முன்னுரை
திருக்குறளும், திருக்குர்ஆனும் உலகத்தில் பலரால் போற்றப்படும் நூல்கள். தமிழின் பெருமையை உலகம் முழுவதும் உணர்த்திய நூல் திருக்குறள். அதேபோல், உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்டும் இறைவேதம் திருக்குர்ஆன். இரண்டும் வெவ்வேறு காலத்திலும், வெவ்வேறு சூழலிலும் தோன்றியவை என்றாலும், அவை சொல்லும் கருத்துக்களில் பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன. அதற்காக, குர்ஆனுக்கும், குறளுக்கும் முரண்பாடே கிடையாது என்று நாம் சொல்லவில்லை. நிச்சயமாக முரண்பாடுகள் உள்ளன.
குர்ஆனுக்கும், குறளுக்கும் இருக்கிற முரண்பாடுகளை ஒரு பக்கம் வைத்து விட்டு, அவை சொல்லும் ஒத்த கருத்துக்கள் மேல் கவனம் செலுத்தினால், பன்முக சமூகத்தில் வாழும் நமக்கு மத்தியில் இணக்கமும், புரிதலும் அதிகரிக்கும். இந்த கட்டுரையில், குர்ஆனுக்கும், குறளுக்கும் இருக்கும் ஒத்த கருத்துக்களை பற்றி பார்க்கலாம்.
குறிப்பு
திருக்குறளின் விளக்கத்திற்கு சாலமன் பாப்பையா, மு. வரதராசன், புலியூர்க் கேசிகன், கலைஞர் கருணாநிதி ஆகியோர் எழுதிய உரைகளை பயன்படுத்தியுள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நம்மை படைத்த இறைவன் ஒருவனே!
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
குறள் # 1
பகவன் முதற்றே உலகு.
இந்த குறளில், உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது என்று வள்ளுவர் சொல்கிறார்.
குர்ஆன் என்ன சொல்கிறது?
அகிலத்தைப் படைத்து பராமரிக்கும் இறைவனுக்கே எல்லா புகழும்!
குர்ஆன் அத்தியாயம் 1 வசனம் 1
அகிலத்தைப் படைத்து பராமரிப்பவன் இறைவன் தான். அகிலமே இறைவனை அடிப்படையாக கொண்டது என்று குர்ஆனும் சொல்கிறது.
நீங்கள் திருக்குறளை முழுமையாக கவனமாக படித்துப் பார்த்தால், “பல கடவுள்கள்” என்று சொல்லும் ஒரு குறள் கூட இல்லை. ஒரே இறைவன் பற்றியே வள்ளுவர் பேசுகிறார்.
நிச்சயமாக உங்கள் கடவுள் ஒருவன்தான்.
குர்ஆன் அத்தியாயம் 37 வசனம் 4
குர்ஆனும் கடவுள் ஒருவன்தான் என்று மிக தெளிவாகவும், அழுத்தமாகவும் சொல்கிறது.
பல கடவுள்கள் இருக்கவே முடியாது. அது கொஞ்சம் கூட அறிவுக்கு பொருந்தாத விஷயம் என்பதை இந்த கட்டுரையில் விளக்கியுள்ளோம்.
திருக்குறளை மதிக்கும் பலர், கடவுளை மறுக்கும் நாத்திகர்களாக இருக்கிறார்கள். கடவுள் இருக்கிறானா என்பதை இந்த கட்டுரையில் அறிவுப்பூர்வமாக ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
இறைவன் தேவையற்றவன்
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
குறள் # 4
யாண்டும் இடும்பை இல.
இந்த குறளில், இறைவனுக்கு விருப்பு, வெறுப்பு, தேவைகள் இல்லை என்று வள்ளுவர் சொல்லுகிறார்.
குர்ஆன் இதையே இப்படி சொல்கிறது:
இறைவன் (எவருடைய) தேவையுமற்றவன்.
குர்ஆன் அத்தியாயம் 112 வசனம் 2
இறைவனுக்கு நிகராக யாரும் கிடையாது
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
குறள் # 7
மனக்கவலை மாற்றல் அரிது.
