முன்னுரை
நபிகள் நாயகம் அவர்கள் செய்த போர்களைப் பற்றி பல தவறான புரிதல்கள் உள்ளன. நாடுகளை கைபற்றுவதற்கும், இஸ்லாமை மக்கள் மேல் திணிப்பதற்கும் இறைத்தூதர் அவர்கள் போர் செய்தார்கள் என்று பலர் எண்ணுகின்றனர்.
இறைத்தூதர் அவர்கள் எதனால் போர் செய்தார்கள், அவர்கள் போர் செய்வதற்கான காரணம் என்ன என்பதை இந்த கட்டுரையில் பார்ப்போம்.
போர் பற்றி இஸ்லாம்
இஸ்லாம் அமைதிக்கே முதலிடம் கொடுக்கிறது. வேறு வழியில்லாத நிர்பந்தமான சந்தர்ப்பங்களில் விதி விலக்காகவே போரை இஸ்லாம் அனுமதிக்கிறது. குர்ஆனில் இறைவன் கூறுகிறான்:
உங்கள் எதிரிகள் சமாதானத்தின் பக்கம் சாய்ந்தால், நீங்களும் சமாதானத்தின் பக்கம் சாய்வீராக!
குர்ஆன் அத்தியாயம் 8 : வசனம் 61
இறுதி இறைத்தூதர் முஹம்மது (அவரின் மீது இறைவனின் சாந்தி உண்டாகட்டும்) கூறினார்கள்:
மக்களே! (போர்க்களம் சென்று) எதிரிகளைச் சந்திக்க வேண்டுமென்று ஆசைப்படாதீர்கள். (போரைத் தவிர்க்கின்ற) அமைதி நிலை ஏற்பட இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.
புகாரி # 2965
மத தலைவர்களும் போர்களும்
மனித வரலாற்றில் முக்கிய மத தலைவர்களான மோசே, டேவிட், ராமர், கிருஷ்ணர் போன்றோர் போர் செய்துள்ளனர். எனவே, மத தலைவர்களுக்கு போர் என்பது புதிதல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்
போர் இல்லாமல் 15 வருடங்கள்
இறைத்தூதர் என்று தன்னை மக்களுக்கு அறிவித்த பிறகு, நபிகள் நாயகம் அவர்கள் 23 ஆண்டுகள் வாழ்ந்தார்கள். 15 ஆண்டுகளுக்கு பின்னர் தான் முதல் போர் நடைபெற்றது. மக்கா நகரத்தில் பல சித்திரவதைகளையும், துன்புறுத்துதல்களையும் சந்தித்த போதும், நபிகள் நாயகம் அவர்கள் எதிரிகளை எதிர்த்துப் போர் செய்யவில்லை.
மதீனாவின் ஆட்சியாளர்
நபிகள் நாயகம் அவர்கள் மதீனாவில் குடியேறிய போது, அந்த நாட்டின் தலைவராக அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவரது ஆட்சியின் கீழ் வாழும் பல்லாயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகளை எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் பொறுப்பு நபிகள் நாயகத்திற்கு ஏற்படுகிறது.
தற்காப்பிற்கு அனுமதி
குர்ஆனில் இறைவன் தெளிவாகக் கூறுகிறான்:
அநியாயத்தில் சிக்கி, போருக்கு நிர்பந்திக்கப்பட்டவர்களுக்கு, தங்களிடம் சண்டை செய்பவர்களை எதிர்த்து போர் புரிய அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
குர்ஆன் அத்தியாயம் 22 : வசனம் 39
தற்காப்பிற்கு தடையில்லை
இன்று உலகில் உள்ள எல்லா நாடுகளும் தங்கள் நாட்டை பாதுகாக்க இராணுவத்தை வைத்துள்ளன. தேவைப்படும் போது போரும் செய்கின்றன. ஐ நா சபை கூட அமைதியை நிலைநாட்ட “அமைதிப் படை” ஒன்றை வைத்துள்ளது. இதே போல் தான், ஆட்சியாளராக இருந்த நபிகள் நாயகம் அவர்களும் தனது மக்களைப் பாதுகாக்க போர் செய்ய வேண்டியிருந்தது.
