சூரா குரைஷ் கற்று தரும் பாடம்

பல முஸ்லிம்கள் கவனம் செலுத்தாத சூரா குரைஷ் கற்று தரும் பாடம், நீங்கள் அனுபவிக்கும் அல்லாஹ்வின் இரண்டு அருட்கொடைகளை பற்றிய பார்வையை மாற்றும்.

நாம் ஒவ்வொரு நாளும் நல்ல உணவு உண்கிறோம். இரவில் நிம்மதியாக, பாதுகாப்பாக உறங்குகிறோம். ஆனால், உலகெங்கிலும் கோடிக்கணக்கான நம் சகோதர சகோதரிகள் பசியாலும், போரின் காரணமாக அச்சத்தாலும் அவதிப்படுகிறார்கள்.

இதை நம் நினைவுக்கு கொண்டு வந்து, நாம் அனுபவிக்கும் அல்லாஹ்வின் அருட்கொடைகளான “உணவு”, “பாதுகாப்பு” பற்றி நம்மை சிந்திக்க தூண்டுகிறது ‘சூரா குரைஷ்’ என்ற இந்த சிறிய அத்தியாயம்.

இரண்டு சிறிய வசனங்களில், நாம் அனுபவிக்கும் இந்த அல்லாஹ்வின் அருட்கொடைகளை பற்றி சிந்திக்காமல் கடந்து போய் விடக் கூடாது என்று அல்லாஹ் நமக்கு நினைவூட்டுகிறான்.

சூரா குரைஷில் அல்லாஹ் சொல்வது என்ன?

இந்த ஆலயத்தின் (கஃபாவின்) ரப்பை அவர்கள் வணங்கட்டும்
அவனே அவர்களுக்கு பசியின் போது உணவளித்தான்
மேலும் பயத்திலிருந்து அவர்களுக்கு பாதுகாப்பு அளித்தான்.

குர்ஆன் 106:3 & 4

இந்த வசனங்களில் அல்லாஹ் இரண்டு அருட்கொடைகளை நினைவூட்டுகிறான்:

  • பசியிலிருந்து பாதுகாப்பு – உணவு
  • அச்சத்திலிருந்து பாதுகாப்பு – அமைதி

இந்த அருட்கொடைகளை அனுபவிக்கும் நம்மிடமிருந்து அல்லாஹ் எதிர்பார்ப்பது : இந்த ஆலயத்தின் இறைவனையே அவர்கள் வணங்கட்டும்.

எனவே, நாம் அல்லாஹ்வை உளத்தூய்மையோடு வழிப்பட்டு, அவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.

அல்லாஹ்விற்கு எப்படி நன்றி செலுத்துவது?

“அல்ஹம்துலில்லாஹ்” என்று சொல்லி விட்டால் போதும், அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தி விட்டோம் என்று பலர் நினைக்கிறார்கள்.

அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துதல் நம் செயல்களில் வெளிப்பட வேண்டும் என்று குர்ஆன் கற்றுத் தருகிறது.

அல்லாஹ் கூறுகிறான்:

தாவூதின் குடும்பத்தாரே! நன்றியுடன் செயல்படுங்கள். ஏனெனில் எனது அடியார்களில் நன்றியுடையோர் குறைவாகவே உள்ளனர்.

குர்ஆன் 34:13

நம் செயல்கள் மூலம் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்த, நாம்:

  • அல்லாஹ்வை உளத்தூய்மையுடன் வணங்க வேண்டும்
  • அருட்கொடைகளை அவனுக்குக் விருப்பமான வழிகளில் பயன்படுத்த வேண்டும்
  • பாவங்களைத் தவிர்க்க வேண்டும்
  • ஏழைகளுக்கும், தேவையுடையவர்களுக்கும் உதவ வேண்டும்

அல்லாஹ் தரும் வாக்குறுதியை கவனியுங்கள்:

நீங்கள் (எனக்கு) நன்றி செலுத்தினால், நிச்சயமாக, நான் உங்களுக்கு அதிகப்படுத்துவேன்.

குர்ஆன் 14:7

அல்லாஹ் எதை அதிகப்படுத்துவான் என்பதை இந்த வசனத்தில் குறிப்பிடவில்லை.

செல்வத்தை அதிகப்படுத்துவானா?

ஆரோக்கியத்தை அதிகப்படுத்துவானா?

மகிழ்ச்சியை அதிகப்படுத்துவானா? என்று அல்லாஹ் சொல்லவில்லை.

ஒன்றுக்கு மேற்பட்ட பல வழிகளில் அல்லாஹ் தன் அருளை அதிகப்படுத்துவான் என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

ஏழைகளையும், பலவீனர்களையும் மறக்காதீர்

சூரா குரைஷ் சொல்லும் செய்தியை சரியாக ஒருவர் உள்வாங்கினால், ஏழைகளின் மீதும், சமூகத்தில் பலவீனர்களாக இருப்பவர்கள் மீதும் இரக்கம் வரும்.