தனக்கு இணையேயில்லாதவன் தான் கடவுள் என்று வள்ளுவர் சொல்கிறார்.
குர்ஆனும் இதே கருத்தை அழுத்தமாகச் சொல்கிறது:
இறைவனுக்கு நிகராக எவரும் இல்லை.
குர்ஆன் அத்தியாயம் 112 வசனம் 4
இறைவனை மட்டும் தான் வணங்க வேண்டும்
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
குறள் # 2
நற்றாள் தொழாஅர் எனின்.
இந்த குறளில், எல்லாம் அறிந்த இறைவனை வணங்காதவருக்கு அறிவு இருந்தும் என்ன பயன் என்று வள்ளுவர் கேட்கிறார்.
இதே கருத்தை குர்ஆன் எப்படி சொல்கிறது என்று பாருங்கள்!
(மனிதர்களே!) உங்கள் வணக்கத்திற்குத் தகுதியானவன் ஒரே ஓர் இறைவன் தான். அளவில்லாமல் அருள் புரியும், இணையில்லாமல் இரக்கம் காட்டும் அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை.
குர்ஆன் அத்தியாயம் 2 வசனங்கள் 163,164
பிரபஞ்சத்தை படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறிமாறி வருவதிலும், மக்களுக்குப் பயனளிப்பவற்றுடன் கடலில் செல்லும் கப்பலிலும், இறைவன் வானத்திலிருந்து இறக்கி வைக்கும் மழையிலும், பூமி வறண்ட பின் அதன் மூலம் அதைச் செழிக்கச் செய்வதிலும், ஒவ்வொரு உயிரினத்தையும் அதில் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறிமாறி வீசச் செய்திருப்பதிலும், வானத்திற்கும் பூமிக்கும் இடையில் கட்டுப்படுத்தப்பட்ட மேகத்திலும், சிந்தித்துப் புரிகிற மக்களுக்கு பல அத்தாட்சிகள் உள்ளன.
நம்மை படைத்த இறைவனைத் தவிர யாரையும் வணங்க கூடாது என்று குர்ஆன் சொல்லிவிட்டு, இந்த பிரபஞ்சத்தில் உள்ள இறைவனின் அத்தாட்சிகளை பற்றி, பிரபஞ்சம், மழை, இரவு–பகல், காற்று, உயிரினங்கள் பற்றி சிந்தித்து பார்த்தால், அறிவுள்ள யாரும், இறைவனைத் தவிர வேறு யாரையும் வணங்க மாட்டார்கள் என்று குர்ஆன் சொல்கிறது.
கண், காது இருந்தும் பயனில்லை…
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
குறள் # 9
தாளை வணங்காத் தலை.
கண், காது இருந்தும் பயன் பெறாதவர்களை போன்றவர்கள் தான் கடவுளை வணங்காதவர்கள் என்று வள்ளுவர் மிக கடுமையாக சொல்கிறார்.
அவர்களுக்கு கண்கள் உண்டு, அவற்றின் மூலம் பார்க்க மாட்டார்கள். அவர்களுக்கு செவிகள் உண்டு, அவற்றின் மூலம் செவிகொடுத்து கேட்க மாட்டார்கள். அவர்கள் கால்நடைகளைப் போன்றவர்கள். அதை விட வழிகெட்டவர்கள்.
குர்ஆன் அத்தியாயம் 7 வசனம் 179
இறைவனை மட்டும் வணங்காமல் நிராகரிப்பவர்கள் பற்றி கண்கள் இருந்தும் பார்க்க மாட்டார்கள், காது இருந்தும் கேட்க மாட்டார்கள், கால்நடைகள் போல் சிந்திக்க மறுப்பவர்கள் என்று குர்ஆன் விவரிக்கிறது.
முடிவில்லாத வாழ்க்கை வாழ…
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
குறள் # 6
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
தீய ஆசைகளை அழித்து கடவுள் கற்றுத் தரும் ஒழுக்கத்தை பின்பற்றுபவர், நிலையாக வாழ்வார் என்று வள்ளுவர் சொல்லுகிறார்.
யார் இறைவனுக்கு முன் (விசாரணைக்காக) நிற்கின்ற நாளைப் பயந்து, (தப்பான) மன இச்சையை விட்டு விலக்கிக் கொண்டாரோ, (நிலையான) சொர்க்கமே (அவரது) தங்குமிடம்.
