முன்னுரை
கடவுள் மனிதரானாரா? இது மிகவும் முக்கியமான கேள்வி. ஏனெனில், கடவுள் மனிதனாக பூமியில் மக்களுக்கு மத்தியில் வாழ்ந்தார் என்று பலர் நம்புகிறார்கள். பல கிறிஸ்தவர்கள், இயேசு மனித வடிவில் பூமியில் வாழ்ந்த கடவுள் என்றும், அவர் பூமியில் வாழும் போது, முழு மனிதராகவும், முழு கடவுளாகவும் இருந்தார் என்றும் நம்புகிறார்கள். பல இந்துக்கள், கிருஷ்ணர், ராமர் போன்ற மனித அவதாரங்களை கடவுள் எடுத்ததாக நம்புகிறார்கள்.
கடவுள் மனிதரானார் என்று நம்புவது பகுத்தறிவிற்கு பொருந்துமா? பொருந்தாது என்றால், ஏன் பொருந்தாது என்பதை இந்தக் கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
கடவுளின் பண்புகள்
எல்லா மதங்களிலும், கடவுளுக்கு சில அடிப்படை பண்புகள் இருப்பதை மக்கள் ஒப்புக்கொள்கிறார்கள். உதாரணமாக:
- கடவுள் நித்தியமானவர் (அவருக்கு தொடக்கம் இல்லை, முடிவு இல்லை)
- கடவுள் நேரத்திற்கும், இடத்திற்கும், இயற்க்கை விதிகளுக்கும் அப்பாற்பட்டவர்
- கடவுள் தன்னிறைவு பெற்றவர். கடவுளுக்கு வரம்புகள் இல்லை
- கடவுள் யாரையும் சார்ந்து இல்லை
- கடவுள் எல்லாம் அறிந்தவர், சர்வ வல்லமையுள்ளவர்
மனிதனின் பண்புகள்
- மனிதர்களுக்கு தொடக்கமும், முடிவும் உள்ளது
- மனிதர்கள் நேரத்திற்கும், இடத்திற்கும், இயற்க்கை விதிகளுக்கும் கட்டுப்பட்டவர்கள்
- மனிதர்களுக்கு அறியாத விஷயங்கள் உண்டு. மறதி உண்டு. தவறு செய்வார்கள்
- மனிதர்களுக்கு உணவு, தூக்கம், ஓய்வு தேவை
- மனிதர்கள் சிறுநீர், மலம் கழிக்க வேண்டும்
- மனிதர்களுக்கு பலவீனம், வலி, மரணம் ஏற்படும்
பல விலங்குகள், மனிதனை விட அதிக ஆற்றல் கொண்டவையாக இருப்பதை நாம் காணலாம். நாம் கேட்பதை விட அதிகமான ஒலிகளை நாய்களால் கேட்க முடியும். ஒரு ஆந்தைக்கு நம்மை விட சிறந்த பார்வைத் திறன் உள்ளது. ஒரு டால்பினால் எதிரொலியை பயன்படுத்தி, ஒரு இடத்தை கண்டுபிடிக்க முடியும். இது மனிதர்களால் முடியாது.
ஒன்றுக்கொன்று முரணான இரண்டு பண்புகள் ஒன்றிணையுமா?
ஒன்றுக்கொன்று முரணான இரண்டு பண்புகள் ஒரே நேரத்தில் ஒரு போதும் ஒன்றிணைய முடியாது. இது பகுத்தறிவை பயன்படுத்தும் எல்லோரும் ஒத்துக்கொள்ளும் விஷயம். இதை சில எளிய உதாரணங்களுடன் புரிந்து கொள்வோம்.
