பலருடைய மனதில் “முஸ்லிம்கள் ஏன் பிரசாதம் சாப்பிடுவதில்லை?” என்ற கேள்வி இருக்கிறது. முஸ்லிம்கள் “பிரசாதம்” சாப்பிடாததை அவமதிப்பாகவும், சகிப்புத்தன்மையற்ற செயலாகவும் பலர் கருதுகிறார்கள். எனவே, இதைப் பற்றி சரியாக புரிந்து கொள்வது அவசியம்.
ஒரு வெஜிடேரியனுக்கு சிக்கன் 65 கொடுத்தால், அவர் அதை சாப்பிடுவாரா?
நிச்சயமாக சாப்பிடமாட்டார். அவர் மேல் உள்ள அன்பினாலும், மரியாதையினாலும் தான் அந்த சிக்கன் 65 ஐ அவருக்கு கொடுத்தோம் என்று அவரிடம் விளக்கினால், அதன் பிறகாவது அவர் அதை சாப்பிடுவாரா? இல்லை, அவர் சாப்பிடமாட்டார். தன் மதத்தைச் சேர்ந்தவர்கள் சிக்கன் 65 ஐ கொடுத்தாலும், அவர் சாப்பிடமாட்டார்.
அசைவ உணவு உண்பவர்களின் உணர்விற்கு மதிப்பளித்து, வெஜிடேரியன்கள் சிக்கன் 65 ஐ சாப்பிட வேண்டும் என்று யாராவது சொல்வார்களேயானால், நீங்கள் அந்த வாதத்தை ஏற்பீர்களா?
ஒரு வெஜிடேரியன் சிக்கன் 65 ஐ சாப்பிட மறுப்பதை, யாராவது அவமதிப்பு என்றோ, சகிப்புத்தன்மை இல்லாத செயல் என்றோ சொல்கிறார்களா? யாரும் அப்படி சொல்வதில்லை. பெரும்பாலான வெஜிடேரியன்கள், தங்களுடைய மத நம்பிக்கையின் காரணமாகத் தான் சிக்கன் 65 ஐ சாப்பிட மறுக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொண்டு, அவர் சிக்கன் 65 ஐ சாப்பிட மறுப்பதற்கு ஒரு நியாயமான காரணம் இருப்பதாக நாம் ஒத்துக் கொள்கிறோம்.
வெஜிடேரியன்களின் விஷயத்தில் நாம் காட்டும் புரிந்துணர்வை, முஸ்லிம்கள் பிரசாதம் சாப்பிட மறுக்கும் விஷயத்திலும் நாம் காட்ட வேண்டும்.
முஸ்லிம்களும் மத நம்பிக்கையின் காரணமாகத் தான் பிரசாதம் சாப்பிடுவதில்லை
முஸ்லிம்களின் மத நம்பிக்கையின் படி, கடவுள் அல்லாத வேறு ஒருவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட உணவை சாப்பிடக் கூடாது. தர்காக்களில் அளிக்கப்படும் பிரசாதத்தை கூட முஸ்லிம்கள் சாப்பிடக் கூடாது.
கடவுள் திருக்குர்ஆனில் சொல்கிறார்:
தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, கடவுள் அல்லாதோருக்காக அர்பணிக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் (கடவுள்) உங்களுக்குத் தடை செய்துள்ளான்.
திருக்குர்ஆன் அத்தியாயம் 2: வசனம் 173
கடவுள் அல்லாத ஒருவருக்கு பிரசாதமாக எந்த உணவு செய்யப்பட்டாலும், அந்த உணவை முஸ்லிம்கள் சாப்பிடக்கூடாது என்பதை மேலே உள்ள வசனம் தெளிவுபடுத்துகிறது. ஒரு வெஜிடேரியனின் மத நம்பிக்கை, அவரை அசைவ உணவை சாப்பிட எப்படி அனுமதிக்கவில்லையோ, அதே போல், ஒரு முஸ்லிமின் மத நம்பிக்கை, அவரை பிரசாதம் சாப்பிட அனுமதிக்கவில்லை.
