More

    Choose Your Language

    மகிழ்ச்சியாக இருப்பது எப்படி?

    மகிழ்ச்சி என்பது நாம் பிறக்கும்போதே நம்முடன் பிறக்கும் ஒரு விஷயம் அல்ல. உண்மையில், பணத்தாலும், ஆடம்பர வசதிகளால் மட்டும் மனிதர்களுக்கு மகிழ்ச்சி கிடைக்குமா என்றால், நிச்சயமாக ‘இல்லை’ என்று தான் சொல்ல வேண்டும்.

    மகிழ்ச்சி என்பது நாம் பிறக்கும்போதே நம்முடன் பிறக்கும் ஒரு விஷயம் அல்ல. நம்முடைய செயல்களின் மூலம் நாம் உண்டாக்கும் ஒரு உணர்வு தான் மகிழ்ச்சி. செல்வம் அல்லது ஆடம்பர வாழ்வு போன்றவற்றிலிருந்து நாம் மகிழ்ச்சியை பெறலாம் என்று எண்ணுகிறோம். ஒரு வேளை, மகிழ்ச்சியை பெற வேற வழி இருந்தால்? மகிழ்ச்சி ஏன் நமக்குள்ளிருந்து வரக்கூடாது?

    இயற்கையிலேயே, சமூகத்தில் வாழும் மற்ற மனிதர்களோடு ஒட்டி வாழும் தன்மையை நாம் பெற்றிருக்கிறோம். மனிதர்கள் ஏன் ஒரு குறிப்பிட்ட விதத்தில் சிந்திக்கிறார்கள் என்பதும், ஏன் ஒரு குறிப்பிட்ட விதத்தில் நடந்து கொள்கிறார்கள் என்பதும், மனிதர்களை பற்றி ஆராய்ச்சி செய்யும் சிந்தனையாளர்களுக்கு ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது.

    என்ன தான் அறிவியலும், தொழில்நுட்பமும் வளர்ச்சி பெற்றிருந்தாலும், மனிதர்கள் சமூக, பொருளாதார, ஒழுக்கம் சார்ந்த விஷயங்களில் பல சவால்களைச் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். மக்களில் பெரும்பாலானவர்கள், மகிழ்ச்சியை அடைவதற்குப் போராடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். பலருக்கு மகிழ்ச்சி ஏன் எட்டா கனியாக இருக்கிறது? வாருங்கள், இது பற்றி சிந்திப்போம்.

    பணமும், மகிழ்ச்சியும்

    ஒரு நபரிடம், நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டுப் பாருங்கள். பெரும்பாலானவர்கள், நிறைய பணம், பெரிய வீடு, ஆடம்பரமான கார்கள், உல்லாச பயணங்கள், போன்றவற்றைப் பட்டியலிடுவார்கள். உண்மையில், பணத்தாலும், ஆடம்பர வசதிகளால் மட்டும் மனிதர்களுக்கு மகிழ்ச்சி கிடைக்குமா என்றால், நிச்சயமாக ‘இல்லை’ என்று தான் சொல்ல வேண்டும். இதை நாமாக சொல்ல வில்லை.

    உலகில் உள்ள பெரும் கோடீஸ்வரர்களிடம் அவர்களுடைய செல்வம் அவர்களுக்கு மகிழ்ச்சியை தந்ததா என்று ஆய்வு நடத்திய போது, செல்வம் தங்களுக்கு பொருளாதார பாதுகாப்பைத் தந்தது என்றும், ஆனால், அன்பான குடும்பத்தையோ, நலம் நாடும் நண்பர்களையோ அல்லது வாழ்வில் மகிழ்ச்சியை தரும் செயல்பாடுகளையோ தரவில்லை என்று கூறினர்.

    அந்த ஆய்வின் முடிவில்:

    “அடுத்த முறை நீங்கள் ஒரு கோடீஸ்வரரைப் பார்க்கும்போது, நீங்கள் எண்ணும் அளவுக்கு அவர் அத்தனை மகிழ்ச்சியாக இல்லாமல் இருக்கலாம் என்பது நினைவில் இருக்கட்டும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

    இதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    மகிழ்ச்சியின் அடிப்படையில் வெளியிடப்பட்ட 146 நாடுகளின் தரவரிசையில் இந்தியாவிற்கு 136வது இடம்

    ஐ நா சபை (United Nations Index) ஆதரவில் நடைபெற்ற 2022 வது ஆண்டின் உலக மகிழ்ச்சி அறிக்கையின் படி, 146 நாடுகளில், இந்தியா 136வது இடத்தில் உள்ளது.

    https://www.indiatimes.com/trending/social-relevance/world-happiness-report-2022-india-rank-over-the-years-564851.html

    ஃபின்லேண்ட் நாடு இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. டென்மார்க், சுவிட்சர்லாந்து மற்றும் ஐஸ்லேண்டு நாடுகள் மகிழ்ச்சி பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. “மகிழ்ச்சியான நாடுகள்” என அழைக்கப்படும் நார்டிக் அல்லது, ஸ்காண்டினேவியன் நாடுகள் முதல் 7 இடங்களை பிடித்துள்ளன.

