நீங்கள் நடக்கிறீர்களா அல்லது ஓடுகிறீர்களா?
என்ன புரியவில்லையா?
நம்மில் பலர் தொழில், செல்வம், அங்கீகாரம், வசதிகளை நோக்கி சோர்வின்றி ஓடுகிறோம். ஆனால் மறுமை என்று வரும்போது, நமது ஓட்டம் குறைவாகிவிடுகிறது. துன்யாவை விட மறுமைக்குத் தான் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று குர்ஆன் நமக்குக் கற்பிக்கிறது.
குர்ஆன் சொல்வதை உண்மையிலேயே தனது வாழ்வின் வழிகாட்டுதலாக எடுக்க நினைக்கும் ஒருவர், குர்ஆன் எதற்கு முன்னுரிமை கொடுக்கிறதோ, அதற்கு முன்னுரிமை கொடுக்க கற்றுக் கொள்ளவேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்:
இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும் கேளிக்கையுமே தவிர வேறில்லை. தக்வா உடையவர்களுக்கு மறுமையின் வீடே மிகச் சிறந்தது. நீங்கள் புரிந்து கொள்ள மாட்டீர்களா?
குர்ஆன் 6:32
அல்லாஹ் இந்த வசனத்தை “நீங்கள் புரிந்து கொள்ள மாட்டீர்களா?” என்ற ஒரு கேள்வியுடன் முடிக்கிறான். தக்வா உடையவர்களாக மாற விரும்பும் நாம், இந்த வசனத்தில் அல்லாஹ் சொல்வதை புறக்கணிக்கக் கூடாது.
துன்யா என்பது நம் கவனத்தை சிதறடிக்கும் கேளிக்கை என்று அல்லாஹ் விவரிக்கிறான். அதேசமயம் மறுமை வாழ்வு என்பது நிலையானது என்பதால், அதுவே சிறந்தது என்று அறிவுறுத்துகிறான்.
மறுமைக்குத் தான் முன்னுரிமை – குர்ஆன் சொல்லும் பாடம்
மறுமையைப் பற்றி பேசும் வசனங்களில் அல்லாஹ் பயன்படுத்தும் வார்த்தைகளைக் கவனியுங்கள்.
மறுமையைப் பற்றி பேசும்போது அல்லாஹ் கூறுகிறான்:
- உங்கள் இறைவனின் மன்னிப்பிற்கும் சொர்க்கத்திற்கும் முந்திக் கொண்டு விரைந்து செல்லுங்கள்.(குர்ஆன் 57:21)
- இறைவனின் மன்னிப்பிற்கும் சொர்க்கத்திற்கும் விரைந்து செல்லுங்கள். (குர்ஆன் 3:133)
- அல்லாஹ்வின் நினைவின் பக்கம் விரைந்து செல்லுங்கள். (குர்ஆன் 62:9)
இந்த வார்த்தைகள் நமக்கு அவசரத்தை உணர்த்துகின்றன.
ஆனால் உலக விஷயங்களைப் பற்றி பேசும்போது அல்லாஹ் பயன்படுத்தும் வார்த்தைகளை பாருங்கள்.
- அதன் (பூமியின்) தோள்களில் நடந்து சென்று, அவன் வழங்கிய உணவிலிருந்து உண்ணுங்கள். (குர்ஆன் 67:15)
- பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள். (குர்ஆன் 62:10)
நடந்து செல்லுங்கள். பரவிச் செல்லுங்கள். மறுமைக்காக அல்லாஹ் நமக்கு உணர்த்திய அவசரம், துன்யாவிற்கு இல்லை.
மறுமைக்குத் தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை மிக அழகாக, நுட்பமாக அல்லாஹ் இந்த வார்த்தை பிரயோகத்தின் மூலமாக நமக்கு கற்பிக்கிறான். இதை நாம் சரியாக புரிந்து கொண்டால், மறுமைக்காகத் தான் அவசரப்படுவோம்.
இன்று நாம் அவசரப்படுவது, போட்டியிடுவது, பிறரை முந்துவது மறுமைக்காகவா?
துன்யாவின் உண்மையான மதிப்பு
இந்த உலகம் எவ்வளவு மதிப்பற்றது என்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தினார்கள்.
அல்லாஹ்வின் பார்வையில் இவ்வுலகம் ஒரு கொசுவின் இறக்கைக்கு சமமானதாக இருந்திருந்தால், அவன் ஒரு நிராகரிப்பாளருக்கு இதிலிருந்து ஒரு சொட்டுத் தண்ணீரைக் கூட குடிக்கக் கொடுத்திருக்க மாட்டான்.
திர்மிதி # 2320
அவர்கள் மேலும் கூறினார்கள்:
மறுமையுடன் ஒப்பிடும்போது இவ்வுலகம் என்பது, உங்களில் ஒருவர் கடலில் தன் விரலை நனைத்து எடுப்பது போன்றதாகும். அந்த விரலில் ஒட்டிக் கொண்டு இருக்கும் நீர் எவ்வளவு என்பதை அவர் பார்க்கட்டும்.
ஸஹீஹ் முஸ்லிம் # 2858
எவ்வளவு அருமையான உதாரணம். பெருங்கடலோடு ஒரு துளியை ஒப்பிட முடியுமா? இவ்வளவு தெளிவாக நபி (ஸல்) நமக்கு கற்றுத் தந்த பிறகும், அந்த ஒரு துளிக்காகத் தான் ஓடுகிறோம், போட்டியிடுகிறோம்.
