ஷவ்வால் நோன்பு ஏன் நோற்க வேண்டும்?

ஷவ்வால் நோன்பு பல பயன்களையும், மிகுந்த முக்கியதுவத்தையும் கொண்டது. ஏன் நாம் ஷவ்வால் நோன்பு நோற்க முயற்சிக்க வேண்டும் என்பதை கண்டறியுங்கள்.

ரமலான் முடிந்த பிறகு, பல முஸ்லிம்கள் வழிபாடுகளில் மெத்தனமாகி விடுவதை நாம் பார்க்கிறோம். அதனால் ஷவ்வால் மாதத்தில் நோன்பு நோற்பது மிகவும் அவசியமானதாக ஆகிவிடுகிறது. ரமலான் மாதத்தில் நாம் பெற்ற ஆன்மீக எழுச்சி தொடர்வதற்கு இந்த ஷவ்வால் நோன்பு உதவுகிறது.

ஷவ்வால் நோன்பும், ஒரு வருட நன்மையையும்

ஒவ்வொரு நற்செயலுக்கும் அல்லாஹ் பத்து மடங்கு கூலி வழங்குகிறான். (குர்ஆன் 6:160)

ரமலானில் 30 நாட்கள் நோன்பு நோற்பது, 300 நாட்கள் நோன்பு நோற்றதற்கு சமமாகிறது. ஷவ்வால் மாதத்தில் ஆறு நாட்கள் நோன்பு நோற்பது, 60  நாட்கள் நோன்பு நோற்றதற்கு சமமாகிறது.

இவை இரண்டும் சேர்ந்து 360 நாட்கள் நோன்பு நோற்றதற்கு சமமாகின்றன. எனவே, முழு வருடம் நோன்பு நோற்ற நன்மை இதன் மூலம் கிடைக்கிறது. (ஸஹீஹ் முஸ்லிம் # 1164)

குறிப்பு: ஒரு சந்திர ஆண்டு 354 நாட்களை மட்டுமே கொண்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் ரமலான் மாத நோன்பு நோற்கிறாரோ, அது பத்து மாதங்களுக்குச் சமமாகும். ஈத் பெருநாளைத் தொடர்ந்து ஆறு நாட்கள் நோன்பு நோற்பது அந்த வருடம் முழுவதும் நோன்பு நோற்றதை போன்றதாகிறது.

முஸ்னத் அஹமத் # 22412, இப்னு மாஜா # 1715

இது அல்லாஹ்வின் பெருங்கருணையைக் காட்டுகிறது. ஒரு முஸ்லிம் சிறிய அளவில் நன்மை செய்தாலும், அதை பன்மடங்காக பெருக்கி தரும் அல்லாஹுவிற்கே எல்லா புகழும்.

ஷவ்வால் நோன்பின் பயன்கள்

ஷவ்வால் நோன்பு வைப்பதில், நமக்கு நன்மைகள் கிடைப்பதோடு சேர்த்து, நமக்கு வேறு பல பயன்களும் உள்ளன.

1. ரமலானில் ஏற்பட்ட குறைகளை இவை நிவர்த்தி செய்கின்றன

ரமலானில் நாம் செய்த நற்செயல்களில் குறைகள் இருக்கும். மனிதன் என்ற வகையில், மறதியாலும், பலவீனத்தாலும் நாம் தவறுகள் செய்வது இயல்பு. கடமையான தொழுகைகளில் உள்ள குறைகளை, சுன்னத்தான தொழுகைகள் எப்படி சரி செய்கின்றனவோ, அதே போல், ரமலான் மாதத்தில் ஏற்பட்ட குறைகளை, ஷவ்வால் நோன்புகள் சரி செய்கின்றன என்று அறிஞர்கள் விளக்குகிறார்கள். (பார்க்க: இமாம் இப்னு கய்யிம் (ரஹ்) அபு தாவூதிற்கு எழுதிய குறிப்புகள்)

2. அல்லாஹ்வுக்கு நன்றி செல்லுவதாக அமைகிறது

ரமலான் மாதத்தை அடைந்து, அதை முழுமையாக நிறைவு செய்ய பாக்கியமளித்த அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதாக ஷவ்வாலில் நோன்பு நோற்பது அமைகிறது. நமக்கு நேர்வழி காட்டிய அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தி, அவனுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்றும் அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான். (பார்க்க: இமாம் இப்னு ரஜப் (ரஹ்) எழுதிய லாதாய்ப்புல் மஆரிஃப்)

…அந்த எண்ணிக்கையை நீங்கள் பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வை நீங்கள் பெருமைப்படுத்தவும், (அதன் மூலம்) நீங்கள் நன்றி செலுத்துபவர்களாக இருக்கவும் (அல்லாஹ் நாடுகிறான்).