    “மகிழ்ச்சியான நாடுகள்” உண்மையாகவே மகிழ்ச்சியாக இருக்கின்றனவா?

    உலகிலேயே மிக மகிழ்ச்சியாக இருப்பவர்களைக் கொண்ட நாடுகளில் முதலிடங்களை நார்டிக் நாடுகள் பிடித்துக் கொண்டன. ஆனால், மகிழ்வு ஆய்வு நிறுவனத்தின் ஆய்வின் முடிவில், குறிப்பிடத்தக்க இளைய சமுதாயத்தினர் மகிழ்வின்றி இருப்பதுடன், பெரும் துன்பத்திலோ அல்லது பெரும் மன உளைச்சலிலோ இருக்கிறார்கள் என கண்டறிந்துள்ளது.

    https://www.theguardian.com/world/2018/aug/25/nordic-countries-happy-reputation-masks-sadness-of-young-says-report

    “மகிழ்ச்சியான நாடுகள்” என்று அழைக்கப்படும் நாடுகளிலேயே இந்த நிலைமை என்றால், உண்மையான மகிழ்ச்சி எங்கே? உண்மையான மகிழ்ச்சியை எப்படி அடைய முடியும்? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். இந்த கேள்விக்கு பதில், மனித இயல்பைப் புரிந்து கொள்வதில் தான் இருக்கிறது.

    ஏன் மனித இயல்பை புரிந்து கொள்ள வேண்டும்?

    மனிதர்கள் மிகவும் சிக்கலான படைப்புகள். அதனால், மனிதர்களுக்கு எது மகிழ்வைத் தரும் என்பதை புரிந்து கொள்வதற்கு, முதலில் நாம் அவர்களுடைய இயல்பைப் புரிந்து கொள்ள வேண்டும். மனிதனைப் புரிந்து கொள்ள முடியா விட்டால், மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. பல விஞ்ஞானிகள், சிந்தனையாளர்கள், தத்துவவாதிகள், மதத் தலைவர்கள், மகிழ்ச்சியின் மூலத்தை கண்டறிய, மனித இயல்பின் மர்மத்தை அவிழ்க்க முயன்றிருக்கிறார்கள்.

    மனித இயல்பைப் புரிந்து கொள்வதற்கான முயற்சிகள்

    மனித இயல்பை அறிந்து கொள்ளும் தேடலில் சிலர், உடல், அதன் வடிவம், அதன் அமைப்பு போன்ற பௌதிக அம்சங்களில் கவனம் செலுத்தினார்கள். அதனால், அவர்களுடைய மனித இயல்பை பற்றிய முடிவுகள், உடலை மையமாகக் கொண்டதாக இருந்தன. மனித உடலின் தேவைகள் நிறைவேறினால், மனிதன் மகிழ்ச்சியை அடையலாம் என்ற முடிவுக்கு வந்தார்கள்.

    சிலர், மனிதனை அவன் செய்து கொண்டிருந்த வேலை அல்லது சமூகத்தில் அவனுடைய பங்களிப்பு, இவற்றை அடிப்படையாக வைத்து, அவனை பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்ட ஒரு விலங்காக கருதினார்கள். அதனால், சமூகத்தில் எந்த அளவிற்கு ஒரு மனிதன் வெற்றி பெறுகிறானோ, அந்த அளவிற்கு அவன் மகிழ்ச்சியையும், திருப்தியையும் பெறுவான் என்று முடிவு செய்தார்கள்.

    இன்னும் சில சிந்தனையாளர்கள் மனிதனின் வயிற்றின் மீது கவனம் செலுத்தினார்கள். மனிதனுடைய எல்லா பிரச்சனைகளையும் வயிற்றோடு தொடர்புபடுத்தினார்கள். வயிறு சம்பந்தப்பட்ட விடயங்கள் மிகவும் முக்கியமானவை என்றும், அதனால் பசி தான் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் என்றும் முடிவு செய்தார்கள். மேலும், பசிப் பிரச்சினையைத் தீர்த்து விட்டால், மனிதனால் மகிழ்ச்சியாக வாழ முடியும் என நினைத்தார்கள்.

