முஸ்லிம்கள் பயங்கரவாதத்தைக் கண்டிக்கிறார்களா?

முஸ்லிம்கள் பயங்கரவாதத்தை கண்டிக்கின்றனர். அப்பாவி மக்களைக் கொல்வதை பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

முன்னுரை

ஆம், முஸ்லிம்கள் பயங்கரவாதத்தை மிக வன்மையாகக் கண்டிக்கின்றனர். பயங்கரவாதமும், அப்பாவி மக்களைக் கொல்வதும் இஸ்லாத்தால் கடுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளது என்பதால், உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய அறிஞர்கள், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் எல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதத்தைக் கடுமையாக எதிர்க்கின்றனர்.

பயங்கரவாதத்திற்கு எதிராக இஸ்லாமிய அறிஞர்களும், இஸ்லாமிய அமைப்புகளும் தந்த ஃபத்வாக்களையும், அப்பாவி மக்களைக் கொல்வதை பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை பற்றியும் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

ஃபத்வாக்கள்

இந்தியா முழுவதுமுள்ள 5.5 லட்சம் மசூதிகள் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம்

பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து (ஏப்ரல் 22, 2025), இந்தியா முழுவதும் 5.5 லட்சத்திற்கும் மேற்பட்ட மசூதிகள் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது பயங்கரவாத எதிர்ப்புச் செய்திகளை மக்களுக்கு எடுத்துரைத்து, தேசிய ஒற்றுமையை வலியுறுத்தியும், வன்முறையைக் கண்டித்தும் அறிக்கைகளை வெளியிட்டன. இஸ்லாம் அமைதியைக் கற்பிக்கிறது என்றும், முஸ்லிம்மல்லாதவர்கள் உட்பட எந்த அப்பாவி மக்களுக்கும் தீங்கு விளைவிப்பதைத் இஸ்லாம் தடை செய்கிறது என்றும் மதத் தலைவர்கள் வலியுறுத்தினர்.

5.5 லட்சம் மசூதிகள் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம்

இந்தியாவில் உள்ள முக்கிய இஸ்லாமிய அமைப்புகள் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம்

இந்தியாவின் மிக முக்கியமான இஸ்லாமிய அமைப்புகளான ஜமியத் உலேமா-இ-ஹிந்த், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மற்றும் ஜமாத்தே-இ-இஸ்லாமி ஹிந்த் ஆகியவை பயங்கரவாதத்தை இஸ்லாத்தின் அமைதிக் கொள்கைக்கு எதிரான “புற்றுநோய்” என்று கூறி, வலுவான கண்டன அறிக்கைகளை வெளியிட்டன. அப்பாவி மக்களைக் கொல்வது, இஸ்லாத்திற்கு விரோதமானது என்றும் மனிதாபிமானமற்றது என்றும் அறிவித்தன.

இஸ்லாத்தில் பயங்கரவாதத்திற்கு துளியும் இடமில்லை. பயங்கரவாதம் என்பது இஸ்லாம் ஊக்குவிக்கும் அமைதிக்கு எதிரான ஒரு புற்றுநோய். ஒவ்வொரு முஸ்லிமும் பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் எழுப்புவது அவசியம்.

ஜமியத் உலேமா-இ-ஹிந்த் தலைவர், மௌலானா அர்ஷத் மதனி

தெற்கு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய பயங்கரவாத தாக்குதலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். சுற்றுலாப் பயணிகள் உட்பட அப்பாவி மக்களின் உயிரிழப்பு மிகவும் வருத்தமளிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு எந்த நியாயமும் இருக்க முடியாது.

ஜமாத்தே-இ-இஸ்லாமி ஹிந்த் தலைவர் சாதாதுல்லாஹ் ஹுசைனி
இஸ்லாமிய அமைப்புகள் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம்

பிரபல இஸ்லாமிய மதரஸா தாருல் உலூம் தேவ்பந்த் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம்

வெள்ளிக்கிழமை, காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை ‘மனிதகுலத்திற்கு எதிரான செயல்’ என்று கண்டித்து, பிரபல இஸ்லாமிய மதரஸா தாருல் உலூம் தேவ்பந்த் கண்டனம் தெரிவித்துள்ளது. மதரஸாவின் ‘முஹ்தமிம்’ (மேலாளர்) முஃப்தி அபுல் காசிம் நோமானி, வன்முறைக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார்.

