முன்னுரை
இரக்கமுள்ள கடவுள் நரகத்தில் தண்டிப்பது ஏன்?
இந்தக் கேள்வியை பல நூற்றாண்டுகளாக பலர் கேட்கின்றனர். ‘கடவுள் உண்மையிலேயே இரக்கமுள்ளவர், அன்பானவர் என்றால், அவர் மனிதர்களை நரகத்தில் தண்டிக்கலாமா?’ ‘கடவுள் ஏன் எல்லோரையும் மன்னிக்க கூடாது?’ ‘நரக தண்டனை கடவுளின் கருணைக்கு முரணல்லவா?’
மேலோட்டமாக பார்க்கும் போது, இது ஒரு முரணாகத் தோன்றலாம். ஆனால், சற்று ஆழமாகவும், கவனமாகவும் சிந்தித்தால், கடவுளின் கருணையின் ஆழத்தை நம்மால் உணர முடியும்.
இரக்கமும், நீதியும்
தீய செயல்களுக்கு எந்த விளைவுகளும் இல்லை என்றால், நன்மை, தீமைக்கு எல்லாம் அர்த்தமே இல்லாமல் போய்விடும். எனவே, “கடவுள் ஏன் எல்லோரையும் மன்னிக்க கூடாது?” என்று கேட்பது அர்த்தமற்றது.
ஒரு உதாரணத்திற்கு, பரீட்சையில் காப்பியடிக்கும் மாணவரையும், அவருடைய ஆசிரியரையும் எடுத்துக் கொள்வோம்.
“நான் இரக்கமுள்ளவன், அதனால் நான் காப்பியடிக்கும் மாணவரை தண்டிக்க மாட்டேன். நன்றாக படித்து எழுதிய மாணவருக்கு வழங்கும் அதே மதிப்பெண்ணை காப்பியடிக்கும் மாணவருக்கும் தருவேன்” என்று அந்த ஆசிரியர் சொன்னால், அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? நேர்மையான மாணவர்களுக்கு அநீதி இழைப்பதால், இது தவறு என்று சொல்வீர்களல்லவா?
ஆசிரியர் உண்மையிலேயே இரக்கமுள்ளவராக இருந்தால், அவர் அந்த மாணவரை எச்சரித்து, திருத்த வேண்டும். அதையும் மீறி அந்த மாணவர் தவறு செய்தால், அந்த மாணவருக்குரிய தண்டனையை வழங்க வேண்டும். இது தான் அந்த மாணவரையும் திருத்தும், நீதியும் கூட. இரக்கம் என்ற பண்பு, நீதியுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
கடவுள் கொடூர குணம் கொண்டவர் அல்ல
மனிதர்களை தண்டிப்பதால், கடவுளுக்கு மகிழ்ச்சியோ, பயனோ ஏற்படுவதில்லை. மனிதர்கள் தீமை செய்வதும், கடவுளை எந்த வகையிலும் பாதிக்காது. கடவுள் நீதி செலுத்துவதின் வெளிப்பாடு தான் தண்டனை.
குர்ஆனில் கடவுள் கூறுகிறார்:
பெரிய தீயவனைத் தவிர, (வேறு) யாரும் நரகத்திற்குள் செல்லமாட்டான்.
குர்ஆன் அத்தியாயம் 92 வசனம் 15
மனித பலவீனத்தால் தவறு செய்துவிட்டு, பின்பு வருந்தி திருந்துபவர்களை கடவுள் நரகத்தில் தண்டிப்பதில்லை. தவறு என்று நன்றாக தெரிந்தும், ஆணவத்தோடு யார் தீமை செய்வதில் நிலைத்திருக்கிறார்களோ, அவர்களையே கடவுள் நரகத்தில் தண்டிக்கிறார்.
இறைவன் இணையில்லா கருணையாளன்

நற்செயல்களுக்கு நன்மைகளை கடவுள் பெருக்குகிறார் என்று இறுதி இறைத்தூதர் முஹம்மது (அவரின் மீது இறைவனின் சாந்தி உண்டாகட்டும்) கூறினார்கள். (பார்க்க: புகாரி # 6491).