குர்ஆன் அத்தியாயம் 79 வசனங்கள் 40,41
மரணத்திற்கு பின் வாழ்க்கை உண்டு
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
குறள் # 247
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.
இந்த குறளை கவனமாக படியுங்கள்.
பொருளில்லாதவர்க்கு அதாவது பணம் இல்லாதவருக்கு இந்த உலகம் இல்லை என்று வள்ளுவர் சொல்லுகிறார். சரி, அருள் இல்லாதவருக்கு அவ்வுலகம் இல்லை என்று வள்ளுவர் சொல்லுகிறாரே, அது என்ன அவ்வுலகம்? இந்த உலகத்தை தவிர வேறு உலகம் இருக்கிறதா?
வள்ளுவர் இது பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்ப்போம்.
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
குறள் # 353
வானம் நணிய துடைத்து.
இந்த குறளில், மெய்ப்பொருளை உணர்ந்தவர்களுக்கு இவ்வுலகை விட அடைய வேண்டிய மேலுலகம் அருகில் இருக்கும் என்று சொல்கிறார். மேலுலகம் என்பது என்ன? அது என்ன என்பதை, வேறு ஒரு குறளில் வள்ளுவர் தெளிவாகவே சொல்கிறார். இந்த குறளை பாருங்கள்.
இன்மை எனவொரு பாவி மறுமையும்
குறள் # 1042
இம்மையும் இன்றி வரும்.
வறுமை ஒருவரிடம் வந்துவிட்டால், அவருக்கு இந்த உலகின் இன்பமும், மறுமையின் சுவர்க்க இன்பமும் இல்லாமல் போய்விடும் என்று சொல்லுகிறார். மறுமை என்றால், மரணத்திற்கு பின் உள்ள நிலையான வாழ்க்கை என்று அர்த்தம்.
மரணத்திற்கு பின் ஒரு வாழ்க்கை உண்டு என்பதை வள்ளுவரும் சொல்கிறார் என்பதை இதிலிருந்து நாம் உணரலாம்.
மரணத்திற்கு பின் வாழ்க்கை பற்றி குர்ஆன் சொல்லும் போது..
யார் நம்பிக்கைக் கொண்டு, நற்செயல்களை செய்தார்களோ, அவர்களுடைய கூலி இறைவனிடத்தில் உள்ள என்றும் நிலையான சொர்க்கங்களாகும். அதில் அவர்கள் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.
குர்ஆன் அத்தியாயம் 98 வசனங்கள் 7,8
யார் இறைவனை நம்பி, நற்செயல்களை செய்தார்களோ, அவர்களுக்கு நிரந்தர சொர்க்கம் உண்டு என்று குர்ஆன் சொல்கிறது.
மரணத்திற்கு பின் வாழ்க்கை சாத்தியமா? அதை நம்புவது பகுத்தறிவா? போன்ற கேள்விகளுக்கு அறிவியற்பூர்வமான பதில்களை அறிந்து கொள்ள இந்த கட்டுரையை படியுங்கள்.
மறுபிறவி உண்மையா? புனர்ஜென்மம் உண்டா? இந்த கேள்விகளுக்கான பதில்களை தெரிந்து கொள்ள, இந்த கட்டுரையை படியுங்கள்.
இந்த உலகம் தற்காலிகமே..
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
குறள் # 336
பெருமை உடைத்துஇவ் வுலகு.
நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்று சொல்லும் அளவிற்கு இந்த உலகம் தற்காலிகமானது என்று வள்ளுவர் சொல்லுகிறார்.
இந்த உலக வாழ்க்கை எல்லாம் தற்காலிக அற்ப இன்பம்தான். நிச்சயமாக மறுமைதான் நிரந்தரமான (இன்பம் தரும்) தங்குமிடம்.
குர்ஆன் அத்தியாயம் 40 வசனம் 39
என்று இதே கருத்தை குர்ஆனும் மிக அழகாக சொல்கிறது.
சமத்துவம்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
குறள் # 972
செய்தொழில் வேற்றுமை யான்.