குறிப்பு: தர்காக்களில் அளிக்கப்படும் பிரசாதத்தை கூட முஸ்லிம்கள் சாப்பிடக்கூடாது. உதாரணம்: அஜ்மீர் தர்காவில் செய்யப்படும் ஜர்தா பிரசாதம். தர்காக்களில் அடக்கம் செய்யப்பட்டவர் எவ்வளவு பெரிய மகானாய் இருந்தாலும், அவர் ஒரு போதும் கடவுள் ஆக முடியாது என்று இஸ்லாம் கற்றுத் தருகிறது. குர்ஆனின் வழிகாட்டுதலைப் சரியாக பின்பற்றும் முஸ்லிம்கள், தர்காவில் செய்யப்படும் ஜர்தா பிரசாதத்தை சாப்பிட மாட்டார்கள். இதிலிருந்து இது எந்தவொரு குறிப்பிட்ட மதத்திற்கும் எதிரான கொள்கை இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

ஏன் இந்த கொள்கை?
இந்த பிரபஞ்சத்தையும் அதில் உள்ள அனைத்தையும், படைத்தவன் தான் கடவுள் என்று இஸ்லாம் போதிக்கிறது. காலமும் இடமும் கடவுளின் படைப்புக்களே. தன்னுடைய படைப்புக்களின் கட்டுப்பாட்டுக்குள் கடவுள் இருப்பானா? படைப்புக்கள், படைத்தவனை ஒரு போதும் கட்டுப்படுத்த முடியாது. பிரபஞ்சமும் அதில் உள்ள அனைத்தும் (மனிதர்கள், கிரகம் அல்லது பொருள்) நேரம் மற்றும் இடத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுகின்றன. எனவே, பிரபஞ்சமும் அதில் உள்ள அனைத்தும் ஒரு போதும் கடவுளாக இருக்க முடியாது.
இஸ்லாம் சொல்லும் கடவுள் கொள்கை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
- நம்மையெல்லாம் படைத்த கடவுள் ஒருவனே.
- கடவுளுக்கு பெற்றோரோ, மனைவியோ, பிள்ளைகளோ கிடையாது.
- கடவுளுக்கு உறக்கம், மறதி, போன்ற எந்த பலவீனங்களும் இல்லை.
- கடவுளுக்கு நிகரானவர் யாரும் இல்லை.
இந்த குணாதிசயங்கள் இல்லாத யாரும் கடவுளாக இருக்க முடியாது என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். இஸ்லாம் சொல்லும் கடவுளின் வரைவிலக்கணத்திற்கு வெளியே இருக்கும் ஒருவருக்கு, உணவு அர்பணிக்கப்பட்டால், அதை கடவுள் அல்லாத ஒருவருக்காக அர்பணிக்கப்பட்ட உணவாகவே, முஸ்லிம்கள் கருதுகிறார்கள். இதனால், முஸ்லிம்கள் அந்த உணவை சாப்பிட மாட்டார்கள். முஸ்லிம்கள் ஏன் பிரசாதம் சாப்பிடுவதில்லை என்று இப்போது உங்களுக்கு தெளிவாகத் புரிந்திருக்கும் என்று நம்புகிறோம்.
இஸ்லாத்தில் பாகுபாடு இல்லை
எல்லா மதத்தினருடன் இணக்கமாக வாழ வேண்டும் என்றே இஸ்லாம் அறிவுறுத்துகிறது. முஹம்மது நபி அவர்களின் வாழ்க்கையிலிருந்து ஓரிரு உதாரணங்களை இங்கு சுட்டிக் காட்டுகிறோம்.
ஒரு யூதர், முஹம்மது நபியை பார்லி-ரொட்டியுடன் கொழுப்பு பரிமாறப்பட்ட விருந்திற்கு அழைத்தார். இந்த அழைப்பை முஹம்மது நபி அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.