இந்த தாக்குதல் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்ததுள்ளது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் இரங்கல்கல்களை தெரிவிக்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்.

தாருல் உலூம் தேவ்பந்தின் மேலாளர் முஃப்தி அபுல் காசிம் நோமானி
மதரஸா தாருல் உலூம் தியோபந்த் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம்

கடந்த காலங்களிலும் கூட, இஸ்லாமிய அமைப்புகள் பயங்கரவாதத்தை கடுமையாக கண்டித்துள்ளன. இந்தியாவில் 1,050க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அறிஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு எதிராக ஃபத்வாவை வெளியிட்டனர், அதன் பயங்கரவாத செயல்கள் இஸ்லாமியத்திற்கு எதிரானவை என்றும் ஷரியாவின் கொள்கைகளுக்கு முரணானவை என்றும் அறிவித்தனர்.

1,000க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அறிஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு எதிராக ஃபத்வாவை வெளியிட்டனர்

இந்த ஃபத்வா பயங்கரவாதத்திற்கு எதிரான மிகப்பெரிய ஃபத்வாவாக கருதப்படுகிறது. இந்த ஃபத்வாவை அமெரிக்க அரசாங்கமே வரவேற்றது.

உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் பயங்கரவாதத்திற்குக் கண்டனம்

130க்கும் மேற்பட்ட அமெரிக்க முஸ்லிம் அமைப்புகள் பயங்கரவாதத்திற்குக் கண்டனம்

அமெரிக்காவில் உள்ள முஸ்லிம் அறிஞர்கள் பயங்கரவாதத்திற்கு எதிராக ஃபத்வாவை வெளியிட்டுள்ளனர். நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட முஸ்லிம் அமைப்புகள் இந்த தீர்ப்பை ஆதரித்துள்ளன.

மத தீவிரவாதத்தையும் அப்பாவி உயிர்களுக்கு எதிரான வன்முறையைப் பயன்படுத்துவதையும் இஸ்லாம் கடுமையாகக் கண்டிக்கிறது. பொதுமக்களைக் குறிவைக்கும் அனைத்து பயங்கரவாதச் செயல்களும் இஸ்லாத்தில் ‘ஹராம்’ – தடைசெய்யப்பட்டுள்ளன. எந்தவொரு பயங்கரவாதச் செயலிலும், வன்முறையில்  ஈடுபடும் குழுவுடன் ஒத்துழைப்பது அல்லது தொடர்பு கொள்வது ஒரு முஸ்லிற்கு ‘ஹராம்’ – தடை செய்யப்பட்டது ஆகும்.

ஃபிக்ஹ் கவுன்சிலின் தலைவர் முசம்மில் சித்திக்

ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கலைகளின் பேராசிரியரான ப்ரொபஸர் ஜான் வால், இந்த ஃபத்வாவை வரவேற்று, பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் அமெரிக்க முஸ்லிம் அமைப்புகள் உறுதியான நிலைப்பாட்டை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.

உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு – முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும், உண்மையான முஸ்லிம்கள் பயங்கரவாதத்தை நிராகரிக்கிறார்கள் என்பதை நினைவூட்டுவதில் இந்த ஃபத்வா ஒரு முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று நான் நினைக்கிறேன்.