“இந்தக் கதவு ஒரே நேரத்தில் முழுமையாக மூடப்பட்டும் உள்ளது, முழுமையாகத் திறந்தும் உள்ளது” என்று ஒருவர் கூறினால், அது எப்படி சாத்தியம் என்று நீங்கள் கேட்பீர்கள் அல்லவா? ஏனெனில்:
- “திறந்துள்ளது” என்றால் மூடப்படவில்லை என்று அர்த்தம்
- “மூடப்பட்டுள்ளது” என்றால் திறக்கப்படவில்லை என்று அர்த்தம்
இந்த இரண்டு வார்த்தைகளும் ஒன்றுக்கொன்று நேர்முரணான விஷயங்களை குறிக்கின்றன. எனவே, கதவு ஒரே நேரத்தில் முழுமையாக மூடப்பட்டும், திறந்தும் இருப்பதற்கு சாத்தியமே இல்லை.
அதே போல், ஒருவர் உங்களிடம்:
“நான் உட்கார்ந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் நின்று கொண்டும் இருக்கிறேன்” என்று சொன்னால்,
நீங்கள் “என்ன உளறுகிறாய்? அது எப்படி சாத்தியம்?” என்று உடனடியாக கேட்பீர்கள். ஏனெனில்:
ஒன்றுக்கொன்று நேர்முரணான இரண்டு விஷயங்களை ஒரே நேரத்தில் ஒருவரால் செய்ய முடியாது என்பதை நாம் எல்லோரும் அறிந்து வைத்திருக்கிறோம்.
கடவுள் மனிதரானால்…
கடவுளின் இயல்பும், மனித இயல்பும் ஒன்றுக்கொன்று நேர்முரணானவை. “கடவுள் மனிதரானார்” என்று சொல்லும் போது, ஒன்றுக்கொன்று நேர்முரணான இரண்டு பண்புகள் ஒரே நேரத்தில் ஒன்றிணைந்தன என்று சொல்ல வருகிறார்கள்.
| கடவுளின் இயல்பு | மனித இயல்பு |
| தொடக்கம் இல்லை, முடிவு இல்லை | தொடக்கமும், முடிவும் உண்டு |
| வரம்புகள் இல்லை | வரம்புகள் உண்டு |
| தன்னிறைவு பெற்றவர் | பிறரை சார்ந்தே இருப்பவர் |
| அழிவே இல்லை | அழிவு உண்டு |
| எல்லாம் அறிந்தவர் | அறியாத விஷயங்கள், மறதி உண்டு |
| நேரத்திற்கும், இடத்திற்கும், இயற்க்கை விதிகளுக்கும் அப்பாற்பட்டவர் | நேரத்திற்கும், இடத்திற்கும், இயற்க்கை விதிகளுக்கும் கட்டுப்பட்டவர் |
ஒரு மனிதர் ஒரே நேரத்தில் 100% கடவுளாகவும் இருக்கிறார், 100% மனிதராகவும் இருக்கிறார் என்று சொல்வது, கதவு ஒரே நேரத்தில் 100% திறந்தும் உள்ளது, 100% மூடப்பட்டும் உள்ளது என்று சொல்வதை போன்றே அபத்தமானது.
இயேசு – பூமியில் வாழ்ந்த கடவுளா?
இயேசு மனித வடிவில் பூமியில் வாழ்ந்த கடவுள் என்றும், அவர் பூமியில் வாழும் போது, 100% மனிதராகவும், 100% கடவுளாகவும் இருந்தார் என்று பல கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். இப்படி நம்பும் அதே கிறிஸ்தவர்கள் தான், இயேசு:
- உணவு உண்டார், நீர் அருந்தினார்
- உறங்கினார்
- பயத்தையும், துக்கத்தையும் உணர்ந்தார்
- அழுதார்
- கடவுளிடம் பிரார்த்தனை செய்தார்
- நியாயத் தீர்ப்பு நாளை பற்றிய அறிவில்லாமல் இருந்தார்
- சிலுவையில் அறையப்பட்டு இறந்தார்
என்று நம்புகிறார்கள். ஆனாலும், அவர் 100% கடவுளாகவும் இருந்தார் என்றும் சொல்கிறார்கள். இயேசுவிடம் காணப்பட்ட மனித பண்புகள், கடவுளின் பண்புகளுக்கு நேரடியாக முரணானவை. ஒன்றுக்கொன்று நேர்முரணான இரண்டு பண்புகள் ஒரே நேரத்தில் ஒரு மனிதரிடத்தில் எப்படி இருக்க முடியும்? இதை சற்று விரிவாக கீழே பார்ப்போம்.