- 1 நற்செயல் செய்தால் → 10 முதல் 700+ நன்மைகள்
- நன்மை செய்ய நினைத்து, செய்யவில்லை → 1 முழு நன்மை
- தீமை செய்ய நினைத்து, செய்யவில்லை → 1 முழு நன்மை
- 1 தீயசெயல் செய்தால் → ஒரே 1 தீமை
மக்களை நரகத்தில் தண்டிப்பதை கடவுள் விரும்பினால்:
- ஒவ்வொரு நற்செயலுக்கும் பத்து முதல் எழுநூறு மடங்கு நன்மைகளை பெருக்கி தரவேண்டிய அவசியம் என்ன?
- நற்செயல் செய்யவில்லை என்றாலும், நல்ல நோக்கத்திற்காகவே ஏன் ஒரு நன்மை வழங்க வேண்டும்?
- தீய நோக்கத்திற்காக தீமையை வழங்காமல், அவர் தீய செயல் செய்யவில்லை என்பதால் ஏன் ஒரு நன்மை வழங்க வேண்டும்?
- ஒவ்வொரு தீய செயலுக்கும் அதற்கான தீமையை பெருக்கமால், ஒரே ஒரு தீமை மட்டும் ஏன் தர வேண்டும்?
நிச்சயமாக, தண்டிக்கக் காத்திருக்கும் கடவுளின் செயல்கள் இதுவல்ல என்பதை அறிவுள்ள எல்லோரும் ஒப்புக் கொள்வர். நாம் நரகத்தில் தண்டிக்கப்படக் கூடாது, சுவர்க்கத்திற்கு செல்லவேண்டும் என்பதற்காகவே, கடவுள் நன்மைகளை வாரி வழங்குகிறார். நாம் தீமை செய்துவிட்டாலும், மனம் திருந்தி வருந்தினால், நம் பாவத்தையும் கடவுள் மன்னித்து விடுகிறார்.
இதுவல்லவா கருணை! கடவுளின் கருணைக்கும், இரக்கத்திற்கும் ஈடு இணையே கிடையாது.
இறுதி இறைத்தூதர் முஹம்மது (அவரின் மீது இறைவனின் சாந்தி உண்டாகட்டும்) கூறினார்கள்:
கடவுள் தன் மீது கருணையை கடமையாக்கிக் கொண்டான்.
சஹீஹ் முஸ்லிம் # 2751
நரகம் நம் தீய செயல்களால் தான்
இறுதி இறைத்தூதர் முஹம்மது (அவரின் மீது இறைவனின் சாந்தி உண்டாகட்டும்) கூறினார்கள்:
மறுப்பவர்களைத் தவிர, என்னைப் பின்பற்றுபவர்கள் அனைவரும் சொர்க்கத்தில் நுழைவார்கள்.
புகாரி # 7280
மறுப்பவர்கள் யார் என்று மக்கள் கேட்டபோது, இறைத்தூதர் அவர்கள் இப்படி பதிலளித்தார்கள்:
என் வழிகாட்டுதலை பின்பற்றுபவர் சொர்க்கத்தில் நுழைவார். என் வழிகாட்டுதலை பின்பற்ற மறுப்பவர் நரகத்தில் நுழைவார்.
புகாரி # 7280
நன்மை, தீமையை அறியாத, நன்மை தீமையை தேர்ந்தெடுக்க முடியாத இயந்திரங்களாக நம்மை கடவுள் படைக்கவில்லை. மனிதர்களுக்கு நன்மை, தீமையை உணரும் அறிவையும், அதைச் சரியாகப் பின்பற்ற வழிகாட்டுதலையும், நன்மை தீமையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தையும் கடவுள் நமக்கு தந்துள்ளார்.
கடவுளின் வழிகாட்டுதலை நிராகரித்து, மனம் திருந்தாமல் தீய செயல்களை செய்து கொண்டே இருப்பவர் தான் நரகத்தில் நுழைகிறார். அவரது தீய செயல்களின் விளைவே நரகம்! அதாவது, நரகத்தில் நுழைவதற்கு அவரே காரணம்!
இறைவன் மிகவும் மன்னிப்பவன்
கடவுளின் மன்னிப்பிற்கு எல்லையே கிடையாது. இது கடவுளின் இணையில்லா கருணையின் வெளிப்பாடு.
குர்ஆனில் கடவுள் சொல்கிறார்:
மேலும் யார் தவறு செய்துவிட்டு, பின்னர் கடவுளிடம் மன்னிப்பு தேடுகிறாரோ, அவர் கடவுளை மகா மன்னிப்பாளனாகவும், பெரும் கருணையாளனாகவும் காண்பார்.