குர்ஆன் 2:185

3. ரமலானுக்குப் பிறகும் வழிபாடு தொடர்கிறது

ஒரு உண்மையான முஸ்லிம், வணக்க வழிப்பாடுகளை ரமலான் மாதத்தில் மட்டும் செய்து விட்டு, அதை தொடராமல் விட்டுவிடுவதில்லை. ஷவ்வால் மாதத்தில் நோன்பு நோற்பது, வணக்க வழிப்பாடுகள் ரமலானிற்கு பின்னும் தொடர்கின்றன என்பதை உணர்த்துகிறது. (பார்க்க: இமாம் இப்னு ரஜப் (ரஹ்) எழுதிய லாதாய்ப்புல் மஆரிஃப்)

4. இது (அமல்கள்) ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான அடையாளமாக இருக்கலாம்

ஒரு நற்செயலைத் தொடர்ந்து மற்றொரு நற்செயல் செய்யும் வாய்ப்பு கிடைப்பது, முந்தைய நற்செயல் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான அடையாளம் என்று இப்னு ரஜப் (ரஹ்) போன்ற அறிஞர்கள் விளக்குகிறார்கள். எனவே, ரமலானுக்குப் பிறகு நோன்பு நோற்பது, ரமலான் மாதத்தில் நாம் செய்த வணக்க வழிபாடுகள் நம் மேல் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நம்மால் உணர முடியும். (பார்க்க: இமாம் இப்னு ரஜப் (ரஹ்) எழுதிய லாதாய்ப்புல் மஆரிஃப்)

5. மனக் கட்டுப்பாட்டுடன் இருக்க உதவுகிறது

ரமலானில் நம்மை சுற்றியுள்ள அனைவரும் நோன்பு நோற்கும் போது, நாமும் நோன்பு நோற்பது கடினமல்ல. ஆனால், ஷவ்வால் நோன்பு அப்படியல்ல. ஷவ்வாலில் நோன்பு நோற்பது நம் வணக்க வழிபாடுகளில் உறுதியாக இருக்க வேண்டும் என்ற உளத்தூய்மையை காட்டுகிறது. மேலும், ரமலானில் நாம் சுயக்கட்டுப்பாட்டுடன் நடந்துக் கொண்டோம். அந்த சுயக்கட்டுப்பாட்டை தொடர்ந்து கடைபிடிக்க, ஷவ்வால் நோன்பு உதவுகிறது. (பார்க்க: இமாம் இப்னு ரஜப் (ரஹ்) எழுதிய லாதாய்ப்புல் மஆரிஃப்)

முடிவுரை

ஒருவர் ரமலான் மாதத்தில் அடைந்த ஆன்மீக உணர்வை தக்க வைத்துக் கொள்ள, ஷவ்வாலில் நோன்பு நோற்பது உதவுகிறது. ரமலானில் ஏற்பட்ட குறைகளை சரி செய்யவும், அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தவும், ரமலானிற்கு பிறகு சுயகட்டுப்பாட்டோடு இருக்க பயிலவும் ஷவ்வால் நோன்பு பெரிதும் உதவுகிறது. மேலும், வணக்க வழிபாடுகள் ரமலானோடு முடிந்து விடுவதில்லை என்பதையும் ஷவ்வாலில் நோன்பு நோற்பது உணர்த்துகிறது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

ஷவ்வால் மாத நோன்பின் முக்கிய நோக்கம் என்ன?

ரமலான் மாதத்தில் அடைந்த ஆன்மீக உணர்வை தொடர்வதும், ரமலானோடு வணக்க வழிபாடுகள் முடிந்துவிடுவதில்லை என்பதை உணர்த்துவதும் ஷவ்வால் மாத நோன்பின் முக்கிய நோக்கம்.

ஷவ்வாலின் ஆறு நோன்புகள் ரம்ழானில் விடுபட்ட நோன்புகளுக்கு ஈடாகுமா?

இல்லை. ரமலானில் விடுபட்ட நோன்புகளைத் தனியாகவே நோற்க வேண்டும். ஷவ்வால் நோன்புகள் சுன்னத்தான நோன்புகள். ரமலான் நோன்பை நிறைவு செய்து, அதைத் தொடர்ந்து ஷவ்வாலில் ஆறு நோன்புகள் நோற்பதைத் தான் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 1164)

அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவதற்கும் ஷவ்வால் நோன்பிற்கும் தொடர்பு உண்டா?

ரமலான் மாதத்தை பூர்த்தி செய்வதை அல்லாஹ் நன்றி செல்லுவதோடு இணைத்துக் கூறுகிறான். (குர்ஆன் 2:185). ஷவ்வால் மாதத்தில் நோன்பு நோற்பது, அல்லாஹ்விற்கு நன்றி செலுத்த ஒரு சிறந்த வழியாகும்.

நான் ரமலான் நோன்புகள் சிலவற்றைத் நோற்க முடியாமல் போயிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

முதலில் விடுபட்ட கடமையான ரமலான் நோன்புகளை நோற்க வேண்டும். அதன் பிறகு ஷவ்வாலின் ஆறு நோன்புகளை நோற்க வேண்டும்.

ஈத் பெருநாளுக்கு மறுநாளே ஷவ்வால் நோன்பைத் தொடங்க வேண்டுமா?

இல்லை. ஷவ்வால் மாதத்தில் எப்போது வேண்டுமானாலும் நீங்கள் நோன்பை தொடங்கலாம். பலர் பெருநாளுக்குப் பிறகு பல தினங்கள் கழித்தே நோன்பு வைக்க தொடங்குகிறார்கள்.

மேலும் படிக்க

WHAT OTHERS ARE READING

Most Popular