இயேசுவும் நியாயத்தீர்ப்பு நாள் பற்றிய அறிவும்
கடவுள் எல்லாம் அறிந்தவர் என்பதை நாம் எல்லோரும் ஏற்கிறோம். ஆனால், இயேசுவிற்கு நியாயத்தீர்ப்பு நாள் பற்றிய அறிவு கிடையாது என்று பைபிள் சொல்கிறது. (பார்க்க: மாற்கு 13:32)
இயேசு 100% மனிதராகவும், 100% கடவுளாகவும் இருந்தார் என்று சொன்னால்:
- கடவுள் என்பதால் இயேசுவிற்கு நியாயத்தீர்ப்பு நாள் பற்றிய அறிவு இருந்தது
- மனிதன் என்பதால் இயேசுவிற்கு நியாயத்தீர்ப்பு நாள் பற்றிய அறிவு இல்லை
என்று சொல்ல வேண்டி வரும். அதாவது, இயேசுவிற்கு நியாயத்தீர்ப்பு நாள் பற்றிய அறிவு இருந்தது என்றும், அதே நேரத்தில் இயேசுவிற்கு நியாயத்தீர்ப்பு நாள் பற்றிய அறிவு இல்லை என்றும் கூறுகிறோம்.
நாம் மேலே பார்த்தது போல், ஒரே நேரத்தில் கதவு 100% திறந்தும் உள்ளது, 100% மூடப்பட்டும் உள்ளது என்று சொல்வது எவ்வளவு அபத்தமானதோ, அதேபோல் இவ்வாறு கூறுவதும் அபத்தமானதே. ஏனெனில், ஒரு விஷயத்தை தெரிந்தும், அதே நேரத்தில் அந்த விஷயத்தை தெரியாமலும் இருப்பது என்பது சாத்தியமேயில்லை.
கடவுள் மனிதராவதை நம்மால் புரிந்து கொள்ள முடியாதா?
கடவுள் மனிதரானார் என்று சொல்பவர்கள், ‘கடவுளை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. எனவே, கடவுள் மனிதனானார் என்பதை அப்படியே நம்ப வேண்டும்.’ என்று சொல்கிறார்கள்.
மேலோட்டமாக பார்க்கும் பொது, இந்த வாதம் நியாயமானதாகத் தோன்றலாம். ஆனால், சற்று கவனமாக சிந்தித்தால், புரிந்து கொள்ள முடியாத விஷயங்களுக்கும், சாத்தியமற்ற விஷயங்களுக்கும் வித்தியாசம் உள்ளது என்பதை உணர்ந்து கொள்ள முடியும். இதை சில உதாரணங்களின் மூலம் விளங்கி கொள்வோம்.
“ஒரே நேரத்தில் கடவுள் எல்லோருடைய பிரார்த்தனைகளையும் கேட்கிறார்” என்று சொல்வதில் எந்த முரண்பாடும் இல்லையென்றாலும், கடவுள் எப்படி கேட்கிறார் என்பது நம்மால் புரிந்து கொள்ள முடியாத விஷயம்.
ஆனால், “இந்த fan சுவிட்ச் ஒரே நேரத்தில் ON ஆகவும் உள்ளது, OFF ஆகவும் உள்ளது” என்று யாராவது உங்களிடம் சொன்னால், ‘நீங்கள் சொன்னதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லையே’ என்று சொல்லுவீர்களா? அல்லது, ‘என்னப்பா, அபத்தமாக உளறுகிறாயே?’ என்று கேட்பீர்களா?
fan சுவிட்ச் ஒரே நேரத்தில் ON ஆகவும், OFF ஆகவும் இருப்பது, ஒன்றுக்கொன்று முரண்படுகிறது. அதனால், fan சுவிட்ச் ஒரே நேரத்தில் ON ஆகவும், OFF ஆகவும் இருப்பதற்கு வாய்ப்பேயில்லை என்பதால், இதில் புரிந்து கொள்ள ஒன்றுமில்லை. எனவே தான், அப்படி சொல்வதை அபத்தமான உளறல் என்கிறோம்.
