செல்வம், குழந்தைகளை விட நிலையான நற்செயல்கள் தான் முக்கியம் என்பதை உணர்த்த சூரா அல்-கஹ்ஃபில் அல்லாஹ் ஒரு அற்புதமான உதாரணத்தை கூறுகிறான்.
அல்லாஹ் இவ்வுலக வாழ்க்கையை வானத்திலிருந்து பொழியும் மழைக்கு ஒப்பிடுகிறான்.
இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணத்தை அவர்களுக்குக் கூறுவீராக: அது நாம் வானத்திலிருந்து இறக்கி வைக்கும் மழையைப் போன்றது; அதன் மூலம் பூமியின் தாவரங்கள் செழித்து வளர்கின்றன. (பின்னர்) அவை சருகுகளாக மாறின. அவற்றைக் காற்று அடித்துச் சென்றது.
குர்ஆன் 18:45
மழை பூமிக்கு உயிர் கொடுக்கிறது. செடிகள் வளர்கின்றன, பசுமை பரவுகிறது, எல்லாம் அழகாக தெரிகிறது. ஆனால் இது நிலைப்பதில்லை. விரைவில் அந்தத் தாவரங்கள் காய்ந்து சருகுகளாகி, காற்றால் அடித்துச் செல்லப்படுகின்றன.
இதுவே உலக வாழ்க்கையின் யதார்த்தம். மழையைப் போலவே நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு அருளும் — ஆரோக்கியம், வசதி, வெற்றி, அந்தஸ்து, இவையெல்லாம் அல்லாஹ்விடமிருந்து வந்தவை. ஆனால், அந்தத் தாவரங்களைப் போலவே, இவையும் தற்காலிகமானவை.
குர்ஆனுக்கு ஒரு முஸ்லிம் செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றி அறிய, இங்கே கிளிக் செய்யவும்.
செல்வமும் குழந்தைகளும்
இந்த உதாரணத்தை சொல்லிவிட்டு, அல்லாஹ் நமது கவனத்தை நம் வாழ்க்கையின் பக்கம் திருப்புகிறான்.
செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியாகும். நிலையான நற்செயல்களே உமது இறைவனிடம் கூலியில் சிறந்ததும், எதிர்பார்க்கப்படுவதில் சிறந்தது மாகும்.
குர்ஆன் 18:46
செல்வமும் குழந்தைகளும் அல்லாஹ் இவ்வுலகில் வழங்கும் மிகப்பெரிய அருட்கொடைகளில் ஒன்றாகும். அவை நமக்கு நிம்மதியையும், மகிழ்ச்சியையும், வாழ்விற்கு ஒரு பொருளையும் தருகின்றன. ஆனால், அவை என்றும் நிலைப்பதில்லை. ஒரு நாள் ஒவ்வொரு மனிதனும் இவ்வுலகை விட்டுப் பிரிவான். செல்வம் அவனுடன் வராது. குடும்பமும் அவனுடன் வராது. ஆனால் ஒன்று மட்டும் மரணத்திற்கு பின் அவனுடன் வரும். அது….
மரணத்திற்குப் பின் நம்மோடு வருவது எது?
அல்லாஹ் அவற்றை ‘அல்பாகியாத்துஸ் ஸாலிஹாத்’ (الباقيات الصالحات) — அதாவது “நிலையான நற்செயல்கள்” என்று குறிப்பிடுகிறான்.
நாம் அனுபவிக்கும் உலகப் பொருட்களைப் போலன்றி, நற்செயல்கள் மறைந்து விடுவதில்லை. அவை பதிவு செய்யப்பட்டு, ஒரு முஃமினுடன் மறுமை வரை துணையாக வருகின்றன.
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் இதே யதார்த்தத்தை வலியுறுத்தினார்கள்:
ஒரு மனிதன் இறந்துவிட்டால், மூன்று நற்செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் அவரிடமிருந்து துண்டிக்கப்பட்டுவிடுகின்றன:
ஸஹீஹ் முஸ்லிம் # 1631
1. நிலையான தர்மம் (ஸதக்கத்துல் ஜாரியா),
2. பிறருக்குப் பயன்படும் கல்வி,
3. அவருக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்ல பிள்ளைகள்.
நிலையான நற்செயல்களே சிறந்த முதலீடு
அல்லாஹ், இந்த வசனத்தை ஒரு ஆழமான செய்தியுடன் முடிக்கிறான்.
‘நிலையான நற்செயல்களே உமது இறைவனிடம் கூலியில் சிறந்ததும், எதிர்பார்க்கப்படுவதில் சிறந்தது மாகும்.‘
வாழ்க்கையில், நாம் பல விஷயங்களின் மீது எதிர்பார்ப்பு வைக்கிறோம்.
- நல்ல வேலைக்காக கல்வியின் மீது எதிர்பார்ப்பு
- அதிக வருமானத்திற்காக வேலையின் மீது எதிர்பார்ப்பு
- மகிழ்ச்சியான குடும்ப வாழ்விற்கு திருமணத்தின் மீது எதிர்பார்ப்பு
- வசதிக்காக செல்வத்தின் மீது எதிர்பார்ப்பு
சூழ்நிலைகள் மாறுகின்றன. நம் திட்டங்கள் தோல்வியடைகின்றன. நம் எதிர்பார்ப்புகள் தகர்ந்து போகின்றன.