இதற்கு அடுத்த அத்தியாயமான ‘சூரா அல்-மாஊன்’ சூரா குரைஷ் சொல்லும் செய்தியைத் தான் வலியுறுத்துகிறது. சூரா அல்-மாஊனில், அனாதைகளைப் பராமரிப்பது, ஏழைகளுக்கு உணவளிப்பதை ஊக்குவிப்பது, சரியாக தொழுது அல்லாஹ்வை வணங்குவது பற்றியே அல்லாஹ் பேசுகிறான்.

அல்லாஹ்வுக்கு உண்மையிலேயே நன்றி செலுத்த விரும்பும் ஒருவர், ஏழைகள், பலவீனர்கள் விஷயத்தில் அலட்சியமாக இருக்க முடியாது. குறைந்தபட்சம் நாம் அவர்களுக்காக துஆ செய்ய வேண்டும்.

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:

ஒரு முஸ்லிம் தனது சகோதரருக்கு மறைவாக செய்யும் துஆ ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அவரது தலைக்கு அருகில் இருக்கும் வானவர், ‘ஆமீன், உங்களுக்கும் அது போன்றே கிடைக்கட்டும்’ என்று கூறுவார்.

ஸஹீஹ் முஸ்லிம் # 2732

சூரா குரைஷ் கற்று தரும் பாடத்தை எப்படி நடைமுறைப்படுத்துவது?

இந்த அத்தியாயம் சொல்லும் செய்தி நமது அன்றாட வாழ்க்கையை மாற்ற வேண்டும். எனவே நீங்கள்:

  1. அல்லாஹ்வை உளத்தூய்மையோடு தொடர்ந்து வணங்குங்கள்
  2. நாம் அனுபவிக்கும் அருட்கொடைகளுக்காக அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துங்கள்
  3. பசியால், கஷ்டங்களால் வாடுபவர்களுக்கு உதவி செய்யுங்கள்
  4. துயரப்படும் முஸ்லிம்களுக்காக அதிகமாக துஆ செய்யுங்கள்

முடிவுரை

நாம் அனுபவிக்கும் உணவும் பாதுகாப்பும் அல்லாஹ்வின் அருட்கொடைகள். நாம் உண்ணும் ஒவ்வொரு உணவும், நாம் நிம்மதியாக உறங்கும் ஒவ்வொரு இரவும், அல்லாஹ்வை அதிகமாக வணங்குவதற்கும், அவனுக்கு அதிகமாக நன்றி செலுத்துவதற்கும் நம்மை தூண்ட வேண்டும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

சூரா குரைஷின் கற்று தரும் பாடம் என்ன?

நாம் அனுபவிக்கும் உணவும் பாதுகாப்பும் அல்லாஹ்வின் அருட்கொடைகள். அதற்கு நாம் அல்லாஹ்வை மட்டுமே உளத்தூய்மையோடு வணங்கி, அவனுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்பதே சூரா குரைஷ் நமக்கு கற்றுத் தரும் பாடம்.

சூரா குரைஷ் பசி, அச்சம் பற்றி ஏன் பேசுகிறது?

பசியும், அச்சமும் மனிதனின் இரண்டு அடிப்படைத் தேவைகளான வாழ்வாதாரம், பாதுகாப்போடு சம்பந்தப்படுகிறது. இந்த இரண்டு அருட்கொடைகளை அல்லாஹ்விடமிருந்தே வருகின்றன என்பதை இது நினைவூட்டுகிறது.

அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு முஸ்லிம்கள் எவ்வாறு நன்றி செலுத்த வேண்டும்?

அல்லாஹ்வை உளத்தூய்மையுடன் வணங்குவதன் மூலமும், அவனுக்குக் கீழ்ப்படிவதன் மூலமும், ஏழைகளுக்கு உதவுவதன் மூலமும், பிறருக்காக துஆ செய்வதன் மூலமும் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தலாம்.

பிறருக்காக துஆ செய்ய இஸ்லாம் ஊக்குவிக்கிறதா?

ஆம். ஒருவர் தனது சகோதரருக்காக மறைவாக துஆ செய்தால், ஒரு வானவர் ‘ஆமீன், உனக்கும் அவ்வாறே உண்டாகட்டும்’ என்று கூறுவார் என நபி ﷺ கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் # 2732)

இந்த நினைவூட்டல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், இதைப் பிறருடனும் பகிருங்கள். இதுவே ஒரு நிலையான நற்செயலாக (ஸதக்கத்துல் ஜாரியா) அமையும்.

மேலும் படிக்க

WHAT OTHERS ARE READING

Most Popular