அதேபோல், நியாயத்தீர்ப்பு நாள் பற்றி இயேசுவிற்கு தெரிந்தும், அதே நேரத்தில் நியாயத்தீர்ப்பு நாள் பற்றி தெரியாமலும் இருப்பது, ஒன்றுக்கொன்று முரண்படுகின்றது. எனவே, ஒரே நேரத்தில் நியாயத்தீர்ப்பு நாள் பற்றி இயேசுவிற்கு தெரிந்தும், அதே நேரத்தில் தெரியாமலும் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. அதனால், இதில் புரிந்து கொள்ள ஒன்றுமில்லை. இவ்வாறு கூறுவது அர்த்தமற்றதும், அபத்தமானதும் ஆகும் என்று நியாயமாக சிந்திக்கும் எவரும் முடிவுக்கு வருவர்.
கடவுளின் அவதாரங்கள்
பூமியில் தீமையை ஒழித்து, நீதியை நிலைநாட்ட அவதாரம் எடுத்து கடவுள் பூமிக்கு வந்தார் என்று இந்துக்கள் பலர் நம்புகின்றனர். இந்த அவதாரங்களுக்கு:
- துன்பம் ஏற்பட்டது
- மறதி ஏற்பட்டது
- பயம் இருந்தது
- உயிர் கைப்பற்றப்பட்டது
- கர்ம விதிகள் பாதிப்பு ஏற்படுத்தின
துன்பம், மறதி, பயம், இறப்பு போன்றவற்றிற்கு அப்பாற்பட்டவராகக் கருதப்படும் கடவுளின் பண்புகளுடன் இந்த மனித பண்புகள் நேரடியாக முரண்படுகின்றன. ஒரே நேரத்தில் ஒருவர், மறதி அற்றவராகவும், மறதி உள்ளவராகவும் இருப்பது சாத்தியமில்லை என்பதால் கடவுள் அவதாரம் எடுத்தார் என்று சொல்வது சரியில்லை. ஏனெனில், ஒன்றுக்கொன்று முரணான இரண்டு இயல்புகள் ஒரே நேரத்தில் ஒருவரிடத்தில் இருக்க முடியாது.
கடவுளுக்கு எல்லாம் முடியும். அவரால் ஏன் மனிதராக முடியாது?
“கடவுளால் எதையும் செய்ய முடியும் என்பதால், அவரால் மனிதராகவும் மாற முடியும்.” என்று ‘கடவுள் மனிதரானார்’ என்று நம்புபவர்கள் சொல்கிறார்கள்.
அர்த்தமுள்ள, சாத்தியமான விஷயங்கள் அனைத்தையும் கடவுளால் செய்ய முடியும் என்பதில் நமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதனால், அபத்தமான சாத்தியமற்ற விஷயங்களையும் கடவுள் செய்வார் என்று சொல்வது பிழை.
உதாரணமாக:
கடவுளால் எதையும் செய்ய முடியும் என்பதால், கடவுளால் இன்னொரு கடவுளைப் படைக்க முடியுமா?
கடவுளால் இன்னொரு கடவுளைப் படைக்க முடியாது, ஏனென்றால் கடவுளால் படைக்கப்பட்ட “இரண்டாவது கடவுள்” கடவுளாக இருக்கவே மாட்டார். தனக்குத்தானே முரண்படுவதால், இந்த கேள்வியே அபத்தமானது, அர்த்தமற்றது.