“ஒரு கன்னத்தில் அடித்தால், மறு கன்னத்தைக் காட்டு” என்று சொல்வது கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், நடைமுறைக்கு சாத்தியமில்லை என்பதை சிந்திக்கும் எல்லோருமே ஒப்புக் கொள்வர்.
சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்குகள் போலவே…
புல்வாமா, பஹல்காம் தாக்குதல்களுக்குப் பிறகு, இந்தியா பாகிஸ்தான் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியது. பாகிஸ்தானைக் கைப்பற்றுவது இந்தியாவின் நோக்கம் அல்ல. மாறாக, பயங்கரவாதிகளிடமிருந்து இந்தியாவை தற்காத்துக் கொள்ளவே, சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தப்பட்டது.
நபிகள் நாயகம் அவர்களின் போர்களையும் நாம் இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும். நபிகள் நாயகம் அவர்கள் செய்த போர்கள் தற்காப்பிற்கு தானே தவிர, நாடு பிடிப்பதற்கு அல்ல.
எத்தனை போர்கள்?
23 வருட காலத்தில், நபிகள் நாயகம் அவர்கள் வெறும் ஆறு போர்களில் மட்டுமே பங்கேற்றார்கள். அவர்கள் வன்முறையையோ, போரையோ விரும்பவில்லை என்பதற்கு இதுவே ஆதாரம்.
நீங்கள் புரிந்து கொள்ள ஒரு உதாரணம்…
நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பயணம் செய்து உங்களை தாக்க ஒருவர் வருகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவரைத் தடுப்பதற்காக நீங்கள் வசிக்கும் ஊருக்கு வெளியே வந்து அவரிடம் சண்டையிடுகிறீர்கள். ஆனால், சண்டையிட்டு, வன்முறையை நீங்கள் தான் தூண்டுகிறீர்கள் என்று உங்களைப் பார்த்து பிறர் குற்றம்சாட்டினால், நீங்கள் ஒத்துக் கொள்வீர்களா? நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பயணம் செய்து தாக்க வந்தவனையல்லவா நீங்கள் குற்றம் சொல்ல வேண்டும்! தற்காப்பிற்காக சண்டையிடும் என்னை குற்றம் சொல்வது எப்படி நியாயம் என்று கேட்பீர்கள் அல்லவா?
நபிகள் நாயகம் அவர்களின் விஷயத்திலும் இதுதான் நடந்தது. நபிகளாரின் எதிரிகள் மக்காவிலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணம் செய்து அவரைத் தாக்க அணிவகுத்து வந்தனர். அவர்களிடமிருந்து தன் மக்களை காக்கவே நபிகள் நாயகம் போர் செய்தார்கள். இதை சற்று விரிவாக பார்ப்போம்.
நபிகளார் பங்கெடுத்த போர்கள்
பத்ரு போர்

- போர் நடந்த இடம்: மதீனாவிலிருந்து 150 கி.மீ., மக்காவிலிருந்து 350 கி.மீ.
- எதிரிகள் போர் செய்வதற்காக 350 கி.மீ. பயணம் செய்து வந்தனர். அவர்களைத் தடுக்க முஸ்லிம்கள் வெறும் 150 கி.மீ. மட்டுமே பயணம் செய்தனர். இதிலிருந்து எதிரிகள் தான் போருக்கு காரணம் என்பதையும், நபிகளார் தற்காப்பிற்காகவே போர் செய்தார்கள் என்பதையும் புரிந்துக் கொள்ளலாம்.
