மரணத்திற்குப் பின் உள்ள வாழ்க்கையைப் பற்றி பல மதங்கள் பேசுகின்றன. மரணத்திற்குப் பின் வாழ்க்கை என்பது சாத்தியமா? வாருங்கள், இது பற்றி சிந்திப்போம்.
மரணத்திற்குப் பின் உள்ள வாழ்க்கை பற்றி குர்ஆன்
நாம் இன்று வாழும் உலகம் ஒரு நாள் முடிவுக்கு வரும் என்று குர்ஆன் போதிக்கிறது. முதல் மனிதரிலிருந்து இறுதி மனிதர் வரை இந்த உலகில் வாழ்ந்த எல்லா மனிதர்களையும், நியாயத் தீர்ப்பு நாளில், கடவுள் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்புவார். உலகில் நல்லவர்களாக வாழ்ந்தவர்களுக்கு சுவர்கத்தை பரிசாக கொடுப்பார். உலகில் கெட்டவர்களாக வாழ்ந்தவர்களை நரகத்தில் தண்டிப்பார்.
மரணத்திற்குப் பின் வாழ்க்கை – கற்பனையா?
நாம் இறந்த பின் புதைக்கப்பட்டால் எலும்புகளாகவோ, அல்லது இறந்த பின் எரிக்கப்பட்டால் நாம் சாம்பலாகவோ மாறி விடுகிறோம். இறந்த விட்ட பிறகு, நம்மால் எப்படி மீண்டும் உயிரோடு வர முடியும்? எனவே, மரணத்திற்குப் பின் வாழ்க்கையை என்பது கற்பனை தான் என்று பலர் எண்ணுகிறார்கள்.
நபிகள் நாயகம் அவர்களின் காலத்திலும் மக்கள் இதே கேள்வியை எழுப்பினர். மக்களின் இந்த கேள்வியை குர்ஆன் எடுத்துக்காட்டி, அதற்கு நம்மையெல்லாம் வியக்க வைக்கும் ஒரு பதிலையும் சொல்கிறது.
“நாங்கள் எலும்புகளாகி மக்கிப் போன பின் புதுப் படைப்பாக மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவோமா?” என்று அவர்கள் கேட்கின்றனர்.
குர்ஆன் அத்தியாயம் 17 வசனம் 49
மக்களின் இந்த கேள்விக்கு குர்ஆனில் இறைவன் தரும் பதில்:
நீங்கள் கற்களாகவோ அல்லது இரும்பாகவோ மாறினாலும் (இறைவன் உங்களை உயிர்ப்பிப்பான்) என்று கூறுவீராக.
குர்ஆன் அத்தியாயம் 17 வசனம் 50
ஏன் கற்கள் அல்லது இரும்பு என்று சொல்ல வேண்டும்?
எலும்புகளாகவும் சாம்பலாகவும் மாறிய பிறகு, நாம் எப்படி மீண்டும் உயிர் பெற முடியும் என்பது தான் மக்கள் கேட்கும் கேள்வி. நீங்கள் எலும்புகளாகவும் சாம்பலாகவும் மாறினாலும், நீங்கள் மீண்டும் உயிர் பெற்று எழுவது சாத்தியம் என்று சொல்லாமல், நீங்கள் கற்களாகவோ அல்லது இரும்பாகவோ மாறினாலும், நீங்கள் மீண்டும் உயிர் பெற்று எழுவது சாத்தியம் என்று இறைவன் பதிலளிக்கிறான்.
எலும்புகளாகவும் சாம்பலாகவும் என்று சொல்லாமல், கற்களாகவோ அல்லது இரும்பாகவோ என்று இறைவன் ஏன் சொல்ல வேண்டும்? கற்களுக்கும் இரும்புக்கும் மக்கள் கேட்கும் கேள்விக்கும் என்ன சம்பந்தம்? கற்களுக்கும் இரும்புக்கும் மரணத்தின் பின் உள்ள வாழ்க்கைக்கும் தொடர்புள்ளதா?
இந்த கேள்விகளுக்கான பதிலை தெரிந்து கொள்ள, புதைபடிவத்தை பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.
புதைபடிவம் (Fossils) என்பது என்ன?
புதைபடிவம் என்பது பூமியில் கடந்த காலத்தில் வாழ்ந்த தாவரங்கள், விலங்குகள், உயிரினங்களின் தடயங்கள் ஆகும். இவை பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டு, காலப்போக்கில் இவை கற்களாக உருமாறியுள்ளன.
கல் புதைபடிவங்கள் – பெட்ரிஃபிகேஷன்
இறந்து விட்ட உயிரினம், பல மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு முற்றிலும் தாதுக்களால் மாற்றப்பட்டு, அந்த உயிரினம் கல்லாக உருமாறிவிடுகிறது. இதை பெட்ரிஃபிகேஷன் என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.