பிறப்பால் எல்லா மக்களும் சமம் தான் என்று வள்ளுவர் கூறுகிறார்.
மனிதர்கள் எல்லோரும் சமம் என்பதை குர்ஆன் மிக அழகாக சொல்கிறது.
மனிதர்களே! உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம். (அதனால், உங்களில் ஒருவர் மற்றவரைவிட உயர்ந்தவர் என்று பெருமை பேசாதீர்கள்.) உங்களில் எவர் பயபக்தி உடையவரோ, அவர்தான் இறைவனிடத்தில் நிச்சயமாக மிக உயர்ந்தவர்.
குர்ஆன் அத்தியாயம் 49 வசனம் 13
மனிதர்கள் எல்லோரும் ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்து படைக்கப்பட்ட ஓர் தாய் பிள்ளைகள் என்று குர்ஆன் சொல்கிறது. அதனால், பிறப்பால் உயர் ஜாதி, தாழ்ந்த ஜாதி என்பது கிடையாது. யார் நல்லவர்களாக வாழ்கிறார்களோ, அவர்களே உயர்ந்தவர்கள் என்பது தான் குர்ஆன் சொல்லும் கருத்து.
ஒருவர் நமக்கு தீமை செய்தால்..
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
குறள் # 314
நன்னயஞ் செய்து விடல்.
நமக்குத் தீமை செய்தவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மையைச் செய்து விட வேண்டும் என்று வள்ளுவர் சொல்லுகிறார்.
நன்மையும் தீமையும் சமமாகாது. நல்லதைக் கொண்டே தீமையை தடுப்பீராக! யாருக்கு உம் மேல் பகை இருக்கிறதோ, அவர் உங்கள் நெருங்கிய நண்பர் போல் ஆகிவிடுவார்.
குர்ஆன் அத்தியாயம் 41 வசனம் 34
தீமையை நல்லதை கொண்டே எதிர்கொள்ள வேண்டும் என்று இதே கருத்தை குர்ஆனும் வலியுறுத்துகிறது.
நீதமாக நடந்து கொள்!
தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
குறள் # 111
பாற்பட்டு ஒழுகப் பெறின்.
பகைவர், நண்பர், பக்கத்து வீட்டுக்காரர் என்று பார்த்து, ஒருதலைச் சார்பாக நிற்காமல், நீதமாய் நடந்தால், இது மட்டுமே வாழ்க்கைக்கு போதும் என்று வள்ளுவர் சொல்கிறார். இதே கருத்தை குர்ஆனும் எப்படி அழகாக சொல்கிறது பாருங்கள்.
உங்களுக்கோ, பெற்றோருக்கோ, உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் நீங்கள் நீதியை நிலைநாட்டுவோராகவும், இறைவனுக்காக சாட்சி கூறுவோராகவும் ஆகி விடுங்கள்! நீதி வழங்குவதில் மனோ இச்சையைப் பின்பற்றாதீர்கள்!
குர்ஆன் அத்தியாயம் 4 வசனம் 135
தூய உள்ளம்
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
குறள் # 34
ஆகுல நீர பிற.
ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும். இதுவே அறம். மனத்தூய்மை இல்லாத மற்றவை, வாழ்க்கை வேடங்களுக்கும் மற்றவர் அறியச் செய்யப்படும் ஆடம்பரங்களே என்று வள்ளுவர் கூறுகிறார்.
தூய உள்ளத்தோடு வாழ்வதன் சிறப்பை பற்றி குர்ஆன் இப்படி சொல்கிறது.
யார் இறைவனிடத்தில் தூய உள்ளதோடு வருகிறாரோ அவர் (கண்ணியம் அடைவார்).
குர்ஆன் அத்தியாயம் 26 வசனம் 89
உன் செயல்களை வைத்து தான்…
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
குறள் # 505
கருமமே கட்டளைக் கல்.
ஒருவர் தாம் அடையும் பெருமைக்கும், மற்றொருவர் தாம் அடையும் சிறுமைக்கும், அவரவர்களின் செயல்களே என்று வள்ளுவர் இந்த குறளில் சொல்கிறார்.
