அல்லாஹ் ‘மிகவும் மன்னிப்பவன்’ என்பது நம் எல்லோருக்கும் தெரியும். மன்னிப்பு பற்றிய பல அல்லாஹ்வின் திருநாமங்கள் குர்ஆனில் இடம்பெறுகின்றன. அவனது மன்னிப்பின் ஆழத்தை நாம் உணர வேண்டும் என்றால், அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடும் அவனது திருநாமங்களை பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்:
தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொண்ட என் அடியார்களே! அல்லாஹ்வின் கருணையில் நீங்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம்.
குர்ஆன் 39:53
நாம் எவ்வளவு பாவங்கள் செய்தாலும், அல்லாஹ்வின் மன்னிப்பின் கதவு நமக்காக எப்போதும் திறந்தே இருக்கிறது என்பதை இந்த வசனம் நமக்கு நினைவூட்டுகிறது.
மன்னிப்புடன் தொடர்புடைய அல்லாஹ்வின் பெயர்கள்
அல்-காஃபிர் (غَافِر) – பாவங்களை மன்னிப்பவன்
அவன் பாவங்களை மன்னிப்பவன்; தவ்பாவை (மன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவன்.
குர்ஆன் 40:3
“காஃபிர்” என்ற வார்த்தை “கஃபர” (غفر) என்ற வேர்ச்சொல்லிலிருந்து வருகிறது. அதன் பொருள் “ஒன்றை மூடி மறைப்பது”.
அல்லாஹ் நம் பாவங்களை மறைத்து, மன்னித்து, நம் மீது இருக்கும் பாவச் சுமையை நீக்குகிறான் என்பதை இந்த திருநாமம் உணர்த்துகிறது.
அல்-கஃபார் (ٱلْغَفَّار) – திரும்ப திரும்ப மன்னிப்பவன்
மனிதர்கள் திரும்ப திரும்ப பாவம் செய்து, திரும்ப திரும்ப அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேட்கிறார்கள்.
உங்கள் இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்; நிச்சயமாக அவன் திரும்ப திரும்ப மன்னிப்பவனாக இருக்கின்றான்.
குர்ஆன் 71:10
எத்தனை தடவை மன்னிப்பு கேட்டாலும், கணகில்லாமல் அல்லாஹ் மன்னித்து கொண்டே இருப்பான் என்பதை இந்த அல்லாஹ்வின் திருநாமம் நமக்கு உணர்த்துகிறது.
உங்கள் குழந்தை, தினமும் பல முறை திரும்ப திரும்ப பல தவறுகள் செய்து, ஒவ்வொரு முறையும் உங்களிடம் ‘சாரி’ (sorry) கேட்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். எத்தனை நாட்கள் அல்லது மாதங்கள் நீங்கள் பொறுமையாக அந்த குழந்தையின் ‘சாரியை’ ஏற்றுக் கொள்வீர்கள்? ஒரு கட்டத்தில் நீங்கள் பொறுமை இழந்து, “உனக்கு இதே வேலையா போச்சு” என்று சொல்வீர்கள் அல்லவா?
ஆனால், அல்லாஹ் அப்படி சொல்வதில்லை. நீங்கள் பாவ மன்னிப்பு கேட்க, கேட்க, அல்லாஹ் மன்னித்து கொண்டே இருப்பான். அல்லாஹு அக்பர்!
அல்-கஃபூர் (ٱلْغَفُور) – விசாலமான மன்னிப்பை உடையவன்
அல்லாஹ்வின் மன்னிப்பு எல்லையற்றது, விசாலமானது.
நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், மிகுந்த கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
குர்ஆன் 4:96
ஒரு பெருங்கடலில் ஒரு பிடி மண் விழுந்தால், அந்த கடலில் அது அடையாளம் தெரியாமல் கரைந்து விடும், ஏனெனில் அந்த கடலின் விசாலத்திற்கு முன், ஒரு பிடி மண் ஒன்றுமே இல்லை.
அல்லாஹ்வின் மன்னிப்பு விசாலமானது, எல்லையற்றது. நாம் எவ்வளவு பாரதூரமான பாவங்கள் செய்திருந்தாலும், அல்லாஹ்வின் மன்னிப்பின் முன் அவை பெருங்கடலில் கரைந்து போகும் ஒரு பிடி மண் போன்றதே. இதைத் தான் அல்-கஃபூர் என்ற திருநாமம் நமக்கு உணர்த்துகிறது.
அத்-தவ்வாப் (ٱلتَّوَّاب) – மன்னிப்பை ஏற்றுக்கொள்பவன்
‘தவ்பா’ என்றால் ‘திரும்புதல்’ என்று பொருள். தன் பக்கம் மீண்டும் மீண்டும் திரும்புபவர்களை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்.
நிச்சயமாக அவன் மன்னிப்பை ஏற்பவன், நிகரற்ற அன்புடையவன்.
குர்ஆன் 2:37
உங்கள் பிள்ளைகளோ, வாழ்க்கை துணையோ, வீட்டை விட்டு வெளியே சென்று விட்டு, ஒவ்வொரு தினமும் பல முறை, வெவ்வேறு நேரங்களில் வீட்டு கதவை தட்டினால், நீங்கள் திறப்பீர்களா? ஒரு வாரம், இரண்டு வாரத்திற்கு சகித்துக் கொள்வீர்கள். இதுவே வருடங்களாக தொடர்ந்து நடந்தால், பொறுமை இழந்து, “ஏன் இப்படி என்னை தொல்லை செய்கிறாய்” என்று சொல்வீர்கள் அல்லவா?