நாம் பெரும்பாலும் நம் எதிர்பார்ப்புகள் விஷயத்தில் ஏமாந்து தான் போகிறோம்.
நான் ஒருபோதும் ஏமாற்றமடையக் கூடாது என்று நீங்கள் விரும்பினால், நீங்கள் செய்யும் நிலையான நற்செயல்களின் மீது எதிர்பார்ப்பு வையுங்கள். ஏனெனில் நற்செயல்கள் மீது வைக்கப்படும் எதிர்பார்ப்பு ஒருபோதும் ஏமாற்றமளிக்காது.
ஒவ்வொரு நற்செயலையும் அல்லாஹ் பதிவு செய்து, அதற்கு மறுமையில் கூலி தருவான்.
நிலையான நற்செயல்கள் மீது கவனம் செலுத்துங்கள்
ஒரு புத்திசாலியான இறைவிசுவாசி, மரணத்திற்குப் பிறகும் நிலைத்து நிற்கும் ‘அழியாத நற்செயல்களை’ சுற்றியே தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வான்.
- உண்மையான சொத்துக்களை அடையாளம் காணுங்கள். உங்களின் உண்மையான சொத்துக்கள் உங்கள் நற்செயல்களே.
- அருட்கொடைகளால் திசைதிரும்பி விடாதீர்கள். செல்வமும் குழந்தைகளும் அல்லாஹ்வின் அருட்கொடைகள், ஆனால் அவை உங்களை நற்செயல்கள் செய்வதிலிருந்து திசைதிருப்பி விடக் கூடாது.
- மரணத்திற்கு பின்னும் நன்மைகளைத் தரும் காரியங்களில் முதலீடு செய்யுங்கள். பள்ளிவாசல்கள் கட்டுதல், பள்ளிகள், மருத்துவமனைகள், அனாதைகளை ஆதரித்தல், குடிநீர் வசதி செய்து தருதல் போன்ற மக்களுக்குத் தொடர்ந்து பயன்படும் காரியங்களுக்கு உதவுங்கள்.
- பயனுள்ள கல்வியைப் பகிருங்கள். சமூக ஊடகங்களை நற்காரியங்களுக்குப் பயன்படுத்துங்கள். உங்கள் டிஜிட்டல் தடம் நீங்கள் மறைந்த பிறகும் வாழும்.
முடிவுரை
உலக வாழ்க்கை என்பது மழைக்குப் பின் முளைக்கும் செடிகளைப் போன்றது. அவை அழகாக காட்சியளிக்கும். ஆனால், குறுகிய காலம் மட்டும் வாழ்ந்து மடிந்து போவம் என்று அல்லாஹ் குர்ஆனில் நமக்கு நினைவூட்டுகிறான். செல்வம், குடும்பம், வசதி வாய்ப்பு இவை எல்லாவற்றையும் விட்டு நாம் விடைபெற வேண்டும். ஆனால் நிலையான நற்செயல்கள் மட்டுமே நம்மோடு இறந்த பின்பும் நம்மோடு வரும்.
நீங்கள் இறந்த பிறகும் உங்களுடன் வரும் அந்த நிலையான நற்செயல்களின் மீது கவனம் செலுத்துங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)
இஸ்லாத்தில் ‘நிலையான நற்செயல்கள்’ என்றால் என்ன?
நாம் மரணித்த பிறகும் நமக்கு நன்மையை தந்து கொண்டிருக்கும் நற்செயல்களையே நிலையான நற்செயல்கள் என்று இஸ்லாம் சொல்கிறது. உதாரணமாக: தர்மம் செய்தல், பிறருக்கு உதவுதல், பயனுள்ள கல்வியை பகிர்தல் போன்றவை இதில் அடங்கும்.
திருக்குர்ஆனில் ‘நிலையான நற்செயல்கள்’ பற்றி எங்கே வருகிறது?
நிலையான நற்செயல்கள் பற்றி சூரா அல்-கஹ்ஃப், வசனம் 46 (18:46) பேசுகிறது. அந்த வசனத்தில் அல்லாஹ், செல்வத்தையும் குழந்தைகளையும் விட நிலையான நற்செயல்களே இறைவனிடம் கூலியில் சிறந்ததும், எதிர்பார்க்கப்படுவதில் சிறந்தது மாகும் என்று கூறுகிறான்.
திருக்குர்ஆன் ஏன் உலக வாழ்க்கையைத் தாவரங்களுக்கு ஒப்பிடுகிறது?
தாவரங்கள் விரைவாக வளர்ந்து அழகாகத் தோன்றி, பிறகு காய்ந்து காற்றால் அடித்துச் செல்லப்படுவது போலவே, இவ்வுலக வாழ்க்கையும் தற்காலிகமானது என்பதை விளக்குவதற்காக இந்த ஒப்பீடை குர்ஆன் செய்கிறது.
மரணத்திற்குப் பிறகும் நற்செயல்கள் பலன் தருமா?
ஆம். நற்செயல்கள் ஒரு மனிதனுக்கு மறுமை வரை பலன் தரும் என்றும், குறிப்பாக நிலையான தர்மம் (ஸதக்கத்துல் ஜாரியா) மற்றும் பயனுள்ள கல்வி போன்றவை மரணத்திற்குப் பிறகும் அவருக்குப் பலன் அளிக்கும் என்றும் இஸ்லாம் கற்பிக்கிறது. (ஸஹீஹ் முஸ்லிம் # 1631)