ஒவ்வொரு மனிதருக்கும் அவருடைய செயலுக்குத்தக்க கூலியே (இறைவனால்) கொடுக்கப்படும்.
குர்ஆன் அத்தியாயம் 45 வசனம் 22
நல்ல சொற்கள் தர்மத்தை விட பெரிது
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
குறள் # 92
இன்சொலன் ஆகப் பெறின்.
முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, மனம் மகிழ்ந்து பொருளைக் கொடுப்பதைக் காட்டிலும் நல்லது என்று சொல்கிறார் வள்ளுவர்.
இதே கருத்தை குர்ஆன் எப்படி சொல்கிறது என்று பாருங்கள்.
கனிவான இனிய சொற்களும், மன்னித்தலும்; தர்மம் செய்தபின் நோவினையைத் தொடரும்படிச் செய்யும் தர்மத்தை விட மேலானவையாகும்.
குர்ஆன் அத்தியாயம் 2 வசனம் 263
கஞ்சத்தனம்
பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
குறள் # 438
எண்ணப் படுவதொன் றன்று.
யாருக்கும் எதுவும் கொடுக்காமல், செல்வத்தின் மீது ஆசை கொண்ட கஞ்ச மனத்தைப் பெற்றிருப்பது குற்றங்கள் எல்லாவற்றிலும் பெருங்குற்றமாகும் என்று சொல்கிறார் வள்ளுவர்.
எவர்கள் தங்கத்தையும், வெள்ளியையும் பதுக்கிவிட்டு, அவற்றை இறைவனின் பாதையில் தர்மம் செய்யவில்லையே, அவர்களுக்கு துன்புறுத்தக்கூடிய தண்டனை உண்டு.
குர்ஆன் அத்தியாயம் 9 வசனம் 34
செல்வத்தை தர்மத்திற்காக செலவு செய்யாமல் பதுக்கி வைப்பது பெருங்குற்றம் என்று குர்ஆனும் சொல்கிறது.
தர்மத்திலும் நிதானம்
ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
குறள் # 477
போற்றி வழங்கு நெறி.
உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
குறள் # 480
வளவரை வல்லைக் கெடும்.
தர்மம் செய்யும் போது, தம் பொருளாதார நிலையை அறிந்து கொடுக்க வேண்டும். அது தான் செல்வத்தைக் காப்பதற்கு சரியான வழியாகும் என்று சொல்லிவிட்டு, தன் பொருளாதார நிலையை புரிந்து கொள்ளாமல் அளவில்லாமல் கொடுத்துக் கொண்டே இருந்தால், அவர் செல்வத்தின் அளவு விரைவில் குறையும் என்று வள்ளுவர் சொல்லுகிறார்.
இதே கருத்தை குர்ஆனும் மிக அழகாக சொல்கிறது.
(மனிதனே! தர்மம் செய்யாமல்) உனது கையை உன் கழுத்தில் கட்டப்பட்டதாக ஆக்காதே! (செலவு செய்வதில்) ஒரேயடியாக அதை விரித்தும் விடாதே! (அவ்வாறு விரித்தால்) இழிவடைந்தவராக, (செல்வம் அனைத்தும்) தீர்ந்துபோனவராக தங்கிவிடுவாய்.
குர்ஆன் அத்தியாயம் 17 வசனம் 29
புறம்பேசுதல்
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
குறள் # 183
அறங்கூற்றும் ஆக்கத் தரும்.
பிறர் இல்லாத போது அவரைப் பற்றி தவறாக பேசி, அதாவது புறம்பேசி உயிர் வாழ்வதைவிட இறந்து போவது நல்லது என்று புறம்பேசுதலை மிகக் கடுமையாக வள்ளுவர் விமர்சிக்கிறார்.
உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தனது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை நீங்கள் வெறுப்பீர்களே!
குர்ஆன் அத்தியாயம் 49 வசனம் 12
புறம்பேசுவது இறந்த தனது சகோதரனின் மாமிசத்தை உண்பதற்கு சமம் என்று குர்ஆனும் புறம்பேசுதலை மிகக் கடுமையாகக் கண்டிக்கிறது.
மரண வேதனை
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
குறள் # 335
மேற்சென்று செய்யப் படும்.