- 2 குதிரைகள் மற்றும் 313 நபர்கள் மட்டுமே கொண்ட நபிகளாரின் சிறிய படை, 100 குதிரைகளும், 1000 பேர் கொண்ட பெரும் படையை வென்றது.
- போரின் வெற்றிக்குப் பிறகு, நபிகள் நாயகம் அவர்கள் அனைத்து போர்க் கைதிகளையும் விடுதலை செய்தார்கள். நபிகளாரின் பெருந்தன்மையையும், கருணை உள்ளத்தையும் இது காட்டுகிறது.
உஹதுப் போர்

- போர் நடந்த இடம்: மதீனாவிலிருந்து வெறும் 10 கி.மீ. தொலைவில்.
- எதிரிகள் மக்காவிலிருந்து 450 கி.மீ. தூரம் பயணம் செய்து போர் செய்ய வந்தனர். அந்த காலத்தில் ஒரு படையோடு இவ்வளவு நீண்ட தூரம் பயணம் செய்ய எந்த அளவு திட்டமிடலும், முயற்சியும் தேவை என்பதை எண்ணிப் பாருங்கள். போர் செய்து நபிகளாரை அழிப்பதே அவர்களின் எண்ணம் என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.
- நபிகள் நாயகம் அவர்கள் எதிரிகளை தடுக்கவே இந்த போர் செய்தார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.
- இந்த போரில் தன் நெருங்கிய உறவினரான ஹம்சா உட்பட பலர் கோரமாக கொல்லப்பட்டார்கள். போர் நெறிமுறைகளை மீறி உடல்கள் சிதைக்கப்பட்டன. எதிரிகளை பழிவாங்க, கொல்லப்பட்ட எதிரிகளின் உடல்களை சிதைக்கக் கூடாது என்று நபிகளார் உத்தரவிட்டார்கள். இது அவர்களின் உயர்ந்த பண்பைக் காட்டுகிறது.
கந்தக் போர் (அகழ்ப்போர்)

- போர் நடந்த இடம்: மதீனாவின் புறநகர்ப் பகுதி
- மக்காவாசிகள் முஸ்லிம்களை அழிக்க பல மாதங்களாகத் திட்டமிட்டு மதீனாவுக்குப் பயணம் செய்தனர்.
- முஸ்லிம்களை அழிக்க, மக்காவின் அருகில் வசிக்கும் அரபு பழங்குடியினரிடமிருந்தும், யூத மக்களிடமிருந்தும் ஆதரவைத் திரட்டினர்.
- அது வரை இல்லாத வகையில் 10,000 பேர் கொண்ட ஒரு பெரிய கூட்டணிப் படை ஒன்று திரட்டப்பட்டது.
- நபிகளாரும், முஸ்லிம்களும் சேர்ந்து மதீனாவைச் சுற்றி ஒரு பெரிய அகழியை தோண்டி, எதிரிகளின் தாக்குதல்களை முறையடித்தனர்.
- இந்த போரிலும், கூட்டணிப் படையோடு முஸ்லிம்களை அழிக்க மதீனா வந்த எதிரிகளே போருக்கு காரணம் என்பது தெளிவு.
முரைசி போர்

- அகழ்ப்போருக்கு பிறகு, எதிரிகளின் திடீர் தாக்குதல்களைத் தடுக்க, நபிகள் நாயகம் அவர்கள் எதிரிகளின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க தொடங்கினார்கள்.
- உஹதுப் போரில் மக்கா எதிரிகளோடு சேர்ந்த போர் செய்த பனூ முஸ்தலிக் என்ற கோத்திரத்தினர், மதினாவை தாக்க தயாராகி வருவதை நபிகளார் கண்டறிந்தார்கள்.
- தங்களை தற்காத்துக் கொள்ள, முரைசி என்ற இடத்தில் எதிரிகளோடு போர் செய்து வெற்றிக் கொண்டார்கள்.
- வெற்றிக்கு பிறகு, அந்த பனூ முஸ்தலிக் கோத்திரத்தின் இளவரசியை நபிகளார் திருமணம் செய்தார்கள்.