கடவுளின் ஆற்றலுக்கும், இந்த அபத்தமான, அர்த்தமற்ற கேள்விக்கும் சம்பந்தமே இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு எளிய உதாரணத்துடன் இதை இன்னும் தெளிவாக புரிந்து கொள்வோம். நீங்கள் ஒரு சிறந்த கார் ஓட்டுநர் என்று வைத்துக் கொள்வோம்.
“நகராமல் ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்கும் போதே, அதே நேரத்தில் வேகமாக செல்லும் காரை உங்களால் ஓட்ட முடியுமா?” என்று ஒருவர் கேட்டால், நீங்கள் என்ன சொல்வீர்கள்?
‘என்ன கேள்வி இது? ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்கும் கார் எப்படி அதே நேரத்தில் வேகமாக செல்லும்?’ என்று கேட்பீர்கள் அல்லவா?
இந்தக் கேள்வியே அபத்தமானது, அர்த்தமற்றது. ஏனெனில், இப்படி ஒரு கார் இருப்பது சாத்தியமேயில்லை. இந்த கேள்விக்கும், உங்களுடைய கார் ஓட்டும் திறமைக்கும் சம்பந்தமே இல்லை.
ஒன்றுக்கொன்று முரணான இரண்டு இயல்புகள் ஒரே நேரத்தில் ஒருவரிடத்தில் இருப்பது சாத்தியமேயில்லை என்பதால், ‘கடவுளுக்கு எல்லாம் முடியும், அதனால் கடவுள் மனிதராவார்’ என்று சொல்வது அபத்தமானது, அர்த்தமற்றது.
பிரபஞ்சத்தை படைத்தவன் பூமிக்கு வந்தானா?
கடவுள் மனிதரானார் என்று சொல்பவர்கள், பிரபஞ்சத்தின் பிரமாண்டத்தையும், அதை படைத்தவனின் ஆற்றலையும் கவனிக்க தவறி விடுகிறார்கள்.
- பிரபஞ்சத்தில் கோடான கோடி பில்லியன் கலக்ஸிகள் உள்ளன
- பால்வழி கலக்ஸி பிரபஞ்சத்தில் ஒரு பொட்டு அளவு கூட இல்லை
- பால்வழி கலக்ஸியில் சூரிய குடும்பம் மிகச் சிறியது
- சூரியனோடு ஒப்பிடும்போது நமது பூமி ஒரு கோலிக்குண்டு அளவு தான்



கற்பனை செய்து பார்க்க முடியாத இந்த பிரமாண்டமான பிரபஞ்சத்தை படைத்த இந்த கடவுள் தான், கலக்ஸியில் நுழைந்து, பின்னர் சூரிய குடும்பத்தில் நுழைந்து, அதன் பின்னர் பூமியில் நுழைந்து, பின்னர் ஒரு கண்டத்தில் நுழைந்து, அதன் பின்னர் ஒரு நாட்டில் நுழைந்து, பின்னர் ஒரு மாநிலத்தில் நுழைந்து, அதன் பின்னர் ஒரு மாவட்டத்தில் நுழைந்து, பின்னர் நகரத்தில் நுழைந்து, அதன் பின்னர் ஒரு இடத்தில் வசித்தார் என்று சொல்வது நம் பகுத்தறிவிற்கு பொருந்துகிறதா?
இடத்திற்கும், இயற்க்கை விதிகளுக்கும் அப்பாற்பட்ட கடவுள், ஒரு இடத்தில் இயற்க்கை விதிகளுக்கு கட்டுப்பட்டு அடங்கி கிடந்தார் என்று சொல்வது அறிவிற்கு பொருத்தமாக தெரிகிறதா?
கடவுள் உண்மையிலேயே மனிதரானார் என்றால்:
- கடவுள் ஏன் உலகின் ஒரு சில இடங்களுக்கு மட்டுமே சென்றார்?
- பூமியெங்கும் பயணம் செய்து தனது படைப்புகள் அனைத்தையும் அவர் ஏன் சந்திக்கவில்லை?