குர்ஆன் அத்தியாயம் 4 வசனம் 110
உங்கள் இறைவனிடம் மன்னிப்பு கேளுங்கள். நிச்சயமாக, அவன் மகா மன்னிப்பாளனாக இருக்கிறான்.
குர்ஆன் அத்தியாயம் 71 வசனம் 10
பாவம் செய்து விட்ட என் அடியார்களே! இறைவனின் கருணையில் நம்பிக்கையிழக்காதீர்கள். (நீங்கள் வருந்தி, திருந்தி, இறைவனிடம் மன்னிப்பு கேட்டால் உங்களது) எல்லாப் பாவங்களையும் நிச்சயமாக இறைவன் மன்னிப்பான். நிச்சயமாக அவன் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்.
குர்ஆன் அத்தியாயம் 39 வசனம் 53
உண்மையாக மனம் திருந்தி, கடவுளின் மன்னிப்பைக் கோர ஒருவர் எண்ணினால், மன்னிப்பின் கதவு அவருக்காக திறந்தே இருக்கும்.
கடவுளின் தீர்ப்பில் அநீதி இல்லை
கடவுளின் தீர்ப்பில் எந்த அநீதியும் கிடையாது. மனிதர்கள் தாங்களாக விரும்பி தேர்ந்தெடுத்த செயல்களுக்கே கடவுளால் கூலி வழங்கப்படுகிறார்கள்.
- யாரும் எச்சரிக்கை இல்லாமல் தண்டிக்கப்படுவதில்லை
- யாரும் பிறருடைய பாவங்களைச் சுமப்பதில்லை
- பெரிதோ, சிறிதோ எந்தச் செயலும் புறக்கணிக்கப்படுவதில்லை
குர்ஆனில் கடவுள் குறிப்பிடுகிறார்:
நிச்சயமாக, கடவுள் (யாருக்கும்) ஒரு அணு அளவு கூட அநீதி செய்வதில்லை.
குர்ஆன் அத்தியாயம் 4 வசனம் 40
(செயல்கள் பதியப்பட்ட) புத்தகம் (மக்கள் முன்) வைக்கப்படும். அதில் உள்ளவற்றின் காரணமாக குற்றவாளிகள் அச்சமடைந்திருக்கக் காண்பீர்! “இந்த ஏட்டுக்கு என்ன வந்தது? சிறியதையோ, பெரியதையோ ஒன்று விடாமல் பதிவு செய்துள்ளதே!” எனக் கூறுவார்கள். தாங்கள் செய்தவற்றைக் கண் முன்னே காண்பார்கள். உமது இறைவன் எவருக்கும் அநீதி இழைக்க மாட்டான்.
குர்ஆன் அத்தியாயம் 18 வசனம் 49
நாம் (வழிகாட்டி, எச்சரிக்கும்) ஒரு தூதரை அனுப்பாத வரை, (யாரையும்) நாம் தண்டிக்க மாட்டோம்.
குர்ஆன் அத்தியாயம் 17 வசனம் 15
மேலே நாம் எடுத்துக் காட்டிய வசனங்களை கவனமாக படித்தால், கடவுளின் தீர்ப்பு மிகவும் நீதியானது என்பதை விளங்கி கொள்ளலாம்.
நரகத்தில் நுழையும் மனிதர்களின் வாக்குமூலம்
நரகத்தில் நுழையும் மக்கள் தங்கள் தீமைகளை ஒப்புக் கொள்வார்கள். தாங்கள் செய்த தீமைகளுக்காக வருத்தப்படுவார்கள். தங்களை மட்டுமே அவர்கள் குற்றம் சாட்டுவார்கள்.
நரகத்தில் நுழைபவர்கள் பற்றி, கடவுள் குர்ஆனில் இவ்வாறு கூறுகிறார்:
அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் “நாங்கள் இறைவனுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?” எனக் கூறுவார்கள். “எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டனர்” எனவும் கூறுவார்கள்.
