அருட்கொடைகள் சோதனையே!

"அருட்கொடைகள் சோதனையே" என்பதை தான் “هَـٰذَا مِن فَضْلِ رَبِّي” ( ஹாதா மின் ஃபழ்லி ரப்பீ) என்ற குர்ஆனில் வரும் வாசகம் நமக்கு உணர்த்துகிறது.

பல முஸ்லிம்கள் தங்கள் வாகனங்கள், வீடுகள் அல்லது வணிக நிறுவனங்களில் “هَـٰذَا مِن فَضْلِ رَبِّي” ( “ஹாதா மின் ஃபழ்லி ரப்பீ” ) என்ற வாசகம் எழுதப்பட்டிருப்பதைப் பார்த்திருப்பார்கள். இதன் பொருள்: “இது எனது இறைவனின் அருட்கொடையாகும்.”

இந்த வாசகம் மிக பொருத்தமானது என்றாலும், இது ஒரு குர்ஆன் வசனத்தின் ஒரு பகுதி மட்டுமே என்பதைப் பலர் உணர்வதில்லை. அந்த வாசகம் வரும் வசனத்தை முழுமையாக படித்தால், அல்லாஹ்வின் அருட்கொடைகளை நாம் எவ்வாறு பார்க்க வேண்டும் என்பதை நாம் அறிந்துக் கொள்ளலாம்.

அருட்கொடைகள் சோதனையே: குர்ஆன் தரும் பாடம்

“ஹாதா மின் ஃபழ்லி ரப்பீ” என்ற வாசகத்தை சுலைமான் நபி (அலை) அவர்கள் கூறியதாக திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது. அல்லாஹ் கூறுகிறான்:

அல்லாஹ்விற்கு நான் நன்றி செலுத்துகின்றேனா இல்லையா என்று என்னைச் சோதிப்பதற்காக இது எனது இறைவனிடமிருந்து கிடைத்த அருட்கொடையாகும்.

குர்ஆன் 27:40

அல்லாஹ்வின் அருட்கொடைகள் நாம் அனுபவித்து மகிழ்ச்சி அடைவதற்கு மட்டுமல்ல. மாறாக, அவைஎல்லாம் சோதனைகளே. நம்மில் பலர், அல்லாஹ்வின் பல அருட்கொடைகளை அனுபவிக்கிறோம்.

  • வசதியான வீடு
  • செல்வம்
  • வாகனம்
  • அந்தஸ்து, செல்வாக்கு

இந்த அருட்கொடைகள் எல்லாம் நமது ஈமானை சோதிக்கின்றன என்பதை குர்ஆன் நமக்கு நினைவூட்டுகிறது.

இந்த அருட்கொடைகளுக்கு நாம் நன்றி செலுத்துகிறோமா? அல்லது நன்றி மறந்த வாழ்கிறோமா?

இது தான் அல்லாஹ் நமக்கு தரும் சோதனை.

அல்லாஹ்விற்கு எப்படி நன்றி செலுத்துவது?

“அல்ஹம்துலில்லாஹ்” என்று சொல்லி விட்டால் போதும், அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தி விட்டோம் என்று பலர் நினைக்கிறார்கள்.

அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துதல் நம் செயல்களில் வெளிப்பட வேண்டும் என்று குர்ஆன் கற்றுத் தருகிறது.

அல்லாஹ் கூறுகிறான்:

தாவூதின் குடும்பத்தாரே! நன்றியுடன் செயல்படுங்கள். ஏனெனில் எனது அடியார்களில் நன்றியுடையோர் குறைவாகவே உள்ளனர்.

குர்ஆன் 34:13

இந்த வசனத்தில் “நன்றியுடன் செயல்படுங்கள்” என்ற வாசகத்தைக் கவனியுங்கள். நன்றி என்பது செயல்களில் வெளிப்பட வேண்டும் என்பதை இந்த வசனம் உணர்த்துகிறது.

நன்றி செலுத்துவதின் அடையாளங்கள்

அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் ஒருவர்:

  • அருட்கொடைகளை அல்லாஹ்வுக்கு பிடித்தமான வழிகளில் பயன்படுத்துவார்
  • ஏழைகளுக்கும் தேவையுடையவர்களுக்கும் உதவுவார்.
  • அருட்கொடைகளை பாவத்திற்கோ, பெருமையடிக்கவோ பயன்படுத்த மாட்டார்
  • அல்லாஹ்வின் அருளே அருட்கொடைகளை காரணம் என்பதை உணர்வார்

நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்:

முஃமினின் நிலை ஆச்சரியமானது. அவருடைய எல்லா விவகாரங்களும் அவருக்கு நன்மையாகவே அமையும். அல்லாஹ் அவருக்கு ஒரு அருட்கொடையை தந்தால், அதற்கு அவர் நன்றி செலுத்துகிறார்; அது அவருக்கு நன்மையாக அமைகிறது.