- கோடிக்கணக்கான மக்கள் மனிதரான கடவுளை சந்திக்காமலேயே இறந்து போனது ஏன்?
மனிதன் கடவுளாக முடியாது
மனிதன் ஒரு போதும் கடவுளாக முடியாது என்பதை சில எளிய சோதனைகள் மூலம் நிரூபிக்கலாம்.
சோதனை #1: மொழி சோதனை
கடவுள் என்று தன்னைக் சொல்லிக் கொள்பவரிடம் புதிய மொழியில் பேசுங்கள். உதாரணமாக, அவரது தாய்மொழி தெலுங்கு அல்லது மராத்தி என்றால், அவரிடம் ஸ்வாஹிலி, பெங்காலி அல்லது ஜூலு மொழிகளில் பேசிப் பாருங்கள். நீங்கள் பேசுவதை புரிந்து கொள்ள முடியாமல், அவர் உடனடியாக ஒரு மொழிபெயர்ப்பாளரை தேட ஆரம்பித்து விடுவார்.
மனிதர்கள் பேசும் மொழியைக் கூட அறியாதவர், எப்படி எல்லாம் அறிந்த கடவுளாக இருக்க முடியும்?
சோதனை #2: தண்ணீர் பாட்டில் சோதனை
கடவுள் என்று தன்னைக் சொல்லிக் கொள்பவரை மூன்று பாட்டில் தண்ணீர் குடிக்கச் சொல்லுங்கள். சிறுநீர் கழிக்காமல் ஒரு நாள் முழுவதும் அவர் அங்கேயே இருக்க வேண்டும். அவரால் முடியுமா? சில மணி நேரத்திலேயே, அவர் அங்கேயே சிறுநீர் கழித்துவிடுவார்.
தனது சிறுநீரை கூட கட்டுப்படுத்த முடியாத ஒருவர், எப்படி இந்த பிரபஞ்சத்தையே கட்டுப்படுத்தும் கடவுளாக இருக்க முடியும்?
பசி, தாகம், தூக்கம் இப்படி இயற்க்கை விதிகளுக்கு கட்டுப்பட்டு இருப்பவர்கள் எல்லோருமே பலவீனமானவர்களே. அவர்கள் ஒரு போதும் இயற்க்கை விதிகளுக்கு அப்பாற்பட்ட சக்தி வாய்ந்த கடவுளாக முடியாது.
முடிவுரை
- கடவுளின் இயல்பும், மனித இயல்பும் ஒன்றுக்கொன்று நேர்முரணானவை.
- ஒன்றுக்கொன்று முரணான இரண்டு இயல்புகள் ஒரே நேரத்தில் ஒரு போதும் ஒன்றிணைய முடியாது. எனவே, “கடவுள் மனிதரானார்” என்று சொல்வது அபத்தமானது, அர்த்தமற்றது.
- ஒன்றுக்கொன்று முரணான இரண்டு இயல்புகள் ஒரே நேரத்தில் ஒருவரிடத்தில் இருப்பது சாத்தியமேயில்லை என்பதால், ‘கடவுளுக்கு எல்லாம் முடியும், அதனால் கடவுள் மனிதராவார்’ என்று சொல்வது அபத்தமானது, அர்த்தமற்றது.
- பிரமாண்டமான பிரபஞ்சத்தை படைத்த கடவுள், இயற்க்கை விதிகளுக்கு கட்டுப்பட்டு ஒரு இடத்தில் வாழ்ந்தார் என்று சொல்வது அறிவிற்கு பொருத்தமற்றது.
- பசி, தாகம், தூக்கம் இப்படி இயற்க்கை விதிகளுக்கு கட்டுப்பட்டு இருப்பவர்கள்
- எல்லோருமே பலவீனமானவர்களே. அவர்கள் ஒரு போதும் இயற்க்கை விதிகளுக்கு அப்பாற்பட்ட சக்தி வாய்ந்த கடவுளாக முடியாது.