    சிலர், மனிதனின் வாழ்க்கையை பாலுணர்வுடன் தொடர்புபடுத்தி, அது தான் வாழ்வின் மிக முக்கியமான அம்சம் என நம்பினார்கள். மனித வாழ்வின் இயக்கம் முழுவதும் பாலுணர்வைச் சார்ந்தது என்றும், பாலுணர்வின் மீதுள்ள கட்டுப்பாடுகளை நீக்கினால், மனிதன் மகிழ்ச்சியை அடையலாம் என உறுதியாகக் கூறினார்கள்.

    இன்னும் சிலர், ஆன்மீகத்திற்கு தேவையில்லாத முக்கியத்துவம் கொடுத்து, உடலையும் அதன் தேவைகளையும் அலட்சியப்படுத்தினார்கள். அவர்கள், பட்டினி இருப்பது ஆன்மாவுக்கு வளம் சேர்ப்பதுடன், மகிழ்ச்சிக்கு வழிகாட்டும் என்ற முடிவுக்கு வந்தார்கள்.

    மகிழ்ச்சியின் மூலத்தை கண்டறிய முயற்சிகள் – வெற்றியா, தோல்வியா?

    மேலே நாம் சுட்டிக்காட்டிய எல்லா முயற்சிகளாலும் மனிதனின் சரியான இயல்பை புரிந்து கொள்ளவோ, மகிழ்ச்சியின் மூலத்தை கண்டறியவோ இயலவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். யானையை புரிந்து கொள்ள முயன்று, தவறான முடிவுகளுக்கு வந்த குருடர்களின் முயற்சியை போல் தான், மேலே நாம் எடுத்துக்காட்டிய முயற்சிகளும் உள்ளன என்று சொன்னால், அது மிகையல்ல. இந்த சிந்தனையாளர்களின் கடுமையான முயற்சிகள், குறைபாடுள்ள தவறுகள் நிறைந்த முடிவுகளுக்கே அவர்கைளை இட்டுச் சென்றன.

    மனித இயல்பை சரியாகப் புரிந்து கொள்வதில் இந்த சிந்தனையாளர்கள் சந்தித்த தோல்வி, ‘மகிழ்ச்சி பிரச்சினை’க்கு ஒரு நல்ல தீர்வைக் கண்டுபிடிப்பதில் ஏற்பட்ட தோல்வி என்று தான் சொல்ல வேண்டும்.

    மனித இயல்பைப் பற்றி யாரால் சரியாக சொல்ல முடியும்?

    இறைவன். ஆம், இறைவன் மட்டும் தான் மனித இயல்பைப் பற்றி நமக்குச் சரியாக சொல்ல முடியும். மனிதனை பற்றிய முழுமையான அறிவு யாருக்கு இருக்கும்? மனிதனுக்கா அல்லது மனிதனை படைத்த இறைவனுக்கா?

    ஒரு பொருளை உற்பத்தி செய்தவனுக்கே அவன் உருவாக்கிய பொருளைப் பற்றிய பூரண அறிவு இருக்கும். உதாரணமாக, வாகனங்கள், உற்பத்தியாளரின் பரிந்துரை பெற்ற எண்ணெய், உதிரிப்பாகங்கள், போன்றவற்றின் உதவியுடன் தான் செம்மையாக இயங்கும். சக்கரத்தின் காற்று அழுத்தம் போன்ற சிறு விடயத்தில் கூட உற்பத்தியாளரின் பரிந்துரையை தான் நாம் பின்பற்றுகிறோம். ஏன்? நமக்கு சொந்தமான வாகனம். ஏன் நாம் நம் விருப்பத்துக்கு ஏற்ப சக்கரத்தின் காற்றழுத்தத்தை மாற்றக் கூடாது? நம் மனதிற்கு தோன்றிய காற்றழுத்தத்தை சக்கரத்திற்கு வைக்கக் கூடாது? நாம் அவ்வாறு மாற்றுவதில்லை. ஏனென்றால், நம்மை விட அந்த வாகனத்தை தயாரித்தவருக்கு தான் அந்த வாகனத்திற்கு எது சிறந்தது என்பதைப் பற்றிய சரியான அறிவு இருக்கும் என்பதை நாம் நம்புகிறோம். இது போன்ற மிகச் சிறிய காரியங்களுக்குக் கூட நாம் வாகனத்தை தயாரித்தவரின் வழிகாட்டுதலை தான் நம்புகிறோம். ஒரு பொருளை தயாரிப்பவனுக்கு தான், அந்தப் பொருளை பற்றிய முழுமையான அறிவு இருக்கும் என்பதை நாம் எல்லோரும் உணர்கிறோம். ஆனால், மனித வாழ்வு பற்றிய காரியங்களில் மாத்திரம், நம்மைப் படைத்தவனின் வழிகாட்டுதலை நாடாமல், நம் விருப்பத்தின் அடிப்படையில் முடிவெடுக்க முயல்கிறோம். இது சரியா? சிந்தித்து பாருங்கள்.

