பிஸ்மில்லாஹ்

பிஸ்மில்லாஹ் என்பதன் ஆழமான பொருளைப் புரிந்து கொள்வோம்! ஒவ்வொரு செயலையும் அல்லாஹ்வின் பெயரால் தொடங்குவது, அவனது அருளை பெற்று தரும்.

‘பிஸ்மில்லாஹ்’ என்பது ஒரு ஆழமான சொல். எனவே, அதைச் சொல்வது வெறும் சடங்காக இருக்கக்கூடாது.

  1. திருக்குர்ஆனில் அருளப்பட்ட முதல் வசனம், அல்லாஹுவின் பெயரால் தான் துவங்குகிறது.

உமது இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக…

குர்ஆன் அத்தியாயம் 96 வசனம் 1

ஒவ்வொரு செயலும் அல்லாஹ்வின் பெயரால் தான் தொடங்கப்பட வேண்டும் என்பதை இது காட்டுகிறது.

2. அல்லாஹ்வின் அதிகாரம்: அல்லாஹ்வின் இணையில்லா அதிகாரத்தை நமக்கு பிஸ்மில்லாஹ் நினைவூட்டுகிறது. அவனது அனுமதியின்றி அணுவும் அசையாது. பிஸ்மில்லாஹ் சொல்லும் போது, “நான் என்னை நம்பவில்லை. அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்துள்ளேன்” என்பதை நாம் ஒப்புக்கொள்கிறோம்.

3. அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்: ‘அர்-ரஹ்மான், அர்-ரஹீம்’ என்ற சொற்றொடர் அல்லாஹ்வின் எல்லையற்ற கருணையை நினைவூட்டுகிறது. நாம் ஒரு செயலைச் செய்யும்போது, அல்லாஹ்வின் கருணையை நினைவில் கொள்ள வேண்டும்.

4. பிஸ்மில்லாஹ் ஒரு துஆ (பிரார்த்தனை): பிஸ்மில்லாஹ் சொல்லும்போது: “யா அல்லாஹ், நான் அடுத்துச் செய்யப்போகும் காரியத்தில் உனது அருளையும் பரக்கத்தையும் (அபிவிருத்தியையும்) வழங்குவாயாக.” என்று நாம் இறைவனிடம் வேண்டுகிறோம்.

5. பிஸ்மில்லாஹ் ஒரு கேடயம்: ஒரு முஸ்லிம் மது அருந்துவதற்கு முன்போ அல்லது பன்றி இறைச்சி உண்பதற்கு முன்போ “பிஸ்மில்லாஹ்” சொல்ல மாட்டார். ஏனெனில் அது தவறு என்று அவருக்குத் தெரியும். இந்தத் தயக்கமே, நம்மைத் தீமைகளை, ஹராமான (தடுக்கப்பட்ட) காரியங்களை செய்வதைத் தடுக்கும்.

பிஸ்மில்லாஹ் கொண்டு தொடங்கப்படாத எந்த ஒரு காரியமும் குறைவுள்ளதே (அதாவது அல்லாஹ்வின் பரக்கத் இல்லாததே).

ஜாமியுஸ் ஸகீர் # 2/158

குறிப்பு: இந்த ஹதீஸின் நம்பகத்தன்மை குறித்து அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இதன் கருத்து சரியானது என்பதால், ஒரு நினைவூட்டலாக இங்கே பதியப்படுகிறது.

மேலும் படிக்க

WHAT OTHERS ARE READING

Most Popular