தினமும் பாவம் செய்து விட்டு, அல்லாஹ்விடமிருந்து விலகி போய், எத்தனை முறை நாம் அவனிடம் திரும்பி வருகிறோம்? எத்தனை முறை நாம் அவனது மன்னிப்பின் கதவை தட்டினாலும், எப்போது தட்டினாலும், அவன் நமக்காக மன்னிப்பின் கதவை திறந்து, நமது பாவ மன்னிப்பை ஏற்றுக் கொள்கிறான். அல்லாஹு அக்பர்!
அல்-அஃபூவ் (ٱلْعَفُوّ) – பாவங்களை பொருட்படுத்தாதவன் / பிழை பொறுப்பவன்
நிச்சயமாக அல்லாஹ் பாவங்களை மன்னிப்பவனாகவும், பிழை பொறுப்பவனாகவும் இருக்கின்றான்.
குர்ஆன் 4:43
நாம் ஒரு பாவம் செய்கிறோம் என்றால், அதற்கான தண்டனைக்கு தகுதியுடையவர்களாக நாம் மாறி விடுகிறோம். ஆனால், நாம் செய்த பாவங்களை பொருட்படுத்தாமல், நம்மை மன்னித்து, நம்மை தண்டிக்காமல் கருணை காட்டுபவன் தான் அல்லாஹ் என்பதை இந்த திருநாமம் நமக்கு உணர்த்துகிறது.
அல்-அஃபூவ் என்ற பெயர், அஃபவ (عفو) என்ற வேர்ச்சொல்லிருந்து வருகிறது. இதன் பொருள் “தடயமில்லாமல் அழிப்பது”. அல்லாஹ், நம் பாவங்களை பொருட்படுத்தாமல் விட்டுவிடுவதோடு, நம்மை மன்னித்து, நம் பாவங்களை தடயமில்லாமல் அழிக்கிறான்.
உதாரணமாக: நீங்கள் சுவற்றிலோ, அல்லது ஒரு கதவிலோ எழுதக்கூடாத ஆபாசமானதை எழுதிவிட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் எழுதியது அப்படியே இருந்தால், நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள். யாரோ ஒருவர், நீங்கள் எழுதியதை தடயமே இல்லமால் அழித்து விட்டார் என்றால், நீங்கள் ஆபாசமாக எழுதியதே யாருக்கும் தெரியாமல் போய் விடுமல்லவா? அவரை பற்றி உங்கள் எண்ணம் எப்படி இருக்கும்?
இதை தான் அல்லாஹ் செய்கிறான். உங்கள் பாவங்களை மன்னித்து அழித்து விடுகிறான். அவனது கருணைக்கு, இணையுண்டா? அல்லாஹு அக்பர்!
அல்லாஹ்வின் மன்னிப்பைப் பற்றிய ஓர் அழகான ஹதீஸ்
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
பகலில் பாவம் செய்தவர் மன்னிப்புத் தேடுவதற்காக அல்லாஹ் இரவில் தன் கையை நீட்டுகிறான். இரவில் பாவம் செய்தவர் மன்னிப்புத் தேடுவதற்காக அவன் பகலில் தன் கையை நீட்டுகிறான்.
ஸஹீஹ் முஸ்லிம் # 2759
அல்லாஹ்வின் மன்னிப்பு கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்பதை இந்த ஹதீஸ் நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது.
இந்த பெயர்கள் நமக்குக் கற்பிப்பது என்ன?
- அல்லாஹ்வின் மன்னிப்பில் ஒருபோதும் நம்பிக்கை இழக்காதீர்கள்.
- பாவத்திற்காக உண்மையாக வருந்தி மன்னிப்பு கேளுங்கள்.
- அல்லாஹ்விடம் மீண்டும் மீண்டும் மீளுங்கள்
- உங்கள் பாவங்களை மறைத்து, அழித்து விட அல்லாஹ்விடம் கேளுங்கள்.
அல்லாஹ்வை அவன் திருநாமங்கள் கொண்டு அழையுங்கள்
பரக்கத் மிக்க இந்த நாட்களில், பணிவுடனும் நம்பிக்கையுடனும் அல்லாஹ்வின் திருநாமங்களை பயன்படுத்தி பாவ மன்னிப்பு கேளுங்கள்.
அவனுடைய அழகிய திருநாமங்கள் கொண்டு அவனிடம் துஆ செய்யுங்கள்.
- அல்-காஃபிர் – என் பாவங்களை மறைத்து, மன்னிப்பாயாக!
- அல்-கஃபார் – என்னை மீண்டும் மீண்டும் மன்னிப்பாயாக!
- அல்-கஃபூர் – என்னை உன்னுடைய விசாலமான மன்னிப்பபை கொண்டு மன்னிப்பாயாக!
- அத்-தவ்வாப் – என்னுடைய தவ்பாவை ஏற்றுக் கொள்வாயாக!
- அல்-அஃபூவ் – என்னுடைய பாவங்களை அழிப்பாயாக!
அல்லாஹ்வின் திருநாமங்களை நாம் எவ்வளவு அதிகமாகப் புரிந்துகொள்கிறோமோ, அவ்வளவு அதிகமாக அவன் மீது நம்பிக்கை கொண்டு, பாவமன்னிபு தேடுவதில் விரைவோம்!
