முஸ்லிம்கள் கஃபாவை வணங்குகிறார்களா?

முஸ்லிம்கள் கஃபாவை வணங்குவதில்லை. கஃபாவின் திசை நோக்கி இறைவனையே முஸ்லிம்கள் வணங்குகிறார்கள்.

முஸ்லிம்கள் கஃபாவை வணங்குவதில்லை. நம்மை எல்லாம் படைத்த அந்த ஓர் இறைவனைத் தவிர வேறு எதையும் வணங்கக் கூடாது என்று இஸ்லாம் போதிக்கிறது. மனிதர்களையோ, இயற்கையையோ, பொருட்களையோ, கஃபா போன்ற கட்டிடங்களையோ வணங்குவது பாவங்களிலேயே மிகப் பெரிய பாவம் என்று இஸ்லாம் கற்றுத் தருகிறது. உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் கஃபாவின் திசை நோக்கி தொழுகிறார்கள். முஸ்லிம்கள் கஃபாவை தொழவில்லை, அதன் திசை நோக்கி இறைவனையே தொழுகிறார்கள்.

கஃபா என்றால் என்ன?

புகழ்பெற்ற கால்பந்து வீரர் பாக்பா கஃபாவின் முன்னால்..

கஃபா என்பது புனித நகரமான மக்காவில் அமைந்துள்ள ஒரு கனசதுர வடிவில் உள்ள கட்டிடம். முதல் மனிதரான ஆதாம், நம்மை எல்லாம் படைத்த கடவுளை வணங்குவதற்காக, பூமியில் கட்டிய முதல் வழிபாட்டுத் தலம் தான் மக்காவில் உள்ள கஃபா ஆலயம்.

இறைவன் திருகுர்ஆனில் கூறுகிறான்:

நிச்சயமாக (இவ்வுலகில் இறைவனை வணங்குவதற்காக) மனிதர்களுக்கு அமைக்கப்பட்ட முதல் ஆலயம் ‘பக்கா’ (எனும் மக்கா) வில் உள்ளதாகும். அது மிக்க பாக்கியமுள்ளதாகவும், உலகத்தாருக்கு  நேர்வழிகாட்டியாகவும் இருக்கிறது.

குர்ஆன் 3:96

ஒரு மனிதர், இறுதித் தூதர் முஹம்மது (அவரின் மீது இறைவனின் சாந்தி உண்டாகட்டும்) அவர்களிடம்:
“இறைத்தூதரே! பூமியில் முதன் முதலாக அமைக்கப்பட்ட வழிப்பாட்டு தலம் எது?” என்று கேட்டார்.
(மக்கா நகரில் உள்ள) புனித (கஃபா அமைந்திருக்கும்) இறையில்லம்.” என்று இறைத்தூதர் பதிலளித்தார்கள்.

புகாரி # 3366

முஸ்லிம்கள் ஏன் கஃபாவின் திசை நோக்கி தொழுகிறார்கள்?

முஸ்லிம்கள் தொழுகையின் போது, கஃபாவின் திசை நோக்கியே தொழுகை நடத்த வேண்டும் என்று இறைவன் கட்டளையிடுகிறான். அதனால், முஸ்லிம்கள் எந்த நாட்டில் இருந்தாலும், தொழுகை நடத்தும் போது கஃபாவின் திசை நோக்கி ஒரே சீராக, நம்மை எல்லாம் படைத்த இறைவனைத் தொழுகிறார்கள்.

இறைவன் திருகுர்ஆனில் கூறுகிறான்:

உமது முகத்தை (கஃபா எனும்) புனிதப் பள்ளியின் திசையில் திருப்புவீராக! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் (தொழுகையின் போது) திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்!

குர்ஆன் 2:144

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் கஃபாவை தொழவில்லை. மாறாக, அதன் திசை நோக்கி இறைவனையே தொழுகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

வணக்கம் என்பது இறைவனுக்கு மட்டுமே

இறைவனைத் தவிர வேறு ஒரு பொருளையோ, மனிதரையோ, இயற்கையையோ வணங்குவதை, இறைவன் தடை செய்துள்ளார்.

இறைவன் திருகுர்ஆனில் கூறுகிறான்:

உமது இறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்று கட்டளையிட்டுள்ளான்.

குர்ஆன் 17:23

கடவுளைத் தவிர வேறு எதையும் (சிலைகள், மனிதர்கள், இயற்கை போன்றவற்றை) வணங்காதீர்கள்.

குர்ஆன் 6:151

கஃபாவின் உள்ளே சிலைகள் இருக்கிறதா?

கஃபாவுக்குள் சிலைகள் எதுவும் கிடையாது. சிலைகள், மனிதர்கள், இயற்கை, மனிதனால் கட்டப்பட்ட எந்த ஒரு  கட்டிடடத்தையும் வணங்குவது மிகப் பெரிய பாவம் என்பதால், கஃபாவின் உள்ளே சிலைகள் எதுவும் கிடையாது. மனிதர்கள் ஒரே கடவுளை வணங்குவதற்காக அமைக்கப்பட்ட முதல் வழிபாட்டுத் தலமான  கஃபா, இன்று வரை அந்த நோக்கத்திற்காகவே பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

கஃபாவின் உள்ளே என்ன இருக்கிறது?
கஃபாவின் உட்புறத் தோற்றம்
வாசனை திரவியங்கள் வைக்கப்படும் சிறிய அலமாரிப் பெட்டி

கஃபாவின் உட்புறத்தைச் சுத்தம் செய்ய பயன்படுத்தபடும் வாசனை திரவியங்களையும், வாசனை எண்ணெய்களையும் வைக்க இந்தப் சிறிய அலமாரிப் பெட்டி பயன்படுத்தப்படுகிறது.

எண்ணெய் விளக்குகள்

இந்த எண்ணெய் விளக்குகள் கடந்த காலத்தில் சுல்தான்களாலும், ஆட்சியாளர்களால் பரிசாக வழங்கப்பட்டன. அவற்றில் வாசனை திரவியங்கள் நிரப்பி வைக்கப்படுகின்றன.

முடிவுரை

முஸ்லிம்கள் கஃபாவை வணங்குவதில்லை. கஃபாவின் திசை நோக்கி முஸ்லிம்கள்  இறைவனை வணங்குகிறார்கள். ஒரே கடவுளை வணங்குவதற்காக கட்டப்பட்ட முதல் வழிபாட்டுத் தலமாக கஃபா இருப்பதால், அது போற்றப்படுகிறது. முஸ்லிம்கள், நம்மை எல்லாம் படைத்த இறைவனை மட்டுமே வணங்குகிறார்கள். கஃபாவையோ, இறைவனின் இறுதி இறைத்தூதரான முஹம்மது நபியையோ, வேறு எந்தப் படைப்பினத்தையோ அவர்கள் வணங்குவதில்லை.

மேலும் படிக்க

“காஃபிர்” என்பது இழிவான சொல்லா? இந்துக்களை காஃபிர் என்று கூறி குர்ஆன் இழிவுபடுத்துகிறதா? Is Quran abusing Hindus by calling them Kafir? Curious Hats

“காஃபிர்” என்பது இழிவான சொல்லா? இந்துக்களை காஃபிர் என்று கூறி குர்ஆன் இழிவுபடுத்துகிறதா?

WHAT OTHERS ARE READING

Most Popular