நம் இதயத்தை பக்குவப்படுத்தும் மாதம் ரமலான். ரமலானில், நாம் அதிகமாக நோன்பு நோற்கிறோம், தொழுகிறோம், குர்ஆன் ஓதுகிறோம், துஆ செய்கிறோம், தர்மம் செய்கிறோம் இன்னும் பல வணக்க வழிபாடுகளில் நம்மை ஈடுபடுத்திக் கொள்கிறோம். இதனால், நம் ஈமான் பலமாக இருக்கும்.
ரமலானில் ஈடுபாட்டோடு செய்த நற்செயல்களை, ரமலானிற்கு பிறகு செய்வது பலருக்கு கடினமாகிவிடும். ரமலானில் நிரம்பி வழியும் பள்ளிவாசல்கள், ரமலானிற்கு பிறகு காலியாகி விடுவது இதற்கு நல்ல உதாரணம்.
ரமலானுக்குப் பின்…
குர்ஆன் ஓதுதல் குறைந்து விடும். சில மாதங்களில், குர்ஆன் ஓதுவதே நின்று விடவும் வாய்ப்புண்டு.
தொழுகையில் ஆர்வம் குறைந்து விடும். தொழுதாலும், கவனத்தோடு தொழுவது குறைவாகி விடும். இரவுத் தொழுகை தொழுவது கடினமாகி விடும்.
நற்செயல்கள் செய்ய சிரமப்படுவோம். ரமலானில் நாம் எளிதாக செய்த நற்செயல்கள், ரமலானிற்கு பிறகு செய்வது சிரமமாகி விடும்.
அதனால்தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல்கள் எவை என்றால், அவை குறைவாக இருந்தாலும் தொடர்ச்சியாகச் செய்யப்படுபவையே.
புகாரி # 6464
அற்புதமான துஆ
குர்ஆனில் அல்லாஹ் ஒரு அற்புதமான துஆவை கற்றுத் தருகிறான்.
எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர்வழியைக் காட்டிய பின்பு, எங்கள் இதயங்களை (அதனிலிருந்து) தடம் புரளச் செய்துவிடாதே! உன்னிடமிருந்து எங்களுக்கு அருளை வழங்குவாயாக! நிச்சயமாக நீயே மகா கொடையாளி.
குர்ஆன் 3:8
இந்த துஆவின் சிறப்பு
ரமலான் தொடங்கும்போது, சுவனத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன, நரகத்தின் கதவுகள் மூடப்படுகின்றன மற்றும் ஷைத்தான்கள் விலங்கிடப்படுகிறார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 1079)
ரமலானுக்குப் பிறகு, விலங்கிடப்பட்ட ஷைத்தான்கள் விடுதலையாகி விடுவார்கள். வணக்க வழிபாடுகள் பாரமாகத் தோன்றும். நம்முடைய பழைய தீய பழக்கவழக்கங்களை நோக்கி நாம் திரும்ப துவங்குவோம். இதிலிருந்து அல்லாஹ்விடம் பாதுக்காப்பு தேடி, நம்மைக் காத்துக்கொள்ள இந்த துஆ நமக்கு உதவுகிறது.
இந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘ஸைக்’ (zaygh) என்ற வார்த்தை, நேர்வழி கிடைத்த பிறகு அதிலிருந்து மெதுவாக விலகிச் செல்வதைக் குறிக்கிறது. பொதுவாக நாம் ஒரே அடியாக தீமையின் பக்கம் போக மாட்டோம். அது கொஞ்சம் கொஞ்சமாகத் தான் நேர்வழியிலிருந்து விலகிச் செல்வோம். இதை தான் ‘ஸைக்’ (zaygh) என்ற வார்த்தை உணர்த்துகிறது.
இந்த துஆவின் மூலம், நம் உள்ளங்களுக்கு நேர்வழி கிடைத்த பிறகு, அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகுவதிலிருந்து நாம் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகிறோம்.
நம் வாழ்வில் இந்த துஆ
- ரமலானுக்குப் பிறகு ஒவ்வொரு நாளும் இந்த துஆவை ஓதுங்கள்
- ஒரு நற்செயலையாவது, அது சிறியதாக இருந்தாலும் சரி, அதைத் தொடர்ந்து செய்ய முயலுங்கள்
- குர்ஆனுடனான உங்கள் தொடர்பைப் பலப்படுத்த முயற்சி செய்யுங்கள் (பார்க்க: குர்ஆனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் மற்றும் குர்ஆனை புறக்கணித்தல்)
- வணக்க வழிபாடுகளை ஈடுபாட்டோடு செய்ய முயலுங்கள்
அல்லாஹ் மேலும் கூறுகிறான்: “உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக!” குர்ஆன் 15:99
முடிவுரை
ரமலானுக்குப் பிறகு வணக்க வழிபாடுகளிலும், நற்செயல் செய்வதிலும் ஏற்படும் தொய்வு இயல்பானதே. ஆனால், நாம் கவனமாக இல்லையென்றால், நம்மை அறியாமலேயே நாம் கொஞ்சம் கொஞ்சமாக நேர்வழியிலிருந்து விலகி சென்று விடுவோம்.
“எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர்வழியைக் காட்டிய பின்பு, எங்கள் இதயங்களை தடம் புரளச் செய்துவிடாதே.” என்ற இந்த துஆவை இன்றே மனப்பாடம் செய்யுங்கள். தொடர்ந்து ஓதுங்கள். நற்செயல்களில் நிலைத்திருக்க அல்லாஹ்விடம் தொடர்ந்து துஆ செய்யுங்கள்.
ரமலானில் நற்செயல்களை செய்தது போல், ரமலானுக்குப் பிறகும் நற்செயல்களை ஆர்வமாக செய்ய முயல்வதே நம் வெற்றிக்கு வழி வகுக்கும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)
ரமலானுக்குப் பிறகு ஓத வேண்டிய சிறந்த துஆ எது?
சூரா ஆல இம்ரானின் 3:8-வது வசனத்தில் வரும் “எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர்வழியைக் காட்டிய பின்பு, எங்கள் இதயங்களை தடம் புரளச் செய்துவிடாதே…” என்ற இந்த துஆ மிக முக்கியமானது.
ரமலானுக்குப் பிறகு ஓத இந்த துஆ ஏன் பொருத்தமானது?
ரமலானில் ஷைத்தான்கள் விலங்கிடப்படுகிறார்கள். எனவே, நற்செயல்கள் செய்வது எளிது. ரமலானிற்கு பிறகு, நற்செயல்கள் செய்வது எளிதல்ல. நேர்வழியிலிருந்து விலகி செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே அதிலிருந்து பாதுகாப்பு தேட இந்தத் துஆ பொருத்தமானது.
குர்ஆன் 3:8-ல் ‘ஸைக்’ (zaygh) என்பதன் பொருள் என்ன?
இந்த சொல் நேர்வழி கிடைத்த பிறகு அதிலிருந்து மெதுவாக விலகிச் செல்வதைக் குறிக்கிறது.
ரமலானுக்குப் பிறகு நான் எப்படி நற்செயல்களில் உறுதியாக இருக்க என்ன செய்ய வேண்டும்?
நற்செயல்கள் சிறிதாக இருந்தாலும், அதை தொடர்ந்து செய்யுங்கள். “அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல்கள், குறைவாக இருந்தாலும் தொடர்ச்சியாகச் செய்யப்படுபவையே.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