திட்டமிடாமல் இருப்பது தோல்விக்குத் திட்டமிடுவதாகும்
மறுமையின் நிலையான வாழ்விற்கு திட்டமிடத் தவறிய ஒரு மனிதனின் புலம்பலை அல்லாஹ் இவ்வாறு சொல்லிக் காட்டுகிறான்:
ஐயோ! என் வாழ்விற்காக நான் முன்னதாகவே எதையேனும் (நற்செயல்களை) அனுப்பி வைத்திருக்கக் கூடாதா? என்று அவன் புலம்புவான்.
குர்ஆன் 89:24
மறுமை வாழ்வைப் பற்றி பேசும்போது அந்த மனிதன் “என் வாழ்க்கை” என்று கூறுவதைக் கவனியுங்கள். மறுமை நாளில், மக்கள் இவ்வுலக வாழ்க்கையை ஒரு “வாழ்க்கையாகவே” கருத மாட்டார்கள் என்பதை இது உணர்த்துகிறது.
குர்ஆனின் மற்றொரு வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்:
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு தக்வாவோடு நடந்து கொள்ளுங்கள். மேலும், ஒவ்வொருவரும் நாளைக்காக (மறுமைக்காக) தான் எதை முற்படுத்தி வைத்திருக்கிறார் என்பதை (சிந்தித்து) பார்க்கட்டும். அல்லாஹ்வுக்கு தக்வாவோடு நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவன்.
குர்ஆன் 59:18
இமாம் இப்னு கதிர் இந்த வசனத்திற்குத் தனது தப்சீரில் இவ்வாறு விளக்கம் கூறுகிறார்:
நீங்கள் (அல்லாஹ்வால்) விசாரணை செய்யப்படுவதற்கு முன்பு உங்களை நீங்களே விசாரணை செய்து கொள்ளுங்கள். உங்கள் செயல்கள் அல்லாஹ்விடம் சமர்ப்பிக்கப்படும் நாளுக்காக, உங்கள் ரப்பு முன் நீங்கள் நிறுத்தப்படும் நாளுக்காக எவ்வளவு நற்செயல்களைச் சேமித்து வைத்திருக்கிறீர்கள் என்று பாருங்கள்.
தப்சீர் இப்னு கதீர் 59:18
சுயபரிசோதனை செய்வது, மறுமைக்காக திட்டமிடுவதன் முக்கியத்துவத்தை இந்த வசனம் நமக்கு உணர்த்துகிறது.
அல்லாஹ் எடுத்துக்காட்டும் தக்வா உடையவர்களின் பண்புகளில் எத்தனை உங்களிடம் உள்ளன, எத்தனை இல்லை என்பதை அறிந்துக் கொள்ள இந்த சுயபரிசோதனைப் படிவத்தை பயன்படுத்தவும்.
உங்கள் மறுமைக்காக நீங்கள் என்ன முதலீடுகள் செய்துள்ளீர்கள்?
உங்கள் மறுமைக்காக எப்போது திட்டமிடப் போகிறீர்கள்?
முடிவுரை
நமது மறுமைக்கு தயார் செய்ய தேவைப்படும் எல்லாவற்றையும் அல்லாஹ் நம் ஒவ்வொருவருக்கும் வழங்கியுள்ளான். அதை நாம் சரியாகப் பயன்படுத்துகிறோமா என்பது தான் கேள்வி.
தக்வாவை அடைய முயற்சி செய்யும் நாம், அல்லாஹ் நமக்கு கற்றுத் தருவது போல், துன்யாவை விட மறுமைக்குத் தான் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
நீங்கள் உண்மையிலேயே மறுமைக்கு முன்னுரிமை அளிக்க விரும்பினால், அல்லாஹ் எதற்கு விரையுங்கள் என்று சொல்கிறானோ, அதற்க்காக நீங்களும் விரைய வேண்டும்.
துன்யாவிற்காக நடந்து செல்லுங்கள்.
மறுமைக்காக ஓடிச் செல்லுங்கள், போட்டி போட்டுக் கொண்டு முந்துங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)
இஸ்லாம் துன்யாவிற்காக உழைப்பதைத் தடுக்கிறதா?
இல்லை. வாழ்வாதாரத்தைத் தேடுவதை இஸ்லாம் அனுமதிக்கிறது, ஆனால் அதையே நமது இறுதி இலக்காக மாற்றுவதை பற்றித் தான் எச்சரிக்கிறது (குர்ஆன் 28:77).
குர்ஆன் துன்யாவை ஏன் கேளிக்கை என்று வர்ணிக்கிறது?
மறுமையுடன் ஒப்பிடும்போது, துன்யாவின் இன்பங்கள் தற்காலிகமானவை. நம் கவனத்தையும் திசைதிருப்பக்கூடியவை என்பதால், துன்யாவை கேளிக்கை என்று வர்ணிக்கிறது.(குர்ஆன் 29:64).
மறுமைக்கு முன்னுரிமை அளிப்பது என்றால் என்ன?
இவ்வுலகின் தற்காலிக ஆதாயங்களை மட்டும் துரத்துவதை விட்டு விட்டு, மறுமையில் நமக்கு பயனளிக்கும் நற்செயல்களை செய்ய அதிக முயற்சி செய்வது.
ரமலானில் நமக்குள் எப்படி மாற்றத்தை கொண்டு வருவது?
ஒழுக்கம், சுயக்கட்டுப்பாடு, சுய பரிசோதனை பற்றிய விழிப்புணர்வை ரமலான் மாதம் உருவாக்குகிறது. இதை சரியாக பயன்படுத்தினால் நமக்குள் மாற்றம் ஏற்படும் இன் ஷா அல்லாஹ்!