முஸ்னத் அஹமத்
மாற்று மதத்தவர்கள் விருந்திற்கு அழைத்தால், அந்த அழைப்பை ஏற்று விருந்திற்கு செல்ல வேண்டும் என்று கற்றுத் தரும் முஹம்மது நபி அவர்களின் எண்ணற்ற போதனைகள் உள்ளன. அதில் ஒன்றே ஒன்றை மட்டும் தான் நாம் இங்கு எடுத்துக் காட்டியுள்ளோம்.
இது மட்டுமல்லாமல், அண்டை வீட்டாருடன் உணவைப் பகிர்ந்து கொள்ளுமாறும் முஹம்மது நபி அவர்கள் ஊக்குவித்துள்ளார்கள்.
முஹம்மது நபி அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் சமைக்கும்போது, உங்கள் அண்டை வீட்டாருடன் பகிர்ந்து கொள்ளும் வகையில், கூடுதலாக சமையுங்கள்.
சஹீஹ் முஸ்லிம்
மாற்று மதத்தினர் தரும் உணவை முஸ்லிம்கள் உண்ண, இஸ்லாம் அனுமதிக்கிறது. அது மட்டுமல்ல, மாற்று மதத்தவரோடு உணவை பகிர்ந்து கொள்ளவும் இஸ்லாம் ஊக்குவிக்கிறது. அதனால்தான், உங்கள் அலுவலகத்திலோ, அக்கம் பக்கத்திலோ, பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ, முஸ்லிம்கள் தங்கள் உணவை முஸ்லிமல்லாதவர்களுடன் பகிர்ந்து கொள்வதையும், முஸ்லிமல்லாதவர்கள் கொடுக்கும் உணவுகளை சாப்பிடுவதையும் நீங்கள் காணலாம். முஸ்லிம்கள் ‘பிரசாதம்’ உண்ணாதது, அவமதிப்பு செய்வதற்கோ அல்லது சகிப்புத்தன்மையின்மையை வெளிப்படுத்துவதற்கோ அல்ல என்பதை இதிலிருந்து நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
நீங்களே கண் கூடாக காணலாம்
நீங்கள் முஸ்லிம்களுக்கு, பிரசாதம் அல்லாத உணவைக் கொடுத்துப் பாருங்கள். அவர்கள் அதை மகிழ்ச்சியோடு வாங்கி சாப்பிடுவார்கள். பாகுபாடு காட்ட வேண்டும் என்ற நோக்கம் இருந்தால், நீங்கள் தரும் எந்த உணவையும் முஸ்லிம்கள் சாப்பிடக்கூடாது. ஆனால் முஸ்லிம்கள் அப்படி நடந்துக் கொள்வதில்லை. முஹம்மது நபி அவர்கள், மக்கள் தங்களுக்கு இடையில் அன்பளிப்புகளை கொடுக்க வேண்டும் என்று கற்றுத் தந்தார்கள். பல சமயங்களில், உணவும் அன்பளிப்பாக கொடுக்கப்படுவதுண்டு என்பது நாம் எல்லோரும் அறிந்ததே.
முஹம்மது நபி அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்கு மத்தியிலே அன்பளிப்பு கொடுக்கும் பழக்கத்தை அதிகப்படுத்துங்கள். அது நேசத்தை அதிகரிக்கும்.
அதபுல் முப்ரத்
இஸ்லாம் சகோதரத்துவத்தை போதிக்கிறது
எல்லா மனிதர்களும், முதல் மனித ஜோடியான ஆதாம் மற்றும் ஏவாளின் பிள்ளைகள் என்று இஸ்லாம் சொல்கிறது. எனவே, மதம், மொழி, தேசம், தோல் நிறம், இதற்கெல்லாம் அப்பாற்பட்டு எல்லா மனிதர்களும் சகோதர சகோதரிகள் என்று இஸ்லாம் போதிக்கிறது.
கடவுள் குர்ஆனில் சொல்கிறார்:
மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் யார் நல்லவரோ, அவரே கடவுளிடத்தில் அதிகம் உயர்ந்தவர்.