இரும்பு புதைபடிவங்கள்
3.77 பில்லியன் முதல் 4.28 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாகக் கருதப்படும், உலகின் மிகப் பழமையான புதைபடிவங்களில் சிறிய குழாய்கள் மற்றும் ஹீமடைட் (இரும்பு ஆக்சைடு) கொண்டு உருவான இழைகள் கண்டறியப்பட்டுள்ளன என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மற்றொரு ஆய்வின் படி, இப்புதைபடிவங்கள் ஹீமடைட், கோயைட், ஃபெரிஹைட்ரைட் போன்ற இரும்பு ஆக்ஸிஹைட்ராக்சைடுகள் மற்றும் இரும்புச் சத்து நிறைந்த அலுமினோசிலிகேட் களிமண் தாதுக்களால் ஆனவை என்றும் தெரியவந்துள்ளது.

பல பில்லியன் வருடங்கள் முன் இறந்து விட்ட உயிரினங்கள், இரும்பு புதைபடிவங்களாக மாறிவிடுகின்றன என்பதை மேலே நாம் சுட்டிக்காட்டிய ஆய்வுகளின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
துல்லியமான வார்த்தை தேர்வு
அந்த இறைவசனத்தில், ‘நீங்கள் கற்களாகவோ அல்லது இரும்பாகவோ மாறினாலும்’ என்று சொல்லியிருப்பது தற்செயலாக நிகழ்ந்திருக்க கூடும் என்று சிலர் வாதிடலாம். “கற்கள்” என்று சொல்வது தற்செயலாக இருக்க வாய்ப்புள்ளது. ஆனால், மக்கள் கேட்ட கேள்விக்கு சம்பந்தமேயில்லாத “இரும்பை” பற்றி ஏன் குர்ஆன் கூற வேண்டும்? ஏனெனில், இறந்த பின் உள்ள வாழ்க்கைக்கும், மரணத்திற்கு பின் உயிர்த்தெழுதலுக்கும் இரும்புக்கும் எந்த நேரடி சம்பந்தமும் இல்லை. எனவே, ‘இரும்பு’ என்ற வார்த்தை இறைவனால் தற்செயலாக பயன்படுத்தப்படவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
நாம் புதைபடிவங்களாக மாறினாலும் உயிர்த்தெழுதல் நடக்கும்
இறந்த நம் உடல், மக்கிப் போன எலும்புகளாக மாற ஒரு சில வருடங்களே ஆகும். ஆனால், கல் மற்றும் இரும்பு புதைபடிவங்கள் உருவாக மில்லியன் முதல் பில்லியன் ஆண்டுகள் ஆகும் என்பதை நாம் மேலே கண்டோம்.
மக்கிப் போன எலும்புகளாக மாறிய உடலுக்கு இறைவனால் உயிர் தர முடியுமா என்பதே மக்களின் கேள்வி. பல பில்லியன் ஆண்டுகளுக்கு பின், கல் அல்லது இரும்பு புதைபடிவங்களாக நம் உடல் மாறிவிட்டாலும், இறைவன் நம்மை மீண்டும் உயிர்ப்பிக்கும் ஆற்றல் கொண்டவர் என்பதை இந்த வசனத்தில் இறைவன் தெளிவுபடுத்துகிறார்.
புதைபடிவங்கள் பற்றி அறிவில்லாத ஆறாம் நூற்றாண்டில், இப்படி துல்லியமாக சொல்வது மனித அறிவிற்கு இயலாத காரியம். நபிகள் நாயகம் அவர்களோ, அவருடன் வாழ்ந்தவர்களோ இதை சொல்லியிருக்கவே முடியாது என்பதை நடுநிலையாக சிந்திக்கும் எவரும் ஒப்புக் கொள்வர். எனவே, நிச்சயமாக இதை இறைவன் தான் கூறியிருக்க வேண்டும் என்பது தெளிவு.
மரணத்திற்குப் பின் வாழ்க்கை – சாத்தியம் தான்
“நான் இறந்த பின்னர் உயிர் கொடுத்து எழுப்பப்படுவேனா?” என்று (சந்தேகமாகக்) கேட்கிறான். இதற்கு முன்பு எந்த ஒரு பொருளாகவும் இல்லாதிருந்த அவனை, நாமே மனிதனாக படைத்தோம் என்பதை அவன் சிந்திக்க வேண்டாமா?
குர்ஆன் அத்தியாயம் 19 வசனங்கள் 66,67
ஒரு செயலை முதல் முறை செய்வதை விட, இரண்டாவது முறை செய்வது மிகவும் எளிது. கடவுள் நம்மை முதல் முறை மிக எளிதாகவே படைத்தான். நாம் இறந்த பிறகு நம்மை இரண்டாவது முறை மீண்டும் உயிர்ப்பிப்பதும், கடவுளுக்கு மிகவும் எளிதாகவே இருக்கும்.