- இந்தத் திருமணம் இரு தரப்பிலும் இருந்த பகைமையை போக்கியது. போரில் கைது செய்யப்பட்ட எல்லா போர்க் கைதிகளையும் முஸ்லிம்கள் விடுதலை செய்தனர்.
- இதன் விளைவாக, பனூ முஸ்தலிக் கோத்திரத்தினர் அனைவரும் இஸ்லாத்தைத் தழுவி, நபிகளாரின் ஆதரவாளர்களாக மாறினர்.
கைபர் போர்

- அகழ்ப்போரில் மக்காவாசிகளோடு கூட்டணி வைத்து, மதீனா மீது போர் தொடுத்த சக்திவாய்ந்த பனூ நளீர் என்ற யூத பழங்குடியினரின் தாயகமாக கைபர் இருந்தது.
- அகழ்ப்போருக்குப் பிறகு, கதஃபான் என்ற பழங்குடியினரோடு கூட்டணி வைத்து, மதீனாவை தாக்க பனூ நளீர்கள் திட்டம் தீட்டினர்.
- கதஃபான் பழங்குடியினருக்கு தங்கள் வருடாந்திர அறுவடையில் பாதியை தருவதாகவும் உறுதியளித்தனர்.
- சுமார் 10,000 பேர் கொண்ட ஒரு கூட்டணி படையைத் திரட்டினர்.
- இதை தடுக்க, நபிகளார் பனூ நளீருக்கு எதிராக போர் செய்து, வெற்றி பெற்றார்கள்.
- வெற்றிக்குப் பிறகு, எதிரிகள் தங்கள் விளைநிலங்களை வைத்துக் கொள்ளவும், அதில் பயிர் செய்யவும் அனுமதித்தார்கள். தோல்வி அடைந்த எதிரிகளை விரட்டி விட்டு, அந்த நிலங்களை கைப்பற்றி இருக்க முடியும். ஆனால், அப்படி செய்யவில்லை. இது நபிகளாரின் பெருந்தன்மையை காட்டுகிறது. நாடு பிடிப்பது நபிகளாரின் நோக்கமில்லை என்பதையும் உணர்த்துகிறது.
ஹுனைன் போர்

- இதுவே நபிகளார் பங்கெடுத்த இறுதிப் போர்.
- மக்காவை இரத்தம் சிந்தாமல் அமைதியான முறையில் நபிகளார் வெற்றிக் கொண்டார்கள். இது மக்காவாசிகளின் கூட்டணியில் இருந்த ஹவாசின் என்ற பழங்குடியினருக்கும், தாயிஃபில் உள்ள தக்கிப் என்ற பழங்குடியினருக்கும் பிடிக்கவில்லை. இந்த இரண்டு பழங்குடியினரும் மக்காவாசிகளோடு கூட்டணி வைத்து, அகழ்ப்போரில் மதீனாவை தாக்க வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இவர்கள் முஸ்லிம்களைத் தாக்கத் தயாரானார்கள்.
- அவர்களின் தாக்குதலிலிருந்து மக்களை பாதுகாக்க, நபிகளார் போர் செய்தார்கள்.
நபியின் போர் நெறிமுறைகள்
போர் நெறிகளை அமல்படுத்திய ஜெனீவா உடன்படிக்கைக்கு 1400 ஆண்டுகள் முன்பே, உலகிற்கு முதன் முதலில் அற்புதமான போர் நெறிமுறைகளை வழங்கியவர்கள் நபிகளார். அவர் வழங்கிய போர் நெறிமுறைகள் நாம் வாழும் காலத்திற்கு மிகப் பொருத்தமானவை.
- பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், ஊனமுற்றவர்களைக் கொல்லக் கூடாது. (பைஹகி 9/91; புகாரி # 3015)
- உடல்களை சிதைக்க கூடாது. விலங்குகளைக் கொல்லக் கூடாது. மரங்களை வெட்டக் கூடாது. (பைஹகி 9/91)
- துறவிகள், சந்நியாசிகளை துன்புறுத்தக் கூடாது. (முஸ்னத் அஹ்மத் # 2728)
- போர் செய்யாதவர்களைக் கொல்லக் கூடாது. போர் செய்யாதவரைக் கொல்பவரே மிகவும் தீயவர். (முஸ்னத் அஹ்மத் # 6757)
- போர்க் கைதிகளுக்கு நல்ல உணவளிக்க வேண்டும். அவர்களுக்கு நல்ல உடையளிக்க வேண்டும். அவர்கள் மேல் அதிகம் வேலை பளு சுமத்தக் கூடாது. (சஹிஹ் முஸ்லிம் # 1662; மஜ்மா அல்-ஜவாயித் 6/89)
- போர்க் கைதிகள் முடிந்தவரை விடுதலை செய்ய வேண்டும். (புகாரி # 5373)
- சித்திரவதை செய்யக் கூடாது. (சஹிஹ் முஸ்லிம் # 2613)
- பரம எதிரிகளுக்கு கூட கருணை காட்ட வேண்டும். தனது குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட துமாமா என்பவரை நபிகளார் விடுதலை செய்தார்கள். (புகாரி # 4372)
- கொள்ளையடிப்பதும், சூறையாடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. (இப்னு மாஜா # 3938)
எதிரிகள் போர் விதிகளை மீறியபோதும் கூட…
நபிகள் நாயகம் அவர்கள் தனது போர் நெறிமுறைகளை ஒருபோதும் மீறியதில்லை. உஹத் போரின் போது, நபிகளாரின் நெருங்கிய உறவினரான ஹம்சா உட்பட பலர் கோரமாக கொல்லப்பட்டார்கள். போர் நெறிமுறைகளை மீறி அவர்களது உடல்கள் சிதைக்கப்பட்டன. எதிரிகளை பழிவாங்க, கொல்லப்பட்ட எதிரிகளின் உடல்களை சிதைக்கக் கூடாது என்று நபிகளார் உத்தரவிட்டார்கள். (இப்னு கதிர், அல்-பிதாயா வல்-நிஹாயா, தொகுதி. 3, பக். 124)
கொடூரமாக முஸ்லிம்களின் உடலை சிதைத்தவர்கள், பின்னர் இஸ்லாத்தைத் தழுவினர். ஒப்பிடமுடியாத கருணையோடு அவர்கள் அனைவரையும் நபிகளார் மன்னித்தார்கள்.
போரில் உயிரிழப்புகள்
நபிக்ளாரின் அனைத்துப் போர்களிலும், இரு தரப்பினரையும் சேர்த்து, மொத்த உயிரிழப்புகள் சுமார் 1,000 மட்டும் தான். வரலாற்றில் நடந்த மற்ற போர்களுடன் ஒப்பிடும்போது, இது மிகவும் குறைவாகும்.
| போர் | உயிரிழப்புகள் |
| நபிகளாரின் போர்கள் | 1000 |
| சிலுவைப் போர்கள் | 10-30 இலட்சம் |
| மங்கோலிய படையெடுப்புகள் | 4-6 கோடி |
| கலிங்கப் போர் | 1 இலட்சம் |
| முதல் உலகப் போர் | 2 கோடி |
| இரண்டாம் உலகப் போர் | 4-8 கோடி |
| ஈராக் போர் | 2-5 இலட்சம் |
முடிவுரை
நபிகளார் ஒருபோதும் போர்களை நாடு பிடிக்க செய்யவில்லை. தன் மக்களைப் பாதுகாக்கவே போர் செய்தார்கள். அப்படி செய்த போரில் கூட, நீதியோடும், கருணையோடும், மனிதநேயத்தோடும் நடந்து கொண்டார்கள்.