நாக்கு உள்ளே இழுத்துக் கொண்டு விக்கல் வருவதற்கு முன் என்று மரணிக்கும் நேரத்தின் கடுமையை வள்ளுவர் விவரிக்கிறார்.
மரணத்தின் வேதனையும், மயக்கமும் உண்மையாக வந்துவிடும் போது, (அவனை நோக்கி) ‘‘நீ தப்பிவிட நினைத்தது இதுதான்” (என்று கூறப்படும்.)
குர்ஆன் அத்தியாயம் 50 வசனம் 19
மரண வேதனை என்பது உண்மை என்று குர்ஆனும் வலியுறுத்துகிறது.
மேலே நாம் எடுத்துக்காட்டிய குறளில், மரணம் வருவதற்கு முன் நல்ல செயல்களை விரைவாகச் செய்ய வேண்டும் என்று வள்ளுவர் சொல்கிறார். இதே கருத்தை, குர்ஆன் சொல்வதை நீங்களே பாருங்கள்.
உங்களுக்கு மரணம் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள்! “இறைவா! குறைந்த காலம் வரை எனக்கு நீ அவகாசம் அளித்தால், தர்மம் செய்து நல்லவனாக ஆகிவிடுவேன்” என்று அப்போது (மனிதன்) கூறுவான்.
குர்ஆன் அத்தியாயம் 63 வசனம் 10
சொல்வதை செய்
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
குறள் # 664
சொல்லிய வண்ணம் செயல்.
நான் இப்படிச் செய்யப் போகிறேன் என்று சொல்லுவது சுலபம். ஆனால், சொல்லியபடியே அதைச் செய்வதுதான் கடினம் என்று வள்ளுவர் சொல்லுகிறார்.
நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? நீங்கள் செய்யாததைச் சொல்வது இறைவனிடம் கடும் கோபத்திற்குரியதாக இருக்கிறது.
குர்ஆன் அத்தியாயம் 61 வசனங்கள் 1,2
சொல்வதை செய்யாதவர்கள் பற்றி குர்ஆன் கடுமையாக விமர்சிக்கிறது.
சிந்தித்து செயல்படு
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
குறள் # 423
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
எந்தக் கருத்தை எவர் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல், உண்மை எது என்பதை ஆராய்வது தான் அறிவு என்று வள்ளுவர் சொல்கிறார்.
குர்ஆன் என்ன சொல்கிறது தெரியுமா?
அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அவர்களின் உள்ளங்கள் மீது பூட்டுக்கள் உள்ளனவா?
குர்ஆன் அத்தியாயம் 47 வசனம் 24
சொல்வதை எல்லாம் கண்ணை மூடிக்கொண்டுக் கேள் என்று குர்ஆன் சொல்லவில்லை. மாறாக, குர்ஆன் சொல்வதை நன்றாக ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று கட்டளையிடுகிறது.
“நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?” என்று கேட்கும் வசனங்கள் குர்ஆனில் ஏராளம். (பார்க்க: குர்ஆன் 2:44, 2:76, 3:65, 6:32, 7:169, 10:16, 11:51, 12:109, 21:10, இன்னும் பல வசனங்கள்).
இப்படி திருக்குறளுக்கும், திருக்குர்ஆனிற்கும் உள்ள ஒற்றுமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த கட்டுரையில் சிலவற்றை மட்டுமே பார்த்தோம். இது போல், வேறு பல எண்ணற்ற ஒற்றுமைகள் உள்ளன.
ஒரு வேண்டுகோள்
இந்த கட்டுரையை படிக்கும் நண்பர்களுக்கு நாங்கள் வைக்கும் வேண்டுகோள் என்னவென்றால், குர்ஆன் என்ன தான் சொல்கிறது என்று தெரிந்து கொள்ள ஒரு முறையாவது குர்ஆனை படியுங்கள். நன்றி!
“திருக்குறளும் திருக்குர்ஆனும்” என்ற புத்தகத்தை பதிவிறக்கம் (download) செய்ய, கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும்.

குர்ஆன் மொழியாக்கத்தை பதிவிறக்கம் செய்ய, இங்கே கிளிக் செய்யவும்.
