ரமலான் மாதத்தில் இரவும் பகலும் நம்மில் பலர் குர்ஆன் ஓதுகிறோம். ஒவ்வொரு தினமும் பக்கம் பக்கமாக ஓதுகிறோம். குர்ஆன் ‘கத்ம்’ செய்ய ஆர்வமாக இருக்கிறோம். தராவீஹ் தொழுகையில் குர்ஆனைச் செவிமடுக்கிறோம்.
இதெல்லாம் நல்ல விஷயம் தான். ஆனால்:
இதையெல்லாம் செய்வதால் உங்களுக்குள் ஏற்பட்ட மாற்றம் என்ன?
குர்ஆனோடு உள்ள தொடர்பு ஓதுவதோடும், கேட்பதோடும் மட்டும் நின்று விடுகிறதா அல்லது அது நம் செயலில் பிரதிபலிக்கிறதா?
நபிகளாரின் முன்மாதிரி
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மக்களிலேயே தாராள குணம் உடையவர்களாக இருந்தார்கள். ரமலான் மாதத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள், நபி (ஸல்) மை சந்திக்கும் போது, இன்னும் அதிக தாராள குணம் உடையவர்களாக இருப்பார்கள். ஜிப்ரீல் (அலை) ரமலான் மாதத்தின் ஒவ்வொரு இரவிலும் நபி(ஸல்) அவர்களைச் சந்தித்து, குர்ஆனை ஓதுவார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்களை சந்திக்கும் போது, நபி (ஸல்) நற்செயல்கள் செய்வதில் வீசும் காற்றை விட வேகமாக (தாராளமாக) மாறிவிடுவார்கள்.
புகாரி # 3220
இந்த ஹதீஸில், குர்ஆனுக்கும் நற்செயல்கள் அதிகரிப்பதற்கும் இடையிலான தெளிவான தொடர்பை நாம் காணலாம்.
ரமலானில் குர்ஆன் ஓதப்படும் போது, நபியவர்களின் ﷺ நற்செயல்கள் பன்மடங்கு அதிகரித்தன. வேகமான காற்று எவ்வாறு மழையை எங்கும் பரவலாகக் கொண்டு செல்கிறதோ, அதுபோலவே நபியவர்களின் ﷺ அதிகமான நற்செயல்கள் விரைவாக அனைவரையும் சென்றடைந்தன என்று இந்த ஹதீஸ் நமக்குக் கற்பிக்கிறது.
குர்ஆன் ஓதுதல் நபியவர்களிடத்தில் ﷺ எல்லோரும் உணர்கின்ற, பார்க்கின்ற ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது.
குர்ஆனுக்கு ஒரு முஸ்லிம் செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றி அறிய, இங்கே கிளிக் செய்யவும்.
குர்ஆன் அமல் செய்யத்தான்
உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்.
குர்ஆன் 7:3
அவருடைய (நபிகளாரின்) குணமே குர்ஆனாக இருந்தது.
சஹீஹ் முஸ்லிம் # 746
ரமலானில் நாம் குர்ஆன் ஓதுவது நமக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். குர்ஆனைச் சிந்திப்பது நமது சீர்திருத்தத்திற்கு வழிவகுக்க வேண்டும்.
குர்ஆனால் தாக்கம் உண்டா என்பதை அறிய…
உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்துக்க கொள்ளுங்கள்.
- உங்கள் இஸ்திஃபார் (பாவமன்னிப்புத் தேடுதல்) அதிகரித்துள்ளதா?
- பிறரை மன்னிக்கும் குணம் அதிகரித்துள்ளதா?
- பேசும் போது கவனமாக பேசுகிறீர்களா?
- தொழுகையை குஷூவோடு தொழ முயல்கிறீர்களா?
- அல்லாஹ் என்னை கண்காணிக்கிறான் என்ற விழிப்புணர்வு அதிகரித்துள்ளதா?
உங்களுக்குள் எந்த மாற்றமும் இல்லை என்றால், குர்ஆன் ஏற்படுத்தும் தாக்கத்தில் குறைபாடு உள்ளது என்று நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.
இந்த நற்செயல்களை அனைவரும் செய்யலாம்
எல்லோராலும் தினமும் தர்மம் செய்ய முடியாது. எல்லோராலும் தினமும் பிறருக்கு உதவ முடியாது.
ஆனால், கீழே கொடுக்கப்பட்டுள்ள நற்செயல்களை எல்லோராலும் அதிகமாக செய்ய முடியும்.