ப்ரொபஸர் வால், ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம்
அமெரிக்க முஸ்லிம் அமைப்புகள் பயங்கரவாதத்திற்குக் கண்டனம்

பயங்கரவாதத்திற்கு எதிரான ஃபத்வாவில் அமெரிக்க-இஸ்லாமிய உறவுகள் கவுன்சில் (CAIR) கையெழுத்திட்டது

பயங்கரவாதத்திற்கு எதிரான ஃபத்வாவில் கையெழுத்திட்டதோடு மட்டுமல்லாமல், தீர்ப்பை விளக்க CAIR ஆங்கிலம், அரபு மற்றும் உருது மொழிகளில் வானொலி மற்றும் தொலைக்காட்சி பொது சேவை அறிவிப்புகளையும் வெளியிட்டது. பயங்கரவாதத்திற்கான கண்டனம் முஸ்லிம் அல்லாதவர்களை, அதாவது இஸ்லாம் வன்முறையை ஆதரிக்கிறது என்று தவறாக நம்பக்கூடியவர்களை, அமெரிக்காவிலும் உலக அளவிலும் உள்ள முஸ்லிம்களை சென்றடைய வேண்டும் என்பதை தெளிவுபடுத்துவதே அவர்களின் குறிக்கோளாக இருந்தது.

வட அமெரிக்கா முழுவதும் உள்ள இமாம்கள் அல்லது இஸ்லாமிய மதத் தலைவர்களை வெள்ளிக்கிழமை தொழுகையின் போது ‘ஃபத்வா’வைப் படிக்குமாறு நாங்கள் அழைக்கிறோம், வெள்ளிக்கிழமை இஸ்லாத்தில் கூட்டு பிரார்த்தனை நாளாகும்.

இப்ராஹிம் ஹூப்பர், CAIR செய்தித் தொடர்பாளர்
பயங்கரவாதத்திற்கு எதிரான ஃபத்வாவை அமெரிக்க-இஸ்லாமிய உறவுகள் கவுன்சில் (CAIR) வெளியிட்டது

சர்வதேச இஸ்லாமிய ஃபிக் அகாடமி பயங்கரவாதத்திற்குக் கண்டனம்

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) கீழ் உள்ள ஒரு அமைப்பான சர்வதேச இஸ்லாமிய ஃபிக் அகாடமி, உலகளாவிய முஸ்லிம் சமூகத்திற்குள் ஒரு செல்வாக்கு மிக்க நிறுவனமாகும். இதில் சவுதி அரேபியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த மத அறிஞர்கள் உள்ளனர். வன்முறையை நிராகரித்து, அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் கண்டிக்கும் பல தீர்மானங்களையும் அறிவிப்புகளையும் இந்த அகாடமி வெளியிட்டுள்ளது.

பயங்கரவாதத்தின் அனைத்து செயல்கள், வடிவங்கள் மற்றும் நடைமுறைகளைத் தடை செய்தல், அவற்றை ஹிராபாவின் குற்றமாகக் (பெருங்குற்றமாகக்) கருதுதல் ஆகியவை இந்த தீர்மானத்தில் நிறைவேற்றப்படுகின்றன. பயங்கரவாத செயல்கள் எங்கு செய்யப்பட்டாலும், அதை யார் செய்தாலும், அவர் ஒரு பயங்கரவாதியாகக் கருதப்படுவார்.

தீர்மானம் எண். 154 (3/17), சர்வதேச இஸ்லாமிய ஃபிக் அகாடமி
இஸ்லாமிய ஃபிக் அகாடமி பயங்கரவாதத்திற்குக் கண்டனம்

இஸ்லாம் ஏன் பயங்கரவாதத்தைக் கண்டிக்கிறது?

மனித வாழ்வின் புனிதத்தன்மை பற்றி குர்ஆன்

ஒவ்வொரு மனித உயிரும் புனிதத்தன்மை மிக்கது என்று தெளிவாக குர்ஆன் கூறுகிறது. குர்ஆனில் கடவுள் கூறுகிறார்:

கொலைக்கான தண்டனையாகவோ, அல்லது பூமியில் குழப்பத்தைப் பரப்பிய காரணத்திற்காகவோ இல்லாமல் ஒருவர், மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்.