குர்ஆன் அத்தியாயம் 33 வசனங்கள் 66-67
ஒவ்வொரு கூட்டத்தினரும் நரகத்தில் போடப்படும் போதெல்லாம், “எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா?” என்று அதன் காவலர்கள் அவர்களைக் கேட்பார்கள். அதற்கவர்கள் “ஆம்! எச்சரிப்பவர் எங்களிடம் வந்தார். ஆயினும் பொய்யெனக் கருதினோம். இறைவன் எந்த ஒன்றையும் அருளியதில்லை. நீங்கள் பெரிய வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள் என்று கூறினோம்” எனக் கூறுவார்கள். நாங்கள் செவிமடுத்திருந்தாலோ, விளங்கியிருந்தாலோ நரகவாசிகளில் ஆகியிருக்க மாட்டோம் எனவும் கூறுவார்கள். மேலும் தமது குற்றங்களை ஒப்புக் கொள்வார்கள்.
குர்ஆன் அத்தியாயம் 67 வசனங்கள் 8-11
“எங்களை நரகத்தில் போட்டது அநீதி, நாங்கள் எச்சரிக்கப்படவில்லை, எங்களுக்கு தீமை எது என்று தெரியாது” என்று எந்த நரகவாசியும் சொல்ல மாட்டார்.
மாறாக, தங்களுடைய தீய செயல்களாலேயே நரகம் சென்றோம் என்று ஒப்புக் கொண்டு, தங்களையே அவர்கள் குற்றம் சொல்வார்கள். மக்கள் நரகத்தில் நுழைவதற்கு அவர்களே காரணம் என்பதை இதிலிருந்து உணரலாம்.
இந்த ஆசிரியரைக் குற்றம் சொல்ல முடியுமா?
உதாரணத்திற்கு ஒரு ஆசிரியரை எடுத்துக் கொள்வோம். அவர்:
- மாணவர்களுக்கு நன்றாக பாடம் நடத்துகிறார்
- தேர்வு பற்றி சரியான வழிகாட்டுதலை வழங்குகிறார்
- நல்ல மதிப்பெண்களை வழங்குகிறார்
- தவறுகளை மன்னிக்கிறார்
- மறுதேர்வுகளை அனுமதிக்கிறார்
- தேர்வு பற்றி மீண்டும் மீண்டும் எச்சரிக்கை செய்கிறார்
இப்படி, இந்த ஆசிரியர் மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்கிறார். ஆனால் அந்த வகுப்பில் படிக்கும் ஒரு மாணவன், ஆசிரியரை மதிக்காமல், வகுப்பிற்கு சரியாக வராமல், பாடங்களை படிக்காமல், தேர்வை சரியாக எழுதாமல் பெயில் ஆகிறான் என்றால், யார் மேல் தவறு? அந்த மாணவன் மேல் தான் தவறு!
அதேபோல், கடவுள் நேர்வழி காட்டுகிறார்; நரகத்தைப் பற்றி எச்சரிக்கிறார்; திருந்த மீண்டும் மீண்டும் வாய்ப்புகளை வழங்குகிறார்; பாவங்களை மன்னிக்கிறார்; நன்மைகளைப் பெருக்குகிறார். இவை அனைத்தையும் புறக்கணித்து, ஆணவத்துடன் தான் செய்த தீமைகளின் காரணமாக ஒருவர் நரகத்தில் நுழைந்தால், தவறு யார் மேல்? அந்த மனிதர் மீதே தவறு. கடவுளின் கருணையை நிராகரித்ததன் விளைவுதான் நரகம்.
முடிவுரை
- கடவுள் நேர்வழி காட்டுகிறார்
- கடவுள் நரகத்தைப் பற்றி தெளிவாக எச்சரிக்கிறார்
- கடவுள் எல்லையில்லாமல் மன்னிக்கிறார்
- கடவுள் நன்மையைப் பெருக்குகிறார்
- கடவுள் திருந்த மீண்டும் மீண்டும் வாய்ப்புகளை வழங்குகிறார்
இதற்கு பிறகும், ஆணவத்தோடு தீய செயல்கள் செய்து ஒருவர் நரகத்தில் நுழைந்தால், அதற்கு காரணம் அவர் தான். கடவுளின் இணையில்லா கருணையை ஏற்க மறுத்ததே நரகத்தில் அவர் நுழைவதற்கு காரணம்.
இந்தக் கட்டுரையின் மூலம், நீங்கள் புதிதாக ஒன்றைக் கற்றிருந்தால், பிறரோடு பகிருஙகள். அவர்களும் இதன் மூலம் பயனடையட்டும்.