திருக்குர்ஆன் அத்தியாயம் 49: வசனம் 13
எந்த மதத்தை நாம் பின்பற்றினாலும், நாமெல்லாம் சகோதர சகோதரிகள் என்பதை இந்த வசனம் தெளிவாகக் கூறுகிறது. இதனால், மக்களிடையே எந்தவிதமான பாகுபாடுகளுக்கும் அறவே இடமில்லை.
முஹம்மது நபி அவர்கள் கூறினார்கள்:
ஒரு அரபி, அரபியல்லாதவரை விட உயர்நதவர் அல்ல. அரபியல்லாதவர் அரபியை விட உயர்நதவர் அல்ல. கறுப்பினத்தைச் சேர்ந்தவர், வெள்ளையரை விட உயர்நதவர் அல்ல. வெள்ளையர் கறுப்பினத்தைச் சேர்ந்தவரை விட உயர்நதவர் அல்ல.
முஸ்னத் அஹமத்
பிறப்பால் எல்லா மனிதர்களும் சமமானவர்கள் என்றும், பிறப்பால் யாரும் உயர்ந்தவர்கள் இல்லை என்றும் இஸ்லாம் போதிக்கிறது. ஒருவருடைய நற்செயல்கள் மூலம் தான் அவர் உயர்ந்தவராக முடியும். இஸ்லாத்தினுடைய இந்த சமத்துவ கொள்கை, நாம் வாழும் காலத்திற்கு எவ்வளவு பொருத்தமாக உள்ளது என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
நம் சமூகத்தில், தாழ்த்தப்பட்டவர்கள் என்று கருதப்படுபவர்களால் சமைக்கப்பட்ட உணவை சாப்பிட மறுக்கும் நபர்களைப் பற்றிய செய்திகள் அடிக்கடி வருவதை நாம் பார்க்கிறோம். ஒரு சாதாரண உணவிற்கே இவ்வளவு பாகுபாடு என்றால், பிரசாதத்தின் நிலை எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். இஸ்லாம் போதிக்கும் சமத்துவ கொள்கையை பின்பற்றும் ஒரு முஸ்லிமால், ஒரு போதும் இது போன்ற பாகுபாடுகளை எண்ணிக் கூட பார்க்க முடியாது.
கட்டுரைச் சுருக்கம்
- வெஜிடேரியன்கள் தங்கள் மத நம்பிக்கையின் காரணமாக அசைவ உணவை சாப்பிடுவதில்லை. அதே போல், முஸ்லிம்கள் தங்கள் மத நம்பிக்கையின் காரணமாக பிரசாதம் சாப்பிடுவதில்லை.
- வெஜிடேரியன்களின் விஷயத்தில் நாம் காட்டும் புரிந்துணர்வை, முஸ்லிம்கள் பிரசாதம் சாப்பிட மறுக்கும் விஷயத்திலும் நாம் காட்ட வேண்டும்.
- இஸ்லாம் சமத்துவத்தை போதித்து, எல்லா மனிதர்களையும் சமமாக கருதுகிறது. எனவே, இஸ்லாத்தில் பாகுபாடுகளுக்கு முற்றிலும் இடமில்லை.
- மாற்று மதத்தினர் தரும் உணவை முஸ்லிம்கள் உண்ண, இஸ்லாம் அனுமதிக்கிறது. அது மட்டுமல்ல, மாற்று மதத்தவரோடு உணவை பகிர்ந்து கொள்ளவும் இஸ்லாம் ஊக்குவிக்கிறது.
- முஸ்லிம்கள் ‘பிரசாதம்’ உண்ணாதது, அவமதிப்பு செய்வதற்கோ அல்லது சகிப்புத்தன்மையின்மையை வெளிப்படுத்துவதற்கோ அல்ல.
- தர்காக்களில் அளிக்கப்படும் பிரசாதத்தை கூட முஸ்லிம்கள் சாப்பிடக்கூடாது. உதாரணமாக: அஜ்மீர் தர்காவில் அளிக்கப்படும் ஜர்தா பிரசாதம்.