    நமக்கு இறை வழிகாட்டுதல் அவசியமா?

    இறைவன் நம்மைப் படைத்தவன் என்ற முறையில், மனிதனின் இயல்பை மிகச் சரியாக அறிந்து, நம் அமைதிக்கும், மகிழ்ச்சிக்கும் உத்தரவாதம் அளிக்கும் ஒரு வாழ்வு முறையை நமக்கு அருளியிருக்கிறான். இறைவன் வழிகாட்டிய இந்த வாழ்க்கை முறையிலிருந்து விலகிச் செல்வது, நம் வாழ்வை அதிருப்திக்கும், மகிழ்ச்சியின்மைக்குமே இட்டுச் செல்லும்.

    நாம் ஒவ்வொருவரும், நமது வாழ்வின் நோக்கம் மற்றும் இந்த உலகில் எவ்வாறு வாழ வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள தேவையான அடிப்படை விழிப்புணர்வைக் பெற்றிருக்க வேண்டும். இந்த விழிப்புணர்வை இறைவன் தரும் வழிகாட்டுதல் மூலமாக மட்டுமே பெற முடியும்.

    இவ்வுலகிலும் மரணத்திற்குப் பின் உள்ள வாழ்விலும், அமைதியையும் மகிழ்ச்சியையும் அடைய மனிதர்களுக்கு வழிகாட்ட இறைவன் அருளிய வாழ்க்கை முறையே இஸ்லாம் எனப்படும். இஸ்லாம் என்பது முஹம்மது நபியால் தொடங்கப்பட்ட புதிய மதம் அல்ல. இறைவன் தனது எல்லா இறைத்தூதர்கள் மூலம் மனித குலத்திற்கு அருளிய வாழ்க்கை முறைதான் இஸ்லாம். முஹம்மது நபி அவர்கள், மனிதகுலம் முழுவதற்கும் இறைவனால் அனுப்பப்பட்ட இறுதித்தூதர் ஆவார்.

    இறைவன், மனிதகுலம் அனைத்திற்கும் வழிகாட்டியான இறுதி வேதமாகிய குர்ஆனில் குறிப்பிடுகிறான்:

    அந்நாள் வரும்போது அவனுடைய அனுமதியின்றி எவரும் பேச இயலாது; இன்னும், அவர்களில் துக்கம் கவ்விய நிலையில் சிலர் இருப்பர்; மிகுந்த மகிழ்ச்சியோடு சிலர் இருப்பர்.

    குர்ஆன் 11:105

    மிகுந்த மகிழ்ச்சியோடு காணப்படுபவர்கள், சொர்கத்தில் இருப்பார்கள். உம் இறைவன் நாடினாலே தவிர, வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும் காலமெல்லாம் அவர்கள் அந்த சொர்கத்திலேயே நிரந்தரமாக(த் தங்கி) இருப்பார்கள். இது முடிவுறாத அருட்கொடையாகும்.

    குர்ஆன் 11:108

    முடிவுரை

    மனிதன் மகிழ்ச்சியின் ரகசியத்தை கண்டறிய பல முயற்சிகள் செய்திருப்பதைப் பார்த்தோம். முடிவில்லா மகிழ்ச்சிக்கு இஸ்லாத்தால் வழிக்காட்ட இயலுமா என்று அறிந்து கொள்ள நீங்கள் ஏன் இஸ்லாத்தை படித்துப் பார்க்க கூடாது? மகிழ்ச்சியின் தேடலில் உள்ள ஒவ்வொருவரும், மனித வாழ்வின் அனைத்து அம்சங்களையும் விரிவாக எடுத்துரைக்கும் பூரணமான வாழ்க்கை நெறியான இஸ்லாத்தின் போதனைகளைப் படிக்கும்படி நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

    WHAT OTHERS ARE READING

    Most Popular