- ☐ பிறருக்காக துஆ செய்தல் (உங்களைக் காயப்படுத்தியவர்களுக்காகவும்)
- ☐ முழு உம்மத்திற்காகவும் துஆ செய்தல்
- ☐ இஸ்திஃபாரை அதிகரித்தல்
- ☐ நபியவர்கள் ﷺ மீது அதிக ஸலவாத் சொல்லுதல்
- ☐ பயனுள்ள நினைவூட்டல்களை அதிகமாக பகிர்தல்
- ☐ ஒரு தீய குணத்தைக் கட்டுப்படுத்துதல் (அதிக பேச்சு, கோபம், மோசமான சமூக ஊடகப் பயன்பாடு)
- ☐ குர்ஆன் வசனங்களைச் சிந்திப்பதை அதிகரித்தல்
- ☐ குஷூவோடு தொழ முயற்சித்தல்
- ☐ தொடர்ந்து தஹஜ்ஜுத் தொழ முயற்சித்தல்
- ☐ சுயபரிசோதனையை அதிகரித்தல்
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
சிறியதாக இருந்தாலும், தொடர்ச்சியாகச் செய்யப்படும் செயல்களே அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல்கள்.
புகாரி # 6464
குர்ஆன் ஓதுவதால் தாக்கம் ஏற்பட…
- குர்ஆனை வேகமாக ஓதி முடிப்பதை நோக்கமாக கொள்ளாமல், பொருளுணர்ந்து ஓதுங்கள்.
- அல்லாஹ்வின் கட்டளைகள் வரும் வசனங்களில்: “எனக்குள் என்ன மாற்றம் தேவை என்று சிந்தியுங்கள்.”
- குர்ஆன் சொல்வதை செயல்படுத்த முயலுங்கள்.
- ஒவ்வொரு முறை ஓதி முடிக்கும்போதும், உங்களுக்குள் மாற்றம் ஏற்பட அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள்.
இந்த ரமலானில் குர்ஆனை எவ்வளவு ஓதினீர்கள் என்பதை அளவுகோளாக ஆக்காமல், எவ்வளவு நற்செயல்கள் அதிகரித்துள்ளன, எவ்வளவு தீய செயல்கள் குறைந்துள்ளன என்பதை அளவுகோளாக்குங்கள்.
முடிவுரை
இந்த ரமலானில் நீங்கள் குர்ஆன் ஓதுவது உங்கள் செயல்களில் பிரதிபலிக்க வேண்டும். இந்த ரமலானில் குர்ஆனை ஓதி முடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல், குர்ஆன் உங்களுக்குள் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதில் கவனம் செலுத்துங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)
ரமலானில் நபி ﷺ அவர்கள் ஏன் நற்செயல்களை அதிகப்படுத்தினார்கள்?
ஜிப்ரீல் (அலை) அவர்களுடன் குர்ஆனை ஓதுவது, நபி ﷺ அவர்களது நற்செயல்களைப் பன்மடங்கு அதிகரித்தது. (புகாரி 3220).
ரமலானில் குர்ஆனை ஓதினால் மட்டும் போதுமா?
குர்ஆனை ஓதுவது அவசியம் தான். ஆனால் அது சிந்தனைக்கும் செயலுக்கும் வழிவகுக்க வேண்டும் (குர்ஆன் 4:82 & 7:3).
குர்ஆன் ஓதுவதிலிருந்து எப்படி பயன் பெறுவது?
குர்ஆனை புரிந்து ஓதி, அதை பற்றி சிந்தித்து, வாழ்வில் செயல்படுத்த முயன்றால், நாம் குர்ஆன் ஓதுவதிலிருந்து பயன் பெறலாம்.
என்னிடம் பண வசதி குறைவாக உள்ளது. நான் என்ன நற்செயல்களை செய்ய முடியும்?
துஆ, மன்னிப்பு, திக்ரு, ஸலவாத், சுயக்கட்டுப்பாடு, சுயபரிசோதனை போன்ற நற்செயல்களை அதிகப்படுத்துங்கள். இந்த நற்செயல்களை செய்ய பணம் தேவையில்லை.
இந்த நினைவூட்டல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், இதைப் பகிருங்கள். அதன் மூலம் ஒருவர் பயனடைந்தால், அது உங்களுக்கு நிலையான நன்மையாக (ஸதக்கத்துல் ஜாரியாவாக) அமையும்.
