முடிவெடுத்தல் போன்ற செயல்பாடுகள் சரியாக இருக்காது.

    டாக்டர். ஜார்ஜியா ஈட்

    தாவர உணவுகளில் இந்த DHA இல்லை என்று அவர் குறிப்பிடுகிறார்.

    சைவ உணவுகளைத் தேர்ந்தெடுப்பவர்கள், தாவர உணவுகளில் DHA இல்லை என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

    டாக்டர். ஜார்ஜியா ஈட்

    ஆல்கேவிலிருந்து எடுக்கப்படும் DHA சப்ளிமெண்ட்ஸ் அதிக விலை கொண்டவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது மட்டுமல்ல, ஆல்கேவிலிருந்து எடுக்கப்படும் DHA இன் அளவு, மீன் அல்லது கிரில் போன்றவற்றிலிருந்து கிடைக்கும் DHA அளவை விட குறைவாகும்.

    சைவ உணவுகளால் ஏற்படும் பிரச்சனைகள்

    டாக்டர். அசீம் மல்ஹோத்ரா இங்கிலாந்தில் பணிபுரியும் இருதய நோய் நிபுணர். “என் தாயின் மரணத்தில் அவரது சைவ உணவின் பங்களிப்பு.” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் இவ்வாறு கூறுகிறார்:

    அவரது சைவ உணவால், வைட்டமின் பி 12 மற்றும் இரும்புச் சத்துக்களை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. புரோட்டீன் குறைபாடு சர்கோபீனியாவுக்கு (தசை நிறை குறைதல்) வழிவகுத்தது. இது அவரது நடமாட்டத்தை மேலும் குறைவாக்கியது.

    டாக்டர். அசீம் மல்ஹோத்ரா

    இதை தொடர்ந்து அவர் கூறுவதாவது:

    உலகின் மற்ற நாடுகளை விட அதிகமான சைவ உணவு உண்பவர்களைக் கொண்ட நாடான இந்தியா தான், உலகின் நீரிழிவு தலைநகரமாக இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    டாக்டர். அசீம் மல்ஹோத்ரா

    உலகப் புகழ் பெற்ற ஒரு உணவியல் நிபுணரிடமிருந்து அவர் கற்றுக்கொண்ட ஒரு சுவாரஸ்யமான தகவலை பற்றி அவர் இவ்வாறு விளக்குகிறார்:

    நியூசிலாந்தின் மிகச்சிறந்த உணவியல் நிபுணரான டாக்டர் கேரின் ஜின் என்னிடம் கூறியது: “காய்கறிகளை விட இறைச்சியில் அதிக புரதச்சத்தும் ஊட்டச்சத்தும் உள்ளது. நிச்சயமாக, ஒருவர் மிகவும் ஆரோக்கியமான சைவ உணவை தேர்ந்தெடுத்து சாப்பிடலாம், ஆனால் இன்று உலகில் உள்ள பெரும்பாலான சைவ உணவு உண்பவர்கள் இது போல் செய்வதில்லை.

    டாக்டர். அசீம் மல்ஹோத்ரா

    முன்னால் வீகன்கள் சொல்வது என்ன?

    “வீகன் சாம்பியனாக” இருந்தவர்கள் எல்லாம் உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக, இறைச்சி சாப்பிட ஆரம்பித்துள்ளனர். விர்பி மைக்கோனென் என்பவர் வீகன் உணவை பிரபலப்படுத்திய ஒரு பிளாகர். வெறும் 38 வயதில் அவருக்கு மாதவிடாய் நின்று விட்டது. இதனால் இறைச்சி உணவுக்கு திரும்பினேன் என்று கூறுகிறார். லட்சக்கணக்கான சப்ஸ்க்ரைபர்களை கொண்ட யோவானா மெண்டோசா ஐரஸ், உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக தான் இறைச்சி சாப்பிடத் தொடங்கியதாகக் கூறுகிறார். “வீகன் இளவரசர்” என்ற புனைப்பெயர் கொண்ட டிம் ஷிஃப், தான் வீகன் உணவை விட்டு வெளியேற காரணம் என்ன என்பதை இந்த வீடியோவில் விளக்குகிறார்.

    இதிலிருந்து சைவ உணவு அதை உண்ணும் அனைவரின் உடலமைப்பிற்கும் பொருந்தாது என்று நம்மால் புரிந்து கொள்ள இயலும். எனவே, நம் உடலமைப்பிற்கு ஏற்ற உணவைத் தான் நாம் உண்ண வேண்டும்.

    வெஜிடேரியன்களும் அஹிம்சையும்

    சில வெஜிடேரியன்கள், தாங்கள் தாவர உணவுகளை மட்டுமே உண்ணுவதால், மிகவும் அமைதியானவர்களாகவும் வன்முறையற்றவர்களாகவும் இருப்பதாக கூறுகின்றனர். அதே நேரத்தில், இறைச்சி உண்பவர்கள் வன்முறையாளர்களாக இருப்பதாக கூறுகின்றனர். மேலோட்டமாகப் பார்த்தால், இந்த வாதம் சரியாகத் தோன்றலாம். ஆனால் புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது இந்த வாதத்தில் உண்மை இல்லை என்பது புரியும். அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்களில் பெரும்பாலோர் அசைவ உணவு உண்பவர்கள் தான்.

    கோடிக்கணக்கான அப்பாவி மனிதர்களை கொன்று குவித்த ஹிட்லர் ஒரு வெஜிடேரியன் என்பது உங்களுக்கு தெரியுமா? நல்ல பண்புகளுக்கும் உணவுக்கும் சம்பந்தம் இல்லை. மாறாக, தவறானதைத் தவிர்க்கும் ஒரு நபரின் மனக்கட்டுப்பாட்டுடன் வாழ்வது தான் ஒரு மனிதரை நல்லவராக்குகிறது.

    வீகனாகவோ வெஜிடேரியனாகவோ மாற விருப்பமா? முதலில் இதைப் பாருங்கள்!

    டாக்டர் நடாஷா கேம்ப்பெல்-மெக்பிரைட், M.D நரம்பியல் மற்றும் மனித ஊட்டச்சத்து

    நரம்பியல் மற்றும் மனித ஊட்டச்சத்து ஆகியவற்றில் முதுகலை பட்டம் பெற்ற டாக்டர் நடாஷா கேம்ப்பெல்-மெக்பிரைட் என்பவரின் வீடியோ இது.

    வெஜிடேரியனாக இருப்பது உங்கள் விருப்பம்

    எந்த உணவு உண்பது என்பது ஒருவரின் சுய விருப்பு வெறுப்பு சம்பந்தப்பட்டது. இந்தத் தனிப்பட்ட விருப்பங்கள் மதிக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைபாடு. தங்கள் உணவுத் தேர்வுகளை அடுத்தவர்கள் மீது திணிக்காமலும், அடுத்தவர்களை குறை சொல்லாமலும், ஏளனமாக நினைக்காமலும் இருந்தாலே, நம் சமூகத்தில் நல்ல ஆரோக்யமான சூழலை உருவாகும்.

    வாழுங்கள், வாழ விடுங்கள்!


    மேலும் படிக்க

    WHAT OTHERS ARE READING

    Most Popular