ஸஹீஹ் முஸ்லிம் # 2999

அருட்கொடைகளின் சோதனையில் வெற்றி பெறுவது எப்படி?

நாம் அனுபவித்து மகிழும் ஒவ்வொரு அருட்கொடையும் மறுமையில் நமக்கு நன்மை பெற்றுத் தரும் அல்லது நமக்கு தீமை விளைவிக்கும் என்பதை நாம் உணர வேண்டும்.

இந்த சோதனையில் வெற்றி பெற சில நடைமுறை வழிகள்:

  1. அருட்கொடைகளுக்குக் காரணம் உங்களது தனிப்பட்ட முயற்சியல்ல. அது அல்லாஹ்வின் அருளால் கிடைத்தது என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.
  2. அல்லாஹ் தந்த அருட்கொடைகளை, நல்ல காரியங்களுக்கும், மக்களுக்கு உதவவும், சமூகத்திற்கு பயனளிக்கும் விதத்திலும் பயன்படுத்துங்கள்.
  3. செல்வம், வெற்றி இவற்றால் பெருமை கொள்பவர்களுக்கு எதிராக அல்லாஹ் எச்சரிப்பதை நினைவில் கொள்ளுங்கள்.
  4. நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:

மேலே உள்ள கை (கொடுக்கும் கை), கீழே உள்ள கையை (வாங்கும் கையை) விட மேலானது.

புகாரி # 1429

இந்த நபி மொழி பிறருக்கு கொடுப்பதை ஊக்குவிக்கிறது. கொடுப்பது என்பது பணத்தை மட்டும் குறிக்காது; உங்கள் நேரம், திறமை, அறிவு போன்றவற்றை சமூகத்திற்கு பயன் தரும் வகையில் பயன்படுத்துவதும் கொடுப்பதில் அடங்கும்.

மறக்கக் கூடாத நினைவூட்டல்

“இது எனது இறைவனின் அருட்கொடை” என்ற வாசகம், நாம் அனுபவித்து மகிழும் அல்லாஹ்வின் அருட்கொடைகள், அல்லாஹ் நமக்கு தந்த சோதனையே என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.

அடுத்த முறை நீங்கள் “هَـٰذَا مِن فَضْلِ رَبِّي” என்ற வாசகத்தைப் பார்க்கும்போது, அல்லாஹ் தரும் அருட்கொடைகள் ஒரு சோதனையே என்பதை உணர்ந்து:

“அல்லாஹ் தரும் இந்த சோதனையில் நான் வெற்றி பெறுகிறேனா?” என்று உங்களை நீங்களே சுய பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

“ஹாதா மின் ஃபழ்லி ரப்பீ” என்பதன் பொருள் என்ன?

இது குர்ஆன் 27:40 வசனத்தின் ஒரு பகுதியாகும். இந்த வாசகத்தை சுலைமான் நபி (அலை) அவர்கள் கூறுகிறார்கள். அருட்கொடைகள் அல்லாஹ்விடமிருந்து தான் வருகின்றன என்றும், அவை நமக்கு சோதனையே என்பதையும் இந்த இறைவசனம் நமக்கு கற்பிக்கிறது.

இஸ்லாத்தில் அருட்கொடைகள் சோதனையாகக் கருதப்படுகிறதா?

ஆம். மனிதர்கள் நன்றி செலுத்துகிறார்களா இல்லையா என்பதைச் சோதிக்கவே அருட்கொடைகள் அல்லாஹ்வால் வழங்கப்படுகின்றன என்று திருக்குர்ஆன் கூறுகிறது (27:40).

முஸ்லிம்கள் எவ்வாறு அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த முடியும்?

அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிதல், தேவையுடையவர்களுக்கு உதவுதல், அருட்கொடைகளை தீனுக்காகவும் (மார்க்கம்) சமூகத்திற்காகவும் பயன்படுத்துதல், பாவங்களில் இருந்து விலகி இருத்தல் ஆகியவற்றின் மூலம் நன்றி செலுத்தலாம்.

‘மிகச் சிலரே நன்றியுள்ளவர்கள்’ என்று திருக்குர்ஆன் சொல்வது ஏன்?

“எனது அடியார்களில் நன்றியுள்ளவர்கள் மிகச் சிலரே” (34:13) என்று அல்லாஹ் கூறுகிறான். ஏனெனில் உண்மையான நன்றி என்பது வெறும் வார்த்தைகளில் இல்லாமல், செயல்களில் இருக்க வேண்டும் என்று அல்லாஹ் எதிர்பார்க்கிறான். இந்த எதிர்பார்ப்பை பலர் நிறைவேற்றுவதில்லை.

இந்த நினைவூட்டல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், இதைப் பிறருடன் பகிருங்கள். இது உங்களுக்கு ஒரு நிலையான நற்செயலாக அமையும்.

மேலும் படிக்க

WHAT OTHERS ARE READING

Most Popular