குர்ஆன் அத்தியாயம் 5: வசனம் 32

மனித வரலாற்றில் நடந்த முதல் கொலை, முதல் மனிதரான ஆதாமின் மகன் பொறாமையால் தன் சகோதரனைக் கொன்றது தான். இந்த சம்பவத்தை பற்றி சொல்லி விட்டு (5 ஆம் அத்தியாயத்தின் 30 ஆம் வசனத்தைப் பார்க்கவும்), அதன் தொடர்ச்சியாகத் தான் மேலே உள்ள வசனம் வருகிறது.

குர்ஆனில் அப்பாவி மக்களைக் கொல்வதை கடுமையாகத் தடை செய்யும் பல வசனங்கள் உள்ளன. அவை மனித உயிர் புனிதமானது என்றும் அது பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன.

இறைவன் தடுத்துள்ள எந்த ஓர் உயிரையும் தக்க (சட்டரீதியான) காரணமின்றி கொலை செய்யாதீர்கள்.

குர்ஆன் அத்தியாயம் 17: வசனம் 33

இறைவன் தடை செய்துள்ள எந்த உயிரையும் தக்க (சட்டரீதியான) காரணமின்றி கொல்ல மாட்டார்கள்.

குர்ஆன் அத்தியாயம் 25: வசனம் 68

இறுதித் தூதர் முஹம்மது (அவரின் மீது இறைவனின் சாந்தி உண்டாகட்டும்) அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக, (நியாயத் தீர்ப்பு நாளில்) மக்களிடையே முதலில் விசாரிக்கப்படும் வழக்குகள் கொலை வழக்குகளாகவே இருக்கும்.

திர்மிதி # 1396

இறைத்தூதரின் இந்த பொன்மொழி, ஒரு அப்பாவியைக் கொல்வது மிகவும் மோசமான பாவங்களில் ஒன்றாகும் என்பதை எடுத்துக்காட்டுகிறது. அநியாயமாக ஒரு மனிதரைக் கொல்வது, சமூகத்தை ஆழமாக பாதிக்கிறது. சமூக நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கிறது. எனவே, கொலை செய்பவர்கள் நியாயத்தீர்ப்பு நாளில் கடவுளால் கடுமையாக தண்டிக்கப்படுகிறார்கள்.

கருத்துச் சுருக்கம்

  1. உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் அறிஞர்களும், இஸ்லாமிய அமைப்புகளும் பயங்கரவாதத்தைக் கண்டித்து ஃபத்வாக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன.
  2. குர்ஆனும்,  இறுதி இறைத்தூதர் அவர்களின் போதனைகளும், அப்பாவிகளைக் கொல்வதையும், பயங்கரவாதத்தையும் தடைசெய்கின்றன.
  3. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் போன்ற சம்பவங்களை, இந்தியாவில் உள்ள முஸ்லிம் தலைவர்களும்,  இஸ்லாமிய அமைப்புகளும் வன்மையாகக் கண்டித்தன.

முடிவுரை

இஸ்லாம் அமைதியையும், நீதியையும் அடிப்படையாக கொண்ட மார்க்கம். அது மனித உயிரின் புனிதத்தை வலியுறுத்துகிறது. இஸ்லாத்தில் பயங்கரவாதத்திற்கு எந்த இடமும் இல்லை. உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான முஸ்லிம்கள் பயங்கரவாதத்தை  நிராகரிக்கின்றனர்.  உலகளவில் முஸ்லிம் அறிஞர்களும் இஸ்லாமிய அமைப்புகளும் விழிப்புணர்வு பிரச்சாரம் மூலம் பயங்கரவாத சிந்தனைகளுக்கு எதிராக களமாற்றி வருகின்றனர்.

மேலும் படிக்க

“காஃபிர்” என்பது இழிவான சொல்லா? இந்துக்களை காஃபிர் என்று கூறி குர்ஆன் இழிவுபடுத்துகிறதா? Is Quran abusing Hindus by calling them Kafir? Curious Hats

“காஃபிர்” என்பது இழிவான சொல்லா? இந்துக்களை காஃபிர் என்று கூறி குர்ஆன் இழிவுபடுத்துகிறதா?

WHAT OTHERS ARE READING

Most Popular