முன்னுரை
குர்ஆனை எப்படி ஓத வேண்டும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து தான் ஒரு முஸ்லிம் கற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் நமக்கு சிறந்த முன்மாதிரி. நபிகள் நாயகம் (ஸல்) நமக்கு கற்றுத் தந்தது போல் குர்ஆனை ஓதினால், குர்ஆன் ஓதுவது ஒரு உயர்ந்த ஆன்மீக அனுபவமாக மாறும்.
1) நீட்டி ஓதுதல்
அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: “நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை ஓதும்போது தம் குரலை நீட்டி ஓதுபவர்களாக இருந்தார்கள்.’பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ என்பதை பிஸ்மில்லா….ஹ் என நீட்டுவார்கள், அர்ரஹ்மா…..ன் என நீட்டுவார்கள். அர்ரஹீ…..ம் என்று நீட்டுவார்கள்.”
புகாரி # 5046
பயன்: இவ்வாறு நீட்டி ஓதுவது அமைதிக்கும், சிந்திப்பதற்கும், மன ஒருமைப்பாட்டிற்கும் வழிவகுக்கிறது. இது குர்ஆன் வசனங்கள் உள்ளத்தில் ஆழமாகப் பதிய உதவும்.
2) நிதானமாகவும் தெளிவாகவும் ஓதுதல்
அன்னை உம்மு ஸலமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) குர்ஆன் ஓதிய விதத்தை விவரிக்கும்போது, “ஒவ்வொரு எழுத்தும் தெளிவாகத் தெரியும் வகையில் பிரித்து ஓதுவார்கள்” எனக் குறிப்பிட்டார்கள்.
ஹிதாயத் அர்-ருவாத் # 1167
பயன்: நிதானமாக, தெளிவாக ஓதும் போது நம் கவனத்தை ஈர்க்கும். புரிதலும் மேம்படும். வசனம் சொல்ல வரும் கருத்தை உள்வாங்கவும் உதவும்.
3) வசனங்களின் முடிவில் நிறுத்தி ஓதுதல்
உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு வசனத்தையும் தனித்தனியாகப் பிரித்து ஓதுவார்கள். ‘அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்’ என்று ஓதி நிறுத்துவார்கள். பிறகு ‘அர்ரஹ்மானிர் ரஹீம்’ என்று ஓதி நிறுத்துவார்கள். பிறகு ‘மாலிகி யவ்மித்தீன்’ என்று ஓதுவார்கள்.”
திர்மிதி # 2927
பயன்: ஒவ்வொரு வசனத்தின் முடிவிலும் நிறுத்துவது, அந்த வசனத்தை பற்றி சிந்திக்கவும், துஆ செய்யவும் அவகாசம் அளிக்கிறது. இப்படி ஓதும் போது, உள்ளத்தால் உணர்ந்து ஓத முடியும். குர்ஆன் ஓதுதல் வெறும் ஒரு சடங்காக இருக்காது.
4) ஓசை நயத்துடன் ஓதுதல்
அப்துல்லாஹ் இப்னு முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறினார்கள்: “நபி(ஸல்) அவர்கள் (மக்கா வெற்றி நாளில்) பயணித்துக் கொண்டிருந்த தம் ஒட்டகத்தின் மீது இருந்தவாறு, ஸூரத்துல் ஃபத் (48 வது) அத்தியாயத்தை அல்லது அந்த அத்தியாயத்திலிருந்து ஒரு பகுதியை மெல்லிய குரலில், ஓசை நயத்துடன் ஓதுவதைக் கண்டேன்.
புகாரி # 5047
பயன்: இவ்வாறு குர்ஆனை ஓதும் போது, அது நம் உள்ளத்தை உருக்கும். குர்ஆனின் ஒலி நம் காதுகளோடு நின்றுவிடாமல், அது ஆன்மாவுக்குள் ஊடுருவும்.
5) அழகாக ஓத வேண்டும்
குர்ஆன் ஓதும் போது, அழகாக ஓத வேண்டும் என்று நபி (ஸல்) கட்டளையிட்டுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உங்கள் குரல்களால் குர்ஆனை (ஓதுவதன் மூலம்) அழகாக்குங்கள்.’
நஸாயி # 1015
மேலும், குர்ஆனை இனிமையாக ஓத முயற்சி செய்யாதவர்களைப் பற்றி எச்சரித்துள்ளார்கள்.
குர்ஆனை (முறைப்படி) இராகத்துடன் (இனிய குரலில்) ஓதாதவர்கள் நம்மைச் சார்ந்தவர்கள் அல்ல.
புகாரி # 7527
முடிவுரை
நபி (ஸல்) குர்ஆனை இன்று நம்மில் பலர் ஓதுவது போல் அவசர அவசரமாக ஓதவில்லை. நிறுத்தி, நிதானமாக, இனிமையாக, ஓசை நயத்துடன் ஓதியுள்ளார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அழகிய முன்மாதிரியை பின்பற்றி குர்ஆன் ஓதும் போது, அது ஒரு சடங்காக இருக்காது. மாறாக நம்:
- உள்ளத்தை ஈர்க்கும்
- ஆன்மாவுக்குள் ஊடுருவும்
- சிந்தனையை தூண்டும்
- ஈமானை அதிகரிக்கும்
எத்தனை முறை குர்ஆனை ஓதி முடித்தோம் என்பது முக்கியமல்ல. எத்தனை முறை குர்ஆனை சரியாக, ஓத வேண்டிய முறைப்படி ஓதி முடித்தோமா என்பது தான் முக்கியம்.
